Monday, November 28, 2011

கோடைக்கு நுங்கு பதநீரும் வாய்ருசிக்கு பனம் பட்சணங்களும்

பனை. இது வெட்ப வலயப் பிரதேசத்திற்கான தாவரம் . இயற்கையாகவே வளரும். புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம்.


கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம், கற்பகதரு என்கிறார்கள்.

தேசிய வளங்களான தேயிலை இரப்பர் தென்னையுடன் பனையும்அடங்கும்.

இளம் கன்றுகள் வடலி என அழைக்கப்படும்.


பனைகள் உயர்ந்து 30 மீட்டர் வரை வளரும். உச்சியில் முப்பது நாற்பது வரையிலான விசிறி வடிவமான ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும்.


பொதுவாக பனைகளுக்கு கிளைகள் இல்லை. அபூர்வமாகவே கிளைப் பனைகள் காணப்படும். இது வல்லிபுரத்துக் கோவிலடிக் கிளைப் பனை.


பனை விதை நாட்டப்பட்டு முதிர்வடைவதற்கு 15 வருடங்கள் வரை எடுக்கும். 20 வருடங்களின் பின்னர் வருடம் ஒன்றிற்கு ஆறாயிரம் ரூபா தொடக்கம் பதினையாயிரும் வரை வருமானத்தைத் தரும்.

ஒரு பனையிலிருந்து நூறுக்கும் அதிகமான பலன்களைப் பெறலாம் என்கிறார்கள். 20 வருடங்கள் முதல் 90 வருடங்கள் வரை பனைகள் மூலம் வருமானம் கிட்டும். மரத்தின் சகல பாகங்களும் பலன் தரக் கூடியன.

பனை அபிவிருத்தி சபை ஒன்று இலங்கையில் 1978ல் உருவாக்கப்பட்டது. இதனால் பனம்பொருள் உற்பத்திகள் ஊக்குவிக்கப்பட்டன.

' தொப்பென்று விழுந்தான் தொப்பிகழண்டான் ' அவன் யார் ?  என்ற சிறுவயதில் நொடி விளையாட்டுக்களும் நினைவில் வந்து செல்கின்றதல்லவா.

பனையிலிருந்து நுங்கு,சீக்காய், பனம் பழம் கிடைக்கும்.


பனம் பழத்தை பாத்தியிலிட்டு பனங்கிழங்கு, பூரான், பச்சை ஒடியல், புளுக்கொடியல், பனாட்டு, பனங்காய் பணியாரம், பாணி, பதநீர், வினாகிரி, கள்ளு,  சாராயம், கல்லக்காரம், பனஞ்சீனி, பனங்கட்டி, கோடியல், ஜீஸ், ஜாம், எனப் பலவும் ஒடியல் மாவில் கூழ், பிட்டும், தயாரிக்கலாம்.

பதநீர் உடலுக்கு குளிர்ச்சி என்பார்கள். அது உடல் நலத்திற்கு நல்லது என்பார்கள். பதநீரை எமது ஊரில் கருப்பணி என்றும் கூறுவர்.

ஆனால் கள்ளு போதை ஏற்றும்.

""....நாடெலாம் கள்ளின் நாற்றம்
நாற்றிசை சூழும் வேலிக்
கூடெல்லாம் பிழாக்கள் போத்தல்
குடியர்கள் அங்கு கூடித்
தேடிய பொருளை யெல்லாஞ்
சிதைத்தவர் குடித்தலாலே...""

இவ்வாறு யாழப்பாணத்தைத் தனது பெயரிலேயே சூடிக் கொண்ட மறைந்த கவிஞர் யாழ்ப்பாணன் அன்று பாடினார்.

பச்சை ஓலை ஆடு மாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படும். குருத்தோலையை வெட்டி எடுத்து காயவிட்டு பெட்டி, பாய், தடுக்கு, கூடை, சுளகு, உமல், பனங்கட்டிக் குட்டான், நீத்துப்பெட்டி, கொட்டைப்பெட்டி, விசிறி, இடியப்பத் தட்டுகள், தொப்பி, அழகிய கைவினைப் பொருட்கள், கைப்பைகள் எனப்பலவும் தயாரிக்கின்றார்கள்.


காய்ந்த ஓலைகள் வீட்டுக் கூரை மேயவும், வீட்டைச் சுற்றி வேலி அடைப்பதற்கும்  உதவுகின்றன.

"காய்ந்தோலை விழக் குருத்தோலை சிரிக்கும் " என்ற பழமொழியும் தெரிந்தது தானே.


மூரி மட்டையிலும் வேலி அடைப்பார்கள். பொதுவாக வெறும் காணிகளைச் சுற்றி வேலி அடைக்கவே மூரி மட்டையைப் பயன்படுத்துகிறார்கள்.

பனையோலையின் காம்பு மிக நீண்டது. இது பனை மட்டை எனப்படுகிறது. காய்ந்த பின் அதனை மூரி மட்டை என்பார்கள்.


அக்காலத்தில் கிணற்றிலிருந்து நீர் இறைப்பதற்கான துலா செய்வதற்கு பனை மரம் பயன்பட்டது.

துலா. நன்றி:- கட்டற்ற கலைக்களஞ்சியமான ...
ta.wikipedia.org

கிணறு இறைக்க கிணற்றுப் பட்டையும் வைத்திருந்தார்கள்.

... பட்டையால தண்ணி வார்க்க துலா மிதிச்சுப் ...
நன்றி:- newjaffna.com

தும்புக் கைத்தொழில் தொழிற்சாலை இயங்கியது. காய்ந்த ஏனைய பாகங்கள் விறகுக்காகப் பயன்படும். வீடு கட்டும்போது வளை, தீராந்தி, பனஞ்சிலாகை எனவும் பலவாறு பனை மரம் உபயோகப்படுகிறது.

ஆதிகாலத்தில் எமது அறிவையும், கல்வியையும் எதிர்காலப் பரம்பரையினருக்கு பாதுகாத்துக் கொடுக்கும் பொக்கிசங்களாக இருந்தவை ஏடுகளே. பனை ஓலைகளைப் பதப்படுத்தி அதில் எழுத்தாணிகளால் குறித்து வைத்தே எமது இலக்கியங்களும் பேணப்பட்டன.

உ.வே.சா கண்டெடுத்த ஓலைச்சுவடிகள் சில இவை என
ta.wikipedia.org சொல்கிறது.

இப்போதும் குழந்தைகளுக்கு ஏடு தொடக்குவது எனச்சொல்வார்கள். அன்றைய நாளில் ஏட்டுச் சுவடியுடன் செல்வது நமது தொன்று தொட்ட வழக்கமாக இருந்துவருகின்றது.

யுத்த காலத்தில், சென்றிப் பொயின்றுகளுக்காவும் பங்கர் மூடிகளுக்காகவும் பெரும் தொகையான மரங்கள் அழித்தொழிக்கப்பட்டன.
இராணுவ காவலரண் நன்றி:- tamilswin.blogspot.com

ஏவப்பட்ட செல்களின் தாக்கத்தால் தலையிழந்தன பெருமளவான பனைகள்.

செல்வீச்சினால் தலையிழந்த பனைகள் மனிதர்கள் போலவே... நன்றி:- panoramio.com

பனைகள் எங்கு தோன்றின என்பதற்கு சரியான சான்று இல்லை. ஆசிய நாடுகளில்தான் பனைகள் அதிகம், இலங்கை இந்தியா, இந்தேனீசியா, தாய்லந்து, மலேசியா, மியன்மார், சீனா, வியட்நாமிலும், மேற்கு ஆபிரிக்க நாடான கொங்கோவிலும் பனைகள் காணப்படுகின்றன.

பனைச் சமையல் அடுத்த இடுகையில்..

:- மாதேவி -:
0.0.0.0.0.0.0