Sunday, November 14, 2010

கனவாகிப்போன அடுக்களைப் பண்ட பாத்திரங்கள்

மொஸபத்தேமியா சிந்து வெளி நாகரீக காலத்தில் உபயோகிக்கப்பட்ட மட்பாண்டப் பொருட்கள் பலவும் அகழ்வாரச்சிகளில் கிடைக்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து அக்கால நாகரீக மக்கள் வாழ்க்கை, கலைகலாசாரங்களை அறிந்து கொள்ளுகின்றோம்.

தற்பொழுது வழக்கொழிந்துபோன,  சில தலைமுறைகளுக்கு முந்திய அடுக்களைப் பொருட்களை நினைவு மீட்போமா?


ஆதியிலிருந்து வந்த மட்பாண்டப் பொருட்கள் சட்டி, பானை, முட்டி என்பன பெரும்பாலும் பாவனையில் இல்லை என்றே சொல்லலாம்.கிராமங்களில் கூட உபயோகம் குறைந்துவிட்டது. மிக அருமையாக ஒரு சிலர் சட்டியில் சுவைக்காக சமையல் செய்வதுண்டு.

எமது கிராமத்தில் உள்ள வீடுகளில் சிலவற்றின் பரணிலிருந்து தேடி எடுத்த பொருட்களை எனது கமராவில் அடக்கிக் கொண்டேன்.

எங்கள் பாட்டிமார் சட்டியில் பால் காய்ச்சி அதைச் சுண்ட வைக்க அடுப்பில் உமியிட்டு தணலில் வைத்து விடுவார்கள். பால் நன்றாகச் சுண்டி சூடேறி உமி வாசம் கமழத் தொடங்கவும்  இரண்டு கால் பூனைகளும் அடுப்புப் பிட்டியில் குந்திக் காத்திருக்கும். பால் ஆடை திரள்வதை ஆசையுடன் பார்த்திருக்க நாவில் சுவை ஏறும்.


வயல்நெல்அரிசிச்சாதத்தை மண்பானையில் சமைத்தெடுப்பர். இறக்கி வைத்து வெளியே சாம்பல் போகக் கழுவிய பின்னர் பானையைச் சுற்றி மூன்று குறியாக திருநீறு பூசி விடுவர்.அன்னம் இடும்பாத்திரம் லஷ்மிஎன்பர்.


புட்டு, இடியப்பம் செய்வதற்கு வாய் ஒடுங்கிய பானைகள் இருந்தன. களி கிண்ட  மாவறுக்க பெரிய மண் சட்டியும்,  பொரியல் செய்ய தட்டையான சட்டியும், கறிச்சட்டியும், உலைமூடியும், அரிசி கிளைய மண் அரிக்கன் சட்டியும் வைத்திருந்தனர்.

மண்சட்டித் தயிரின்சுவை நாக்கில் ஊறுகிறதா? மண்பானையில் தண்ணீர்வைத்திருப்பர் வெய்யிலுக்கு குடிக்க ஜில் என்று இருக்கும்.
நிலாச்சோறு எப்படி?



வெண்கலப் பாத்திரங்கள் குடிபுகுந்தன. வெண்கலச் சருவச்சட்டி, குடம், செம்பு, பானை, அண்டா, குண்டா,கரண்டி, இட்லிப் பானை, தாம்பாளம், குத்துவிளக்கு, கைவிளக்கு, வெற்றிலைத்தட்டு, செம்பு என்பன புளக்கத்தில் இருந்தன.


வெண்கலக் கடைக்குள் ஆனை புகந்தாற் போல் தடாம்...டமார்.... சத்தங்களுக்கும் குறைவிருக்கவில்லை.

வெற்றிலைத் தட்டும் பூட்டுச் செம்பும்

பிரயாணத்தின் போது காப்பி எடுத்துச் செல்ல பூட்டுச் செம்பு பேணியுடன் இருந்தது. வெண்கலச் சருவச் சட்டியில் கறி செய்வதாக இருந்தால் உட்புறம் ஈயம் பூசி வைத்திருந்தார்கள். மூக்குப் பேணி, வெண்கலப் பேணி,  காப்பி ரீ அருந்த உபயோகமாக இருந்தன.


கூஜா, தூக்கு வாளி என்பன பிரயாணத்தில் சாப்பாடு எடுத்துச் செல்ல உதவியாக இருந்தன. தூக்கு வாளியுள் சாதத்தையிட்டு இடுக்குச் சட்டியில் கறிகளை வைத்து எடுத்துச் சென்றனர்.

இரும்புப் பாத்திரங்கள் தாச்சி, கண் அகப்பைக் கரண்டி, தோசைக் கல்லு, தட்டு அகப்பை(தோசை திருப்பி), கேத்தல் போன்றவை நீண்ட காலம் அழியாது உழைத்தன. பெரிய இரும்புத் தாச்சிகள் கச்சான், பயறு, உழுந்து, மிளகாய் அரிசிமா வறுக்கவும் இருந்தன. சிறிய தாச்சியில் குழம்பு, பொரியில் செய்து கொள்வர். இதில் சமைத்த வத்தல் குழம்பு மிகுந்த சுவையைத் தரும்.

காம்புச் சத்தகம்

இரும்பாலான காம்புச் சத்தகம், இது மரக்கறி வெட்டவும் பயன்பட்டது. நீண்ட காம்புடன் முன் பகுதிவளைந்திருக்கும் பெட்டி இளைக்கும்போது காம்பால் குத்தி ஓலையைத் தள்ளிப் பின்னுவார்கள். தோக்கத்தி தேங்காய் உடைக்கவும் மரங்கள் வெட்டவும் பயன்பட்டன.

வெட்டுக் கத்தி இறைச்சி மீன் வெட்டவும் பயன்பட்டது. இரும்பாலான மேசைக் கத்தியும் பாவனையில் இருந்தது.


திருவலகை

தேங்காய் துருவ திருவலகை மரக்கறி வெட்ட அரிவாள் மனை என்பனவும் கை கொடுத்தன.

கொக்கைத் தடி

கொக்கச் சத்தகம் உயர்ந்த தடியில் கட்டி வைத்திருப்பர் தோட்டத்தில் தேங்காய்,மாங்காய்,முருங்கக்காய் பறிப்பதற்கு.


அந் நாட்களில் வீட்டுக்கு விருந்தினர் வந்தால் "வெத்தலைத் தட்டைக் கொண்டு வா" என அம்மா மகளுக்கு ஓடர் போடுவாள். வெற்றிலைத் தட்டில், பாக்கு வெட்டியும் இருக்கும்.

பாக்கு வெட்டி

பாக்கு வெற்றிலை, சுண்ணாம்பு, புகையிலை ஆகியனவும் இருக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

சீன ஜாடிகள் ஊறுகாய், உப்பு, புளி, எண்ணெய், நெய் சேமிக்க உதவின.  கண்ணாடிப் போத்தல்கள் சீனி, தேயிலை, கோப்பி, மிளகாய்ப் பொடி, மா வகைகள், தின் பண்டங்கள் சேமித்து வைக்க உதவின.

அலுமினிய ஈயப் பொருட்கள் பாவனையில் வந்தன. ஈயத்தில் அரிசி அரிப்பதற்கு அரிக்கன் சட்டி இருந்தது. சட்டி, தோசைக் கல்லு, குளிப் பணியாரக் கல்லு, தாச்சி என்பனவும் இடம் பிடித்தன.


குசினியில் தண்ணி அள்ளி வைத்துப் பிழங்குவதற்கு தகர வாளி இருந்தது. குடமும் உபயோகித்தனர்.

மரத்தாலான இடியாப்ப உரல்,முறுக்கு உரல், கரண்டி, அகப்பை,மோர்கடைய மத்து, இருந்தன.ஆப்பைக்கூடு துளையுள்ளது தட்டகப்பை ,மத்து,கரண்டி செருகிவைத்து தொங்க விட்டிருப்பார்கள்.


மத்து உருட்டும் பெண்

பனைநாரால் செய்யப்பட்ட திரிகணை சட்டி பானையை இறக்கி வைப்பதற்கு இருந்தது. பனங் சார்வோலையை வெட்டி  வெயிலில் காய வைத்து எடுத்து ஓலைப் பெட்டி, மூடியுடன் இளைத்து வைத்திருப்பர். புட்டு இடியப்பம் பலகாரங்கள் வைத்து மூடி வைப்பர்.

தட்டுப் பெட்டி, வெங்காயம் மரக்கறி, மிளகாய் பரப்பி வைப்பதற்கு உதவின. நிலத்தில் போட்டு இருப்பதற்கு தடுக்கு வைத்திருந்தனர்.வைபவங்களுக்கு சோறு சமைத்து ஆறப்போடச் சோற்றுப் பாய் இருந்தது. சாப்பிட பந்திப் பாய் வைத்திருந்தனர்.


சுளகு, இடியாப்பத் தட்டு, ஓலைத் தட்டு

ஐஞ்சறை ஓலைப் பெட்டி மசாலா சரக்கு சாமான்கள் வைப்பதற்கும், சுளகு புடைப்பதற்கும், நீத்துப் பெட்டி புட்டு அவிக்கவும், இடியாப்பத் தட்டுக்கள்,பனங்கட்டிக்குட்டான் இருந்தன.

நீத்துப் பெட்டி, முறுக்கு இடியாப்ப உரல்கள்

பனை நாரில் உறிகட்டி சமைத்த உணவை பாதுகாத்தனர்.கடகம், குஞ்சுக்கடகம் தானியசேமிப்புக்கும் தோட்டத்தில் மரக்கறிபிடுங்கவும் உதவியது.வியர்க்கும்போது விசுறுவதற்கு பனைஓலை விசிறி வைத்திருந்தனர்.


சந்தைக்கு எடுத்துச் சென்று மீன் மரக்கறி வாங்க பன் உமல் இப்பொழுது உள்ள சொப்பிங் பாக் போலப் பயன்பட்டது. இவை சாயமிடப்பட்ட ஓலையில் தயாரிக்கப்பட்டதாக இருக்கும்.

அடுக்களைக் கனவுகள் தொடரும் .......

மாதேவி