Thursday, April 23, 2009

ஜில்லென்று ஒரு சலட்

ஆதிமனிதன் தோன்றிய காலத்தில் உணவைத் தேடி அலைந்து திரிந்தான். பழங்கள், கிழங்குகள், விதைகள் என்பவற்றை நேரடியாக உண்ணத் தொடங்கினான்.

பின்பு இறைச்சி வகைகளை தீயில் வாட்டி, சுவை சேர்க்க உப்பிட்டு தேனிட்டு, பிற்காலத்தில் காரம் சேர்த்து, அதன் பின் வாசனை ஊட்டி என உணவு தயாரிக்கும் முறைகளில் காலம் தோறும் மாற்றங்கள் பல ஆண்டுகளாக ஏற்பட்டு வந்திருக்கிறது என்பதை நாங்கள் எல்லோரும் வரலாறுகள் மூலம் அறிந்திருக்கிறோம்.

இவ்வழிமுறைகளில் கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள், குளிர்காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள் என வெட்ப தட்ப நிலைக்கு ஏற்ப பிரித்து உண்பதால் உடல் ஆரோக்கியமும் கிடைக்கும். நோய்களின்றும் காப்பாற்றிக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளார்கள்.

இவற்றில் வெட்ப காலங்களில் பழங்கள், தயிர், பால்,மோர், இளநீர் கூழ், கஞ்சி கீரைவகைகள், வெண்டி, தக்காளி, வெங்காயம் நீர்த்தன்மையுடைய காய்வகைகளான வெள்ளரி, சவ்சவ், பீர்க்கு, நீத்துக்காய், சுரைக்காய், புடலங்காய், முள்ளங்கி போன்றன குளிர்ச்சியைத் தரும், வெப்பத்தைத் தணிக்கும் உணவுகளாக இருந்து வருகின்றன.

வெயில் வெப்பதால் உடலிலிருந்து வியர்வை வெளியேறுவதால் தண்ணீர்த் தாகம் அதிகரிக்கும். அதற்கு ஈடுகொடுக்க நீர்த்தன்மையுள்ள உணவுகளை உண்பது தாகத்தைத் தணிக்கும். அத்துடன் குளிர்ச்சியை வெப்ப காலத்தில் எமது நா விரும்புவதாலேயே கோடையில் மண்பானைத் தண்ணீர், ஜில்ஜில் ஜீஸ், ஐஸ்கிறீம் என ஓடுகிறோம்.

இவ்வகையில் கோடைக்கு ஏற்ற ஜில்லென்று ஒரு சலட்தான் தர்ப்பூசணி.

குழந்தைகளைக் கவரும் விதமாகவும் விரும்பி உண்ணும் விதமாகவும். வெட்டி அலங்கரித்துக் கொள்வோம் வருகிறீர்களா? செய்வோம்.


தேவையானவை
தர்ப்பூசணி – 1 பழம்
பச்சை அப்பிள் - 1
சலட் இலைகள் - 5
சர்க்கரை – ½ ரீ ஸ்பூன்
லெமன் ஜீஸ் - 1 ரீ ஸ்பூன்
கறுவாப்பொடி சிறிதளவு
மிளகுதூள், உப்பு தேவையான அளவு

தயாரிப்போம்

தர்ப்பூசணியை குறுக்கு வாட்டில் வெட்டி வெளிக்கோப்பை சிதையாதவாறு உள்ளிருக்கும் பழச்சதையை வெட்டி எடுங்கள்.

விதையை நீக்கி சிறுசிறு துண்டுகளாக வெட்டி வையுங்கள்.


அப்பிளை தோலுடன் சிறு துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள்.

தர்ப்பூசணி தோலுடன் மூடிய கோப்பையை உப்பு நீரில் அலசி எடுங்கள்.

சேர்விங் பிளேட்டில் கழுவிய சலட் இலைகளை அடுக்கி அதன்மேல் தர்ப்பூசணி கோப்பையை வையுங்கள்.

வெட்டிய தர்ப்பூசணி துண்டுகளுடன் அப்பிளை கலந்து மிளகு தூள் கறுவாப்பொடி தூவி எடுத்து தர்ப்பூசணி கோப்பையில் வையுங்கள். (விரும்பினால் பிரிட்ஸில் வைத்து எடுக்கலாம்.)

பரிமாறும் பொழுது உப்பு, சர்க்கரை, லெமன் ஜீஸ் கலந்து விடுங்கள்.

கண்ணைக் கவரும் சிவப்பு நிறத்துடன் இனிப்பு, நீர்த்தன்மை சுவை சேர்ந்த சலட் தயாராகிவிட்டது.

ஹெல்த்துக்கும் ஏற்றதுதானே.

குறிப்பு

உப்பு, சர்க்கரை. லெமன் முதலே கலந்து வைத்தால் நீர்த்தன்மை கூடிவிடும் என்பதால் உடனே சேர்ப்பதுதான் நன்று.

மாதேவி

Thursday, April 16, 2009

பொரித்த வெங்காய பிரியாணி

வெங்காயம் பொரிக்கும்போதே அதன் வாசனை ஊரெல்லாம் கமகமக்க வைக்கும். சாப்பிட வேண்டும் என்ற ஆசையைக் கிளப்பும். உப்பு காரத்துடன் எண்ணெயில் பிரண்டு உருண்டு வர நாக்கு சுவைக்கச் சொல்லித் தூண்டும்.

என்ன கொலஸ்டரோல் ஏறப்போகிறது என்கிறீர்களா? இருக்கிறதுதான்.

ஒரு மாறுதல் சுவைக்கு இடையிடையே சாப்பிட்டுக் கொள்ளலாம்.

இத்துடன் பலன்ஸ் கொடுக்க பருப்பு கறி, சோயாக் கறி, வெஜிட்டபில் சொப்சி, மீன் கறி, சலட், பச்சடி, பழவகை ஏதாவது இருவகையைச் சேர்த்துச் சாப்பிட்டுக் கொள்வது உகந்ததாக இருக்கும்.

சாப்பிடத் தயாராகிவிட்டீர்களா?


முதலில் செய்து கொள்வோம்.

அரிசி – 1 கப்
வெங்காயம் - 4
கஜீ – 10
கறிவேற்பிலை – 5-6 இலைகள்
உப்பு தேவைக்கு ஏற்ப
நெய் அல்லது சன் ப்ளவர் ஓயில் - 4-5 டேபிள் ஸ்பூன்

பொடி வகைகள்

மிளகாய்ப் பொடி – 1 ரீ ஸ்பூன்
தனியா தூள் – 1 ரீ ஸ்பூன்
சீரகத் தூள் – 1 ரீ ஸ்பூன்
மிளகு தூள் – ½ ரீ ஸ்பூன்
மசாலா பொடி – ½ ரீ ஸ்பூன்

செய்முறை

சாதம் அவித்து எடுத்து வையுங்கள். வெங்காயம் நீள வாட்டில் மெல்லிய துண்டாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.

கஜீ உடைத்து சிறிதளவு நெய்யில் வறுத்து எடுத்து வையுங்கள்.

வெங்காயத்தில் உப்பு மிளகாய் பொடி பிரட்டி நெய்யில் பொரிய வையுங்கள். நன்றாக இடையிடையே பிரட்டி நன்கு பொரியவிட்டு எடுத்து வையுங்கள்.

ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யில் கறிவேற்பிலையை வதக்கி தனியாப் பொடி, சீரகப் பொடி, மசாலா பொடி, மிளகு பொடி சேர்த்து சாதத்தையும் கொட்டி சிறிதளவு உப்பு போட்டு கிளறிவிடுங்கள்.

பொரித்த வெங்காயத்தில் முக்கால் பாகத்தையும் கஜீவையும் சாதத்தில் சேர்த்து பிரட்டிவிடுங்கள்.

பிளேட்டில் சாதத்தைப் போட்டு பிறிதாக எடுத்து வைத்த வெங்காயப்
பொரியலையும் மேலே தூவி அலங்கரித்துக் கொள்ளுங்கள்.

வெங்காய சீரகப் பொடி வாசத்துடன் பிரியாணி தயார்.

மாதேவி

Wednesday, April 8, 2009

மொறு மொறுவென உழுந்து முறுக்கு

வழமையாக கடலை, உழுந்து, பொட்டுக்கடலை, அரிசி போன்றவற்றை மாவாக பொடித்து எடுத்து முறுக்கு செய்வது வழக்கம்.

இது தோசை, வடை, இட்டலிக்கு அரைப்பது போன்று அரைத்த உழுந்திலிருந்து தயாரிக்கப்பட்டது.

உழுந்தை நேரடியாகச் சேர்ப்பதால் உழுந்தின் வாசம் கூடுதலாக இருக்கும். அத்துடன் இலகுவாகச் செய்யக் கூடியது.

வழமையாக உழுந்து அரைக்கும்போதே சற்றுக் கூடுதலாக உழுந்தைப் போட்டு அரைத்து எடுத்துக் கொண்டால் தின்பண்டத்திற்கு சுட்டுக் கொள்ளலாம். தனியே முறுக்கு செய்வதற்கான ஆயத்தங்கள் செய்ய வேண்டியதில்லை, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துவிடலாம் என்பது போலத்தான்.

முறுமுறுத்துக் கொண்டு செல்லும் வீட்டுக்காரரையும் பிள்ளைகளையும் கட்டிப்போட்டு உங்களேயே சுற்றிச் சுற்றி வர வைக்க இலகுவான வழி இதுதான்.

செய்துகொள்வோம்

உழுந்து – 1கப்
அவித்த மைதா – 3 கப்
வறுத்த அரிசிமா ¼ கப்

அரைத்து எடுக்க

சீரகம் - 1 ரீ ஸ்பூன்
மிளகு – ½ ரீ ஸ்பூன்
பூண்டு - 5-6 பல்லு

பொடிவகைகள்

மிளகாய்ப் பொடி – 1 ரீ ஸ்பூன்
மஞ்சள் பொடி – ¼ ரீ ஸ்பூன்
பெருங்காயப்பொடி சிறிதளவு
உப்பு தேவையான அளவு

பொரிப்பதற்கு

எண்ணெய் ½ லீட்டர்

செய்முறை

உழுந்தை தோசைக்கு செய்வதுபோல ஊற வைத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதில் மைதா, அரிசிமா, அரைத்த கூட்டு, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, பெருங்காயம், உப்பு கலந்து குழைத்து முறுக்குமா பதத்தில் சிறிது நீர் விட்டு குழைத்து எடுத்துக் கொள்ளவும்.

எண்ணெயைக் கொதிக்க வையுங்கள். மாவை உரலில் இட்டு எண்ணெய் தடவின 5-6 சிறிய தட்டுக்களில் சிறிய ஓரிரு சுற்று முறுக்குகளாகப் பிழிந்து வையுங்கள்.

எண்ணெய் நன்கு கொதிக்க முறுக்குக்களைப் போட்டு பொரிய விடுங்கள்.

ஒருபுறம் பொரிவதை இடையிடையே பிரட்டிக் கொண்டே, அடுத்த தடவை போடுவதற்கான முறுக்குக்களை தட்டுகளில் பிழிந்து வையுங்கள்.

பொன்னிறத்தில் பொரித்து எடுத்த முறுக்குகளை எண்ணெய் வடிய போட்டுவிடுங்கள். மற்றைய முறுக்குகளை எண்ணெயில் போட்டு பொரியவிடுங்கள். அவ்வாறு ஏனைய மாவையும் முறுக்குகளாக்கிக் கொள்ளுங்கள்.

நல்ல முறுமுறுப்பாகவும் ஒரு மாதமளவில் வைத்து எடுக்கக் கூடியதாகவும் இவை இருக்கும்.

உப்பு உறைப்பு சுவையுடன் நொறுக் நொறுக்கென கொறித்துக் கொண்டு அனைவரும் வளைய வருவார்கள்.

மாதேவி