Sunday, September 19, 2010

மைதா கீரைப்பிட்டு


மகளுடன் நீண்ட இனிய விடுமுறையைப் பகிர்ந்து கொண்ட நான் மீண்டும் ஒரு கிராமத்து விருந்துடன் உங்களையெல்லாம் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

கீரை என்ற பெயரைக் கேட்டாலே காத தூரம் ஓடும் சிறுவர்களும், பிட்டு என்பதால் விருப்பத்துடன் உண்பார்கள். எங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கும் பிடித்தமான உணவு இது. மைதாவில் தயாரிக்கப்படும் பிட்டின் சுவை முதற் தரமானதன்றோ?

தவிடு நீக்கிச் சுத்திகரிக்கப்பட்ட மா இது என்பதால் சத்துச் செறிவற்ற உணவு என்பதே பொதுவான கருத்தாகும். இதில் காபோஹைரேட் மிகுதியாக இருக்கிறது, பைபர் எனப்படும் நார்ப்பொருள் மிகவும் குறைவாக இருக்கும்.


அதனால் நோயாளர்களுக்கு ஏற்ற உணவல்ல என்று சொல்வார்கள். அதையும் சத்துச்செறிவுள்ளதாக மாற்றிக் கொண்டால் தரம் உயர்ந்ததாகிவிடும்.

மைதாவுடன் கீரை கலந்து கொள்வதால் நீரிழிவு, கொலஸ்டரோல், இருதய நோயாளர்களும் உண்ணலாம்.

இவர்கள் பிட்டில் கலக்கும் தேங்காய்த் துருவலைத் தவிர்த்துக் கொள்ளலாம். அல்லது நன்கு குறைத்துக் கொள்ளலாம்.


இதில் முளைக் கீரை கலந்துள்ளேன்.


முருங்கைக் கீரை கலந்தும் செய்து கொள்வார்கள். அது சற்றுத் துவர்ப்பாக இருக்கும்.

கீரை வகைகள் பற்றியும் அவற்றின் போசாக்கு பற்றியும் மேலும் வாசிக்க எனது முன்னைய பதிவான
கீரை சாப்பிட வாங்க லிங்கை கிளிக் பண்ணுங்க.

அமெரிக்கன் மா(All Purpose Wheat Flour) என அழைக்கப்படும் இது பாண் தயாரிப்பில் முதல் இடம் வகிக்கிறது. ஐரோப்பியரின் முக்கிய உணவாக இருந்த இது இப்பொழுது எல்லா இடங்களில் உள்ளவர்களையும் பற்றிக் கொண்டுவிட்டது. கேக், பேஸ்டி வகைகள், பிஸ்கற், பான்கேக், எனத் தொடர்ந்து பரோட்டா, நான், ரொட்டி,பூரி,இடியப்பம் என எமக்கும் இசைவாகிவிட்டது.

மைதா மாவில் உள்ளவை

  • ஒரு கப் ( 125கிராம்) மாவில் 95.4 கிராம் காபோஹைரேட் இருக்கிறது. இதன் கலோரி பெறுமானம் 455 ஆகும்.
  • கொழுப்பு 1.2 கிராம். இதிலிருந்து 11 கலோரிகள் கிடைக்கிறது.
  • நார்ப்பொருள் 3.4 கிராம்,
  • சோடியம் 2 மில்லிகிராம்,
  • பொட்டாசியம் 133 மில்லிகிராம்,
  • இவற்றிற்கு மேலாக புரதம் 12.9 கிராம் கிடைப்பதும் குறிப்பிடத்தக்கது.

தேவையானவை

அவித்த மைதாமா - 2 கப்
உப்பு சிறிதளவு
கீரை சிறிய கட்டு - 1
சின்ன வெங்காயம் - 10-15
பச்சை மிளகாய் - 2-4 (காரத்திற்கு ஏற்ப)
தேங்காய்த் துருவல் - ¼ கப்


செய்முறை

மைதா மாவில் உப்புக் கலந்து வையுங்கள்.

நீரை நன்கு கொதிக்க வைத்து எடுத்து சிறிது சிறிதாக ஊற்றி கரண்டிக் காம்பால் கிளறி பிட்டு மா தயாரியுங்கள்.

கீரை, வெங்காயம், மிளகாய், கழுவி சிறிதாய் வெட்டி எடுங்கள். பச்சை மிளகாய்க்கு பதிலாக செந்நிறமாகப் பழுத்த மிளகாயை உபயொகித்தால் காரத்தை தள்ளி வைப்போருக்கு எடுத்து வீச இலகுவாக இருக்கும்.

சிறிது உப்புப் பிரட்டிக் கலந்துவிடுங்கள்.

இட்லிப் பாத்திரத்தில் அல்லது ரைஸ் குக்கரில் நீர் விட்டு ஸ்ரீம் தட்டுப் போட்டு பிட்டு மாவை ஒரு பக்கமும், கீரை கலவையை ஓர் பக்கமும் வைத்து, மூடி போட்டு 15-20 நிமிடங்கள் அவித்து எடுங்கள்.

பிட்டு அவியத் தொடங்கும்போதே கீரை, வெங்காய மிளகாய் வாசத்துடன் மூக்கைக் கிளறும்.

அவிந்ததும் பெரிய பாத்திரத்தில் போட்டு தேங்காய்த் துருவலையும் சேர்த்து கரண்டிக் காம்பால் கிளறிவிடுங்கள். உடனேயே சாப்பிடும் ஆசையும் கிளம்பிவிடும்.

தக்காளிக் குழம்பு அல்லது பொரித்த குழம்பு ஜோடி சேர்ந்தால் சூப்பர் சுவைதான். காரச் சட்னியுடனும் சாப்பிடலாம்.

சுடச் சுடச் சாப்பிட மிகுந்த சுவை தரும்.

சிவப்பு அரிசி மா குழல் பிட்டு பற்றிய எனது முன்னைய பதிவில் ரிச் நட்ஸ் குழல் பிட்டு பார்க்க மண் சுமக்க வைத்தது லிங்கை கிளிக் பண்ணுங்கள்

மாதேவி