Tuesday, November 27, 2012

கறியாகவும் சுவையூட்டியாகவும் லீக்ஸ்


இலங்கையின் பல பாகங்களிலும் பயிரிடப்படுகிறது. குறிப்பாக மலைநாட்டில் செழிப்பாக வளரும்.
நுவரெலியாவில் லீக்ஸ் தோட்டம்
 இச் செடி புல்லினத்தைச் சேர்ந்த செடி எனச் சொல்லலாம். வெங்காய மணத்தைத் தரும் செடி.

விதைகளாக இட்டு வளர்த்து நாற்றை பயிரிட்டு வளர்ப்பார்கள்.


2-3 அடி வரை வளரும். 120-150 நாளில் அறுவடைக்கு தயாராகிவிடும். இப்பொழுது சில இனம் 90 நாட்களில் பயன்தரும் பயிராகவும் இருக்கிறது.


Allium ampeloprasum var. porrum (L.) என்பது இதன் விஞ்ஞானப் பெயர். அலங்காரச் செடியாகவும் திகழ்கிறது.



Amaryllidaceae குடும்பத்தைச் சார்ந்தது. பழைய எகிப்திய சமையலில் இடம் பிடித்தது. மொஸப்பத்தேமியாவிலும் வளர்க்கத் தொடங்கினார்கள்.


Emeror Nero இன் விருப்பமான காய்கறி உணவாக இருந்தது எனச் சொல்கிறார்கள்.


Wales  நாட்டின் தேசியச் சின்னமாகும். சேக்ஷ்பியரின் நாடகம் ஒன்றில் இதை வீரர்கள் அணிவது பற்றிச் சொல்கிறார்.

Thanks:- nikalvu.com

ஐக்கிய அமெரிக்காவில் உலகின் மிகப்பெரிய லீக்ஸ் விளைந்துள்ளது. ஜான்பியர்சன் என்பவருடைய தோட்டத்தில் விளைந்ததாகச் சொல்கிறார்கள்.
இவ்வளவு சிறப்புவாய்ந்த 

லீக்ஸ் 100 கிராமில்.


Energy 255 KJ
நீர் 83 கிராம்
காபோஹாரேட் 14.2
நார் 1.8கி
சீனி 3.9 கிராம்
புரொட்டின் 1.5 கிராம்
கொழுப்பு 0.3 கிராம்
மக்னீசியம் 28 மைக்ரோ கிராம்
கல்சியம் 5.9 மைக்ரோ கிராம்
இரும்பு 2.1 மைக்ரோ கிராம்
பொட்டாசியம் 180 மைக்ரோ கிராம்
விற்றமின் A 83 UG
விற்றமின் C 12 mcg



  • லீக்சில் போதியளவு பிளேவனொயிட் flavonoid kaempferol இருக்கிறது. இது இரத்தக் குழாய்களின் உட்புறம் சேதமடைவதைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது எனச் சொல்கிறார்கள். 
  • அத்துடன் நைட்ரிக் ஒட்சைட் (NO) வாய்வானது இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது. எனவே இருதய நோய்கள், பக்கவாதம் போன்றவை வராமல் தடுப்பதில் இது பங்களிக்கும். 
  • அத்துடன் இதில் நிறைந்திருக்கும் போலேட் என்ற பீ வகை விற்றமினும் இருதயப் பாதுகாப்பிற்கு நல்லது. போலிக் அமிலத்தை பெண்கள் கர்ப்பமுறும் காலத்தில் மருத்துவர்கள் கொடுப்பார்கள். இது கருவில் உள்ள குழந்தையில் சில நோய்கள் ஏற்படாமல் தடுக்கும் என்பதால் கொடுக்கப்படுகிறது.

சூப், ஸ்டு வகைகளுக்கு வாசனை தருவதற்கு லீக்ஸ் இலைகள் சிறந்தவை.
கசரோல், பை டிஸ்களிலும் கலந்து கொள்ள சுவை தரும்.

தனி இலைகளாகவும், தண்டுகளாகவும், இரண்டையும் சேர்த்தும் பலவிதமாக செய்யலாம். புரியாணி, ப்ரைட் ரைஸ், நூடில்ஸ், சொப்சி, சோட்னிங் சுவை தரும்.

நாம்தான் நமது நாட்டு சமையலுக்கு மாற்றுவதில் கைதேர்ந்தவர்களே விடுவோமா லீக்ஸ் தேங்காய்ப்பால்கறி, லீக்ஸ் பொரியல், இறைச்சிவறுவல், உப்புமா என வெளுத்து வாங்கிடுவோம்.

லீக்ஸ் காரப் பிரட்டல்



தேவையானவை

லீக்ஸ் - ¼ கிலோ
பச்சை மிளகாய் - 1
கிழங்கு - 1
பூண்டு – 2 - 4 பல்
இறைச்சிச் சரக்கு - ½ ரீ ஸ்பூன்
சோம்பு - ¼ ரீ ஸ்பூன்
மிளகாய்ப் பொடி - 1 ரீ ஸ்பூன்
மல்லிப் பொடி - ½ ரீ ஸ்பூன்
மஞ்சள் பொடி - ¼ ரீ ஸ்பூன்
தேங்காய்ப் பால் - 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சம் சாறு - ¼ ரீ ஸ்பூன்
ஓயில் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.

செய் முறை

லீக்ஸ் தண்டையும் இலைகளையும் தனித்தனியே வெட்டி எடுங்கள். நன்கு கழுவி விடுங்கள்.

தண்டை மெல்லிய வட்டங்களாக வெட்டிக் கொள்ளுங்கள்.

இலைகளை ½ அங்குல சிறுதுண்டுகளாக வெட்டுங்கள்.

கிழங்கையும் சிறியதாக வெட்டிக் கொள்ளுங்கள்.

பச்சை மிளகாய் நீள் துண்டுகளாக வெட்டுங்கள்.

பூண்டை நன்கு நசுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

ஓயிலில் சோம்பு வதக்கி, பூண்டு, பச்சை மிளகாய், வதக்கிய பின் கிழங்கைப் போட்டு சிறிது உப்பிட்டு மூடி விடுங்கள்.

ஒரு நிமிடத்தின் பின் திறந்து பிரட்டி விடுங்கள்.

மேலும் கிழங்கு பொரிந்த பின் லீக்சைக் கொட்டி உப்பிட்டுக் கிளறுங்கள்.
ஓரிரு நிமிடத்தில் வதங்கிவிடும்.

பொடி வகைகளைப் போட்டுக் கிளறி பால்விட்டு பிரட்டி இறக்கி வையுங்கள்.

எலுமிச்சம் சாறு கலந்து நன்கு பிரட்டிவிடுங்கள்.


சாதம், சப்பாத்தி, பரோட்டா வகைகளுக்கு உகந்தது.

கொத்து ரொட்டியிலும் கலந்து பிரட்டலாம்.

பண்ஸ், ரோல்ஸ், கறிரொட்டி வகைகளுக்கும் ஸ்டவ் செய்யப் பயன்படும்.

- மாதேவி -






Thursday, November 1, 2012

வெங்காய பச்சை மிளகாய் ரொட்டி

வெளிநாட்டினரின் வருகையினால் அறிமுகமாகியதே இந்த மா. அமெரிக்கன் மா, வெள்ளைக்காரன் மா என எமது மூதாதையர்கள் சொன்னார்கள்.


பாண், பணிஸ், பிஸ்கட், கேக் என பேக்கரி உணவுகளை கீழைதேச மக்களுக்கு அறிமுகப்படுத்தியதுடன், கோதுமையில் சுத்திரிகரிக்கபட்ட கோதுமை மாவையும் (Refined wheat flour)எமக்கு அறிமுகமாக்கினார்கள்.

இன்று கோதுமை விளையும் பிரதான நாடுகளாக சீனா, சோவியத் யூனியன், ஐக்கிய அமெரிக்கா, இந்தியா,  மற்றும் கனடா ஆகியன விளங்குகின்றன.

கோதுமை விளையும் தேசங்கள்


எங்கள் மக்கள் எமது காலாசார அரிசிப் பண்ட உணவுகள் தயாரித்ததுபோல இம் மாவைகொண்டு பிட்டு, இடியப்பம், ரொட்டி சப்பாத்தி, தோசை, எனத் தயாரிக்கப் பழகினார்கள்.


முற்காலத்தில் மாரி காலத்தில் ஓரிரு மாதங்களுக்கு தொடர்ந்து அடை மழை பொழியும். அது வசதியற்ற காலம், ஓரிரு கடைகளே கிராமங்களில் இருக்கும். மழைகாலத்தில் இரண்டு மூன்று மைல்களுக்கு அப்பால் இருக்கும் நகரங்களுக்குச் சென்று பொருட்கள் வாங்கி வருவது முடியாத காரியம்.

எனவே மழைக் காலத்திற்கான உணவுகளை மக்கள் முன்கூட்டியே வீடுகளில் சேமித்து வைத்திருப்பார்கள்.

பெரும்பாலும் மழைக்கால அவசர உணவாக ரொட்டி, கஞ்சி, களி, புட்டுகள், கூழ் இருந்தன. பலதடவைகள் இந்த மாவினால் தயாரிக்கபட்ட ரொட்டிதான் காலை, மாலை உணவாகக் கைகொடுக்கும்.


ஏழைகளின் உணவாகவும் இருக்கிறது. இன்றும் மலைநாட்டு தொழிலாளர்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிப்பதும் தேநீரும் ரொட்டியும்தான்.

இந்தியாவில் மைதா மா என்பார்கள். இலங்கையில் கோதுமை மா, அமெரிக்கன் மா எனவும் பெயரிட்டு அழைப்பார்கள்.

பச்சை மிளகாய் வெங்காயம், தேங்காய்த் துருவல், உப்பு என்பவற்றை மாவுடன் கலந்து செய்யும் ரொட்டி இலங்கையில் பிரபல்யம்.

அப்படியே தனித்தும் உண்பார்கள் சிலர். இதற்கு தேங்காய் இடிசம்பல் சேர்த்து தொட்டுக் கொண்டு சாப்பிடுவதும் வழக்கம்.


நல்ல கார விரும்பிகள் செத்தல் மிளகாய், சின்ன வெங்காயம் உப்பு மட்டும் சேர்த்து உரலில் இட்டு இடித்து அதை இந்த ரொட்டியுடன் சாப்பிடுவார்கள். நாக்கும் குடலும் பற்றி எரியும் காரமாக இருக்கும்.

மைதா மா காபோஹைதரேட் கூடியது என்பதால், இதனுடன் பருப்புக் கறி, கரட் பீன்ஸ் பட்டாணி மசாலா, சோயாக்கறி, கடலைக் கறி, பயறுக் குழம்பு போன்ற புரொட்டீன் உணவுகள், அல்லது காலி ப்ளவர், லீக்ஸ்,  முட்டைக்கோஸ்,கரட் மரக்கறி கறிகள் சாப்பிட உகந்தவை.


இறைச்சிக்கறி, மீன் தீயல், முட்டைச் சம்பல், ஏதாவது ஒன்றுடன் நாக்கின் சுவைக்கு சம்பல், வெங்காயச் சட்னி, மிளகாய் சட்னி, சீனிச் சம்பல் ஏதாவது செய்து கலந்து உண்ணலாம்.

நீரிழிவு, கொலஸ்டரோல், அதீத எடை உள்ளவர்கள் கோதுமை, கம்பு. ஆட்டா, குரக்கன் மாக்களில் இதே போல ரொட்டி செய்து சத்தான கறிவகைகளுடன் உண்ணலாம். அல்லது இலை வகைகளை மாவுடன் கலந்து ரொட்டியாகவும் சுடலாம்.

மைதா ரொட்டியுடன், அனைவரும் ஏதாவது பழவகைகளை சேர்த்து உண்ண வேண்டும். விற்றமின்கள் கிடைப்பதுடன் மலச்சிக்கலும் நீங்கும். வாழைப்பழம், பப்பாபழம், அல்லது புரூட்சலட் சிறந்தது.


பழங்களிலுள்ள இனிப்புச் சத்து குருதி சீனியின் அளவில் பெரிய மாற்றத்தைத் தராது என மருத்துவர்கள் சொல்கிறார்கள். நீரிழிவு நேயாளர்களும் மேலதிகமாக சீனி சேர்க்காமல் புரூட்சலட், பழங்கள் உண்ணலாம்.


Wheat என்பது தானிய உணவு. Ceycalgrain poaceae family யைச் சார்ந்தது. விட்டமின்ஸ் மினரல், புரொட்டீன் சேர்ந்துள்ள உணவு.

எகிப்தியர்கள் போறணை உணவான பாண் தயாரிப்பை அறிமுகம் செய்தார்கள்.

அதன் பின் 3000 BC இங்கிலாந்து ஸ்கன்டினெவியா என்பவற்றில் தயாரிக்கப்பட்டது.

சுத்திகரிக்பட்ட வெள்ளை மாவில் கூடுதலாக மாச் சத்துத்தான் (Starch) உள்ளது. முழு வீற் தானியத்திலிருந்து உடைத்து இராசாயனங்களால் வெளிற வைத்துச் சுத்திகரிக்கப்பட்டதே வெள்ளை மா.

வீற் கிரென் 100 கிறாமில் போசணையளவு

Energy 1506 KJகாபோஹைரேட் 51.8 கி, நார் 13.2 கி, கொழுப்பு 9.72 கி, புரொட்டின் 23.15 கி, இரும்பு 6.26 மைக்ரோகிராம். நியாசின் 6.813 மைக்கிரோகிறாம், தயமின் 1.882 மைக்கிரோகிறாம், கல்சியம் 39 மைக்கிரோகிறாம், பொட்டாசியம் 892 மைக்கிரோகிறாம்,மக்னீசியம் 239 மைக்கிரோகிறாம், பொஸ்பரஸ் 845 மைக்கிரோகிறாம்,

சுத்திகரிக்கப்படும் போது பல்வேறு விதமான போசனைப் பொருட்களும் சேதமாகி அகற்றபட்டுவிடுகின்றன. 


During refining process, about 50% of all calcium, 70% of phosphorus, 80% iron, 98% magnesium, 75% manganese, 50% potassium, and 65% of copper are lost. About 80% of thiamin, 60% of riboflavin, 75% of niacin, 50% of pantothenic acid, and about 50% of Pyridoxine is also lost. 14 different vitamins, 10 different minerals, and protein are lost. In essence, most of minerals and vitamins are lost.

 தேவையான பொருட்கள்

மைதா மா - 500 கிராம்
பச்சை மிளகாய் - 6-7
சின்ன வெங்காயம் - 15 -20
உப்பு  - சிறிதளவு
சீனி - சிறிதளவு
தேங்காய்த் துருவல் - ¼ கப்
ஓயில் - 1 டேபிள் ஸ்பூன்
 தண்ணீர் - தேவையான அளவு.
மாஜரின் அல்லது சூரியகாந்தி ஓயில் - தேவையான அளவு.



செய்முறை

வெங்காயம் பச்சை மிளகாய்களை சிறியதாக வெட்டிக் கொள்ளவும்.
மாஜரின் தவிர்த்து அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகக் கலக்கவும்.

தேவையான அளவு நீர் தெளித்து சப்பாத்தி மா பதத்திற்கு பிசைந்து வையுங்கள்.சிலர்  பிசைந்த உடனும் சுட்டு எடுப்பார்கள்.

சற்றுநேரம் வைத்து சுட்டால் சுவையாக இருக்கும்.

3-4 மணி நேரத்தின் பின்னே சிறிய உருண்டைகளாக எடுத்து கைகளால் தட்டி தோசை கல்லில் ஒரு தடவைக்கு 4 ரொட்டிகளாக போட்டு மாஜரின் அல்லது சூரியகாந்தி ஓயில் விட்டு மெல்லிய நெருப்பில் இருபுறமும் சிவக்க சுட்டு எடுங்கள்.

சாதாரணமாக ஒருவருக்கு 4 ரொட்டிகள் தேவைப்படும்.

ரொட்டி அண்டை அயலில் உள்ளோரையும் மணத்தில் சாப்பிட வரவழைக்கும். எனவே கூடுதலாகவே செய்து கொள்ளுங்கள்.


இல்லாவிட்டால் உங்களுக்குத்தான் வயிற்றில் அடி.

கறி ரொட்டி பற்றிய எனது பதிவு

-: மாதேவி :-