Tuesday, September 30, 2008

சமையலறையில் மருத்துவம்


“எதிரி வீட்டில் சாப்பிடப் போவதாக இருந்தால் நாலு மிளகுடன் போ” என்பார்கள் முன்னோர்கள். விஷத்தை முறிக்கும் தன்மை மிளகுக்கு உண்டென்பர்.

இப்பொழுது வயிற்று வலி அல்லது வயிற்றுப் பொருமல் என்றால் என்ன செய்வீர்கள்? இரண்டு மூன்று வறுத்த அல்லது சுட்ட உள்ளியைச் சாப்பிடுவீர்களா?

எனது சிறு வயதில் வரதகணபதிப்பிள்ளைப் பரியாரியாரின் 'சக்தி உள்ளிக் குளிகை' எங்கள் பிரதேசம் எங்கும் பிரபலம். தூரதேசம் செல்பவர்களின் பிரயாணப் பைகளில் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். இன்று ஹார்லிக் பில் பல நிறுவனங்களால் வர்த்தக ரீதியாகத் தயாரிக்கப்படுகின்றன. நன்றாக விலை போகின்றன.

பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது எமது மருத்துவ முறைகள். சித்தர்கள் தமது நுண்ணறிவால் பல்வேறு மூலிகைகளின் மருத்துவ குணங்களை இனங்கண்டு தாமும் பயன்படுத்தி மக்களுக்கும் அறிமுகப்படுத்தினார்கள். அவற்றில் பல மூலிகைகள் மருத்துவர்களின் களஞ்சியங்களையும், மருந்துப் பெட்டிகளையும் கடந்து எமது அம்மாமார்களின் சமையலறையிலும் இடம் பிடித்தன. குடிநீர்களாகவும் கசாயங்களாகவும் மாறி கைவைத்தியமாக உயிர் காத்தன.

மற்றும் பல மூலிகைகள் எமது உணவுகளுக்கு சுவையூட்டிகளாகவும், வாசனைத் திரவியங்களாகவும் பல் பயன் தந்தன.

மேலைநாட்டு வைத்திய முறைகள் எங்களுக்கு அறிமுகமாகி ஒரு சில நூற்றாண்டுகள் மட்டுமே ஆகிறது. அதுவரையும், ஏன் இன்றும் கூட எம்மவர் பலர் தமது ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு எமது பாரம்பரிய முறைகளையே நாடுகிறார்கள்.

ஆயினும் இன்றைய நாகரீகப் புதுயுகத்தில் அவற்றையெல்லாம் பலரும் மறந்து எடுத்ததற்கெல்லாம் வைத்தியர்களையும் பார்மஸிகளையும் நாடி ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

சமையலறையில் மருந்திருக்க ஏன் இந்த ஓட்டம்?

சாதாரண காய்ச்சல், தடிமன் சளி, மூட்டுவலி, இருமல், வயிற்றுக் கோளாறு, சிறுநீரக்கடுப்பு போன்ற பல நோய்களுக்கு பாரம்பரிய முறைகள் கைகொடுக்கும். நோய் தொடங்கிய ஆரம்ப நாட்களில் அவற்றைப் பருகி சுகம் காணலாம், இல்லையேல் மருத்துவரை நாடுவதில் தவறில்லை.

மருந்துச் சிரட்டை ஞாபகம் வரவில்லையா? வீடுகளில் பரியாரியாரின் மருந்துக் குளிகைகளை உரைப்பதற்கு பயன்படுத்துலார்களே. சிறிய தேங்காய் மூடிகளை நன்கு வழவழப்பாகச் சீவி கவனமாக வைத்திருப்பார்கள். அடிக்கடி யாருக்காவது தேவையும் வரும்.

பாரம்பரிய குடிநீர்வகைகள்

சளி இருமலுக்கான குடிநீர்

தூதுவளம் இலை 10-15, மிளகு ½ ரீ ஸ்பூன், அதிமதுரம் 1 துண்டு, தண்ணீர் ஒரு கப் ஆகியவற்றை ஒரு சிறிய பாத்திரத்தில் இட்டு அவித்து எடுத்து குடியுங்கள். சளி நீங்கும்.

காய்ச்சலுக்கான குடிநீர்

மல்லி 2 மேசைக் கரண்டி, மிளகு 4-5, திப்பலி 2, வேர்க்கொம்பு 1 துண்டு (சிறியதாக வெட்டியது) ஆகியவற்றை 1 ¼ கப் நீர் விட்டு அவித்து எடுத்து, நாள் ஒன்றுக்கு 2-3 தடவை நேரத்திற்கு ஒரு கப் வீதம் அருந்துவது காய்ச்சலைத் தணிக்கும். திப்பலி வேர்க்கொம்பு சேர்வதால் காய்ச்சலுடன் கூடிய உடல் வலியும் நீங்கும். மிளகு சேர்ப்பதால் இருமல் மறையும்.

வயிற்றுப் போக்கு, உணவு செமிபாடடையாமை

2 தேக்கரண்டி வெந்தயத்தை சிறிதளவு நீரில் ஊறவைத்து எடுத்து நீருடன் வெந்தயத்தையும் சாப்பிட தொல்லைகள் நீங்கிச் சுகம் கிட்டும்.

சலக்கடுப்பு, சிறுநீர் போகாமை

தேங்காயப்பூ கீரையை அவித்துக் குடிப்பது நன்மை தரும்.

சாதாரண சளிக்கு

வெற்றிலை, துளசி, கற்பூரவல்லி இலைகளை தினமும் சப்பிச் சாப்பிட்டுவர சளித் தொல்லை தீரும்.

வரட்டு இருமலுக்கு

பனம் கல்லக்காரம் இரண்டு மூன்று துண்டுகளை வாயில் போட்டு கரையவிடுங்கள்.

முக்கிய குறிப்பு

நான் மருத்துவன் அல்ல. இவை நானறிந்த பாரம்பரிய கைவைத்தியத்தில் சில. நீங்களும் உங்களது வீட்டு வைத்தியங்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

:- மாதேவி -:

Saturday, September 27, 2008

உருளைக்கிழங்கு வெங்காய வறுவல்
முதல்முதல் சமையல் செய்யப் பழகுவோருக்கும், Bachelors க்கும் உகந்தது.

ருசியாகவும் இலகுவாகவும் தயாரிக்கக் கூடியது என்பதால் அவர்கள் விரும்புவார்கள்.

அவசர யுகத்தில் அனைவருக்கும் ஏற்றது.

செத்தல் மிளகாய் வெட்டுத்தூள் சேர்ப்பதால் அழகையும் கொடுக்கும்.

சாதம், பிரியாணி, புட்டு, சப்பாத்தி, அப்பம், தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்.

1. உருளைக்கிழங்கு – 4
2. வெங்காயம் - 2 (நீளவாட்டில் வெட்டியது)
3. செத்தல் வெட்டுத்தூள் - 2 ரீ ஸ்பூன் (செத்தல் 4-5 யை இடித்தும் எடுக்கலாம்)
4. இஞ்சி பேஸ்ட் - 1 ரீ ஸ்பூன்
5. கடுகு – ¼ ரீ ஸ்பூன்
6. பட்டை(கறுவா) – 1 துண்டு
7. கறிவேற்பிலை சிறிதளவு
8. உப்பு தேவையான அளவு
9. எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

விரும்பினால்

1. ரம்பை – 2 துண்டு
2. சேர – 2 துண்டு
3. மல்லித்தழை சிறிதளவு
4. எலும்மிச்சைச் சாறு – 1 ரீ ஸ்பூன்
5. பெருங்காயப் பொடி சிறிதளவு


செய்முறை

1. கிழங்கை அவித்து எடுத்து பெரிய துண்டங்களாக வெட்டி வைக்கவும்.
2. எண்ணெயில் கடுகு பட்டை தாளித்து இஞ்சி பேஸ்ட் வதங்க (விரும்பினால் பெருங்காயப் பொடி சேர்க்கவும்) வெங்காயம் சேர்த்து மெல்லிய பிரவும் நிறம் வரும்வரை வதக்கவும்.
3. வதங்க வெட்டுத்தூள் சேர்த்து பச்சை வாசம்போக கிளறி கறிவேற்பிலை போட்டு வதக்கவும். (விரும்பினால் ரம்பை, சேர, சேர்க்கவும்)
4. கிழங்கைக் கொட்டி உப்புப் போட்டு 2 நிமிடம் கிளறி எடுக்கவும்.
5. விரும்பினால் எலும்மிச்சைச் சாறு விட்டு மல்லித்தழை தூவவும்.

-: மாதேவி :-

Tuesday, September 23, 2008

காரம் சுண்டல்அகிலம் எல்லாவற்றிற்கும் அன்னையாக விளங்கும் ஆதிபராசக்தியை வணங்கும் முகமாக கொண்டாடப்படும் விழா நவராத்திரியாகும். ஒன்பது நாட்களும் விரதம் இருந்து அன்னையைத் துதித்து வணங்குவர்.

முதன் மூன்று நாட்களும் வீரத்தை வேண்டி துர்க்கையம்மனை வழிபடுவர். அடுத்த மூன்று நாட்களும் செல்வத்தைத் தரும்படி வேண்டி இலக்ஷிமிதேவியை வணங்குவர். இறுதி மூன்று நாட்களும் கல்வியை நல்கும்படி சரஸ்வதிதேவியைப் பிராத்திப்பர். பத்து நாளும் கோயில்களில் விசேட பூசை நடைபெறும். வீடுகளில் கொலுவைத்து மாலையில் அன்னையை வணங்கிப் பூசித்து குங்குமம், பிரசாதம் கொடுத்து மகிழ்வர். ஒன்பதாம் நாள் இல்லங்கள் தோறும் சரஸ்வதிதேவியைத் துதித்து விமர்சையாக பிரசாதங்கள் படைத்து விழாக் கொண்டாடுவர்.

பத்தாம் நாள் விஜயதசமி. அன்று பாலருக்கு ஏடு தொடக்கும் நாள் விசேடமாகக் கொண்டாடப்படும். அன்னையை வணங்கி கல்விச் செல்வத்தைத் தந்தருளும்படி பிரார்த்தித்து நெற்தானியத்தில் ஓம் எனும் பிரணவத்தை எழுதி கல்வி தொடங்குவர். அனைத்துச் சக்திகளையும் கொண்ட தேவி மகிசாசுரனுடன் போரிட்டு வென்றதாக புராண வரலாறு கூறுகிறது. ஆதலால் அம்மனுக்கு மகிசாசுரவர்த்தனி என்ற பெயரும் வரக் காரணமாயிற்று.

விஜயதசமியன்று இரவு வெற்றி நாளாக சூரன் போர் இடம் பெறும். மானம்பூ எனச் சிறப்பாகக் கொண்டாடப்படும். போருக்கும் புறப்படும் அலங்காரத்துடன் அம்மன் சூலம் தாங்கி வீதிவலம் வந்து மகிசாசுரனை அழித்த காட்சிப்படலமாக வாழை மரத்தை வெட்டி குங்குமம் பூசி சொக்கப்பானையை எரித்து மகிழ்ச்சி கொண்டாடும் விழா நடைபெறும்.

இருவாரங்களில் ஆரம்பமாக இருக்கும் நவராத்திரி விழாவில் பிரசாதம் படைத்து மகிழ இக் காரம் சுண்டலை செய்து கொள்ளுவோம்.

தேவையான பொருட்கள்


1. கடலை ¼ கிலோ
2. மாங்காய் பாதி
3. வெங்காயம் - 1
4. காய்ந்த மிளகாய் - 2
5. தக்காளி – 1
6. கரட் - 1
7. உப்பு தேவையான அளவு

கார சோஸ் தயாரிக்க

1. மிளகாய்ப் பொடி ½ ரீ ஸ்பூன்
2. தக்காளிச் சாறு – 1 கப்
3. உப்பு தேவையான அளவு
4. எண்ணெய் - 1 ரீ ஸ்பூன்
5. தண்ணி - ½ கப்

தாளிக்க

கடுகு - ½ ரீ ஸ்பூன்
சீரகம் - ½ ரீ ஸ்பூன்
கறிவேற்பிலை – 2 இலைகள்
தேங்காய்த் துண்டுகள் - ¼ கப் (விரும்பினால்)
ஒயில் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

கடலையை 5-6 மணிநேரம் ஊறவைத்து எடுத்து குக்கரில் சிறிது உப்புச் சேர்த்து தண்ணீர் விட்டு 3 விசில் வைத்து எடுங்கள்.

மாங்காய், வெங்காயம், காய்ந்த மிளகாய், தக்காளி, கரட் ஆகியவற்றை தனித்தனியே சிறியதாக வெட்டி வையுங்கள்.

ஒயில் விட்டு கடுகு, சீரகம், கறிவேற்பிலை தாளித்து, காய்ந்த மிளகாய் வெங்காயம் வதக்கி தேங்காயத் துண்டுகள் சேர்த்துக் கிளறி, வெட்டிய மாங்காய், தக்காளி, கரட் லேசாகக் கிளறி கடலையைக் கொட்டி பிரட்டி இறக்குங்கள்.

ஒரு ரீ ஸ்பூன் ஒயிலில் தக்காளிச் சாறைவிட்டு வாடை போகக் கிளறி, ½ கப் தண்ணீர், மிளகாயப் பொடி, உப்பு சேர்த்து கொதிக்க இறக்கி வையுங்கள்.
சுண்டல் பரிமாறு முன் சோசை ஊற்றி விடுங்கள்.

குறிப்பு


கௌபீ, தட்டைப் பயறு, கடலைப் பருப்பு, பட்டாணி, மொச்சை போன்ற எல்லாவகை பருப்பு வகைகளிலும் இவ்வாறு செய்து கொள்ளலாம்.

காரம் சுண்டலை கடதாசியில் கோர்ன் போல சுருட்டிச் சாப்பிடுவது பிள்ளைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் கொண்டாட்டம்தான்.

-: மாதேவி :-

Monday, September 15, 2008

மலேசியன் ஸ்டைல் ஹொட் சிக்கின்


வெல்கம் மலேசியா.

அடர்ந்த இரப்பர், தேயிலை தோட்டங்களால் சூழப்பட்டு கண்ணைப் பறிக்கும் பச்சைப் பசேல் என்ற மலைச் சரிவுகளுடன் கூடி, கொள்ளை அழகுடன் விளங்கும் இந்நாடு சீதோஸ்ன நிலையால் அனைவரையும் கவர்ந்து அழைக்கும். சிங்கையின் நெருக்கடியான அவசர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு, ஆனந்தமான இயற்கைச் சூழல்களுடன் கலந்து, ரசித்து மகிழக் கூடிய காட்சிகள் அடங்கிய நாடு இது. வெண்முகில்கள் மலைச் சிகரங்களில் முட்டிச் செல்லும் அழகோ அழகுதான்.

அந்நாட்டு உணவு வகை ஒன்று நீங்களும் சமைத்து ருசித்துப் பாருங்களேன்.

சேர்விங் பரிமாறல், போட்டோகிராவ் மை டியர் சுவீட்டி சின்னு.

மலேசியன் ஸ்டைல் ஹொட் சிக்கின்

தேவையான பொருட்கள்


1. போன் லெஸ் சிக்கின் - ½ கிலோ
2. மிளகாய்ப் பொடி – 1 ரீ ஸ்பூன்
3. இஞ்சி உள்ளி பேஸ்ட் -1 ரீ ஸ்பூன்
4. உப்பு தேவையான அளவு
5. பொரிக்க எண்ணெய் - ¼ லீட்டர்

கிறேவிக்கு

1. வெங்காயம் - 2
2. தக்காளி -4
3. செத்தல் - 4
4. இஞ்சி உள்ளி பேஸ்ட் -1 ரீ ஸ்பூன்
5. உப்பு தேவையான அளவு
6. கறிவேற்பிலை – சிறிதளவு
7. எண்ணெய் - 3 டேபில் ஸ்பூன்

செய்முறை

1. இறைச்சியில் இஞ்சி, உள்ளி பேஸ்ட், உப்பு, மிளகாய்ப் பொடி பிரட்டி ½ மணித்தியாலம் ஊறவிட்டு, எண்ணெயில் பொரித்து எடுத்து வையுங்கள்.
2. செத்தலை சிறிது தண்ணீர்; விட்டு கூட்டாக அரைத்து எடுத்து வையுங்கள்.
3. வெங்காயம், தக்காளி சிறிதாக வெட்டி வையுங்கள்.
4. ஒரு டேபில் ஸ்பூன் எண்ணெயில் இஞ்சி உள்ளி பேஸ்ட் வதக்கி, செத்தல் கூட்டைப் போட்டு பச்சை வாடை போக, மணம் வரும் மட்டும் கிளறி, எடுத்து வையுங்கள்.
5. இரண்டு டேபில் ஸ்பூன் ஓயில் விட்டு வெங்காயம் தாளித்து தக்காளி சேர்த்துக் கிளறி உப்பு போட்டு எண்ணெய் மேலே வருமட்டும் கிளறி, கறிவேற்பிலை சேர்த்துப் பொரித்த இறைச்சியைக் கொட்டிக் கிளறி இறக்கி வையுங்கள்.
6. சேர்விங் பிளேட்டை எடுத்து, இறைச்சியைப் போட்டு, இதன் மேல் மிளகாய்க் கூட்டைக் கொட்டி பரிமாறுங்கள்.

குறிப்பு

சாதம், புரியாணி ரைஸ், மசாலா ரைஸ், ஸ்ரிங்கொப்பர் புரியாணி, ரொட்டி, நாண், பரோட்டா, புட்டு, அப்பம் அனைத்திற்கும் சுப்பர் சுவை கொடுக்கும்.
விரும்பினால் மல்லித்தழை அல்லது செலறி தூவிக் கொள்ளுங்கள்.

:- மாதேவி :-

Thursday, September 11, 2008

மண் சுமக்க வைத்தது
இதன் ருசியில் மயங்கியவராக நாம் முதன் முதலில் அறிந்தது இவரைத்தான். எல்லாம் வல்லவராக எங்கும் நிறைந்தவரான அவரே மயங்கினால் நானும் நீங்களும் எம்மாத்திரம். தமிழ் இந்துக்கள் யாவரும் அறிந்த கதைதான்.

எமது முதற் கடவுள் சிவனாரே மண் சுமக்கும் கூலியாளியாக உருமாறி செம்மனச் செல்வியாரிடம் வேலைக்குப் பேரம் பேசினார். உதிர்ந்த பிட்டுக்கள் எல்லாம் தனக்கு தந்தால் போதும் மண் அள்ளிப் போடுவதாகச் சொன்னார். அன்று ஆச்சி அவித்த பிட்டுக்கள் உதிர்ந்தன அவன் லீலையால்.

எல்லாம் உதிர்ந்ததால் அளவுக்கு அதிகமாக உண்டு, உண்ட களைப்பால் நித்திரை செய்தான். வேலை செய்து முடியாததால் பாண்டிய மன்னனின் காவலாளியிடம் சவுக்கடி வாங்கிய கதையை சிறுவயதில் படித்தோம். படித்த நாட்களில் அதன் ருசியை கனவுகளிலும் கண்டு பசி கொண்டு எழும்பினோம்.

ரிச் நட்ஸ் குழல் பிட்டு

தேவையான பொருட்கள்

• வறுத்த அரிசிமா – 2 கப்
• அவித்த மைதா – ¼ கப்
• தேங்காய்த் துருவல் - ½ மூடி
• உப்பு சிறிதளவு
• வாழையிலை -1
• அவித்த கடலைப் பருப்பு- 1 கப்
• வெல்லத் தூள் - ¼ கிலோ
• பிளம்ஸ் 100 கிராம்
• கஜூ- 100 கிராம் (பொடித்தது)
• ஏலத்தூள் - ½ ரீ ஸ்பூன்

செய்முறை

மாவைப் பாத்திரத்தில் போட்டு உப்புக் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைத்தெடுத்து சிறிது சிறிதாக ஊற்றி மரக்கரண்டிக் காம்பால் கிளறுங்கள். மா உதிரி உதிரியாக வருமட்டும் கிளற வேண்டும். சிறுசிறு உருண்டைகள் போல உருண்டு வரும். சற்று சூடு ஆற கைகளாலும் உருத்திக் கொள்ளலாம். அல்லது ஒரு நீளமான ரேயில் போட்டு விளிம்பில்லாத டம்ளரால் கொத்தி ஒரே அளவானதாக செய்து கொள்ளுங்கள்.


வாழையிலையை எடுத்து சுடுநீரில் கழுவி வைத்துக்கொள்ளுங்கள்.

பிட்டுப் பாத்திரத்தை எடுத்து நீர்விட்டுக் கொதிக்க வையுங்கள்.
அவித்த கடலைப் பருப்பு, வெல்லத் தூள், பிளம்ஸ், கஜூ-,தேங்காய்த் துருவல், ஏலத்தூள் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். குழலை எடுத்து அடியில் தட்டை நேராக வைத்து சிறிதளவு பருப்பு கலவையை தூவி விடுங்கள். பிட்டு மாவை மெதுவாக கையில் நிறைத்து எடுத்து குழலில் போடுங்கள். மீண்டும் பருப்பு கலவையை போட்டு அதன் மேல் புட்டுமா என்ற ஒழுங்கில் போட்டு முடிவில் பருப்புக் கலவையுடன் முடியுங்கள்.

தண்ணீர் நன்றாக கொதித்து ஆவி வெளிவர குழலை மேலே வைத்து மூடியால் மூடிவிடுங்கள். பிட்டு அவிய 3-5 நிமிடங்கள் எடுக்கும். ஆவி குழலிருந்து வெளிவரும். கமகமக்கும் பிட்டு மணமும் சேர்ந்து வரும். ஆவி 2-3 தடவை வெளிவந்ததும் குழலை இறக்கி மூடியைத் திறந்துவிடுங்கள்.

வாழையிலையை ரே ஒன்றில் வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது பிட்டுக்குழல் சற்று ஆறியிருக்கும். குழலை எடுத்து சரித்து மெதுவாக பிட்டுத் தடியினால் தள்ளுங்கள். பிட்டு உடையாது வாழையிலையில் அழகாக வந்து சேரும். (சூட்டுடன் தள்ளினால் உதிர்ந்துவிடும்) மிகுதி மாவையையும் முன்போலவே செய்து எடுத்துக் கொள்ளுங்கள்.

வாசமான இனிய நட்ஸ் பிட்டு தயாராகிவிட்டது. இனிப்பானதால் மாம்பழம், பலாப்பழம் இரண்டில் ஒன்றை சேர்த்துச் சாப்பிட்டால் சுவை அமிர்தம்தான். வாழைப்பழம் சேர்த்துக் கொண்டால் செகண்ட் கிரேட் மட்டுமே.

குறிப்பு

இனிப்பில்லாது தனியே தேங்காய்த் துருவலை மட்டும் சேர்த்து செய்து கொண்டு கறி, சம்பல், குழம்புவகை, சொதி ஆகியவற்றுடனும் சாப்பிடலாம்.

கிழங்கு, கத்தரிக்காய், வாழைக்காய், மரவள்ளி சிப்ஸ்சும் சுவைதரும்.

எல்லா வகை அசைவ கறிகளும் மெருகூட்டும்.

மைதா, குரக்கன்மா, ஆட்டா, கோதுமை மா வகைகளிலும் இதே போன்று செய்து கொள்ளலாம்.

சாம்பார் வெங்காய சிப்ஸ்ம் சுவை கொடுக்கும்.

வெங்காய சிப்ஸ் பொரியல்


தேவையான பொருட்கள்.

1. சாம்பார் வெங்காயம் - ¼ கிலோ
2. பச்சை மிளகாய் - 1
3. உப்பு தேவையான அளவு
4. மிளகாய்ப் பொடி – ¼ ரீ ஸ்பூன்
5. மஞ்சள் பொடி சிறிதளவு
6. பொரிப்பதற்கு நல்லெண்ணெய் அல்லது சூரியகாந்தி எண்ணெய்.

செய்முறை

வெங்காயத்தை நீளவாக்கில் ஒரே அளவாக வெட்டி வையுங்கள். பச்சை மிளகாயை துண்டங்களாக வெட்டி எடுங்கள். மஞ்சள் தூள், மிளகாய்ப்பொடி பிரட்டி வையுங்கள்.

எண்ணெய் கொதித்ததும் உப்பை வெங்காயத்தில் சேர்த்துப் பிரட்டி எண்ணெயில் போடுங்கள். கவனமாக இடையிடையே பிரட்ட வேண்டும். அரை வேக்காடு பொரிந்த பின் அடிக்கடி கிளற வேண்டும்.

பொரிந்து வரும்போது விரைவில் கருகக் கூடும் என்பதால் தீயை அளவாக வைத்து பிரட்டிக் கொள்ளுங்கள். கலகலப்பாக சிவந்த நிறத்தில் வர எடுத்து பேப்பரில் போட்டு எண்ணெய் வடிய விடுங்கள்.

கமகமக்கும் வெங்காய சிப்ஸ் தயார்.

குறிப்பு

1. உப்பை முன்பே பிரட்டி வைக்கக் கூடாது. தண்ணீர் விட்டுவிடும்.

2. பொரிக்கும் நெற்வடியில் போட்டும் பொரித்துக் கொள்ளலாம்.

நன்றி:- மண் சுமக்கும் சிவனாரின் படம் சிவமுருகனின் ஆவணி மூலத் திருவிழா பதிவிலிருந்து எடுக்கப்பட்டது.

-: மாதேவி :-

Monday, September 8, 2008

பாம்புபோல இழுபடும் சாப்பாடு


இது இங்கு அறிமுகமான ஆரம்ப காலங்களில் வீட்டில் தயாரிக்கும்போது
கொள்ளுப் பாட்டியுடன் வீடடில் சண்டைதான்
என அம்மா கூறுவார் . "பாம்புபோல இழுபடும் இது என்ன சாப்பாடு" என ஒரே புறுபுறுப்புத்தானாம். சமையல் இரண்டு வேலையாகிவிடும் அன்று.

ஒன்று பாட்டிக்கு மட்டும் பிறிம்பாக. தம்பி அவங்களோ விரும்பி ரசித்து உண்ணுவார்கள். இப்பொழுது பெரும்பாலான குழந்தைகளின் மிகவும் விரும்பிய உணவாக 2 minutes favouite ஆகிவிட்டது.

ஒவ்வொரு நாளும் இலங்கை இந்திய சாப்பாடு சாப்பிடும் எங்களுக்கு சற்று மாறுதலாக
மேற்குலக சாப்பாடு. அதிலும் எங்களுர் மிளகாய்ப்பொடியும் கலந்து செய்து
கொண்டால் சுவை கூடும். சுவைத்துத்தான் பார்ப்போமே.
எங்கள்

தேவையான பொருட்கள்

அவித்து எடுத்த நூடில்ஸ் - 200 கிராம்
முட்டை – 2 மார்ஜரின் - 50 கிராம்
எலும்பில்லாத இறைச்சி – 200 கிராம்
கரட் - 100 கிராம் பீன்ஸ் -100 கிராம்
வெங்காயம் - 1
அவித்த கிழங்கு – 200 கிராம்
மிளகாய்த்தூள் - ¼ ரீ ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
மசாலத் தூள் - சிறிதளவு இஞ்சி
உள்ளிப் பேஸ்ட் சிறிதளவு
மிளகு தூள் - ½ ரீ ஸ்பூன்
எண்ணெய் - 2 ரீ ஸ்பூன்

அலங்கரிக்க

அவித்த முட்டை -1 (துண்டுகளாக வெட்டி வையுங்கள்)
பாஸ்லி சிறிதளவு
தக்காளி -1 (துண்டுகளாக வெட்டி வையுங்கள்)

பரிமாற

சில்லி சோஸ்


செய்முறை
கரட், பீன்ஸ் சிறியதாக வெட்டி ஸ்ரீம் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள்.

பாத்திரத்தில் எண்ணெயை விட்டு, இஞ்சி உள்ளி வதக்கி வெங்காயம் மெல்லிய நிறத்தில் வதக்கி, இறைச்சி சேர்த்து மிளகாய்ப்பொடி, மஞ்சள்தூள், மசாலா, உப்பு
சேர்த்து தண்ணீர் ½ கப் விட்டு அவித்து எடுங்கள்.

கரட் பீன்ஸ்சில் உப்பு மிளகு சேர்த்து எடுத்துக் கொள்ளுங்கள். கிழங்கை எடுத்து நன்றாக மசித்து உப்பு மிளகு தூள் சேர்த்து வையுங்கள். ஒரு முட்டையை நன்கு அடித்து, இத்துடன் கலந்து கொள்ளுங்கள்.

அவன் போல் அல்லது ரேயை எடுத்து மாஜரின் தடவி
கிழங்கு பேஸ்டை அடியில் போட்டு நன்கு தடவி விடுங்கள். கிழங்கின் மேல்
சிறிது மாஜரின் பூசிக்கொள்ளுங்கள். ஒரு முட்டையை அடித்து நூடில்ஸ் மரக்கறி
இறைச்சிக் கலவையுடன் கலந்து கிழங்கின் மேல் போட்டு, மிகுதி மாஜரீனையும் போட்டுக்கொள்ளுங்கள். அவனை (Oven)180 C – 360oF சூடாக்கி நூடில்சை வைத்து 20 நிமிடம் பேக் செய்து எடுத்து சேர்விங் பிளேட்டில் தலைகீழாக மாற்றி அலங்கரித்து சில்லி சோஸ்சுடன் பரிமாறுங்கள்.

குறிப்பு

சைவப்பிரியரிகளுக்கு முட்டைக்குப் பதில் ½ கோப்பை பாலில் ½ தேக்கரண்டி
கோர்ன் பிளவர் சேர்த்து கரைத்து ஊற்றிக் கொள்ளுங்கள். அசைவத்தில் மீனிலும்
இறுக்கமான கறி தயாரித்து சேர்த்துக் கொள்ளலாம்.

Thursday, September 4, 2008

அம்மன் கோவில் ஞாபகம் வந்திடுச்சே ஆசையில் ஓடிப் போனேன்.


பரந்த வெளி. சுழற்றி வீசும் அனல் காற்றின் வெப்பம். துடித்துப் பதைத்து மதிய வெப்பத்தில் பாதம் சிவக்க ஓடினால் வாவா என அழைக்கும் ஆல மரக் கூடல். வேர் விட்டு கிளை பரப்பி விசாலித்து நிழலைத் தந்து கொண்டு வழிப்போக்கர்களின் ஓய்விடமாய்…

மரத்தைத் தாங்கும் விழுதுகளில் தொங்கி ஆடும் சிறுவர்களின் கூச்சல் கல்லடுப்புகளில் அவியும் நீர்ப்பாளையம். படைப்பதின் மணம் காற்றில் பரவி ஊரெங்கும் கமழும். கோடை நோய்களைத் தணிக்க, வெப்பத்திற்கு இதமாக அம்மனுக்கு குளிர்த்தி செய்யும் அந்த நாட்களை எப்படி மறக்க முடியும்.

பூசைப் படையலுக்கு கற்பூர ஆரத்தி!

“எப்படா முடியும்” என ஆவலுடன் கைகளில் வாழை இலை துண்டு, ஆலமிலைத் தட்டம், கொட்டாங்குச்சி ஏந்திய வண்ணம் இருக்கும் கூட்டம். அந்த நீர்ப்பாளையத்தின் ருசியையும் மணத்தையும் சொல்வதற்கு வார்த்தைகள் உண்டா?


சாம்பார் சாதம், அவிசு, ஒண்டாக் காச்சல், கறிச்சோறு


இப்படி எத்தனையோ பெயர்களில் அழைக்கலாம்.


தேவையான பொருட்கள்


நாட்டுப்புழுங்கல் அரிசி – 1கப்

(அல்லது சம்பா)


கிராமத்து காய்கறிகள்


மரவள்ளி – ¼ கிலோ
மஞ்சள் பிஞ்சுப் பூசணி (தோலுடன்) - ¼ கிலோ
பயித்தங்காய் - 150 கிராம்
கத்தரிக்காய் - 150 கிராம்
வாழைக்காய் - 150 கிராம்
புடலங்காய் - 150 கிராம்
பலாக்கொட்டை – 10
முளைக்கீரை சிறிய கட்டு -1
தக்காளி -3
கரட் -1 (விரும்பினால்)
துவரம்பருப்பு – ¼ கப்
வறுத்துத் தோல் நீக்கிய பாசிப்பயறு – ¼ கப்
தேங்காய்ப்பால் -1 கப்
மிளகாயத்தூள் -2 தேக்கரண்டி
தனியா -1தேக்கரண்டி
சீரகத் தூள் - 1தேக்கரண்டி
மஞ்சள்பொடி சிறிதளவு
புளி – இரண்டு சிறிய எலுமிச்சை அளவு
உப்பு தேவையான அளவு


தாளிக்க


சாம்பார் வெங்காயம் - 6-7

செத்தல் -1
கடுகு – ½ ரீ ஸ்பூன்
உழுத்தம் பருப்பு – 1 ரீ ஸ்பூன்
நெய் - 2 டேபில் ஸ்பூன்


சேர்த்துக் கொறிக்க சிப்ஸ்


மரவள்ளி – ¼ கிலோ

மிளகாய்த்தூள் - ¼ ரீ ஸ்பூன்
உப்பு சிறிதளவு
பொரிப்பதற்கு தேங்காய் அல்லது சூரியகாந்தி எண்ணெய் - ¼ லீட்டர்


மேலதிக தேவைக்கு

வாழை இலை -1

மண்சட்டி -1
கொட்டாஞ் சோறு ருசிக்கு 1 வெற்றுத் தேங்காய் மூடி


செய்முறை


மரக்கறிகளை நடுத்தர அளவான துண்டங்களாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். வெங்காயம், செத்தல் சிறியதாக வெட்டிக் கொள்ளுங்கள்.

நாட்டுப் புழுங்கல் என்றால் மரக்கறியும் அவிவதற்கான தண்ணீரையும் சேர்த்துவிட்டு, அரிசி பருப்பை அவியவிடுங்கள். அரைவேக்காடு அவிந்ததும் மரக்கறிகள், மிளகாய்ப் பொடிவகைகள், உப்பு சேருங்கள்.

(சம்பா என்றால் அரிசியுடன் பருப்பு மரக்கறிகள் (கீரை, தக்காளி தவிர) சேர்த்து பெரிய ஒரு பாத்திரத்தில் போடுங்கள். அரிசி மரக்கறிகள் மூடும் அளவிற்கு தண்ணீர்; விட்டுவிடுங்கள். மிளகாயப் பொடிவகைகள், உப்புச் சேர்த்து அவிய விடுங்கள்.)

15 நிமிடத்தின் பின் திறந்து பிரட்டி மூடிவிடுங்கள். 10 நிமிடங்களின் பின் கீரை தக்காளி சேர்த்து மூடிவிடுங்கள். 5 நிமிடத்தின் பின் புளிக்கரைசல் ஊற்றி கிளறுங்கள். பின் தேங்காய்ப்பாலையும் விட்டுக் கிளறி சிம்மில் வையுங்கள். இறுக நெய்விட்டு தாளித்துக் கொட்டிக் கிளறுங்கள்.


கொட்டாஞ் சோற்றுக் கோப்பைக்கு

தேங்காயின் அடி மூடியை எடுத்து வாள்பிளேட் கொண்டு வெளித் தும்பை நன்றாகச் சுத்தம் செய்து, 6-7 மணித்தியாலம் தண்ணீரில் ஊறப் போட்டு Steal வூல் கொண்டு உட்புறம் வெளிப்புறம் தேய்த்து உப்பு நீரில் கழுவி எடுத்துக் கொள்ளுங்கள்.

சிப்ஸ்

மரவள்ளியை 2-3 அங்குல நீள் துண்டுகளாக மெல்லியதாகச் சீவி சற்று வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அல்லது பேப்பர் ஒன்றில் போட்டு பான் காற்றின் கீழ் வைத்துவிட்டால் ஈரம் உலர்ந்திருக்கும். பொன்னிறமாகப் பொரித்து எடுத்து, உப்பு மிளகாய்த்தூள் தூவிவிடுங்கள். ஒரு மாதமளவில் கெடாமல் இருக்கும். விரும்பிய பொது கொறித்துக் கொள்ளுங்கள்.

இப்போது சமைத்த சாம்பார் சாதத்தை எடுத்து வாழையிலையில் வைத்து இறுக்கமாக மடித்து வையுங்கள்.

கொட்டாஞ் சோற்றுக் கோப்பை, சட்டி இதிலும் போட்டுக் கொள்ளுங்கள்.

உங்கள் விருப்பமான சுவைக்கு ஏற்ப அம்மன் கோயில் சாதம் அம்மாவின் சட்டிக் கைமணம், கொட்டாஞ் சோற்று நினைவுகளுடன் உண்டு மகிழுங்கள்.

குறிப்பு

பிரஸர் குக்கர், ரைஸ்குக்கர், மைக்ரோ விலும் செய்து கொள்ளலாம். கிராமத்து காய்கறிகள் இல்லாத இடத்தில் பீன்ஸ், கரம், கோவா சேர்த்து செய்து கொள்ளலாம். மசாலா விரும்பினால் பட்டை, கராம்பு, சோம்பு சேர்த்துக் கொள்ளலாம்.

-: மாதேவி :-