Showing posts with label விழிப்புணர்வு. Show all posts
Showing posts with label விழிப்புணர்வு. Show all posts

Thursday, July 4, 2013

கொட்டெப் பாக்கும் கொழுந்து வெற்றிலையும்.. ...சமைக்காமலே......




பச்சை பச்சை டக்டக் பால்பால் டக்டக் குந்து மணி டக்டக் குதிரைவால் டக்டக் அவர்கள் யார் ? 



வெற்றிலை மங்களப் பொருளின் அடையாளம். கோயில்களில் நைவேத்தியப் பொருட்களில் முக்கிய இடம் வகிக்கும். ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தி வணங்குவார்கள்.


விழாக்களில் முகப்புவாயில்களில் வெற்றிலை வைத்து வரவேற்பார்கள். பண்டிகைகளில் முக்கிய இடம் வகிக்கின்றன.


வெற்றிலையைச் சுருட்டி பாக்கு, பணம் வைத்து பூப்பெய்திய பெண்ணின் இரு கைகளிலும் விரல்களுக்கு இடையே நிமிர்த்தி வைத்திருக்கக் கொடுத்து அழைத்துச் சென்று நீராட்டுவது வழக்கமாக இருக்கின்றது. திருமண நிச்சயதார்த்தத்தில் வெற்றிலை, பாக்கு, பழம் மாற்றுவது பழைய காலந்தொட்டு வழக்கத்தில் இருந்து வருகிறது.


வெற்றிலையில் லஷ்மி உறைவாள் என்பார்கள். சித்திரைப் புதுவருடத்தன்று வெற்றிலையில் நெல்லு மணிகள். குங்குமம், மஞ்சள், பூ, பணம் வைத்து கைவிசேசம் கொடுக்கும் வழக்கம் இந்துக்களின் பண்பாக இருந்து வருகின்றது.

பௌத்தர்களும் சித்திரை வருடத்தன்று வெற்றிலை வைத்து பெரியோரை வணங்கி ஆசி பெறுவார்கள். புதுமணத் தம்பதிகள் வரவேற்பு , விழா பிரதம விருந்தினர்களை வரவேற்க  வெற்றிலை கொடுத்து வரவேற்கும் வழக்கமும் பௌத்தர்களிடம் இருக்கிறது.


அரசர்கள், நாட்டாண்மைமார்கள் வெற்றிலை போட அழகிய வெற்றிலைப் பெட்டியும், வெற்றிலை துப்புவதற்கு கோளாம்பி தூக்க ஒருவரும் கூடவே இருப்பார்கள்.

வெற்றிலைத் தட்டமும் பாரம்பரிய தமிழர் வழக்கமாக இருந்து வந்திருக்கிறது.


வெற்றிலைத் தட்டம், பாக்கு வெட்டி, பாக்கு உரல் இல்லாத வீடுகளே இருக்காது.


வெற்றிலை மூலிகைத் தாவரமாகும். மருத்துவ குணங்கள் அடங்கியது என்கிறார்கள்.


சமையலில் கஷாயம், ரசம், செய்கின்றார்கள். தோசை, அடை மாக்களில் கலக்கின்றார்கள். மூலிகைகளாக சாதம்,சலட் வகைகளில் கலந்துகொள்கின்றார்கள். வறுத்த தேங்காய் துருவல், நட்ஸ், மாதுளை முத்துக்கள், மல்லிதழை,புதினா கலந்து எடுத்து இலைகளில் வைத்து பரிமாறுகின்றார்கள்.  சிக்கன் கறிகளில் அரைத்த வெற்றிலை கலவை கலந்து சமைக்கப்படுகின்றது.
வியட்னாமிய சமையலில் wild Betel leaf (la lot) அரைத்த மாட்டிறைச்சியை மசாலாக்கள் கலந்து இலைகளில்வைத்து சுற்றி எடுத்து கிரில், பார்பிக்யூ, ப்ரை களாக செய்து கொள்வது பிரசித்தமாக விளங்குகின்றது.

வெற்றிலை மலேசியாவில் தோன்றிய செடியாகும். Piper Betel மிளகு குடும்பத்தைச் சார்ந்தது. இலங்கை இந்தியா, இந்தோனேசியா ஆகிய இடங்களில் அதிகம் காணப்படுகிறது. கும்பகோணம் வெற்றிலைக்கு பெயர்பெற்றது.

மிகவும் அழகிய கொடிதான் இலையும் அழகானது நாகஇலை, நாகவல்லி, திரையல், வேந்தன் என்று பல்வேறு சிறப்புப் பெயர்களை தாங்கி நிற்கின்றது.

வெற்றிலையை அழகுக்காக பல்கனிகளிலும் சாடிகளில் வளர்க்கலாம். மங்களப் பொருளாக கொள்வதில் தவறில்லை.


கமுகு மரம் பினாங்கு மாநிலத்தின் சின்னமாக இருக்கின்றது. இங்கு பாக்கு மரங்கள் அதிகம். கமுகுமரம் நிழல்தரும், குளிர்மையாக இருக்கும். பச்சை மஞ்சள் நிறங்களில் பாக்குகள் அழகாககுலைகளாக பழுத்துத் தொங்கும்.
Arecanut > Betel nut    என்கின்றோம்.  சில சாப்பாட்டுக்கடைகளில் சாதத்தில் பாக்கை கலந்து சமைத்துவிடுவார்கள். ஆட்டு இறைச்சி கறி மென்மையாக வருவதற்காக சீவல்பாக்கு சிலவற்றை கலப்பதுண்டு.

பல்வேறுசிறப்புக்களும் கொண்ட வெற்றிலை, பாக்கு, ஆபத்தான விளைவுகளையும் தருகின்றது.


விவசாயிகள், தொழிலாளர்கள், மலையக மக்கள் பெரும்பாலும் வெற்றிலை போடும் வழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள்.

இவர்களில் ஒருவரை நீங்கள் சந்திக்க நேரிடலாம். அப்பொழுது இதன் தீமையையும் எடுத்துக் கூறுங்கள். அவர்களிடம் விழிப்புணர்த்தவே இப்பகிர்வு.

வெற்றிலை போடுவது அல்லது வெற்றிலை சப்புவது எனச் சொல்லும்போது அது வெற்றிலையுடன் பாக்கு, சுண்ணாம்பு, புகையிலை ஆகியனவும் சேர்ந்து உண்ணப்படுவதையே குறிக்கிறது.

யாழ்குடா புகையிலை பயிர்செய்கைக்கு பெயர் பெற்று விளங்குகிறது. வடக்கன் புகையிலை மிகுந்த காரமானது.  பலருக்கு மயக்கம், மரணங்கள் கூட ஏற்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

வெற்றிலை பாக்கு சப்புவதால் இருதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக தாய்வானில் செய்யப்பட்ட ஆய்வு கூறுகிறது. இருதய நோய்கள் இரண்டு விதத்தில் வரலாம் என்கிறார்கள். இருதயத்திற்கான இரத்த ஓட்டம் குறைவடைவதாலும், இருதயத் துடிப்பு லயத்தில் ஏற்படுகிற திடீர் மாற்றங்களாலும் நேர்கிறது. இவற்றிற்கு காரணமாக இருப்பது பாக்கில் உள்ள
Arecoline என்ற இராசாயனமும் புகையிலையில் உள்ள நிக்கடினும் ஆகும்.

அதேபோல ஆஸ்த்மா தூண்டப்படுவதற்கு வெற்றிலை சாப்பிடுதல் மற்றொரு காரணமாகிறது.


புகைத்தலுக்கு அடிமையாவதற்குக் காரணம் அதிலுள்ள நிக்கரின் ஆகும். வெற்றிலை போடும்போதும் புகையிலை சேர்ப்பதால் பலரும் அதற்கு அடிமையாகிறார்கள். இதனால்தான் புகைத்தலை கைவிடும்போது எரிச்சல், சினம், மனச்சோர்வு, அதிக பசி, மீண்டும் புகைக்க வேண்டும் என்ற அடக்கமுடியாத தவனம் ஏற்படுவது போலவே வெற்றிலை சப்புவதைக் நிறுத்தும்போதும் ஏற்படுகிறது.

இதற்கு மாற்று வழி மீண்டும் புகைப்பதோ வெற்றிலை போட ஆரம்பிப்பதோ இல்லை. மன அடக்கப் பயிற்சிகள் வேறு உற்சாகமூட்டும் பணிகளில் ஈடுபட்டு மறப்பதே ஏற்றது. முடியாவிட்டால் மருத்துவ ஆலோசனையுடன் சிகிச்சை மேற்கொண்டு கைவிடவும் நேரலாம்.


அத்துடன் முரசு கரைதல் அதன் காரணமாக பல்லின் வேர்கள் வெளிப்படுவது, பற்கூச்சம், பற்சொத்தை போன்ற பாதிப்புகளும் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

தொடர்ந்து சப்பிக் கொண்டே வாயில் குதப்பி வைத்திருப்பதால் வாயின் உட்புறத் தோலில் வெண்நிறமான படலம் தோன்றும். leukoplakia என்ற இது வாய்ப்புற்று நோய் ஏற்படுவதன் ஆரம்ப நிலை என மருத்துவர்கள் சொல்கிறார்கள். இதில் பின்பு புண்கள் ஏற்படும். புற்றுநோயாக மாறும்.  கவனம்.


வாய்ப்புற்று மட்டுமின்றி உதட்டு புற்று, தொண்டை புற்றுநோய் ஆகியவையும் ஏற்படுகிறது.

கர்ப்பிணிப் பெண்கள் வெற்றிலை சப்பினால் புகைப்பதனால் ஏற்படுவது போன்ற ஆபத்துக்களைக் கொண்டு வரும்.

வெற்றிலை ,பீடா கடைகளுக்குக் குறைவில்லை. பான் என்பது ஹிந்தி, பர்னா என்பது சமஸ்கிருதம்.

வெற்றிலையுடன் கலர் பாக்கு, இனிப்புத் தூள்கள், கலர்த் தேங்காய்த் துருவல், குங்குமப்பூ, ஏலம், தங்க பஸ்பம், வாசனைகள், கலந்து சுற்றி மடித்து மேலே கராம்பும் குத்தி வைத்திருப்பார்கள். பச்சை பசேலென வா வா என அழைக்கும். பார்க்க அழகாகத்தான் இருக்கும். கையும் எடுக்க நீளும். உசாராகிவிடுங்கள்....விதியும் ஓர் ஓரம் நின்று பார்த்துச் சிரிக்கலாம்.


மங்களப் பொருளாக மட்டும் நிலைத்து வாழ வழி செய்வோம். பாமரர்களுக்கு அறிவுறுத்துவோம்.

எனது படங்களைவிட  ஏனைய படங்கள்  இணையத்திலிருந்து எடுத்து இணைத்துக்கொண்டேன் . நன்றி.

-: மாதேவி :-