யாழ்ப்பாண உணவுப் பொருட்கள் மிகவும் பிரபலம் பெற்றவை.
மிகவும் இனிப்பான கறுத்தக் கொழும்பு மாம்பழத்தின் சுவை சொல்லும் தரமன்று. தென்பகுதி மாம்பழம் வெறும் பச்சை நிறமாய் இருபது முப்பது ரூபாவிற்கு விற்கும். வாங்கி வாயில் வைத்தால் ஒன்றில் பச்சைத் தண்ணீர், அல்லது வாய் புளித்துப் போய்விடும். ஏனடா வாங்கினோம் என்றாகும்.
பென்னம் பெரிய குலைகளாய் விளையும் திண்ணைவேலி இரதை வாழைப்பழம் ஒரு வேளை உணவுக்கு ஒரு பழமே போதுமானதாய் இருக்கும்.
இவற்றுடன் பலாப்பழமும், யாழ் முருங்கைக்காயும் சேர்ந்துகொள்ளும். இவையெல்லாம் வெளியூர்களில் வசிக்கும்போது நினைவில் தோன்றி மறைவதில் வியப்பில்லை.
இது போன்றே யாழ் மிளகாய்த் தூளும். தரத்தில் உயரிடம் பிடித்தது. மிகவும் இலகுவான சமையல் முறைக்கு ஏற்ற தயாரிப்பு. வாசனையும் மிக்கது. பக்கற்றுகளில் அடைக்கப்பட்டு ஏற்றுமதியாகிறது. உலகெங்கும் இலங்கைத் தமிழர் வாழும் இடங்களில் எல்லாம் உணவில் விரும்பிப் பயன்படுத்தப்படுகிறது.
மிளகாய்த் தூள் என்று இலகுவாக வாயினால் சொல்லி விடலாம்.
பைக்கற்றை உடைத்து டப்பாவில் போட்டு வைத்திருந்தால் அள்ளிக் கறியில் போட்டுவிட்டால் சரியாகிவிடும்.
இதன் தயாரிப்பில் உள்ள சிரமங்கள் எத்தனை?
குறைந்தது நாலு ஐந்து நாட்கள் எடுக்கும். யாழ்ப்பாணப் பெண்கள் இந்த விடயத்தில் மிகுந்த பொறுமைசாலிகள்தான்.
முதலில் கடைக்குச் சென்று நல்ல சிவத்த புதுச் செத்தல் மிளகாய் தேடி வாங்க வேண்டும். அத்துடன் அதற்கான மசாலாச்சரக்குப் பொருட்கள் சேகரிக்க வேண்டும்.
பின் வீட்டிற்குக் கொண்டு வந்து சூரிய பகவானை வேண்டி
"மழையைத் தராதே மழையைத் தராதே'
'நல்ல வெயிலைத் தா"
எனப் பாடி
இரு கரம் கூப்பி வணங்குங்கள்.
செத்தல் மிளகாயை எடுத்து கஞ்சல் குப்பை எல்லாம் பொறுக்கி நீக்கி,
நாலு ஐந்து தடவை இருமித் தும்மி முடித்து விடுங்கள்.
நீரில் கழுவி வட்டியில் போட்டு வடிய விட்டு வெயிலில் உலர்த்துங்கள்.
அவ்வாறே மசாலாப் பொருட்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாகக் கழுவி காயவிடுங்கள்.
கறிவேற்பிலையையும் வெயிலில் காயவிடுங்கள்.
மூன்று நான்கு நாட்கள் வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
பகலில் மழை வந்தால்
ஓடிச்சென்று உள்ளே எடுத்து வைத்து
பெய்த மழையை திட்டித் தீருங்கள்.
மழைமுடிந்து சூரியன் வந்தால்
வெளியே எடுத்துவையுங்கள்.
மறுநாள் சூரியன் வருமா என ஆகாயத்தையே பார்த்துப் பார்த்து எடுத்துக் காயவிடுங்கள்.
அப்பாடா ஒருவாறு மிளகாய் மசாலாக்கள் காய்ந்து விட்டது.
அடுத்தது என்ன?
செத்தல் மிளகாயை எடுத்து
ஒன்றொன்றாய்க் காம்பை ஒடித்து
அதை மூன்று நான்கு துண்டுகளாய் வெட்டி எடுங்கள்.
தும்மி, இருமி, கண்ணீர் சிந்தி
முகம் கை எல்லாம் எரிவு வர
ஓடிச் சென்று சோப் போட்டு கை முகம் கழுவுங்கள்.
இது ஒரு நாளில் முடியாது. நறுக்கி எடுக்க இரண்டு நாள் எடுக்கும்.
இடுப்பும் பிடிக்கத் தொடங்கிவிட்டது. அடிக்கடி இடுப்பையும் தடவிக் கொள்ளுங்கள். ஒருவாறு வெட்டிமுடிந்து விட்டது.
முதல் நாள் இரவு எல்லாப் பொருட்களும் சரியாக இருக்கிறதா என கவனத்தில் கொள்ளுங்கள்.
நாளை சுப முகூர்த்தம் அல்லவா? அதிகாலை மலர்ந்துவிட்டது.
பெரிய தாச்சியைக் கழுவி எடுத்து, அடுப்பில் ஏற்றி விடுங்கள். இனி வறுத்து எடுக்கும் வேலைகள் ஆரம்பம்.
முதலில் மிளகாயைப் போட்டால் கெட்டுவிடும். வீடே பற்றி எரியும். அதனால் முதலில் போட வேண்டியவர் மல்லியார்தான். இவருக்கு சூடு சுரணை குறைவு. நீண்ட நேரம் சூடு ஏற்றினால்தான் கோபம் வந்து உடைவார்.அளவாக அடுப்பைவைத்து நன்கு வறுத்துஎடுங்கள்.
அடுத்து சட்டியில் புகலிடம் மசாலாச் சரக்காருக்குத்தான்.
அவர்களை ஒன்றாகவே போட்டுக் கொள்ளலாம்.
இவர்களுக்கு விரைவில் சூடு ஏறிவிடும்.
பறக்கத் தொடங்கிவிடுவார்கள்.
பதமாய் கிளறினால்தான் உருப்படுவார்.
இல்லாதுவிட்டால் கரித் துண்டுகள்தான்.
பதமாய் வறுத்து எடுங்கள்.
ஒருவாறு அரைவேலை முடிந்துவிட்டது.
இருக்கவே இருக்கு சிகப்பு இராட்சசி. இதை நினைக்கவே பயம் வரும்.
'நீயா நானா' பார்த்திடுவோம்.
வெப்பத்தை அளவாய் வைத்து மூன்று நாலு கிளறு கிளறவே இராச்சசிக்கு கோபம் ஏறிவிடும்.
வேலையைக் காட்டத் தொடங்கிவிடுவாள்.
அச்.. அச், கொக்... கொக் மூக்கு வாயெல்லாம் எரிக்கிறாளே.
கண்ணீர்விட ஒருவாறு இறங்கி வருவாள். 'அடிமைப் பெண்ணானாளே' எனத் திரும்ப, மிகுதி நாங்கள் இருக்கிறோமே என சிரிப்பார்கள் ஓர் புறம் உள்ளவர்கள்.
"சரி சரி இருங்கடி உங்களுக்கு ஒரு வேட்டு" என்றபடியே
முதல் இராட்சசிகளை கொட்டி உலர்த்திவிட்டு
இவளுகளை எடுத்து சட்டியில் கொட்டவும்
உலர விட்டவர்கள் ஊரையே கூட்டி
அடுத்த வீட்டு கமலா அன்ரியையும்
மேல் வீட்டு அக்காவையும்
குசினி யன்னலுக்கு அழைத்து விடுவார்கள்.
"என்ன உங்கை மிளகாய் வறுகிறியளே" என குசல விசாரிப்புகள் தொடங்கிவிடும்.
"நான் சென்ற மாதந்தான் வறுத்தேன்" என்பாள் ஒருத்தி.
மற்றவளோ "நான் திரிக்க வேணும்" என அழுவாள்.
அதற்கிடையே சட்டியை நாலு தட்டு தட்ட வேண்டும்.
விரைவாக வறுபட்டு வாங்கடி எனச் சபித்தபடியே
சரக்.. சரக்தான்.
இதோ நெருங்கிவிட்டார் வெற்றிக் கம்பத்தை அடைய
ஒரே நிமிடம். ஆ... ஆ வென்று விட்டேனே.
முடிந்தது வேலை.
வெற்றி எனக்குத்தான்.
இவர்கள் எல்லாம் ஆறப் போடப் பட்டுள்ளார்கள். சாதாரண நிலைக்கு வருவதற்கு.
அதற்குள் நானும் வோஷ் எடுத்து மேக் அப் போட்டுவிடுவேனே.
எல்லோருக்கும் சின்னு ரேஸ்டியின் யாழ்ப்பாண மிளகாய்த் தூளின் இடைவேளை.
பிளீஸ் கம்பக் ஆவ்டர் வன் அவர்.
ஆமாம் வந்துவிட்டோம்.
வெல்கம் பக்.
வறுத்த பொருட்கள் யாவும் பெரிய கடுதாசிப் பக்கற்றுக்குள் அடைபடப் போவதைக் காணுங்கள். அடுத்து கிறைன்டிங் மில்லை நோக்கிய பயணம்தான். வெயிட் போட்டுக் கொடுத்து உடனே தருவீர்களா அல்லது சென்றுவிட்டு ஒரு அவரில் வரவா என்ற கேள்விதான்.
கடையெல்லாம் சுற்றிவிட்டுச் சென்று நமது 'பொக்கஷ'த்தை வாங்கிவர வேண்டும். கையில் கிடைத்ததும் எமது முகத்தில் ஒளிவட்டம் வீசுமே. அதைக் காண கண் கோடியும் வேண்டும். பிறகென்ன மகாராணி நடைதான்.
இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்குத் தாக்குப் பிடிக்குமே என்ற சந்தோசம்தான். அந்த நடையை நீங்களும் வாழ்க்கையில் ஒரு தடவை நடந்துதான் பாருங்களேன்.
வீட்டுக்கு வந்தாயிற்று.
சுளகு எடுத்து கடதாசிப் பேப்பரை விரித்து, கொண்டு வந்த 'பொக்கிஷத்தை'க் கொட்டி ஆறவிட்டு விட்டு மதியச் சமையலுக்கு தயார் செய்ய வேண்டியதுதான்.
சமையல் முடிய தூளாரும் ஆறியிருப்பார்.
எடுத்து அரிதட்டில் இட்டு
அரித்து இருமித்...தும்மி...
கட்டையைக் கொட்டிவிட்டு
தூளாரை காற்றுப்போகாத பெரியபோத்தல்களில் அடைத்து வைக்க வேண்டியதுதான்.
அடைத்தாயிற்று!
அப்படியே சென்று தயாரிப்பாளர் குளியல் அடித்துவிட்டு வருவதுடன்
முடிவுக்கு வந்துவிடுவார் யாழ்ப்பாண மிளகாய்த் தூளார்.
மீண்டும் மூன்று மாதத்தில் பயணத்தை ஆரம்பிப்பார்.
தயாரிப்புக்கு சேகரித்தவை
செத்தல் மிளகாய் 1 கிலோ
மல்லி 1 கிலோ
பெருஞ்சீரகம் 100 கிராம்
சின்னச் சீரகம் 100 கிராம்
மிளகு 100 கிராம்
வெந்தயம் 50 கிராம்
கறுவா, இறைச்சிச் சரக்கு பைக்கற் சிறியது 1
மஞ்சள் 5-6 பல்லு
கறிவேற்பிலை 1 கொத்து
சிலர் குளம்பு தடிப்பாக வரவேண்டும் என்பதற்காக உழுந்து, அரிசி வறுத்துச் சேர்ப்பார்கள்.
ஆனால் இது நீண்ட நாட்களுக்கு பழுதடையாது இருக்குமா என்பது கேள்விக் குறி.
நீங்கள் எப்போ சேகரிக்கப் போகிறீர்கள்?
மாதேவி
மிக அருமையான நடையில் சொல்லியிருக்கிறீர்கள். ரசித்தேன். நாங்க சேகரிப்பதா? வற்றலை வாங்கி ஒவ்வொரு ப்ளேட்டாக மைக்ரோ வேவ் அவனில் ஒன்றிரண்டு நிமிடம் வைத்து எடுத்தால் ஆறியதும் மொறுமொறு. மிக்ஸியில் கிர்ர்ரு கிர்ர்ரு. அவ்ளோதாங்க:)!
ReplyDeleteஒரு கிலோ பொடி எனக்கு பார்சல்! நன்றி. :-)
ReplyDeleteஊரில் இருக்கும் போது ஒரு வீட்டில் மிளகாய்த்தூள் செய்தால் அது அனேகமாக சுற்றி இருக்கும் எல்லா வீட்டுக்கும் அந்த வாசனை காட்டிக்கொடுத்து விடும். அந்த நினைவை மீட்டுத்தந்தது உங்கள் பதிவு சகோதரி......
ReplyDeleteமிளகாய் தூள் செய்வதையும் சுவையாக சொல்லியிருக்கிறீர்கள்..மாதேவி...தலைப்பை பார்த்து இட்லி மிளகாய் பொடி என்று நினைத்துவிட்டேன்..:-)
ReplyDeleteவாருங்கள் ராமலக்ஷ்மி.
ReplyDeleteஇப்பொழுது இலகு சமையல் வழிகள் இருக்கும்போது பழைய செய்முறைகளுக்கு வழியேது.
இதுஎல்லாம் எங்கள் தலைமுறையுடன் முடிவுக்கு வந்துவிடும்.
சித்ரா பார்சல் ஒன்று அனுப்பிவிட்டால் சரி.மிக்கநன்றி.
ReplyDeleteமிக்க நன்றிஜெய்லானி. மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன்.
ReplyDeleteஆமாம் ஜெயா. இனிவரும்காலம் இவையெல்லாம் நினைவுகள்தான்.
ReplyDeleteமிக்கநன்றி.
வாருங்கள் சந்தனமுல்லை.
ReplyDeleteஇட்லி மிளகாய்ப் பொடி ஒருமுறை எழுதிவிட்டால் சரி.
வருகைக்கு மிக்க நன்றி.
நல்ல இருக்குங்க நாங்களும் பண்ணிப்பார்கிறோம் . அருமை . பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteமிளகாய்த்தூள் அரைப்பதைக் கூட சுவாரசியமாகச் சொல்லியிருக்கும் சின்னுவுக்கு பாராட்டுக்கள்.
ReplyDeleteமாதேவி மேடம்...தங்களுடன் விருதை பகிர்ந்துக் கொள்வதில் மகிழ்கிறேன்
ReplyDeletehttp://sandanamullai.blogspot.com/2010/07/blog-post_06.html
:)
உங்கள் கத்தரிக்காய் பால்கறி போஸ்ட்டை ஒருக்கா பாருங்கோ.
ReplyDeleteAnamika
மிளகாய்த் தூள் செய்யும் வேலைப் பற்றியும் , நாம் படும் துன்பத்தைப்பற்றி மிக அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்.
ReplyDeleteயாழ்ப்பாண மிளகாய்த் தூள் அரைத்துப் பார்க்க வேண்டும்.
எப்பா... பாக்கவே காரமா இருக்கு... அதாவது நல்ல சிகப்பா இருக்குன்னேன்.... சொன்னதும் சூப்பர்
ReplyDelete"நான் சென்ற மாதந்தான் வறுத்தேன்" என்பாள் ஒருத்தி.
ReplyDeleteமற்றவளோ "நான் திரிக்க வேணும்" என அழுவாள்.// :)
அழகா எழுதி இருக்கீங்க..
சித்ராக்கு பார்ச்லா சில சமயம் எனக்கு எங்க அம்மா கொரியரில் இட்லி மிளகாய்பொடி அனுப்பவதுண்டு.. ;)
மாதவி...நீங்க சொன்னபடி தூள் அரைச்சுப் பார்த்தேன்.நல்ல வாசமா நல்லாயிருக்கு.ஆனால் மச்சக் கறிக்குத்தான் நிறைய நல்லாயிருக்கு.மரக்கறி சமைக்க வாசனையும் உறைப்பும் கூடவாயிருக்கு !
ReplyDeleteரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க.
ReplyDeleteI see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .
ReplyDeleteஇந்த தளம் உங்கள் சமையல் தளத்தை அனைவரும் பார்வையிட உதவியாக இருக்கும். இந்த தளம் உங்களுக்கு பயனுல்லதாக இருந்தால் எனக்கு மகிழ்ச்சி.
ReplyDeletehttp://cookeryindexer.blogspot.com/
அருமையா சொல்லியிருக்கீங்க. நன்றி.
ReplyDeleteமசாலா பதிவும் அலசி ஆராய்ந்து போட்டு இருக்கீங்க
ReplyDeleteஇது தான் இலங்கை உணவின் ருசியினை கூட்டும் மசாலாத்தூளா தேவி.....
ReplyDeleteநீங்கள் சொன்ன விதம் நல்லா இருக்கு
மிளகாய்த்தூள் திரட்டலை விட உங்கள் எழுத்துதான் வாசம் அதிகM. இது போலச் செய்து பார்க்கவேண்டும். நாங்கள் பெருஞ்சீரகம் சேர்ப்பதில்லை. ருசியே மாறிவிடுமே மாதேவி!!
ReplyDelete