Sunday, September 22, 2013

தொட்டால் சிவக்கும் வடிவழகி தரும் சுவை என்ன?

கரட்,முள்ளங்கியைப் போன்றதே பீற்ரூட் இனமும். வேர்க்கிழங்கு தாவரம். ஆங்கில மரக்கறி, வெள்ளைக்காரன் மரக்கறி, வெளிநாட்டு மரக்கறி என முன்னர் அழைத்தார்கள்.சிகப்புக் கிழங்கு என பாட்டிமார் சொல்வார்கள். பலருக்கும் பிடிக்காத மரக்கறிகளில் இதுவும் ஒன்று எனச் சொல்லலாம்.

நிறத்தில் மயக்கும் இது சுவையில் சுமார்தான்.

'பீற்ரூட் நிற அழகி' என கானா பாடல்களில் பெண்ணை வர்ணித்து இருக்கிறார்கள்.





பொதுவாக வருடம் பூராவும் விளையும் பயிராகும். வீட்டுத்தோடங்களிலும் பயிரிடப்படுகிறது. சாடிகளுக்கும் உகந்த பயிர்தான். வெளிநாடுகளில் கிடைக்கும் காலங்களில் புரோசன் செய்யப்பட்டு பாதுகாத்தும் வைக்கிறார்கள். நம் நாடுகளில் எல்லாக் காலங்களிலும் தாராளமாகக் கிடைக்கும்.


தோட்டங்கள் சிகப்பு முளைத்ததுபோல பார்க்க அழகாக இருக்கும். பச்சை இலையும் சிகப்பு கலந்த வர்ணம் கவர்ந்திழுக்கும்.

வட அமெரிக்காவில் டேபிள் பீற், கார்டன் பீற், ரெட் பீற் எனப் பலவாறு அறியப்பட்டது.


போசாக்கு

100 கிராமில்

கலோரிச் சத்து 180 KJ
காபோஹைரேட் 9.96 கிராம்
நார்ப்பொருள் 2.0 கிராம்
இனிப்பு 7.96 கிராம்
புரதம் 1.68 கிராம்
கொழுப்பு 0.18 கிராம்
பொட்டாசியம் 305 மை.கி
சோடியம் 77 மை. கி
பொஸ்பரஸ் 38 மை .கி
இரும்பு 0.79 மை.கி
கல்சியம் 16 மை. கி
விற்றமின ஊ 3.6 மை.கி
நியாசின் 0.331 மை. கி


ஹெல்தியாக இருக்க விரும்புவோர்கள், முகம் பொலிவுடனும் முகப் பருக்கள் தோன்றாமல் இருக்கவும் பீற்ரூட் சாறு அருந்துவது நல்லது. குழந்தைகளுக்கானது கீழே

இனிப்பு இருப்பதால் நீரிழிவாளர்கள் அளவோடு சாப்பிட வேண்டும்.

உடல் எடைக் குறைப்பிற்கும் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் பீற்ரூட் உதவுகின்றது.

இரத்தக் குழாய்களை விரியச் செய்யும் நைட்ரேட் பீற்ரூட்டில் அதிகம் இருப்பதால் உயர் அழுத்தத்தைக் குறைக்கும் என ஒரு ஆய்வு சொல்கிறது.
70 ml of beetroot juice இல் சுமார் 5 mmol of nitrate இருக்கிறதாம்

ஆயினும் இது சிறு ஆய்வு எனவும், இதனால் குறையும் இரத்த அழுத்தமானது 24 மணிநேரத்;திற்கு பிறகும் தொடர்ந்து இருக்குமா? என்பது பற்றியும் சர்ச்சைகள் உள்ளன. மேலும் படிக்க

Beetroot's effect on blood pressure is uncertain


  • கிழக்கு ஐரோப்பாவில் பீற்ரூட் சூப் பிரபலமான உணவாகும்.
  • பென்சில்வேனியாவில் டச் டிஸ் பாரம்பரியமான ஒன்று அவித்த முட்டைகளை பீற் சாறில் இட்டு ஊற வைத்து ரோஸ் கலராகச் செய்வது.  
  • வடஅமெரிக்காவில் பீற் ஊறுகாய் பாரம்பரிய உணவாக இருக்கின்றது. 
  • அவுஸ்திரேலியா, நியூசிலந்து, அரபிய நாடுகளில் ஹம்பேஹர் உடன் பீற் பிக்கிள் பரிமாறப்படுகிறது.

பீற்றின் பச்சை இலைகள் அவித்து எடுக்கப்பட்டு அல்லது ஸ்டீம் பண்ணப்பட்டு பரிமாறப்படுகிறது. இவை பசளைக் கீரையை ஒத்த சுவையைத் தருகின்றன.

க்றில் செய்து அவித்தும் ரோஸ்ட் செய்தும் உண்கிறார்கள்

வைன், பீற்ரூட் யூஸ், சூப், கேக், அல்வா, கட்லட், சான்விச், பிரியாணி, கலர்சாதங்கள், சலட், பொரியல், கறிவகைகள் என பலவாக சமைக்கப்படுகின்றன.

பீற்றூட்டில் இனிப்பு இருப்பதால் கறி இனிக்கும் அதனால் காரத்தை கூட்டி போட்டு சமைப்பது சாப்பிடக் கூடியதாக இருக்கும்.

பீற்றூட் பிரட்டல்

தேவையானவை

பீற் -1
வெங்காயம் - ½
பச்சை மிளகாய் - 2
மிளகாய்த் தூள் - 1 ரீ ஸ்பூன்
விரும்பினால் மசாலா தூள் - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
தேசிச் சாறு - ½ ரீ ஸ்பூன்
கட்டிதேங்காய்ப் பால் -1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - அவியவிடுவதற்கு

தாளிக்க தேவையானவை

ஓயில் - 1 டே ஸ்பூன்
வெங்காயம் -சிறிதளவு
சோம்பு - சிறிதளவு
கடுகு - ¼ ரீ ஸ்பூன்
கறிவேற்பிலை - சிறிதளவு

செய்முறை





பீற்ரூட்டை தோலுடன் நன்கு கழுவி எடுங்கள். பீல் செய்துவிட்டு மெல்லிய சிறு நீள் துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.


வெங்காயம் சொப்ஸ் செய்து வையுங்கள்.

பச்சை மிளகாயை கீறி எடுங்கள்.

பாத்திரத்தில் போட்டு தண்ணீர் உப்பு கலந்து மூடி போட்டு அவித்து எடுங்கள்.
அவிந்த பின் மிளகாய் தூள் போட்டு கிளறுங்கள்.

தேங்காய்ப் பால் ஊற்றி கலந்து சுரூண்டு வர மசாலாத் தூள் சேர்த்து எடுத்து வையுங்கள்.

ஓயிலில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து

பீற்ரூட் கறியை தாளிதத்தில் கொட்டி ஒரு நிமிடம் கிளறுங்கள்.

தாளித்த வாசத்துடன் பீற்ரூட் மணக்கும்.

அடுப்பை அணைத்து தேசிசாறை விட்டு பிரட்டி கோப்பையில் எடுத்து வையுங்கள்.



 பீற்ரூட் பற்றிய மற்றொரு (முன்னைய) பதிவு 

பீற்ரூட் சாதம்

-மாதேவி-