Sunday, October 24, 2010

பழம் வாங்கலையோ... பழம் .... பிளம் பழம்

அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகாணத்தில் அக்ரிலை ஆய்வு நிறுவனம் செய்த ஒரு ஆய்வானது பிளம், பீச் பழங்களில் புற்றுநொயைத் தடுக்கும் மருத்துவ குணம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.


பினோலிக் அமிலத்தின் கூட்டுப் பொருட்களான குளொரோஜெனிக் மற்றும் நியோ குளேராஜெனிக் அமிலம் போன்ற இராசாயனங்கள்தான் புற்றுநோய் அணுக்களை அழிக்கிறது. இந்த இராசாயனங்கள் பழவகைகள் யாவற்றிலும் காணப்படுகின்றன. இருந்தாலும் பிளம்பழத்தில் கூடுதலாக இருக்கிறது என்கிறார்கள்.

எமது நாட்டில் பயிரிடப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. கொம்பிலக்ஸ்களில் விற்பனையாகின்றன.


மென்மையான வட்டமான வழவழப்பான தோலையுடைய சதைப்பிடிப்பான இனிய பழம் இது.


மஞ்சள், வெள்ளை பச்சை, சிகப்பு,ஊதா கலர்களில் இருக்கும்.

பச்சை நிறத்தை அண்டிய வெள்ளைப் பூக்கள் மலர்ந்திருக்கும்.


தேனீக்கள் தேன் உண்ண முயலுகையில் மகரந்தச் சேர்க்கை நடக்கிறது.

Autum காலத்தில் இலைகளை உதிர்த்து Early Spring ல் பூக்களைக் கொடுக்கும்.

பெரிய பழம் 3-6 செ.மீ அளவிருக்கும்.

முற்றிய பழத்தின் மேலே வெள்ளை படர்ந்தது போல இருக்கும்.

மரம் 5-7 மீற்றர் உயரம் வரை வளரக் கூடியது. ரோசேசியே குடும்பத்தைச் சேர்ந்தது. அறிவியல்பெயர் பிருனஸ்சலிசினா.

உலரவைத்த பிளம்ஸ் ப்ருனே Prunes என அழைக்கப்படும்.

வடஅமெரிக்க, ஐரோப்பா, சீனா ஆகிய இடங்களில் இயற்கையில் காணப்பட்டது. ரோமானியர்கள் வடக்கு ஐரொப்பாவில் அறிமுகப்படுத்தினர்.

இதில் பெரும்பாலும் நான்கு வகை இருக்கிறது.
 1. யூரோப்பியன் பிளம், 
 2. ஜப்பானிய பிளம், 
 3. Damsons and mirabeels
 4. Cherry plums.

ஐரோப்பிய இனத்தை விட ஜப்பானிய இனப் பிளம் பெரியதாக இருக்கும்.

"பழம் வாங்கலையோ பழம்.." என இடுப்பில் கடகம் ஏந்தி,
கூவியழைத்து பழ விற்பனைக்கு வந்தாள் சின்னு.
சின்னப் பெண்ணாக இருக்கையில் ....

போட்டியில் பரிசுபெற்ற சின்னுவை, அவளின் வெற்றியின் ரகசியம் என்ன என வினவுகின்றனர்.

பழக்காரியாக சின்னு

ஜப்பானிய பிளம், சைனீஸ் பிளம் என்றே அழைக்கப்பட வேண்டும். ஏனெனில் ஜப்பான் 200-300 வருடங்களுக்கு முன்பிருந்தே சைனாவில் இருந்து இறக்குமதி செய்தது. சைனா 1000 வருடங்களாகவே பயிரிட்டு வந்திருக்கிறது. ஜப்பான் உலக நாடுகளுக்குப் பரப்பியதால் ஜப்பானிய பிளம் எனப் பெயர் வந்தது. ஜப்பானிய பிளம் ஏற்றுமதியில் கலிபோனியா பிரபல்யமான இடத்தை வகிக்கிறது.

நேரடியாக பழத்தை உண்பதுடன் கான்களில் கிடைக்கும். யூஸ், ஜாம், சிரப் தயாரித்துக் கொள்வார்கள்.

பிளம் யூசிலிருந்து பிளம் வைன், பிரண்டி தயாராகும்.

ஆசியாவில் ‘பிக்கிள்ட் பிளம்’ ஒரு வகையாகத் தயாரிக்கப்படுகிறது.

சலட்டாக தயாரித்தும் உண்ணலாம். 

காபோஹைதிரேட் கூடுதலாக உள்ளது. குறைந்தளவு கொழுப்பு உள்ளது.
எடை குறைப்பிற்கு ஏற்ற  உணவு.
விற்றமின் சீ அதிகஅளவில் இருப்பதால் தடிமன் சளியை அண்டவிடாமல் தடுக்கும் என்கிறார்கள்.
நார்சத்தும் அதிக அளவில் இருக்கிறது.

100 கிராமில் உள்ள போசனை


காபோஹைதிரேட் 13.1 கிராம்,
கொழுப்பு 0.62 கிராம்,
Fiber  2.2 கிராம்.
நீர்ப்பிடிப்பு 84 சதவிகிதம்,  
Energy 55 kcal,
புரொட்டின் 0.8 கிராம்.
விற்றமின் சீ 5 மிகி
B1 0.02 மிகி.
B2 0.3 மிகி.
B6 0.10 மிகி.
Vitamin E 0.7>  
Vitamin A 18 ug ,  
Potassium- K 172mg,  
Calcium-ca 4 mg.   

பிளம் சலட் செய்துகொள்வோமா.

தேவையான பொருட்கள்
 • பிளம் பழம் - 2
 • பச்சை ஆப்பிள் - ½
 • கிறேப்ஸ் விதையில்லாதது - 5-6
 • துளசி இலை – 6-7
 • தேன் - 2 டேபிள் ஸ்பூன்
 • லெமன் ஜீஸ் - 1 டேபிள் ஸ்பூன்
 • சோல்ட், பெப்பர்பவுடர் - சிறிதளவு

செய்முறை

பழங்கள், துளசி இலைகளைக் கழுவி எடுங்கள.;

பிளம்,ஆப்பிளை மெல்லிய நீள் துண்டுகளாக வெட்டி எடுங்கள்.கிரேப்ஸ் முழுதாகப் போட்டுக்கோள்ளலாம்.

துளசி இலைகளை மிகவும் சிறியதாக வெட்டிக் கொள்ளுங்கள்.

லெமென் சாற்றுடன், உப்பு. பெப்பர் பவுடர், தேன் கலந்து கலக்கிக் கொள்ளுங்கள்.

ஒரு போலில் பழங்களைப் போடுங்கள்.  கலந்து எடுத்த சாற்றை மேலே ஊற்றி பிரட்டிவிடுங்கள்.

வெட்டி எடுத்த துளசி இலையை  தூவி விடுங்கள்.

புதிய சுவையில் சலட் தயாராகிவிட்டது. ஹெல்த்துக்கும் உகந்ததாகும்.
 பழங்கள் பற்றிய எனது ஏனைய பதிவுகளுக்கு

பயன் தரும் பழங்கள் 2

மாதேவி

Sunday, October 3, 2010

தேங்காய்ப் பால் கஞ்சி - மூதாதையரின் மாரிகால இலகு சமையல்

எனது பாட்டி சொல்லக் கேட்டது இது.


“பழைய காலத்தில் வாழ்ந்த எமது மூதாதையர்கள் வாழ்ந்த வாழ்க்கை மிகவும் சிரமமானது.” என்பதாகும்.

நவீன விஞ்ஞான யுகத்தில் எமக்கு வீட்டிற்குள்ளேயே சமையல் அறை குளியல் அறை, குளிருக்கு குளிக்க ஹொட் வாட்டர், வெப்பத்திற்கு ஏசி என வாழ்க்கை சகல வசதிகளுடன் கூடி சுகபோகமானது.

பழைய காலத்தில் வீடுகள் ஓலைகளால் வேயப்பட்டு சிறியனவாக இருந்தன.

சமையல் அறையோ வீட்டின் கூரையிலிருந்து இறக்கப்பட்ட பதிவான பத்தியாலான சிறிய ஒரு இடமாகவே இருந்து வந்தது.

நமது குடிசைகள் அல்ல, பிலிப்பைன்ஸ்
அவர்களுக்கான தண்ணீர் பெறும் இடங்கள் தெருவுக்கு ஒன்றாக ஆழக் கிணறுகளாக இருந்திருக்கின்றன. ஆவற்றில் இருந்தே அவர்கள் தங்கள் அன்றாட சமையல், குடிநீருக்கான தண்ணீரை பெற்று வந்தனர்.

குளிப்பதற்காகவும், உடைகள் அலசுவதற்காகவும், அவற்றை நாடியே செல்ல வேண்டியிருந்தது. மழைகாலத்தில் சொல்லவே வேண்டியதில்லை. மிகவும் சிரமங்கள் இருந்தன. வீடுகள் மண் குடிசைகளாக இருந்ததால் நிலம் களி மண்ணால் ஆனது. அதனால் சாணத்தால் மெழுகியிருப்பர்.

மழைகாலத்தில் நிலங்களில் கசிவு இருப்பதால் தாழ் நிலமாக இருப்பின் நிலம் இளகி சொதசொதப்பாகி, கால் வைக்கும்போது கால் புதையத் தொடங்கிவிடும். மிகவும் சிரமத்தின் மத்தியிலேயே வாழ்ந்திருக்கிறார்கள். நிலத்தின் குளிர் உடலில் ஏறி காச்சல், குளிர் நடுக்கம் ஏற்படுவதுண்டு. கை மருந்துகள்தான் பலன் கொடுக்கும்.

குளிரிலிருந்து விடுபட வீட்டின் ஒரு மூலையில் நான்கு மூலைகளிலும் கற்களை அடுக்கி அதன்மேல் பனங் குற்றிகளைப் பரப்பி பரண் அமைத்து அதன் மேல் சாக்குகள், பாய்கள் போட்டு வைத்திருப்பர். அதன் மேல் படுப்பார்கள்.

பகலில் தொடர்ந்து அடை மழை பெய்யும்போது குளிருக்கு ஏறியும் இருப்பார்கள். முக்கிய பொருட்களை வைத்து எடுப்பதற்கும் கயிற்றினால் கட்டி பலகை வைத்த சிறிய பரண்களைத் தொங்க வைத்திருப்பார்கள்.

நவீன பரண்?

 அடுக்களையிலும் சமையல் பொருட்கள் வைக்க சிறிய பரண் இருக்கும்.

உறியில் சமைத்த உணவை வைப்பர். விறகு அடுப்பு மட்டுமே பாவனையில் இருந்ததால் மழை காலத்திற்கு வேணடிய விறகுகளை குடிசைக்கு வெளியே பின்புறத் தாழ்வாரங்களில் கயிற்றுப் பரண்களில் சேகரித்து வைத்திருப்பர்.

மழைக்காலத்தில் கூரையியிலிருந்து வடியும் மழை நீரை எடுத்து பாத்திரங்கள் கழுவதற்கும் குளிப்பதற்கும் உடைகள் அலசுவதற்கும் உபயோகித்து வந்திருக்கிறார்கள்.

பச்சை அரிசியும் பாசிப்பயறும்
மாரி காலத்தில் அவர்களின் உணவு மிக இலகுவாகச் சமைக்கக் கூடியதாகவும், சத்து மிக்கதாகவும் இருந்ததுடன் குளிருக்கு இதமூட்ட சுடசுடச் சாப்பிடும் உணவுகளாகவும் இருந்தன.

இவ்வகையில் தேங்காய்ப் பால் கஞ்சி, ரொட்டி, பிட்டு வகைகள் இருந்தன.

இடை உணவுகளாகச் சாப்பிடுவதற்கு கோடையில் செய்து சேர்த்து வைத்திருந்த பினாட்டு, புழுக்கொடியல், பனங்கட்டி உதவின. இம் முறையில் ஊறுகாய், வற்றல் மிளகாய், வடகம், கருவாடு என்பனவும் கை கொடுத்தன.

சாதத்துடன் சம்பல் செய்தும் உண்டனர். கஞ்சியுடன் கடிப்பதற்கு பச்சை மிளகாய், வெண்காயம், சுட்ட கருவாடு என்பன துணை போயின. இல்லாதபோது பினாட்டை தொட்டுக் கொண்டே குடித்தனர்.

இவ்வாறு தொடங்கிய எமது பாரம்பரிய உணவுகளை எங்கள் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்வதோடு சமைப்பதற்கும் பழகிக் கொள்ளுவோம்.

சிவப்பு பச்சை அரிசியுடன் பாசிப் பருப்பும் சேர்வதால் சத்தும் மிக்கது.

தேவையான பொருட்கள். 


 • தீட்டல் சிவப்பு பச்சை அரிசி – 1 கப்
 • வறுத்து உடைத்த பாசிப் பருப்பு – ¼ கப்
 • தேங்காய்ப் பால் - 1 கப்
 • பச்சை மிளகாய் - 2
 • சின்ன வெங்காயம் - 10
 • தேசிப் புளி – ¼ பழம்
 • உப்பு தேவையான அளவு.
காரச் சட்னி
காரச் சட்னி ஒன்றும் தயாரித்து வையுங்கள்.

செய்முறை

அரிசி பருப்பைக் கழுவி 4 கப் நீர் விட்டு அவித்து எடுத்துக் கொள்ளுங்கள். குக்கரில் 5-6 விசில் வைத்து எடுக்கலாம்.

தேங்காயப் பால் கஞ்சி

பின் உப்பு தேங்காப் பால் விட்டு ஒரு கொதி விட்டு இறக்குங்கள்.

கஞ்சியை இரண்டு பாகமாகப் பிரித்து ஒரு பாகத்தில் சிறிதாக வெட்டிய  மிளகாய், வெங்காயம், தேசிப்புளி கலந்து விடுங்கள்.

மற்றைய பகுதியை காரச் சட்னியுடன் பரிமாறுங்கள்.

இரு வேறு சுவைகளில் சுடச் சுட பால் கஞ்சி அசத்தும்.

சிறுவர்களுக்கு இனிப்பு விரும்பினால் சரக்கரை சேர்த்து இனிப்புக் கஞ்சி தயாரிக்கலாம்.

மாதேவி
 :-:-:-:-:-:-:-:-:-