Saturday, April 23, 2011

கனவாகிப்போன அடுக்களைப் பொருட்கள்

சமையலறையை யாழ் தமிழில் அடுப்படி மற்றும் அடுக்களை என்றும் சொல்லுவார்கள்.


குசினி என்றும் பலர் பேசிக் கொள்வார்கள். குசிய எனச் சிங்களத்தில் சொல்லுவார்கள். போர்திக்கீசிய மொழியிலிருந்து பெற்றதாக ஞாபகம். குசினி என்னும் இச்சொல் Cozinha (குசினா) என்ற போர்திக்கீசிய மொழியிலிருந்து இலங்கைக்கு வரப்பெற்றதாக( சமையலறை.) தமிழ் விக்கிபீடியா உறுதிப்படுத்துகிறது.


அடுக்களையில் மேலதிகமான பாத்திரங்களை வைத்தெடுக்கவும் அரிசி, பருப்பு பண்டங்களை வைக்கவும் நீண்ட பலகையால் செய்யப்பட்ட பரண்கள் குசினியில் தொங்கவிடப்பட்டிருந்தன. அவை பொருட்களை எட்டி எடுக்கக் கூடிய உயரத்தில் இருக்கும்.


நிலத்தில் இருந்து வேலை செய்வதற்கு பலகை ஆசனங்கள் வைத்திருந்தனர். பலகைக் கட்டை என்பர்.

மரத்தாலான அகப்பைக்கூடு துளைகள் உள்ளது தொங்கவிடப் பட்டிருக்கும். அகப்பை, மத்து ,கரண்டி, தட்டகப்பை, போன்றவற்றை அவசரத்திற்கு எடுப்பதற்காகச் செருகி வைத்திருப்பர்.

அகப்பை கூடு

வெண்கலம், ஈயம், அலுமினியப் பொருட்களின் பிற்பாடு எனாமல் பூசப்பட்ட பாத்திரங்கள் பாவனைக்கு வந்தன.

கறிக் கோப்பைகள், பேசின், ரிபன் கரியர், கேத்தல், பிளேட்ஸ், ரீ யக் ( Jug )    ரீ பொட்; (Pot) இருந்தன. பல வர்ணங்களில் அழகாய் இருந்தன. ஒரே ஒரு குறை  நிலத்தில் விழுந்து அடிபட்டால் எனாமல் எடுபட்டு அசிங்கமாகும். பின்னர் அவ்வடத்தில் பாத்திரத்தில் ஓட்டை வந்து விடும்.
சீன தயாரிப்புப் பீங்கான் பிரபலமாக விற்பனைக்கு வந்தது. சுத்தம் செய்வது இலகு என்பதால் பலரும் விரும்பி வாங்கிக் கொண்டனர். இவற்றில் ரீசெட், டினர்செற் பிரபலமாக அறிமுகமாகி இருந்தது. இப்பொழுதும் வீடுகளில் இடம் பிடித்து இருக்கிறது.அடுத்து ஆட்கொல்லி பிளாஸ்ரிக் அறிமுகமாயிற்று . தொடக்கத்தில் மனிதரைக்கொல்லும் என்பதை அறிந்திருக்கவில்லை. உடையாது, இலகுவானது என வாங்கிக் கொண்டார்கள். இது பல் தொகையாகப் பெருகிகாணும்இடம் எல்லாம் இடம்பிடித்து சுற்றுச் சூழலையும் கேடாக்கி நிற்கிறது. இதைப்பற்றி தனிப் பதிவே போடலாம்.


ஸ்ரெயின்லெஸ் பாத்திரங்கள் வந்தன. இதற்கு ஏகக் கிராக்கி இருந்தது. மெலமின்கோப்பைகள்அறிமுக மாயின. 

இதைத்தொடர்ந்து பைரக்ஸ் அவன் (oven) பாத்திரங்கள் பிரபல்யம் ஆகியது. நொன்ஸ்ரிக் சமைக்கும் பாத்திரங்கள், மைக்ரோ பாத்திரங்கள், என பல்வகையும் உபயோகத்தில் இருக்கின்றன.       

அரிக்கன் லாம்பு (விளக்கு)
இரவில் வெளிச்சம் ஏற்ற கைவிளக்கு, குப்பி விளக்கு, அரிக்கன் விளக்கு, வைத்திருப்பார்கள்.


நமக்கும் மின்சாரம் இல்லாத சண்டைக்காலத்தில் இவ்விளக்கு நல்ல அனுபவம்.


மண்ணெண்ணை லீற்றர் 250ரூபா விற்றது. அதுவும் கிடைப்பதற்கு அரிது. கண்ணாடி (ஜாம்) போத்தலின் அடியில் தண்ணீரை விட்டு அதன்மேல் தேங்காய் எண்ணை சிறிதளவு ஊற்றி சைக்கிள் ரியூப் வாலில் திரியைச் செருகி விளக்கு எரித்திருக்கிறோம். மேலே கம்பிகட்டி கைபிடியும் இருக்கும் எடுத்துச்செல்வதற்கு.

காஸ்,மின்சாரம், இல்லாதகாலம் விறகு அடுப்பொன்றும் அக்காலத்தில் புதிதாக அறிமுகமாகி அனைவருக்கும் கைகொடுத்தது.


இரு அடுப்புக்கள் ஒன்றுடன் ஒன்று பக்கத்தே தொடுத்ததாய் இருக்கும் முன்பகுதியில் எரித்தால் பக்கத்திலே சற்று உயர உள்ள சிறிய அடுப்பிலும் சூடுபரவி இரண்டு சமையல் செய்யலாம்.அத்துடன் விரைவில் சமையலும் முடியும்.

கைக் கோடரி

விறகு தட்டுபாடான காலம் அது. . மறக்கக்கூடியவையா இவை எல்லாம்.  

சமைப்பதற்கு ஆதியில் விறகு அடுப்பு. நிலத்தில் மூன்று கல்லை வைத்து பாத்திரத்தை அதன் மேல் வைத்துச் சமைப்பர்.

கல்லடுப்பு

பின் களிமண்ணால்  அடுப்பு பிடித்து வெப்பத்திற்கு உடையாதிருக்க அதன் மேல் சாணம்பூசி வைத்திருப்பார்கள். குமட்டி அடுப்பும் இருந்தது.

இரும்பு அடுப்பு

குமட்டியில் தணலைப் போட்டு சமைத்த குழம்பை ஆறாமல் வைத்திருப்பார்கள். மரத்தூள் அடுப்பும் தகரத்தால் செய்யப் பட்டது இருந்தது. மரத்தூளை அடைந்து எரியவைத்துச் சமைப்பர். 

பின் இரும்பால் செய்த அடுப்புக்களை வைத்து சீமேந்தால் பூசிக் கட்டினார்கள். காலப் போக்கில் இவை வெப்பத்தால் வெடிக்கத்தொடங்கின. அத்துடன் மண்ணெண்ணை பாவனைக்கு வர இவையும் இல்லாது போயின.

மண்ணெண்ணை ஸ்ரவ், குக்கர், பாவனையில் இருந்தது. ப்ரஷர் குக்கர், ப்ரிஜ் வந்தன. இலகு மின்சார அடுப்புகள் வர  பலரும் மின்சார, காஸ் அடுப்புகளுக்கு மாறினர். ரைஸ்குக்கர் குடியேறியது.

அம்மி
கல்லாலான ஆட்டுக்கல்லு, அம்மி, தோசை, இட்லி மா, சட்னி, மசாலாச் சரக்கு, அரைப்பதற்கும்.
ஆட்டுக்கல்லு

திரிகை, பயறு, உழுந்துமா திரிக்கவும், உடைக்கவும் பயன்பட்டன.

உரல், உலக்கை அரிசி குத்தவும். மா இடிப்பதற்கும் உபயோகித்தனர்.
 
திரிகை
 இலங்கையில் விசேடமாக இடிசம்பல் இடிப்பதற்கும், பனம்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, துவைக்கவும்; பயன்பட்டன.


பின் விறாந்தையில் கல்லுரல், திரிகை

மிக்ஸி, கிரைண்டர், அரங்கேற கல்லுரல்கள் வீட்டின் பின் விறாந்தைகளில் தஞ்சம் புகந்தன. காலம் போக பின்புறம் வாழைப்பாத்திகளுக்குள்ளும் உட்கார்ந்திருந்து அழுதன..

இன்னும் சில கனவாகிப்போன அடுக்களைப் பண்ட பாத்திரங்கள் 

பழையன ஒழிந்து சமையலறையும் புதுப்பொலிவுடன் கிச்சன் யூனிற் பூட்டப் பட்டு புதுப்பொலிவு பெற்றன. தூசி தட்டும் ஒட்டடைக் கம்புக்கும் வேலை இல்லாது போய் விட்டது. வக்கூம் க்ளீனரும் வந்தது.

இப்பொழுது மின்சார . காஸ்அடுப்புகளுடன். சூரிய அடுப்பு, மைக்ரோ. இன்டெக்சன் என பவனி தொடர்கிறது….

டிஸ்வோசர் பூட்டப் பட்டு கிச்சன் அழகிய மாளிகையாகியது. மாளிகையில் அழகிய பொருட்கள் கண்ணைச் சிமிட்டிநிற்கின்றன…

சமையலோ பல வீடுகளில் அம்போ…. ஆகிவிட்டது.

ரெஸ்ரோறன்ஸ் பக்கற்றுகள் ப்ரிஜ்ஜில்அடைக்கப்பட்டு மூச்சுத்திணறி… மைக்ரோவில் சூடேறி பலவீட்டு டைனிங் டேபல்களில் சிரித்திருக்கின்றன……