Saturday, October 19, 2013

குண்டாவதைத் தடுக்கும் குண்டுப் பூசணிக்காய்


கொடிக்காய் இனத்தைச் சேர்ந்த படர்கொடித் தாவரம்.


பறங்கிக் காய் பிஞ்சாக இருக்கும்போது பச்சையாக இருக்கும். நன்றாக முற்றிய பின்னர் பழுப்பு நிறத்தில் இருக்கும். வெட்டினால் உள்ளே மஞ்சள் நிறச் சதைப் பகுதி இருக்கும். பறைபோன்று உள்ள காய் என்ற பொருளால் பறங்கிக்காய் ஆனது என்கிறார்கள்.

பூசணிக்காய் என்பது பச்சை நிறத்தின் மேல் வெண்படலாம் பூசியது போல இருக்கும். உள்ளே வெண்சதைப் பகுதி இருக்கும். இதை வெள்ளைப்பூசணி, நீர்த்துப்பூசணி எனவும் அழைப்பார்கள்.


பூசுணைக்காய் என்ற பெயர்தான் பூசணிக்காய் ஆகிவிட்டது. டுபாய் பூசணி என்ற சிறுவகை இனமும் இருக்கின்றது.


16ம் நூற்றாண்டில் குண்டு வடிவமான புதுவகைப் பூசணிக்காய் அறிமுகமானது. அது பறங்கியர் நிறத்தைப் போன்று இருந்ததால் பறங்கிப் பூசனி என அழைத்தார்கள்.

என்ன யெபர் வைத்தாலும் நம்ம பூசணிதான்

இலங்கையில் பறங்கிக் காயையும் பூசணி என்றே சொல்கிறார்கள். சிங்களத்தில் வட்டக்கா என்கிறார்கள்.

பல்வேறு மொழிகளிலும்  இவ்வாறு அழைக்கிறார்கள்.

Afrikaans - Pampoen
Arabic      - Kara' Safra
Chinese(Mandarin) Nangua
French   Potiron
Hindi Kaddu
Marathi Lal Bhopala
Japan Kabocha
Malayasia Labu
Russia  Tikba

ஆண் பூவும் பெண் பூவும்



இதன் தாயகம் வட அமெரிக்கா வடக்கு மெக்சிக்கோ என்கிறார்கள். தாவரவியல் பெயர் Banincasa hispida ஆகும்.

பேணிப் பாதுகாக்கப்படும் காய்களில் ஒன்று. பல மாதங்கள் வரை முழுக்காய்கள் பழுதடையாது இருக்கும்.

பூசணியின் பயன்கள்

இக்காய் பிதுர் விரத நாட்களுக்கு சிறப்பாகச் சமைக்கப்படும்.

அலங்காரக் கலைப் பொருளாகவும் அனைவரையும் கவர்ந்து இழுக்கின்றது. லாம் ஷேட், ப்ளவர் வாஸ் என பல அலங்காரங்கள் இருக்கின்றன.

முக அலங்காரத்திற்கும் சருமப் பொலிவிற்கும் பூசணிகாய் கூழ் பயன்படுத்தப்படுகின்றது.


கரட்டீன் சத்து அதிகம் இருக்கிறது. வெப்ப காலத்தில் உடலில் அதிகரிக்கும் வெப்பத்தை நீக்குகிறது.

நீர்ச் சத்து இருப்பதால் சிறுநீரக நோய்களுக்கு நல்லது. நார்ப் பொருள் இருப்பதால் மலச்சிக்கலைப் போக்கும்.


பூசணி விதைகள் டயற்றில் இருப்போருக்கு சிறந்தது என்பார்கள். கலோரி குறைவாக இருப்பது காரணமாகும். கொழுப்பும் குறைந்தது.

பூசணியின் போசனை

கலோரி 33
கொழுப்பு 0.2 கிராம்
புரதம் 1.3 கிராம்
கல்சியம் 18 மிகி
இரும்பு 0.6 மிகி
நார்ப்பொருள் 0.5 கிராம்
சர்க்கரை 2.8 கிராம்
விற்றமின் சி -11 மி.கி
விற்றமின் பி1 - 0.06 மி.கி
கரோடின் 2400 மைக்ரோ கிராம்

பூசணியின் போசனை அளவுகளைக் கவனித்தால் அதில் உடலைக் குண்டாக்கும் கொழுப்புப் பொருள் இல்லை எனவும் அளவிற்கு (0.2 கிராம்) குறைவாகவே உள்ளது. அதேபோல எடை அதிகரிப்பிறகு மற்றொரு காரணியான  காலோரி அளவும் (கலோரி 33) மிகக் குறைவாகவே உள்ளது.

எனவே பூசணியானது தான் குண்டாக இருந்தாலும் எம்மைக் குண்டாக விடாது என்று நம்பலாம். தாராளமாகச் சுவைத்து  உண்ணலாம்.

பூசணியின் இலைகளும் உணவாக உண்ணப்படுகின்றன. அவித்து எடுத்து அவித்த கிழங்கு இறைச்சி மீன் வகைகளை வைத்து சுற்றி எடுத்து சோசில் தோய்த்து உண்ணலாம். கிராமத்தில் பொரியல் செய்துகொள்வோம். இங்கு கிடைப்பதில்லை.

பூசணிப் பூவும் பொரியல் செய்வோம். வெளிநாட்டில் ஸ்டாட்டர் ஆகவும் டீப் ப்ரை செய்து உண்கிறார்கள்.


ரோஸ்டட் விதையிலிருந்து ஓயில் தயாரிக்கிறார்கள். சமையலுக்கும், சலட் டிரெஸிங்கிக்கும்.      பூசணி விதைகளை பச்சையாகவும் வறுத்தும் சுட்டும் உண்ணலாம். சூப், சலட் வகைக்கும் கலந்து கொள்ளலாம்.

பிரபல பூசணி்கள்

அமெரிக்காவில் டல்லே பாரி பூசணிக்காய் எறியும் போட்டி ஒன்றும் நடாத்துகிறார்கள். ஆரம்பத்தில் கைகளால் தூக்கி எறிந்த போட்டி இப்பொழுது பீரங்கியில் வைத்து அடிக்கும் போட்டியாக மாறிவிட்டது. பீரங்கியில் வைத்து அடித்தபோது கால் மைலுக்கு மேல் சென்று விழுந்தது. ரீவி நிகழ்ச்சி ஒன்றில் காட்டினார்கள்.

மிகவும் பெரிய பறங்கிக் காய் அமெரிக்காவில் கிறிஸ்டீபன்ஸ் என்பவரது தோட்டத்தில் விளைந்தது. இதன் நிறை 821 கிலோகிறாம். பூசணியின் அகலம் 15 அடி.


இலங்கையில் முன்னேரியா கல்வானை பகுதியில் 30கிலோ எடையுடைய வெளிநாட்டு வகையைச் சேர்ந்த பூசணிக்காய் சரத் குருவிட்ட என்பவரது தோட்டத்திலே அண்மையில் விளைந்தது.

'பேக்ட் பம்கின் பை' ஐக்கிய ராச்சியத்தின் பாரம்பரியம் மிகவும் பிரபலமான உணவு. எமது நாடுகளில் எரிசேரி, பச்சடி, அல்வா, துவையல், என பலவும் செய்துகொள்கிறார்கள்.


இக்காரக்கறி சாதத்துக்கு ஏற்றது. இன்னுமொரு இலகுவழி இரவு ரொட்டி, சப்பாத்தி, தோசை,இட்லிக்கு பகல்வைத்த கறியை நன்கு மசித்து விட்டால் சட்னிபோல தொட்டுக்கொள்ளலாம் புளிப்பாகவும் இனிப்பாகவும, காரம்சேர்ந்தும்; இருக்கும்;.

பூசணிகாய் காரக்கறி


பழப்பூசணி காய் - ¼ கிலோ
வெங்காயம்  - 1
பூண்டு - 5 பல்லு
மிளகாய்த் தூள் - 1 ரீ ஸ்பூன்
மஞ்சள் தூள் -சிறிதளவு
கட்டித் தேங்காயப் பால் - 1 டேபிள் };பூன்
உப்பு புளி தேவைக்கு ஏற்ப
தண்ணீர் சிறிதளவு.

தாளிக்க

கடுகு - ¼ ரீ ஸ்பூன்
செத்தல் -  1
உழுத்தம் பருப்பு - ¼ ரீ ஸ்பூன்
வெங்காயம் சிறிதளவு
கறிவேற்பிலை, ரம்பை இலை


செய்முறை

காய்களை சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

வெங்காயம் செத்தல் இரண்டையும்வெட்டி வையுங்கள்.

பூண்டை தட்டி எடுங்கள்.

காய், தண்ணீர், உப்பு, வெங்காயம,; பூண்டு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் கலந்து வேக விடுங்கள்.

வெந்த பின் புளித் தண்ணி ஊற்றி கொதிக்க விட்டு தேங்காய்ப் பால் ஊற்றி கிளறிவிடுங்கள்.


தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து கொட்டிக் கிளறுங்கள்.

:- மாதேவி -:
0.0.0.0.0