Wednesday, July 30, 2008

சோயா, கிழங்கு, தக்காளி பிரட்டல்


ரைஸ் பிரியாணி, இடியாப்ப பிரியாணி, சாதம், புட்டு, ரொட்டி, சப்பாத்தி போன்ற எதற்கும் ஏற்ற டிஸ்தான் சோயா கிழங்கு தக்காளி பிரட்டல்.

தேவையான பொருட்கள்

சோயா - 1 1/2 கப்
உருளைக் கிழங்கு நடுஅளவாக - 1
தக்காளிப் பழம் - 3
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய்- 1
மிளகாயத் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள்- சிறிதளவு
தனியா(மல்லி) தூள் - 1/2 தேக்கரண்டி
டொமாட்டோ சோஸ் - 2 தேக்கரண்டி
சில்லி சோஸ் - 1தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கறுவா - 1துண்டு
இஞ்சி - 1 துண்டு(பேஸ்ட்)
சுடுநீர் - 3 கோப்பை

வறுத்துப் பொடியாக்க

கறுவா - 1துண்டு
கராம்பு - 1
ஏலம் - 1
சின்னச்சீரகம் - 1/4 தேக்கரண்டி
தாளிக்க
கடுகு - 1/4 தேக்கரண்டி
இஞ்சி, உள்ளி பேஸ்ட் -சிறிதளவு
ரம்பை - 1 துண்டு
கறிவேப்பிலை - சிறிதளவு
மல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி

செய்முறை

சோயாவை கோப்பை ஒன்றில் இடவும். அதனுடன் கறுவாப்பட்டை ஒரு துண்டு, இஞ்சி பேஸ்ட், உப்பு சிறிதளவு சேர்த்து, மூன்று கோப்பை கொதிநீர் ஊற்றி, மூடி ஊறும் வரை வைக்கவும்.

நீரை வடித்து குளிர்ந்த நீரில் கழுவி பிழிந்து எடுக்கவும்.

கிழங்கு தக்காளி, வெங்காயம் சிறியதாக, தனித்தனியாக வெட்டி வைக்கவும்
மிளகாயை நீளவாக்கில் வெட்டிவிடவும்.

எண்ணெயைச் சூடாக்கி கிழங்கை மெல்லிய பிரவுண் கலரில் பொரித்து எடுத்து வைக்கவும். மீதி எண்ணெயில் கடுகு தாளித்து, இஞ்சி பேஸ்ட் வதக்கி, உள்ளி சேர்த்துக் கிளறி, வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதங்க, ரம்பை, கறிவேற்பிலை சேர்த்து விடவும். சோயாவைப் போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும்.

அதன்பின் தக்காளி சேர்த்து பச்சை வாசம் போகும்வரை கிளறி. பொரித்த கிழங்கு உப்பு, மிளகாயப் பொடி, மஞ்சள் தனியாப் பொடி கலந்து இரண்டு நிமிடம் விடவும்.

மசாலாப் பொடி, டொமாட்டோ சோஸ், சிலிசோஸ், மல்லித்தழை சேர்த்துக் கிளறி எடுக்கவும்.

Sunday, July 27, 2008

பகோடாநொருக்கு தீன் தின்ன யாருக்குத்தான் விருப்பமில்லை. வாய்க்குள் போட்டு நொறு நொறுவெனக் கடித்து, அரைத்துச் சுவைக்க இது பொருத்தமான தீனிதானே.

தேவையான பொருட்கள்

கடலைப் பருப்பு - 250கிராம்
சோம்பு - 2 தேக்கரண்டி
செத்தல் மிளகாய் - 4கறிவேப்பிலை - 5, 6 இலைகள்
அரிசிமா - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பெருங்காயப் பொடி - சிறிதளவு
பொரிக்க தேங்காய் எண்ணெய்
அல்லது சூரியகாந்தி எண்ணெய் - 2-3 கப்

செய்முறை

பருப்பை 4- 5 மணிநேரம் ஊற வைத்து வடித்து எடுக்கவும். சோம்பு, உப்புடன் பருப்பைச் சேர்த்து தண்ணீர் விடாது அரைத்து எடுக்கவும்.
அரிசிமா, பெருங்காயப் பொடி, சிறியதாக வெட்டிய செத்தல் மிளகாய், கறிவேப்பிலையையும் அதனுள் போட்டு பிசைந்து வைக்கவும்.
எண்ணெயைக் கொதிக்க வைத்து, கொதி வந்ததும் மாவைக் கையில் எடுத்து விரல்களுக்கிடையால் பிழிந்து விடவும்.
அடிக்கடி புரட்டி விடவும்.

மொறுப்பாக வந்ததும் எடுத்து ரிஸ்சு பேப்பரில் போட்டு, எண்ணெய் வடிந்து ஆறியதும் எடுத்துக் கொறிக்கவும்.

மிகுதி இருந்தால் காற்று புகாதபடி போத்தலில் அடைத்து வைக்கவும்.

Tuesday, July 22, 2008

பப்பாளி பஷன் புருட்டி
சாப்பாடு முடிந்து விட்டதா? வாய்க்கு ருசியாக உடலுக்கு ஆரோக்கியமாக ஒரு டெஸேட் இது.

சின்னுகள் பழங்கள் என்றாலே காததூரம் ஓடுவார்கள். பின் பைல்ஸ் என முனங்குவார்கள். அவர்களையும் கவர்ந்து இழுக்கக் கூடியது இதன் 'கவர்ச்சி'. சுவையும்தான்

இந்தச் செய்முறை இரண்டு பேருக்கு அளவானது

தேவையானவை

சிறிய சைசான பப்பாசிப் பழம்- 1

ஒரு அங்குல உயரமுள்ள 4 வட்டமான துண்டங்களாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். (தோல் சீவி, விதைகளை நீக்கி விடவும்).

பஸன் பழம்- 1
சீனி- 3 தேக்கரண்டி
செய்முறை

பஸன் பழத்தை வெட்டி உள்ளிருக்கும் சாறை சிறு கரண்டியால் எடுத்து, கோப்பை ஒன்றில் வைக்கவும். இதனுடன் சீனி சேர்த்து நன்கு கரையும் வரை கலக்கவும்.

பரிமாறும் கோப்பையில் பப்பாளித் துண்டு 2யை வைத்து மேலே பஸன் கலவையில் பாதியை பரப்பிவிடவும்.

இவ்வாறு இன்னொரு கோப்பைத் தயார்படுத்தவும். ஒரு மணி நேரம் பிரிஜ்ல் வைத்து எடுத்துப் பரிமாறவும்.

புளிப்புடன் இனிப்பும் சேர்ந்த கதம்ப சுவை அலாதியானது. பஸன் விதைகள் மொறு மொறுவென கடிபடுவது வித்தியாசமான சுவையைக் கொடுக்கும்.


Sunday, July 20, 2008

தயிர் அவல்


இலகுவாகத் தயாரியுங்கள்

அவசர காலை உணவுக்கு ஏற்றது.

தேவையான பொருட்கள்

அவல்- ஒரு கப்

வெங்காயம்- சாம்பார் வெங்காயம் 5-6, அல்லது பெரிய வெங்காயம் சிறிதளவு (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய்- ஒன்று (பொடியாக நறுக்கியது)

கறிவேப்பிலை- சிறிதளவு (பொடியாக நறுக்கியது)

தயிர்- இரண்டு மேசைக் கரண்டி

உப்பு சிறிதளவு

முந்திரி வற்றல்- 20

வாழைப்பழம்- 2ரேஸ்ருக்கு வேண்டுமாயின்

இஞ்சித் துருவல் சிறிதளவு.
கடுகு, உழுத்தம் பருப்பு தாளிக்க

சமையல் எண்ணெய் 2 தேக்கரண்டிசெய்முறை-


அவலை ஊற வையுங்கள் சுமார் 5 முதல் 10 நிமிடங்கள்.

நன்றாகப் பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சித் துருவல், தயிர் உப்பு ஆகியவற்றைச் சேருங்கள்

கடுகு, உழுத்தம் பருப்பு இரண்டையும் தாளித்து கொட்டிக் கிளறவும்.

இதனைப் பரிமாறும் தட்டில் போட்டு,

வட்டமாக வெட்டிய வாழைப்பழத் துண்டங்கள், முந்திரி வற்றல்கள் இரண்டையும் வட்டமாக அடுக்கி அலங்கரியுங்கள்.

இனிப்பு, உறைப்பு, புளிப்பு சேர்ந்த சூப்பர் சுவையுடன் நாவூற வைக்கும். கண்ணுக்கும் விருந்தாகும்.

குழந்தைகளுக்கு பச்சை மிளகாயைத் தவிர்த்துச் செய்தால் மிச்சம் வைக்க மாட்டார்கள்.