Tuesday, May 14, 2013

பூவாகி காயாகி வடகமும் ஆகி - வேப்பம் பூ

கிராமங்களில் வீட்டு முற்றத்து வாயிலில் நிழலுக்காக நாட்டி இருப்பார்கள். பல இடங்களில் தெய்வமரமாகவும் வழிபடப்படுகின்றது. பழைய காலத்தில் தோப்புக்களாகவும் இருந்தன.

இதனின்று வீசும் இதமான காற்று உடலுக்கு நன்மைகள் தரும். இள வேனிற் காலத்தில்; பூக்கும் வேப்பம் பூவின் வாசம் காற்றில் கலந்து வந்து சுகந்த மணத்தை தரும்.

இந்தியா,இலங்கை, பர்மாவில் வளரும் மூலிகை மரம் இது. 15- 20 மீற்றர் உயரம்வரை வளரக் கூடியது. 5 வருடங்களின் பின் பூத்துக் காய்கும்.


தாவரவியல் பெயர் Azadirachta  Indica.  குடும்பம் Meliaceae .  ஹிந்தியில் கடன் வாங்கி ஆங்கிலத்தில் Neem என்கிறார்கள். Indian Lilac என்றும் சொல்வதுண்டு.

4000 ஆண்டுகளுக்கு முன்பு தொட்டே இந்தியாவில் அறிமுகமாகி இருந்தது என்கிறார்கள்.

மருத்துவ குணம் நிறைந்த மரம். சர்வரோக நிவாரணி மருந்தாகவும் இருந்து வருகின்றது. சமஸ்கிருதத்தில் நிம்பா என்றழைத்தார்கள். மரம், இலை, பூ, காய், பட்டை, வேர், எண்ணை, பிசின் என அனைத்துமே மருந்தாகப் பயன் படுத்தப்படுகின்றது.

  • இலை தோல்நோய்களை நீக்கும். 
  • பழம் குடல்கிருமிகளை ஒழிக்கும். 
  • நெருப்புக்காச்சல், டெங்கு தொற்றுநோய்கள் வராமல் இருக்க வேப்பம் குச்சியை அவித்துக் குடிப்பார்கள்.

கை,கால், தொண்டை நோவுக்கு எண்ணை பூசுவார்கள் மருந்தாகவும் குடிப்பார்கள்.

முன்னைய காலம் விரல் சூப்பும் குழந்தைகளுக்கு வேப்பம் எண்ணையை பூசிவிடுவார்கள்.

அம்மை நோய் வந்தவர்களுக்கு இலைகளைப் பரப்பி அதன்மேல் படுக்க விடுவார்கள். இவ் இலைகள் நோயை தணிக்கும் என்பார்கள்.

கரகம் ஆடுபவர்கள் கரகத்தில் வேப்பிலை கட்டி இருக்கும். அறிவியல் வளர்ச்சி நெருங்காத பின்தங்கிய கிராமங்களில் பேயை விரட்ட வேப்பிலையால் அடிக்கும் வழக்கம் இருந்தது.

உடல் உழைவு, நோவுகளுக்கு இலை, பட்டையை அவித்த நீரில் குளிப்பார்கள். பழைய காலத்தில் குழந்தை பெற்ற தாய்மாருக்கு கிருமி தொற்று வராமல் இருக்க பட்டை அவித்த நீரை ஊற்றுவார்கள்.

கிராமங்களில் காய்ந்த வேப்பம் பழங்களைப் பொறுக்கி எடுத்து வைத்து நெருப்பில் இட்டு புகை போட்டு நுளம்பை விரட்டுவார்கள்.

உறுதியான மரத்தளபாடங்கள் செய்ய முற்றிய மரம் பயன் கொடுக்கிறது.

பயிர்களுக்கு பாதுகாப்புத் தரும் கிருமி நாசினியாகவும், பசளையாகவும் பயன்படுத்துகிறார்கள். முன்பெல்லாம்  வீடுகளுக்கு வந்து வேப்பம் குழைகளை வெட்டி மாட்டு வண்டிகளில் கட்டி எடுத்து தோட்டத்துக்கு கொண்டு செல்வதை கண்டிருக்கின்றோம். அன்றைய பொழுது எமக்கும் குழை விளையாட்டில் கழியும்.


ஒரு மரம் சராசரியாக 20- 30 கிலோ பழங்களை கொடுக்கும் இப் பழவிதைகளை கூட்டெரு தயாரிக்கும்போது கலந்து பயன்படுத்தினால் பூச்சித் தாக்கம் குறையும் என்கிறார்கள்.

கோவா பயிரைத்தாக்கும் வெட்டுப் புழக்களையும் கட்டுப் படுத்தலாம். அவரை, பூசணியை தாக்கும் வண்டுகளையும் தடுக்கலாம் என்கிறார்கள். வேப்பம் பிண்ணாக்கு சிறந்த சேதனப் பசளையாகும்.

எங்களது வீட்டிற்கு பக்கத்தில் ஒரு காணி இருந்தது. மின்சாரம் இல்லாத போர்க் காலத்தில் அங்கு வளர்ந்திருந்த பெரிய வேப்ப மரத்தின் தண்மையான காற்று எங்களுக்குஇரவுகளில் நிம்மதியான தூக்கத்தைக் கொடுத்தது.

அந்த மரத்திலிருந்து விழும் பூக்களால் எமது முற்றம் மெத்தையென மென்மையாகக் படர்ந்து கிடக்கும்.

வானில் இருந்து விமானங்கள் குண்டு வீச்சு நடந்த காலத்தில் அதிலிருந்து தப்புவதற்காக இந்த மரத்தின் நிழலில் ஒரு பங்கர் அமைத்திருந்தோம்.

நீம் சோப்பாகவும் கிடைக்கின்றது. கொசுவர்த்தியும் பாவனையில் உண்டு.

குருத்து இலைகளில் சட்னி செய்து உண்பார்கள்.

ஜனவரி -மார்ச் மாத காலத்தில் பூக்கும். மரம் பூக்கள் நிறைந்து காணப்படும். மரத்தின் கீழ் பாயை விரித்து வைத்து பூக்களை எடுப்பார்கள். சிலர் மரத்தில் ஏறி பறித்து வெயிலில் காயவைத்து எடுப்பார்கள்.


பூவை துவையலாகவும், பச்சடிகளாகவும், ரசமாகவும் செய்யலாம்.

உலர்த்திய பூவை நெய்யில் வதக்கி எடுத்து சாப்பிடுவார்கள்.

பூவில் வடகம் செய்து சாப்பிடுவது நம்ம ஊரில் பாரம்பரிய வழக்கம். வயிறு சுத்தமாகவும், ஏப்பத்தை போக்கவும் வேப்பம் பூ உதவுகிறது. இன்று வேப்பம்பூ வடகம் செய்வோம்.
தேவையானவை –

வேப்பம் பூ - 3 கப்
உழுந்து – 1 கப்
சின்ன வெங்காயம் - 1 கப்
செத்தல் மிளகாய் - 10 -15
பெரும் சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி – ½  ரீ ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
உப்பு – தேவையான அளவு.
சுவைக்கு விரும்பினால் எள்ளு – ¼ கப்

செய்முறை -


மறுநாள் நன்கு வெயில் வரவேண்டுமென என சூரியனை வேண்டிக்கொள்ளுங்கள்.

உழுந்தை 3 – 4 மணிநேரம் ஊற வைத்து அதிகாலையில் எடுத்து வடைக்கு அரைப்பதுபோல நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

கல் மண் இருந்தால் பூவை நன்கு நீரில் கழுவி அரித்து வடிய விடுங்கள்.

செத்தல்,வெங்காயம், கறிவேப்பிலை சிறியதாக வெட்டிக்கொள்ளுங்கள்.

அனைத்துப் பொருட்களையும் அரைத்த மாவுடன் நன்கு கலவுங்கள்.

சிறிய உருண்டை அளவில் எடுத்து சிறிய வடைகளாக தட்டி ஓலைபெட்டி அல்லது ஸ்ரெயின் லெஸ் தட்டுகளில் வைத்து நன்கு வெயிலில் காய விடுங்கள்.
இடையே மழை வந்தால் ஓடிப் பிடித்து எடுங்;கள்.

மாலையானதும் எடுத்து உள்ளே வையுங்கள்.

2 -3 நாட்கள் காய்ந்த பின் மறுபுறம் பிரட்டி காயவையுங்கள்.

3 - 5 நாட்கள் நன்கு காய்ந்த பின் எடுத்து டப்பாக்களில் அடைத்து வையுங்கள்.


தேவையானபோது எண்ணையில் அளவான தீயில் பொரித்து பக்கத்து வீட்டுக்காரருக்கு வடக மணத்தில் பசி பிடிக்க நீங்கள் சுவையாக ரசித்து சாப்பிடுங்கள்.

-: மாதேவி :-