Saturday, April 24, 2010

கோடை காலத்துக்கு மணத்தக்காளி சட்னி


“பச்சை நிறமே…பச்சை நிறமே.. இச்சை கொடுக்கும் பச்சை நிறமே” மனக்கண்ணில் மாதவனும் ஷாலினியும் பறப்பது… தெரிகிறதே.

இலைகள்

நாளாந்தம் உண்ணும் அரிசி, கோதுமை மாப்பொருள் உணவுடன் எமது உடலுக்குத் தேவையான விட்டமின்களையும், கனிப்பொருள்களையும் பெறுவதற்கு இலை வகைகள், காய்கறிகள், பழவகைகள் ஆகியவற்றை அதிகம் சேர்த்து உண்ண வேணடும்.

இரும்பு கல்சியம், பொட்டாசியம், மக்னீசியம், அயடின் போன்ற கனியங்கள் முக்கியமானவை. இலைவகைகளில் உடல் வளர்ச்சிக்கும் தேவையான விற்றமின் ஏ, பீ சுண்ணாம்பு இரும்புச் சத்துக்கள் இருக்கின்றன என்பது அறிந்ததுதான்.

அரிசி உணவோடு கீரை

அரிசி உணவில் விற்றமின் ஏ குறைவாக இருப்பதால் நாங்கள் நாளாந்தம் உண்ணும் உணவில் 50கிராம் ஆவது கீரை வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இலகுவாக மலிவாகக் கிடைக்கும் கீரைகளை வாங்கிச் சமைத்துக் கொள்ளலாம்.

மணத்தக்காளி கீரை


கீரை வகையில் மணத்தக்காளி கீரையும் சிறந்தது. இதன் பொட்டானிக்கல் பெயர் Solnum nigrum ஆகும்.

மணத்தக்காளி என்பது இங்கு மருவி மணித்தக்காளி ஆயிற்று.
மணிமணி போல் பழங்கள் இருப்பதால் அவ்வாறு வந்ததோ?

இதன் இலை, காய், பழம் என மூன்றையுமே சமையலில் பயன்படுத்தலாம்.
சிறிய வெள்ளைப் பூக்களுடன் மலரும்.
இதன் காய் மிகவும் சிறிதாக கொத்துக் கொத்தாகக் காய்த்துத் தொங்கும். காய் முற்றிவர கத்தரிப்பூ நிறமாக மாற்றமடையும்.


இன்னொரு இன வகையின் பழம் இளம் சிகப்பு நிறமாக இருக்கும். இப் பழங்கள் இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையுடன் இருக்கும். நேரடியாகவே உண்ணலாம்.

சிறிய வயதில் விரும்பி உண்டதில்லையா?
சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தமான பழம் இது.



மணத்தக்காளி இலையில் சட்னி, பச்சடி, கூட்டு, பொரியல், ரசம், சொதி செய்யலாம். காய், பழத்தில் புளிக் குழம்பு செய்து கொள்ளலாம்.

வெப்ப காலத்தில் உடல் வெப்பத்தைத் தணிக்க பெரும்பாலும் சமையல் செய்து உண்பார்கள்.

கோடைச் சூட்டிற்கு நாவில் தோன்றும் கொப்பளங்களைப் போக்க இதன் இலையை சிறிது தண்ணீர் விட்டு அவித்துக் குடிப்பது மிகுந்த பலனைத் தரும். சம்பல் செய்து சாப்பிடுவதும் சிறந்தது.

வீட்டு வைத்தியத்தில்

கிராமங்களில் இதன் நன்மையை அறிந்து அதிகம் பயன்படுத்துவர்.

குடல் புண்ணுக்கும் சுகம் தரும். மூல நோய்க்கும் சிறந்தது என்பர்.

கண் பார்வைக்கும் பல் உறுதிக்கும் வேண்டிய விற்றமின் ஏ, பீ, இரும்பு, சுண்ணாம்புச் சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன.

மணத்தக்காளி சட்னி

இன்று சட்னி செய்து கொள்வோமா?
இரண்டு முறையில் செய்யலாம்.

தேவையான பொருட்கள்-
முறை - 1



மணத்தக்காளிக் கீரை – 1 பிடி
செத்தல் மிளகாய் - 1
பூண்டு – 2-4
சின்ன வெங்காயம் - 6
தேங்காய்த் துருவல் - 1 கப்
பழப்புளி – தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ½ ரீ ஸ்பூன்

தேவையான பொருட்கள்-
முறை - 2


மணத்தக்காளிக் கீரை – 1 பிடி
மிளகு - ¼ ரீ ஸ்பூன்
சின்னச் சீரகம் - ¼ ரீ ஸ்பூன்
பச்சை மிளகாய் -1(விரும்பினால்)
சின்ன வெங்காயம் - 6
தேங்காய்த் துருவல் - 1 கப்
உப்பு - தேவையான அளவு.
தேசிச் சாறு - 1 ரீ ஸ்ப+ன்

செய்முறை - 1

கீரையை துப்பரவு செய்து ஒவ்வொரு இலையாக ஆய்ந்து எடுங்கள்.

சிறிதளவு தண்ணீர் விட்டு நிறம்மாறாது அவித்து எடுங்கள்.

ஓயிலில் செத்தல் மிளகாய், பூண்டு வதக்கி எடுத்து வையுங்கள்.

மீதி எல்லாப் பொருட்களையும் மிக்சி ஜாரில் கொட்டி, கிர்…கிர் எனத் தட்டி எடுத்திட வேண்டியதுதான்.

செய்முறை – 2

கீரையை துப்பரவு செய்து ஒவ்வொரு இலையாக ஆய்ந்து எடுங்கள்.

சிறிதளவு தண்ணீர் விட்டு நிறம்மாறாது அவித்து எடுங்கள்.

தேசிச்சாறு தவிர்த்து மீதி எல்லாப் பொருட்களையும் மிக்சி ஜாரில் கொட்டி,அரைத்து எடுங்கள்.

பரிமாறும் கோப்பையில் எடுத்து வைத்து விடுங்கள்.

தேசிச்சாறு விட்டுக் கலந்துவிடுங்கள்.

குறிப்பு

(தேங்காய்த் துருவலை லேசாக வறுத்து அரைத்துக்கொண்டால் சட்னி கெடாமல் இருக்கும். சுவையிலும் வித்தியாசத்தைத் தரும்.)

மாதேவி.

Wednesday, April 14, 2010

பழச்சாறுப் பொங்கல்


அனைவருக்கும் சித்திரைப் புது வருட வாழ்த்துக்கள்.

தை முதல் நாள், சித்திரை முதல் நாளில் சூரிய பகவானை நினைத்து பொங்கல் செய்து படைத்து வணங்குவது எமது பாரம்பரிய வழக்கமாகும்.

ஒளியைத் தந்து பயிரை வளர வைத்து உணவை அளிக்கும் சூரியனை முன்னோர் கடவுளாகக் கண்டே வழிபட்டனர்.

இம் முறையில் வயலில் விளைந்த அரிசி எடுத்து சுவைக்கு பால், வெல்லம், பருப்பு இட்டு சமைத்துப் படைத்து வருடம் பூராவும் இனிதே இருக்க வேண்டி உண்பர்.

அரிசி

ஆசிய நாட்டவரது பிரதான உணவு அரிசியே. வெப்ப வலய நாடுகளிலே பெரும்பாலும் நெல் விளைவிக்கப்படுகிறது.

ஆசியாவுக்கு அப்பால் மத்திய கிழக்கு, லத்தீன் அமெரிக்கா, வெஸ்ட் இன்டீஸ் ஆகிய பகுதிகளிலும் பிரதான உணவாக இருக்கிறது.

உலகிலேயே சோளத்திற்கு அடுத்ததாக அதிகம் பயிரிடப்படும் உணவுப் பயிர் இதுவாகும்.

ஆரம்பத்தில் உணவுக்காக தினை, சாமை, குரக்கன், வரகு, சோளம், பயிரப்பட்டு வந்தது. பின் நெல் கூடுதலாகப் பயிரப்பட்டது.

நாகரீகங்கள் வளர்ச்சியடைய காலத்திற்குக் காலம் உண்ணும் உணவுகளில் புதிய புதிய மாற்றங்கள் உரு மாறுகின்றன.

இப்பொழுது இளைய தலைமுறையினர் அரிசி உணவுப் பண்டங்களை பெரும்பாலும் விரும்பி உண்பதில்லை. நாவுக்குச் சுவையாக பட்டர் சீஸ், சோஸ் சேர்த்துத் தயாரிக்கப்பட்ட பிட்ஸா, பர்ஹர், பேஸ்டா, நூடில்ஸ் உணவை விரும்பி உண்கின்றார்கள்.

அரிசியில் 100 கிறாம் சிவப்பு பச்சையரிசியில்
காபோஹைரேட் 78.2
புரோட்டின் 6.8.
நார்ப்பொருள் 1.3
கொழுப்பு 0.5,
விட்டமின் பீ 1– 0.07,
பீ 6- 1.64,
இருக்கிறது.

இதைத் தவிர பயறில் நிறைந்தளவு புரதம் 24, கொழுப்பு 1.5, காபோஹைரேட் 56.7, விற்றடமின் ஏ, கல்சியம், போலிக்அசிட் போன்றவையும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் கோவிலில் நாகதம்பிரானுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் பொங்கல் வைத்து படைத்து வணங்குவது ஆதி தொட்டு இருந்து வரும் வழக்கமாகும்.

ஒரு முறை பொங்கலிடும் போது எங்கள் அப்பா இருவகையான பொங்கல் செய்து படைப்போம் எனக் கூறினார்.

வெல்லப் பொங்கல் ஒன்றும்,
பழச்சாறுகள்,கற்கண்டு,வெல்லம் சேர்த்த பொங்கல்
என மற்றொன்றும் செய்திருந்தோம்.

வெல்லப் பொங்கலைவிட பழச்சாறுப் பொங்கல் மிகுந்த சுவையுடன் இருந்தது. அந்த முறையில் தயாரித்த பொங்கலை இங்கு தருகிறேன்.

தேவையான பொருட்கள்


தீட்டிய சிவப்புப் பச்சை அரிசி – 1 கப்
வறுத்து உடைத்த பாசிப் பயறு – ¼ கப்
கற்கண்டு – ¼ கப்
தூள் வெல்லம் - ¼ கப்
கரும்புச் சாறு - ½ கப்
முந்திரிப் பழச்சாறு – ¼ கப்
தோடம்பழச் சாறு – ¼ கப்
மாதுளம் பழச் சாறு – ¼ கப்
தேன் - 4 டேபிள் ஸ்பூன்
நெய் - 4 டேபிள் ஸ்பூன்
கஜீ – 50 கிறாம்
பிளம்ஸ் 50 கிறாம்.
ஏலப் பவுடர் - ¼ ரீ ஸ்பூன்
தேங்காய்ப்பால் - 1 கப்
தலைவாழையிலை – 1
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
மாம்பழம் - 1
வாழைப்பழம் - 1

செய்முறை

மூன்று கப் தண்ணீரைக் கொதிக்க விடுங்கள்.

அரிசி பருப்பைக் கழுவி நீரில் இட்டு அவியவிடுங்கள்.

தேங்காய்ப் பாலில் வெல்லத்தைக் கரைத்து வடித்து வையுங்கள்.

அரிசி பருப்பு நன்றாய் வெந்த பின் கஜீ, பிளம்ஸ், கற்கண்டு, ஏலப் பவுடர் சேர்த்துக் கிளறுங்கள்.

வெல்லம் கரைத்த தேங்காய்ப் பாலை விட்டு அடுப்பைக் குறைத்து வைத்து இடையிடையே கிளறுங்கள். பழச் சாறுகள் சேருங்கள்.

பொங்கல் இறுகிவர தேன், நெய் விட்டு கிளறி இறக்குங்கள்.

சுவையான பழச்சாறுப் பொங்கல் நெய் மணத்துடன் மூக்கினுள் நுளையும்.

தலைவாழை இலை கிழியாமல் இருப்பதற்கு சுடுநீரில் கழுவி எடுங்கள்.


இலையை எடுத்து ஒரு பிளேட்டில் வையுங்கள். பொங்கலைக் கரண்டியால் எடுத்து இலையில் வட்டமாகப் பரவி விடுங்கள்.

நடுவே தயிர் வைத்து வாழைப்பழம் மாம்பழத் துண்டுகளுடன் பரிமாறுங்கள்.

மாதேவி.

Thursday, April 1, 2010

சமையலறையில் ஜோக்ஸ்

விடுதலை விடுதலை
இண்டைக்கு ஒரு நாளாவது லீவு
கப்பேர்ட் எல்லாம் காலி
சமைக்க வேண்டியதில்லை
சமையலிலிருந்து
விடுதலை விடுதலை.

0.0.0.0.0.0

இது நகைச்சுவை அல்ல
மனங்கலங்க வைக்கும்
பாசத்தின் குரல்.

0.0.0.0.0.0

ஹொரர் மூவி பார்க்க
உங்களுக்கு மட்டும்தான் ஆசையா?
திகிலோடு பார்க்கிறார்கள்
இவர்கள்.

0.0.0.0.0.0

மனிசி ஊருக்குப் போட்டாவாம்.
சாப்பாட்டிற்கு வழியில்லை.
சமைத்தே ஆக வேண்டும்.
புத்தகம் பார்த்து
முயற்சிக்கிறார் இவர்.




0.0.0.0.0.0

அதிவிவேகியான இவரது முயற்சி
இன்னும் தீவிரமானது.



0.0.0.0.0
எடையைப் பேணுவதில்
யாருக்குத்தான் ஆசையில்லை.
இவரது தேர்வு எந்தப் பக்கம் எனப் புரிகிறதா?
இரண்டும் எடைக்கு எடை சமம்தானே
என வாதிடுகிறார்.


0.0.0.0.0.0


'இண்டைக்கு விருந்தாளிகள் வாறாங்கள்.'


'அம்மாவின்ரை சாப்பாட்டை நாயும் சாப்பிடாது' எண்டு அய்யா ஏசுறார்.

'நானாவது சமைக்கலாம்' என முயல்கிறார் இவர்.

0.0.0.0.0

'வெயிட்டர் என்னப்பா இது. போனகிழமை வந்தபோது மீன்கறி நல்லாயிருந்தது. இது சரியில்லை.

'அப்படி இருக்காது. இது அதே மீன்கறிதானே ஐயா!.'

0.0.0.0.0

"முட்டை என்ன விலை"


"ஒண்டு 15 ரூபா. வெடிச்ச முட்டை எண்டால் ஒண்டு 8 ரூபாவுக்கு தருவன்"

"எனக்கு பத்து முட்டைகளை வெடிக்க வைச்சுத் தா"
0.0.0.0.0