Sunday, February 22, 2009

சமையலறையில் மருத்துவ நெல்லி

கெட்டபோல் எறிதல், கல்லெறிதல் இவை தெரியாது வளர்ந்த சிறுவர்கள் இருக்க முடியுமா?

மாங்காய், புளியங்காய், இலந்தை, விளாம்பழம், கொய்யா இவற்றுடன் நெல்லிக் காய்க்கு எறிந்தவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கக் கூடும்.

சிறுவர்கள் எல்லோருமே மிகவும் விரும்பி உண்ணும் பழங்களில் இதுவும் ஒன்று. அரை நெல்லி என்று இங்கே அழைப்போம். தமிழ்நாட்டில் அரு நெல்லி என அழைப்பீர்களா?

இங்கு பொது சந்தையில் சிறிய பைகளில் இருபது ரூபாய்க்கு விற்பனைக்குக் கிடைக்கின்றது.

காய் பழங்களிலே அதி கூடிய விட்டமின் சீ (Vit C) சத்துடையது இதுவாகும். இதில் 600 மி.கி அளவு விற்றமின் சீ இருப்பதாக தெரிகிறது. ஏனைய சத்துக்கள் மிகக் குறைவே.

இதை நேரடியாக சாப்பிடுவதன் மூலம் விட்டமின் சீ பெற்று நோயெதிர்புச் சக்தியை வளர்த்துக் கொள்ள முடியும்.

அதிக புளிப்புத் தன்மையுடையதால் ஒரு சில காய்களுக்கு மேல் சாப்பிட முடியாது போகும். எனவே சமையலிலும் பயன்படுத்தலாம்.

இவற்றை சமைக்கும்போது விற்றமின் சீ சேதமடையும் என்ற போதும் அதனின்று கிடைக்கும் குறைந்தளவிலான ஏனைய சத்துக்களையாவது பெற்றுக் கூடியதாக இருக்கும்.

பதப்படுத்தப்பட்டு சிரப், கோடியல்களாகவும் கிடைக்கின்றன. உப்பிட்டு வெயிலில் உலர்த்தி வற்றலாகவும் தொக்கு, அச்சாறு, ஊறுகாய், முரப்பா, ஜாம், எனப் பலவாறு தயாரிக்கலாம்.

நேரடியாக தேங்காய்ச் சட்னி, ஏனைய சட்னி வகைகளுடன் கலந்து அரைத்து எடுத்துக் கொள்ளலாம்.

வெஜிட்டபிள் சலட், புரூட் சலட் இவற்றில் சொப் செய்து கலந்து கொள்ளலாம்.
ரசம், சொதி தயாரித்துக் கொள்ளலாம்.

மாங்காய் சாதம் போன்று இதிலும் செய்து கொள்ளலாம்.


சாதம், புட்டு, இடியப்பம் ஆகியவற்றிற்கு மெல்லிய புளிப்புடன் கூடிய நெல்லி பாற் சொதி நல்ல சுவையைக் கொடுக்கும்.

சேகரிக்க வேண்டியவை

நெல்லிக்காய் பெரியது – 6-7 (சிறியது 10-15)
பச்சை மிளகாய் - 3
சின்ன வெங்காயம் - 6-7
வெந்தயம் - ¼ ரீ ஸ்பூன்
சீரகம் ¼ ரீ ஸ்பூன்
மஞ்சள்பொடி விரும்பினால்
உப்பு தேவைக்கு ஏற்ப
கறிவேற்பிலை – சிறிதளவு
கெட்டித் தேங்காய்ப் பால் - 2 கப்
தண்ணித் தேங்காய்ப் பால் - ¼ கப்

தாளிக்க

செத்தல் 1
கடுகு சிறிதளவு
சின்ன வெங்காயம் - 2
கறிவேற்பிலை - சிறிதளவு
ஒயில் - 1 ரீ ஸ்பூன்

செய்முறை

நெல்லிக்காயைக் கழுவி இரண்டு மூன்று துண்டுகளாக வெட்டி விதைகளை நீக்கிக் கொள்ளுங்கள்.

பச்சை மிளகாய், வெங்காயம், நீளமாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

பாத்திரத்தில் நெல்லிக்காய்த் துண்டுகள் பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், வெந்தயம், சீரகம், உப்பு, கறிவேற்பிலை, தண்ணிப்பால் விட்டு அவிய வையுங்கள்.

ஒருகொதி வந்ததும் கிளறிவிடுங்கள்.

அவிந்ததும் கெட்டிப்பால் விட்டு கலக்கி இரு கொதி வர இறக்கி விடுங்கள். (பால் மேலே திரையாதிருக்க அடிக்கடி கலக்கிக் கொள்ளுங்கள்.)

தாளித்து போட்டுக் கலந்து விடுங்கள்.

......... மாதேவி ...........

Tuesday, February 17, 2009

கறியாகும் பூ

இன்றைய நாகரீக மாற்றத்தில் பாட்டி காலத்து கிராமத்தின் 'பக்குவ சமையல் முறைகள்' அருகி மறைந்து போய்விட்டன.

அங்கொன்றும் இங்கொன்றுமாக அவற்றில் சில நகரங்களில் ஆடிக்கொரு தடவை இடம் பிடிப்பதுண்டு.

கிராமத்து பொருட்களில் சில வகையானவை நகரங்களில் கிடைப்பதும் அருமை. அவ்வாறு கிடைத்தாலும் அநேகருக்கு அவற்றை எவ்வாறு சமைப்பது என்ற விடயமும் கேள்விக் குறியாகவும் இருக்கிறது.

எனவே எமது பாரம்பரிய உணவு முறைகளை மறவாது செய்து வருவது சிறந்தது.

அந்த வகையில் கொல்லை அகத்தியென பாடல்களில் புகழ்ந்து பாடப்பட்ட மரம் இது. கிராமங்களில் பிரசித்து பெற்ற இது வீட்டுக் கொல்லைகளில் பெரும்பாலும் இடம் பிடிக்கும். அகத்தி பூ பூத்தாலும் புறத்தி புறத்தியே என்ற சொல்வழக்கையும் நினைவில் கொள்ளலாம்.

மரம் பூக்கும் காலத்தில் வெண்கத்தி போன்ற பூக்களாய் கொத்துக்களுடன் தொங்கும் அழகோ கொள்ளைதான்.

அழகில் அனைவரையும் கவரும் அகத்தி இலை, பூ என இரண்டுமே சமையலில் முக்கிய இடத்தை வகித்து வருகின்றது.

கூடிய சத்துக்களும் அடங்கியுள்ளது. இரும்புச் சத்து நிறைந்தது. எலும்புகளை வளர்ச்சியடையச் செய்யும் கல்சியமும் அடங்கியுள்ளது. உடலுக்கு சீரான சக்தியையும் கொடுக்கும்.

இவ் வகையில் சிறப்புற்ற அதன் பூவை நாமும் சமைத்து உண்போமே.

சமைப்பதற்கு வேண்டியவை

அகத்திப் பூ - 20-25
உருளைக்கிழங்கு – 1
வெங்காயம் - ½
பச்சை மிளகாய் - 2(காரத்திற்கு ஏற்ப)
மஞ்சள் பொடி – (விரும்பினால்)
உப்பு – தேவையான அளவு
தேசிச் சாறு – சிறிதளவு
முதலாம் தேங்காய்ப்பால் - ¼ கப்
தண்ணிப்பால் - ½ கப்

தாளிக்க

கடுகு – ¼ ரீ ஸ்பூன்
உழுத்தம் பருப்பு - 1 ரீ ஸ்பூன்
வெங்காயம் - ½
கறிவேற்பிலை – சிறிதளவு

வாருங்கள் சமைப்போம்

பூவின் காம்புடன் கூடிய புல்லியை வெட்டி எடுத்து அகற்றி விடுங்கள்.
உள்ளிருக்கும் மகரந்தத்துடன் கூடிய தடித்த தண்டையும் அகற்றிவிடுங்கள். புழு பூச்சி இருந்தால் அப் பூவின் இதழ்களை அகற்றி விடுங்கள்.

நல்ல இதழ்களாக ஒவ்வொன்றாகப் பிரித்து எடுத்து வையுங்கள். வடியில் இட்டு ஓடும் குழாய் நீரில் நன்றாகக் கழுவிக் கொள்ளுங்கள். பின்பு நீரை வடிய வைத்துவிடுங்கள்.

கிழங்கு வெங்காயம் சிறிய துண்டுகளாக வெட்டி வையுங்கள்.

பச்சை மிளகாயை கீறிவிடுங்கள்.

விரும்பினால் பூ இதழ்களை அகலப்பாட்டுக்கு குறுக்காக ஒரு தடவை வெட்டுங்கள். முழு இதழாகவும் செய்து கொள்ளலாம்.

கிழங்கை தண்ணிப் பால் சிறிது உப்புடன் சேர்த்து அவியவிடுங்கள்.

கிழங்கு முக்கால் பாகம் அவிந்ததும் பூ இதழ்கள், வெங்காயம், பச்சை மிளகாய், சிறிது உப்பு சேர்த்து அவியவிடுங்கள். விரைவில் அவிந்துவிடும்.

ஓராம்பால் விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி தேசிச்சாறு விட்டு பிரட்டி விடுங்கள். தாளித்துக் கொட்டி கிளறிவிடுங்கள்.

பூ வாசத்துடன் பூப்பூவாய் கறி தயாராகும். சாப்பாட்டு பிளேட் எடுத்து விட்டீர்களா? சாப்பிட்டுவிட்டு ரிஸல்ட் சொல்லுங்கள்.

---------- மாதேவி ----------

Wednesday, February 4, 2009

கீரை சாப்பிட வாங்க

இயற்கையாகவே இலகுவாகக் கிடைக்கக் கூடிய தாவர உணவு இது. விலை குறைந்த போதும் போஷாக்கு மிகுந்தது. பல வகை உணவுகளிலும் சேர்த்துத் தயாரிக்கக் கூடியது.

இரும்புச்சத்து

இதிலுள்ள இரும்பு, இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் உற்பத்திக்கு மிகவும் அவசியமானது. இரும்புச் சத்துக் குறைவு இரத்த சோகையை ஏற்படுத்தும் என்பதை எல்லோரும் அறிவோம். அதைத் தடுப்பதற்கு கூடியளவில் கீரைகளை நாளாந்தம் எமது உணவில் சேர்த்துக் கொள்ளல் வேண்டும் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததுதான்.

குழந்தைகளுக்கும் இளவயதினருக்கும் கர்ப்பிணிகளுக்கும் மிகவும் முக்கியமானது. அனைவருமே உணவில் சேர்த்துக் கொள்வது நன்மை தரும்.

இலைவகைகள் பலவகையானவை. முளைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்காணி, அகத்தி, வல்லாரை என அடுக்கி கொண்டே போகலாம். கோவா, லீக்ஸ்ம் இலை வகைகளில் அடங்கும்.

கிழங்குகளின் இலைகள்


வத்தாளை, மரவெள்ளி, பீற்ரூட், கரட், முள்ளங்கி, கோலி ப்ளவர், பூசணி இலைகளும் உண்ணப்படுகின்றன. இவற்றில் கிழங்கை விட இலைகளே அதிக சத்துள்ளவை.

எனவே இவற்றின் இலைகளை வீசத் தேவையில்லை. இலைகளை சிறியதாக வெட்டி பருப்பு வகைகளுடன் சமைத்துக் கொள்ளலாம். பொரியல், சூப், சொதி வகைகள் செய்து கொள்ளலாம்.

எமது உணவு அரிசி உணவாக இருப்பதால் தினமும் 50கிராம் ஆவது பச்சையிலைகளை உணவில் சேர்ப்பது மிகவும் அவசியமாகும். இலைகளிலிருந்து இரும்பு, புரதம், கல்சியம், கரட்டீன், நார்ப் பொருள் என்பன எமது உடலுக்குக் கிடைக்கின்றன.

புற்றுநோயைத் தடுக்கும்


இலைகளை அதிகம் உண்பவர்களுக்கு பெருங் குடல், சிறுநீரகம், சுவாசப்பை, மார்பு ஆகியவற்றில் புற்றுநோய் உண்டாவது ஏனையவர்களைவிடக் குறைவு என சில ஆய்வுகள் கூறுகின்றன.

மலச்சிக்கலையும் தடுக்கும்

கீரையில் உள்ள நார்ப்பொருள் மலச்சிக்கலை ஏற்படுத்தாமல் தடுக்கின்றது. வல்லாரையில் 68.8 மி.கிராம் இரும்பும், பஸன் இலைகளில் 25.5, வத்தாளையிலையில் 16.3, பீட்ரூட் இலையில் 16.2 உண்டு.

'பொன்னை எறிந்தாலும் பொடிக் கீரையை எறியாதே'
'வீட்டுச் செல்வம் மாடு, தோட்டச் செல்வம் கீரை'
போன்ற பழமொழிகள் உண்டு

கீரை வகைகளின் போஷாக்கு

கொத்த மல்லி,புதினா, கறிவேற்பிலை இல்லாத இலங்கை இந்திய சமையலே இல்லை என்றே கூறலாம். சட்னி, கறிவகைகள்,சூப், பிரியாணி, பூட் டெகரேசன், ஹெல்த், என அசத்தும் இவற்றை குயீன்ஸ் ஒவ் கிறீன் லீவ்ஸ் எனக் கூறினால் மிகையில்லை.

பார்ஸ்லி, செலரி, லெடியுஸ்- மேலைத் தேச உணவுகளில் அசத்தும் இவை சலட், சான்ட்விச், புரியாணி, அலங்கரிப்பதற்காகவும் பயன்படுகின்றன.

முளைக் கீரை சிறுகீரை, அகத்திக் கீரை, அறக்கீரை, காட்டுக்கீரை, மூக்கிறைச்சிக்கீரை, ஆகியன கீரை மசியல், மோர்க் குழப்பு, பொரியல், காரக் குழம்பு, பச்சடி, புட்டு, வடை, சொதி செய்து கொள்ள பயன்படும்.

அகத்திக் கீரையில் அதிகளவு புரதம் (8.4கிராம்), கல்சியம் (1130 மிகி), கரட்டீன் (5280 மைக்ரோ கிறாம்) உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

வெந்தயக் கீரை இதில் கனிம உப்புகள், புரதம், விற்றமின் அடங்கியுள்ளன. வெந்தயக் கீரையுடன் உருளைக்கிழங்கு சேர்த்து வட இந்தியாவில் உணவுகள் தயாரிப்பார்கள். சட்னி, சப்பாத்தி, ரொட்டி, கறி, துவையல், புரியாணி ஆகியன தயாரித்துக் கொள்ளலாம்.

வல்லாரைக் கீரை ஞாபக சக்தியை அதிகரிக்கும், கண் பார்வைக்கு நல்லது எனக் கூறப்படுகிறது. கஞ்சி, ரொட்டி, சட்னி, சலட் தாயாரிப்பில் பயன்படுகிறது.

பொன்னாங்காணிக் கீரை இரும்பு 2.8(கிராம்), கரோட்டின் (3900 மைக்ரோ கிறாம்) ஆகியன அதிகம் உண்டு. புரதம் 2.7 உள்ளது. தொடர்ந்து சாப்பிட்டு வர மேனி பளபளக்கும் என முன்னோர் கூறுவர். தலை முடி வளர்த்திக்கும், கண் பார்வைக்கும் நன்மை தரும் என்று சொல்லப்படுகிறது. பால்கறி, பாற்சொதி, பொரியல் செய்து கொள்ளலாம்.


முருங்கைக் கீரை இரும்பு 7.0(கிராம்), கரோட்டின் (3600 மைக்ரோ கிறாம்), கல்சியம் (440 மிகி) உண்டு. குளிர் காலத்திற்கு ஏற்ற உணவாகக் கருதப்படும் இது வெயில் காலத்தில் சாப்பிடுவது வெப்பம் தரும் எனச் சொல்லப்படுகிறது. இதற்கு விஞ்ஞான பூர்வ ஆதாரம் இருந்தால் கூறுங்கள்.

கர்ப்பணித் தாய்மாருக்கு உகந்த இலை. பொரியல், பாற்சொதி, ரொட்டி, அடை, வடை, சூப், சாம்பார் சாதம் அவற்றில் சேர்த்துக் கொள்ளலாம்.

மாதேவி