Saturday, August 25, 2012

பூக்களைப் பறியுங்கள் 2


இயற்கையின் படைப்பில் உருவான பூக்களில் நூற்றுக்கு மேற்பட்டவை சாப்பிடக் கூடியனவாக இருக்கின்றன. இருந்தாலும் மிகக் குறைந்த மலர்களே  பயன் படுத்தப் பட்டு வருகின்றன. 

சலட்வகைகளில் நிறத்திற்காகவும், சுவைக்காகவும், அழகிற்காகவும்  ரோஸ்மேரி, கார்னேசன், கார்டீனியா மலர்கள் சேர்க்கப் படுகின்றன. பானங்களுடன் சேர்கின்றார்கள். கேக், டெசர்ட் வகைகளில் கலக்கப்படுகின்றன. உலரவைக்கப்பட்ட ரோஜா, மல்லி, க்ரிஸாந்தமம் பூக்கள் தேனீரில் மணத்துக்காகவும், மருத்துவத்துக்காகவும் ஊறவைக்கப் பட்டு அருந்தப் படுகின்றது.

மேலும் Morifollum ,ஸ்குவான் மலர்கள், க்ரிசாந்தமம், ஹாப்ஸ் மலர்கள்,பயன் படுத்தப்படுகின்றன.

Day Lily சீன, யப்பான் சமையல்களில் முக்கிய இடம் வகிக்கின்றன. இன்னும் பல மலர்கள் சமையலில் இடம் பிடிக்கின்றன.


Artichoke பச்சைக் கலரில் தாமரைப்பூ வடிவில் இதழ்கள் இருக்கும். இலைகளின் தடிப்பான நுனிப்பகுதிகளையும் அடிப்பகுதியையும் வெட்டி எறிந்துவிடுங்கள்.  துண்டங்களாக வெட்டி சமைத்துக் கொள்ளலாம்.


முழுதாக கிறில் செய்தும், அவித்தெடுத்தும் சோசுடன் தொட்டு உண்கிறார்கள். ஸ்பினச் டிப் உடனும் சாப்பிடலாம். பிசா, பாஸ்டாவில் கலந்தும் செய்யலாம். கோழி இறைச்சியுடன் இளங் காய்களைக் கலந்தும் சமைக்கலாம்.

கசரோலாகவும், ஸ்டவ் செய்து சலட்டாகவும் செய்து கொள்ளலாம்.

பேபி ஆட்டிசோக் காய்கள் சமைக்காமலே சலட் வகைகளில் கலந்து உண்ணக் கூடியவை. காயை வெட்டி பூண்டு பேஸ்ட், லெமென் யூஸ், ஒலிவ் ஓயில், உப்பு, சீஸ் கலந்து வெட்டிய புதினா கலந்து செய்து கொள்ளலாம்.

இது  Asteraceae குடும்பத்தைச் சார்ந்தது. 100 கிறாமில் காபோகைதரேட் 10.51 கிராம், நார்ச்சத்து 5.4 கி, கொழுப்பு 0.34 கி, புரோட்டீன் 2.89கி, கல்சியம் 21 மைக்ரோ கிராம், பொஸ்பரஸ் 73 மை.கி, விற்றமின் சி 7.4 மை. கி . இருக்கின்றது.

ஆவாரம்பூ'ஆவாரம்பூவு ஆறேழு நாளாய்....' என்ற பாடலும் உள்ளது. பழமொழி ஒன்று 'ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ'. மருத்துவ குணம் நிறைந்த தாவரம்.

கிராமங்களில் தெருவோர நிலங்களில் வளர்ந்து நிற்கும். மஞ்சள் நிறப் பூக்களை உடையது. கை வைத்தியத்தில் சிறுநீர் அடைப்பு நீங்க பூவைக் காய வைத்து பொடியாக்கி குடிப்பார்கள். மேனி பளபளப்புக்கும் உகந்தது என்கிறார்கள். இதன் பூக்களில் கூட்டு, பொரியல், புளிக் காய்ச்சல், சாதம், செய்து கொள்ளலாம்.

இலுப்பைப் பூக்கள்.

Thanks:- http://tamil.boldsky.com

இதன் பூக்கள் இனிப்பு தன்மையாக இருக்கும். பச்சையாகச் சாப்பிடலாம் என்கிறார்கள். பூவை உலர வைத்து எடுத்து பலகாரங்கள் செய்யலாம். பூக்களைப் பிழிந்து எடுத்து பாணியாகக் காச்சி சோற்றுடன் சாப்பிடுவார்கள்.

கல்சியம், இரும்புச் சத்து உள்ளது. இதன் விதையிலிருந்து இலுப்பெண்ணெய் தயாரிக்கிறார்கள். இது கசப்பான எண்ணெயாக இருக்கும். பத்தியத்துக்கு இவ் எண்ணையில் சமைத்து உண்பார்கள். விளக்கு எரிக்கவும் இவ்எண்ணை பயன்படும்.


வெங்காயப்பூ

Thanks:- eelamnaturalfoods.info


உடலுக்கு குளிர்ச்சி தரும். வாய்ப் புண்களுக்கு நல்லது. வயிற்று வலி நீங்கவும் உகந்தது என்கிறார்கள்.

கீழே ஹொலன்ட் நாட்டிலுள்ள Egmond இல் கத்தரிப்பு நிறத்தில் வெங்காயம் பூத்திருக்கிறது.

thanks:- http://www.flickriver.com/photos/elsa11/1401491959/
 பொரியல், கூட்டு, குழம்பு. பால்கறி,காரப்பிரட்டல், முட்டைப் புட்டு, செய்து கொள்ளலாம். சமையலில் பிரியாணி, சூப், அலங்காரங்களுக்குப் பயன்படுத்தலாம்.

 முருங்கைப்பூவயிற்றுக் கிருமியை அழிக்கும். உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். உடலுக்குத் தேவையான சக்திகளையும் தர வல்லது. ஆயுள்வேதத்தில் இதற்கு முதல் இடம் உண்டு. பூவை அவித்துக் கசாயமாகக் குடிப்பர். வெண்முத்துக்கள் போன்ற சிறிய மொட்டுக்கள் கொத்தாக பூத்துக் குலுங்கி அழகாக மலர்ந்திருக்கும்.

பொரியல், கறி, கூட்டு, துவையல் செய்து கொள்ளலாம்.

வில்வம் பூவடை, சாம்பார் செய்து கொள்ளலாம். இதன் பழமும் மருத்துவப் பழமாகப் போற்றப்படுகிறது. இனிய வாசனையுடன் இருக்கும் பழம் சற்றுக் கசப்பானது. மூல வியாதி உள்ளவர்களுக்கு உகந்தது என்பார்கள். வயிற்றுக் கோளாறுகளுக்கும் உகந்தது.

காளான் 


காளானில் நிறைந்த சத்துக்கள் உள்ளது. இவற்றில் இலட்சத்திற்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன என்கிறார்கள். சில காளான்கள் நச்சுத்தன்மை உடையன. முட்டைக் காளான் நாய்க்குடைக்காளான், சிப்பிக் காளான், பூஞ்சைக் களான் எனப் பல வகைகள் உள்ளன.

நூறு கிராமில் புரோட்டின் 2.5 கிராம், காபோகைதரேட் 4.1 கி, கொழுப்பு 0.1 கி, பொற்றாசியம் 448 மை.கி,பொஸ்பரஸ் 120 மை.கி,கல்சியம் 18 மை.கி, நியாசின் 3.8 மை.கி அளவில் இருக்கின்றது. 

சூப், வறுவல், பொரியல், பிரியாணி, காரப் பிரட்டல், குழம்பு, பிட்சா ரொட்டிகளில் கலப்பர்.

அகத்திப் பூ பற்றி அறிய......கறியாகும் பூ


கராம்பு அவரைகொடியினத் தாவரம் இது.


அவரை இனங்களில் ஒன்று. கராம்பு போன்ற தோற்றத்தில் பச்சைநிறமாக இருக்கும். கொத்தாக காய்த்திருக்கும். முன்பக்கம் வெள்ளை மொட்டுப்போல இருக்கும். வெள்ளை மொட்டை நீக்கிவிட்டு சமைக்க வேண்டும். புரதம், இரும்புச் சத்து, நார்ப்பொருள் சுண்ணாம்பு சத்து உள்ளது.

பால்க்கறி, சாம்பார், குழம்பு பொரியல், செய்து கொள்ளலாம்.

வேப்பம்பூ

மருத்துவத் தாவரமாக வேம்பு பயன்பட்டு வருகிறது.


 இத் தாவரம் முழுவதுமே பிரயோசனத்திற்கு உரியது. இலை, பூ, காய், பட்டை, மரம் என அனைத்தும் நோய்களுக்கு மருந்தாகின்றன.   வறுவல், பச்சடி, ரசம், வடகம் என சமையலில் சேர்த்துக் கொள்ளுவோம்.

வாழைப்பூ


சிறுநீரகக் கோளாறுகளுக்கு உகந்தது. வயிற்றுக் கடுப்பு, கை கால் எரிச்சலைப்போக்கும்.
வடை, கட்லட், பொரியல்,கூட்டு, காரக்கறி, பால்கறி எனப் பலவும் செய்யலாம்.


கற்றாளை


 உடலுக்கு குளிர்சியானது.மஞ்சள் நிறத்தை உடைய பூ இப்பூவில் காரப் பிரட்டல், பொரியல் செய்வார்கள். சுவையாக இருக்கும்.


பூசணிப் பூ


எங்கள் உள்ளுர் சமையலுடன் வெளிநாடுகளிலும் சமையலில் இடம் பிடித்துள்ளது. zucchini,  courgette பூக்களும் இவ்வகையைச் சார்ந்தவை.


பசியைத் தூண்டும் ஸ்ராட்டர் ( starter )க்கு உண்ணப் படுகின்றது. பிஸாவிலும் கலந்து கொள்கிறார்கள். பூசணிப்பூவில் பொரியல், டிப் ப்ரை, செய்துகொள்ளலாம்.  இறால் உடன் சேர்த்து கிரேவியாகவும் செய்து கொள்ளலாம். stuff செய்து பொரித்தும் உண்ணலாம்.

.
செவ்வரத்தம்பூ ( செம்பருத்திப் பூ )

மரத்தின் தாயகம் சீனா என்கிறார்கள். சீனரோஜா என்றும் அழைக்கிறார்கள். செம்பருத்தி ( Hibiscus rosa sinensis ) malvaceae குடும்பத்தைச் சார்ந்தது.

மலேசியாவின் தேசிய மரம் என்ற பெருமையையும் பெறுகிறது. இலங்கை இந்தியாவில் பெரும்பாலும் காணப்படுகிறது. சிவப்பு நிறத்தால் அனைவரையும் கவர்ந்து இழுக்கும். பசுபிக் தீவுகளிலும் உணவாக உட்கொள்ளப்படுகிறது. எங்கள் முன்னோர் சமையலில் முதலிடம் இதற்கு இருந்தது.

செடி இனத்தைச் சார்ந்தது. 5 அடி முதல் 10 அடி வரை வளரக் கூடியது. வெப்பத்தைத் தாங்கக் கூடிய தாவரம்.
  • இரத்த சோகையை சுகமாக்கும். 
  • கொழுப்பைக் கட்டுப்படுத்தும். 
  • பெண்களுக்கான மாதவிடாய் நோய்களைத் தடுக்கும். 
  • தலைமுடி வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெயுடன் பூக்களைப் போட்டுக் காச்சி கருமூடி வளர வைப்பார்கள். 
சட்னி, பச்சடி, சம்பல், பொரியல்,  செய்யலாம். சர்மப் பளபளப்பிற்கு நல்லது என்கிறார்கள். யூசாகவும், சுடுநீரில் போட்டும் இருமல் தணிய அருந்துவார்கள்.
சம்பல் செய்வோம்.

சேகரிக்க வேண்டியவை

சிவப்புச் செம்பருத்திப் பூக்கள் -  15- 20
பச்சை மிளகாய் - 1
சின்ன வெங்காயம் - 6 - 7
தேங்காய்ப்பூ - 2 ரீ ஸ்பூன்
கெட்டித் தேங்காய்ப்பால் -1 டேபிள் ஸ்பூன்
தேசிச் சாறு -1/4  ரீ ஸ்பூன்
உப்பு –சிறிதளவு.

செய்வோம்


பூக்களைப் பறித்து காம்பையும் நடுவில் உள்ள மகரந்தத்தையும் நீக்குங்கள்.

பூச்சி, எறும்பு இருக்கின்றதா என நன்கு பார்த்துக் கொள்ளுங்கள்

பூக்களைக் கழுவி எடுங்கள்.

பூக்கள், பச்சை மிளகாய், வெங்காயங்களை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.

தேங்காய்பூ கலந்து உப்பு போட்டு எல்லாவற்றையும் சற்று மசித்து விடுங்கள்.

இறுதியாக தேசிப்புளி, தேங்காய்ப்பால் விட்டுக் கலந்து எடுத்து வையுங்கள்.

பார்க்க நல்ல சிவப்பு நிறமாக இருக்கும். உடனே சாப்பிடத்தோன்றும். சாப்பிட குளிர்ச்சியாக இருக்கும். கோடைக்கு சாப்பிட சிறந்தது.

குறிப்பு

செம்பருத்திப் பூக்கள் கிடைக்கவில்லை. அதனால் தக்காளி சம்பல் செய்து படம் போட்டுள்ளேன்.


பூக்களைப் பறியுங்கள் உண்டு மகிழுங்கள். நலம் பெறுங்கள்.

:- மாதேவி -:

Sunday, August 5, 2012

உப்பளத்தில் குளித்து வெயிலோடு உறவாடி...வத்தலானேன்

சங்க காலம் முதல் சமையலின் காரச் சுவைக்காக மிளகு பயன்பாட்டில் இருந்தது.

அதேபோல கி.மு. 7500 ஆண்டுகளுக்கு முன்னரே அமெரிக்க உணவில் மிளகாய் இருந்திருக்கிறது என்பதற்கான ஆதாரங்களை கண்டுபிடித்துள்ளார்கள்.

ஈயூடோவரில் 6000 வருடங்களுக்கு முன்னரே தேர்ந்தெடுத்த இனமாகப் பயிரிடப்பட்டுள்ளதாம். மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் முதல் முதலாகப் பயிரப்பட்ட செடியாகவும் இதையே சொல்கிறார்கள்.


கிரிஸ்தோபர் கொலம்பஸ் அவர்கள் அமெரிக்காவிலிருந்து கண்டுபிடித்து ஐரோப்பிய நாடுகளுக்கு அறிமுகப்படுத்தினார். அப்பொழுது Chille pepper என அழைத்தார்கள்.

ஐரோப்பியாவிலிருந்து போர்த்தீக்கேய வியாபாரிகளால் ஆசியாவிற்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என நம்புகிறார்கள்.

மிளகாய் இனங்களில் 400 வகைகள் இருக்கின்றன என்கிறார்கள். அசாம் மிளகாய் மிகவும் சிறிய வகையானது. காரத்தில் மிகவும் கூடியது.

இலங்கையில் கானல் கொச்சிக்காய் என ஒரு வகை இதுவும் சிறியது அதீத காரமானது. ஊசி மிளகாய் எனத் தமிழகத்தில் அழைக்கப்படுகிறது.
நன்றி - subaillam.blogspot.com
 தென்பகுதியில்  ஒரு வகை சராய் (உறைப்பு ) என  கூறி விற்பார்கள். ஒரு சிறிய மிளகாய் ஒரு கறிக்குப் போதுமானது.

பூட்டான் நாட்டில் மிளகாயை பழ வகைகளில் அடக்குகிறார்கள். பழத்தைப் பதனிட்டு போத்தலில் அடைத்துப் பயன்படுத்துகிறார்கள்.

கார வேறுபாடுகள்

காரம் என்பது ஒரு சுவை என்ற போதும், காரத்தை விஞ்ஞான ரீதியாகவும் அளக்கலாம்.


மிளகாய்களை காரத்தன்மை கொண்டு வகைப்படுத்த சுகோவில் அளவு (scoville units ) பயன்படுத்தப்படுகிறது

இனிப்பு மிளகாய் - காரத்தன்மை 0 -1000 சுகோவில் அளவுவரை இருக்கும். குடமிளகாய், இனிப்பு பனானா, செர்ரிமிளகாய், பிமென்டோ இவ்வகையைச் சார்ந்தன என்கிறார்கள்.

மிதமான கார மிளகாய் - இதன் காரத் தன்மை 1000 - 3000 சுகோவில்வரை ஆன்ரோ, பசில்லா,கஸ்காபெல், சண்டியா இந்தவகையைச் சேர்ந்தவை.

இடைப்பட்ட கார மிளகாய் - 3000 - 6000 சுகோவில்வரை அலபினோ,மியாசாய் இந்த வகைகள்.

காரமிளகாய் - 5000 – 100,000 சுகோவில் வரை. டபாஸ்கோ, செர்ரானோ,கயேன், பிக்வின், தாய்லாந்து மிளகாய் இவ்வகையின.

அதீதகார மிளகாய் - 80,000 – 300,000 சுகோவில்வரை ஆபெர்னரோ, ஸ்காட்ச்பானெட்டு அதீத வகையைச்சேர்ந்தனவாக இருக்கின்றன என்கிறார்கள்.

வடிவ வேறுபாடுகள்

மிளகாய்களில் நீளமானவை, வட்டவடிவமானவை, குறுகியவை, அகன்ற வகை, ஒடுங்கிய வகை என பலவகைகள் இருக்கின்றன.

பச்சை கலர் மிளகாய்கள்தான் பெரும்பாலும் இருக்கின்றன.


கறுப்பு, வெள்ளை, கத்தரிப்பூ,மஞ்சள்,சிவப்பு வர்ணங்களிலும் மிளகாய்கள் இருக்கின்றன. கத்தரிப்பூமிளகாய் வத்தல்கள்

பச்சை மிளகாயை நாங்கள் மோரில் இட்டு வத்தலாக்கிப் பயன்படுத்துகிறோம்;.

மார்ச் ஏப்ரல் கோடை ஆரம்பத்தில் வத்தல் மிளகாய் இடும் காலம் தொடங்கிவிடும்.

முன்னோர்கள் நாலு ஐந்து கிலோ மிளகாயை வாங்கி அவித்து உலர வைத்து பெரிய டப்பாக்களில் அடைத்து வைத்துக் கொள்வார்கள். குடும்பமும் பெரிதல்லவா மழைக் காலத்திற்கும் கைகொடுக்கும்.

இப்பொழுது குடும்பங்கள் சிறியதாக இருப்பதால் கால்கிலோ அரைக்கிலோ மிளகாயே தாராளமாகப் போதும்.

கத்தரிக்காய், வெண்டைக்காய் பொரித்த குழம்பு, தக்காளி குழம்பு, மோர்குழம்பு, வெங்காயக் குழம்புகளிலும் பப்படக் குழம்பு, மோர்களிகளிலும் வத்தல் மிளகாயைப் பொரித்துக் கலந்து கொள்ள சுவை கூட்டும்.

வத்தல் மிளகாய்ச் சட்னி, வத்தல் மிளகாய் காரக் குழம்பும் செய்து கொள்ளலாம்.


வத்தல் மிளகாயை சாதம், புட்டுக்குப் பொரித்து உண்பார்கள் யாழ் மக்கள். வத்தல் மிளகாயும் தயிர்ச் சோறும் நல்ல கொம்பினேஸன்.

விரத காலத்தில் அப்பளம், மோர் மிளகாய், வடகம் இல்லாத சமையல் இருக்காது.

சுவையும் அதுவே தண்டனையாகவும் அதுவே

காரத்திற்காகப் பயன்படுத்தும் மிளகாய் தண்டனைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. உண்மையை வரவழைக்க மிளகாய் சாக்கினுள் ஆளைக் கட்டி வைப்பார்கள் எனச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

பழைய காலத்தில் சிறுவர்களுக்கு மிளகாயை கண்ணில் பூசுவேன் என வெருட்டுவார்கள்.

கள்ளனை விரட்டவும் மிளகாய்பொடி பயன்படுகிறது. துணிவுள்ளவர்கள் உங்கள் கண்களைக் காப்பாற்றி கள்ளனை விரட்டுங்கள்.

இந்திய இராணுவத்தினர் பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆயுதமாக மிளகாயைப் பயன்படுத்துகிறார்களாம்.  கண்ணீர் புகைக் குண்டு போன்ற கிரனேட்டுகளைத் தயாரிக்க உலகின் மிகக் காரமான மிளகாயைப் பயன்படுத்துகிறார்களாம். 1,000,000 சுகோவில் (Scoville units) அளவிற்கு அதிகமான மிளகாய் இதுவாம்.

Indian military to weaponize world's hottest chili

சடங்கு சம்பிரதாயங்களில் மிளகாய்

இத்துடன் சிறு குழந்தைகளுக்கு கண்ணூறு கழிக்கவும் மிளகாயையும் உப்பையும் சுற்றி எடுத்து அடுப்பில் போட்டு வெடிக்க வைக்கும் வழக்கமும் இருந்திருக்கிறது.

கடைகளின் வாயில்களில் மிளகாயையும் எலுமிச்சம் பழத்தையும் தொங்க விட்டிருப்பதையும் காணலாம்.வத்தல் மிளகாய் செய்வோமா?


உப்பு மிளகாய், வத்தல்மிளகாய், மோர் மிளகாய், உப்பு புளி மிளகாய் என பல பெயர்களில் அழைக்கிறார்கள்.

இவ் வத்தல் மிளகாயில் நலமுண்டா எனக்கேட்காதீர்கள். அடிக்கடி சாப்பிடுவது உடல் நலத்துக்கு கெடுதியைத் தரும். நாக்கின் சுவைக்கு எப்போதாவது சாப்பிடலாம்.

அல்சர் நோயுள்ளவர்கள் இந்தப் பக்கம் போகவே வேண்டாம். உப்பு அதிகம் என்பதால் பிரசர் இருப்பவர்கள்  நிட்சயமாக தவிர்த்துக் கொள்ள வேண்டும். கொலஸ்ரோல் உள்ளவர்களுக்கும் எண்ணையில் பொரிப்பதால் ஏற்றதல்ல.

சில செய்முறைகள்1.    மோர்மிளகாய்.
உப்பு, மோருடன் காய்களைப்போட்டு ஊற வைத்து இரண்டு நாட்கள் வீட்டினுள்ளே மூடி வைத்து எடுத்து வெயிலில் காய வைத்து எடுப்பார்கள். 
2. உப்பு மிளகாய்.
நீரில் உப்பிட்டு மிளகாய் போட்டு ஒரு கொதி விட்டு எடுத்து வடித்து வெயிலில் காயவிடுதல்.
3.    உப்பு புளி மிளகாய்.

புளி நீரில் உப்பிட்டு மிளகாயைப் போட்டு ஒரு கொதிவிட்டு எடுத்து வெயில் உலர வைத்து எடுத்தல்.

மூன்று முறைகளுமே வெவ்வேறு சுவைகளைத் தரும்.

தேவையான பொருட்கள்.


பச்சை மிளகாய் - ¼ கிலோ
உப்பு -1/2   ரீ ஸ்பூன்

  • மிளகாய்களைக் கழுவி உலரவிடுங்கள். 
  • மிளகாய்களின் காம்புகளை ஒடித்து விடுங்கள். ( சிலர் காம்புடனேயே செய்வார்கள் ) 
  • நுனிப்புறம் சற்றே வெட்டி விடுங்கள் 
  • இரண்டு இடத்தில் முள்ளுக் கரண்டி அல்லது கத்தியால் குத்தி விடுங்கள். 
அப்பொழுதுதான் உப்பு உள்ளே ஊறிச் சென்று காரம் குறைந்திருக்கும்.

மேற் கூறிய மூன்று வகைளில் உங்களுக்குப் பிடித்த முறையில் செய்து ஒரு வாரம் காலையில் வெயிலில் வைத்து மாலையில் எடுத்து உள்ளே வைத்துவிடுங்;கள். மழை, பனி, நீர் படாது பார்த்துக்கொள்ளுங்கள்;.

வாயைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். உப்பு மோர் மணத்தில் உடனேயே பொரித்துச் சாப்பிட்டு முடித்துவிடாதீர்கள்.

நன்கு காய்ந்த பின் டப்பாக்களில் அடைத்து வைத்து இடையிடையே பொரித்து சாப்பிடுங்கள்.


யாழ்ப்பாண மிளகாய்த் தூள்

குடமிளகாய் சலட்

மிளகாய் சமையல்கள் தொடரும்......

-: மாதேவி :-