Saturday, December 31, 2011

சமையலறையில் விடுகதைப் போட்டி


பரம்பரையாக நீண்டகாலமாக வாய் மொழியாக சொல்லப்பட்டு வந்தவைதான் விடுகதைகள். பாட்டிமார்கள் குழந்தைகளின் அறிவை வளர்க்க, சிந்திக்க வைக்க விடுகதை கூறுவார்கள்.

ஓய்ந்திருக்கும் வேளைகளில் விடுகதைகளைச் சொல்லி  அவிழ்க்க முடியுமா என கேட்பதுண்டு. கணவன் மனைவி, காதலன் காதலியும் விடுகதைகளை ஒருவருக்கு ஒருவர் வீசி திக்குமுக்காட வைப்பதுண்டு.

  • நாட்டுப்புறப் பாடல்கள், இலக்கியங்கள் இவற்றுள் விடுகதையும் ஒன்று எனச் சொல்லலாம். 
  • விடுகதைகள் ஓரிரு வரிகளில் மறைமுகமாக விபரித்து எடுத்துச் சொல்லப்படுபவை. 
  • சிந்தனையைத் தூண்டி வைப்பது இதன் நோக்கம்.
விடுகதையை புதிர், வெடி, நொடி என்றும் சொல்லுவார்கள்.

சில விடுகதைகள் சொல்கிறேன். உங்களால் விடுவிக்க முடிகின்றதா?

  1. குச்சி உடம்பில் குண்டுத் தலை, தீக்குச்சியுமல்ல, அது என்ன?
  2. சடசட மாங்காய் சங்கிலி ரோடு விழுந்தா கறுப்பு, தின்னால் தித்திப்பு. அது என்ன?
  3. குண்டப்பன் குழியில் வீழ்ந்தான். எழுந்தான், எல்லார் வாயிலும் விழுந்தான் அவன் யார்?
  4. ஊளை மூக்கன் சந்தைக்குப் போறான். அவன் யார்?
  5. வெள்ளைக்காரனுக்கு கறுப்புத் தொப்பி அது என்ன?
  6. மரத்து மேலே பழம் பழத்து மேலை மரம் அது என்ன?
  7. காற்றுப் புகாத வெள்ளைக் கூண்டில் மஞ்சள் புறா மயங்கிக் கிடக்கு அது என்ன?
  8. உச்சிக் குடும்பியன் சந்தைக்கு வந்தான். அவன் யார்?
  9. அம்மா போடும் வட்டம் பளபளக்கும் வட்டம், சுவையைக் கூட்டும் வட்டம், சுட்டுத் தின்ன இஸ்டம் அது என்ன?
  10. நாலு மூலைச் சதுரப் பெட்டி, அதன் மேல் ஓடுமாம் குதிரைக் குட்டி அவர்கள் யார்?
  11. பச்சைக் கதவு. வெள்ளை யன்னல் திறந்தால் கறுப்பு ராஜா அது யார்?
  12. சொறி பிடிச்சவனை கறி சமைத்து சோறெல்லாம் கசப்பு அவன் யார்?
விடைகள் சொல்லிவிட்டீர்களா?

விடைகளைச் சரிபார்க்க  கீழே வாருங்கள்.


 .................................
 ..................................................................
...................................................................................................
..................................................................
 .................................
 .................................
 ..................................................................
...................................................................................................
..................................................................
 .................................
 .................................
 ..................................................................
...................................................................................................
..................................................................
 .................................
 .................................
 ..................................................................
...................................................................................................
..................................................................
 .................................
 
 .................................
 ..................................................................
...................................................................................................
..................................................................
 .................................
 .................................
 ..................................................................
...................................................................................................
..................................................................
 .................................
 


உங்களுக்கு எத்தனை விடைகள் சரி்யாக வந்தன?


3 மார்க்குக்கு கீழே விடை தெரிந்தவர்களுக்கு ஹோம்வேக் நிறையவே இருக்கிறது. இன்னும் கொஞ்சம் சமையலும் தமிழும் கற்றுக் கொண்டு அடுத்த பரீட்சைக்கு வாங்க.

6 விடுகதைகளுக்கு மேலே கண்டு பிடித்தவர்களுக்கு பாஸ் சேர்டிபிக்கற் கிடைக்கிறது.

எல்லா விடைகளையும் சரியாகச் சொன்னவர்களுக்கு  ஒரு பரிசு தரலாமா.....

12 விடுகதைகளுக்கும் சரியான விடைகளை கண்டு பிடித்தவர்களுக்கு சின்னுரேஸ்டி விடுகதை  வெற்றிக் கேடயம் வழங்கப்படுகிறது. எடுத்துக்கொண்டு சென்று உங்கள் வீட்டில் சேமியுங்கள்.



10 எடுத்தவர்களின் அழும் ஓசை காதில் விழுகிறது சரி நீங்களும் கேடயத்தை பிடித்துக் கொள்ளுங்கோ....

பிறக்கும் 2012 அனைவருக்கும்  சகல சிறப்புகளும் அள்ளித் தரும் ஆண்டாக அமைய  வாழ்த்துகிறேன்.

- மாதேவி -

Sunday, December 4, 2011

பனம் பழத்தில் பதமான பணியாரம்

சிறுவயதில் பனம்பழம் சாப்பிடதில்லையா?

மாம்பழமும் பனம்பழமும் யாழின் தனித்துவத்திற்கு அடையாளமான பழங்களாகும்.

தின்னத் தின்ன ஆசை..

பனம்பழம் நன்கு கனிய முன்னர் நுங்கு என அழைக்கப்படும். நுங்கை வெட்டி நுங்கை அதன் மூளில் வைத்துச் சுவைத்ததை என்றும் மறக்க முடியாது.

முற்றிய சீக்காயை ஆசையால் நிறையச் சாப்பிட்டு வயிற்றுக் குத்து வந்தவர்களும் இருக்கத்தான் செய்தார்கள்.

சூப்பப் போறார் பனம் பழத்தை..

ஏழைகளின் உணவாகவும் பனம்பழப் பொருட்கள் இடம் வகித்திருக்கின்றன என்பதையும் மறக்க முடியாது. பனம்பழம் துவர்ப்பும் இனிப்பும் கலந்த அலாதியான சுவையைக் கொடுக்கும்.

பனம்பழத்தை பழமாகவும் அவித்தும் சுட்டும் உண்பார்கள்.  சுவைக்குப் பனங்களியுடன் புளியும் கலந்து சாப்பிடுவார்கள். சண்டைக் காலத்தில் சவர்க்காரம் ஆனை விலை விற்ற போது பனம்பழத்தை தோய்த்து உடைகளைக் கழுவிய காலம் நினைவுக்கு வருகிறது.

கழுவிய உடைகளை உலரவிட்ட நேரம் மாடுகளும் அவற்றைச் சுவைத்துப் பார்த்தது பொய்க் கதையல்ல.

பனம்பழக் காலத்தில் வீடுகளில் செய்யும் பனங்காய்ப் பணியாரம். ஓலைப் பெட்டியில் அமர்ந்து தென் இலங்கையில் உள்ளோர் சுவைக்கப் பயணமாகும். ரெயில் ஏறி பயணித்த காலமும் ஒன்று இருந்தது.

இப்பொழுது இரயிலும் ஓலைப் பெட்டிகளும் யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போய்விட்டன.

கொழும்பில் பம்பலப்பிட்டி கற்பகம் பனம்பொருள் கடையில் பனம்பொருட்கள் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. இது பனை அபிவிருத்தி சபையினால் நடாத்தப்படுகிறது.


பனம் களியும் போத்தல்களில் கிடைக்கிறது.

பனம்பழக் காலத்தில் புத்தளம், சிலாபத்திலிருந்து வரும் பனம் பழங்கள் ரூபா 100- 150 என கொழும்பில் விற்பனையாகும்.

'....பச்சோலை சல சலத்து,
நுங்குக்கண் முற்றி, அடிக்கண் கறுத்து, நுனி சிவந்து
பங்குக்கு மூன்று பழம் தரவேண்டும் பனந்துண்டமே!..'


நம் ஊர் பனங்காணி

என ஒளவையார் பனம்பழத்தின் அழகை அருமையாகப் பாடியுள்ளார்.

 '..சேரனும், சோழனும்,
பாண்டியனும் ஒளவை சொற்படியே
மங்கலமாயுண்ட தெய்வப் பனம்பழம்..'


எனச் சோமசுந்தரப் புலவர் என எமது பனம்பழத்தை விதந்து பாடியிருப்பதும் குறிப்பிடத்தக்கது..

இன்று நாம் செய்யப்போகும் பனங்காய்ப் பணியாரத்துக்கான களி யாழ்ப்பாணத்திலிருந்து எனது நண்பியின் அக்கா அனுப்பியது. பனங்காயைப் பிழிந்து களி எடுத்து காச்சி போத்தலில் நண்பிக்கு அனுப்பியிருந்தார்.

நண்பியின் தயவால் கிடைத்த களியில் நான் செய்தது. பயணப்பட்டு வந்த களியில் செய்த பணியாரத்தின் சுவைக்கு ஈடு ஏதும் உண்டா.

சென்ற வருடம் யாழ் சென்ற போது எமது தோட்டத்து பனம் பழத்தை கொழும்பு கொண்டுவந்து பணியாரம் செய்தேன். 

செய்வோமா பணியாரம்.

நன்கு பழுத்த ஒன்று அல்லது இரண்டு பனம் பழத்தை நன்கு கழுவி எடுங்கள். மேலுள்ள மூளைக் கழட்டி விடுங்கள்.

துணியும் துவைக்கலாம், மாடும் நாமும் சாப்பிடுவோம்.


பனம் பழத்தின் மேலுள்ள நாரை சிறிய மேசைக் கத்தியினால் பழத்தின் மேல் பகுதியிலிருந்து நீள் பக்கமாக சீவி எடுங்கள்.

நார் வெட்டும் கைகள் பத்திரம்.

வெட்டி அகற்றிய பின்மீண்டும் பழத்தை தண்ணீரில் நன்கு கழுவுங்கள்.
பழத்தைப் பிரித்து இரண்டு மூன்றாக விதையுடன் பிரியும்.

அவற்றைப் பிழிந்து அதிலுள்ள களியை இரு கைகளாலும் அழுத்தி எடுங்கள்.

களி தும்புகளுடன் கூடி இருக்கும். மெல்லிய வெள்ளைத்துணி அல்லது கண்ணறைத் துணியை வைத்து களியை வடித்தெடுங்கள்.

வடித்தெடுத்த களியை அடுப்பில் வைத்து சீனி சேர்த்து  பச்சை வாடை போக காச்சி எடுங்கள். ஆறவையுங்கள்.


இப்பொழுது காச்சிய பனம்களி தயாராகிவிட்டது.

பணியாரத்துக்கு தேவையான பொருட்கள்

பனங்களி - 1 கப்
சீனி- ¼ கப்
பொரிக்க எண்ணெய் - அரை லீட்டர்.
அவித்த மைதாமா அல்லது வறுத்த உழுந்துமா அல்லது அரிசிமா - ¼ கப்
உப்பு சிறிதளவு.

பனங்களியும் நான் சுட்ட பலகாரமும்

செய்முறை

காச்சிய பனங்களியுடன் மைதாமா உப்பு சேர்த்து கிளறி எடுங்கள்.
தாச்சியில் எண்ணையை விட்டு நன்கு கொதிக்க மாவைக் கையில் எடுத்து சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு பொன்னிறத்தில் பொரித்து எடுங்கள். மீதிக் களியையும் அவ்வாறே செய்து கொள்ளுங்கள்.

ரிசூ பேப்பரில் போட்டு ஓயில் வடியவிட்டு ஆற வைத்த பின் இரண்டு மூன்று நாட்கள் வைத்துச் சாப்பிடுங்கள்.

மீண்டும் மீண்டும் சாப்பிட்டு உடனேயே தட்டுக் காலியாகிவிடும்.

சற்று நேரத்தில் காலியாகப் போகும் ..


குறிப்பு -
  • (மைதாமா கலந்தால் மெதுமையான பணியாரம் கிடைக்கும்.
  • அரிசிமா, உழுந்துமா சற்று உரமாக இருக்கும். 
  • மா கலக்காமல் தனியே களியிலும் செய்வார்கள் இது கடித்துச் சாப்பிடும் போது களிப் பிடியாக இருக்கும்.
0.0.0.0.0.0

Monday, November 28, 2011

கோடைக்கு நுங்கு பதநீரும் வாய்ருசிக்கு பனம் பட்சணங்களும்

பனை. இது வெட்ப வலயப் பிரதேசத்திற்கான தாவரம் . இயற்கையாகவே வளரும். புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம்.


கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம், கற்பகதரு என்கிறார்கள்.

தேசிய வளங்களான தேயிலை இரப்பர் தென்னையுடன் பனையும்அடங்கும்.

இளம் கன்றுகள் வடலி என அழைக்கப்படும்.


பனைகள் உயர்ந்து 30 மீட்டர் வரை வளரும். உச்சியில் முப்பது நாற்பது வரையிலான விசிறி வடிவமான ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும்.


பொதுவாக பனைகளுக்கு கிளைகள் இல்லை. அபூர்வமாகவே கிளைப் பனைகள் காணப்படும். இது வல்லிபுரத்துக் கோவிலடிக் கிளைப் பனை.


பனை விதை நாட்டப்பட்டு முதிர்வடைவதற்கு 15 வருடங்கள் வரை எடுக்கும். 20 வருடங்களின் பின்னர் வருடம் ஒன்றிற்கு ஆறாயிரம் ரூபா தொடக்கம் பதினையாயிரும் வரை வருமானத்தைத் தரும்.

ஒரு பனையிலிருந்து நூறுக்கும் அதிகமான பலன்களைப் பெறலாம் என்கிறார்கள். 20 வருடங்கள் முதல் 90 வருடங்கள் வரை பனைகள் மூலம் வருமானம் கிட்டும். மரத்தின் சகல பாகங்களும் பலன் தரக் கூடியன.

பனை அபிவிருத்தி சபை ஒன்று இலங்கையில் 1978ல் உருவாக்கப்பட்டது. இதனால் பனம்பொருள் உற்பத்திகள் ஊக்குவிக்கப்பட்டன.

' தொப்பென்று விழுந்தான் தொப்பிகழண்டான் ' அவன் யார் ?  என்ற சிறுவயதில் நொடி விளையாட்டுக்களும் நினைவில் வந்து செல்கின்றதல்லவா.

பனையிலிருந்து நுங்கு,சீக்காய், பனம் பழம் கிடைக்கும்.


பனம் பழத்தை பாத்தியிலிட்டு பனங்கிழங்கு, பூரான், பச்சை ஒடியல், புளுக்கொடியல், பனாட்டு, பனங்காய் பணியாரம், பாணி, பதநீர், வினாகிரி, கள்ளு,  சாராயம், கல்லக்காரம், பனஞ்சீனி, பனங்கட்டி, கோடியல், ஜீஸ், ஜாம், எனப் பலவும் ஒடியல் மாவில் கூழ், பிட்டும், தயாரிக்கலாம்.

பதநீர் உடலுக்கு குளிர்ச்சி என்பார்கள். அது உடல் நலத்திற்கு நல்லது என்பார்கள். பதநீரை எமது ஊரில் கருப்பணி என்றும் கூறுவர்.

ஆனால் கள்ளு போதை ஏற்றும்.

""....நாடெலாம் கள்ளின் நாற்றம்
நாற்றிசை சூழும் வேலிக்
கூடெல்லாம் பிழாக்கள் போத்தல்
குடியர்கள் அங்கு கூடித்
தேடிய பொருளை யெல்லாஞ்
சிதைத்தவர் குடித்தலாலே...""

இவ்வாறு யாழப்பாணத்தைத் தனது பெயரிலேயே சூடிக் கொண்ட மறைந்த கவிஞர் யாழ்ப்பாணன் அன்று பாடினார்.

பச்சை ஓலை ஆடு மாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படும். குருத்தோலையை வெட்டி எடுத்து காயவிட்டு பெட்டி, பாய், தடுக்கு, கூடை, சுளகு, உமல், பனங்கட்டிக் குட்டான், நீத்துப்பெட்டி, கொட்டைப்பெட்டி, விசிறி, இடியப்பத் தட்டுகள், தொப்பி, அழகிய கைவினைப் பொருட்கள், கைப்பைகள் எனப்பலவும் தயாரிக்கின்றார்கள்.


காய்ந்த ஓலைகள் வீட்டுக் கூரை மேயவும், வீட்டைச் சுற்றி வேலி அடைப்பதற்கும்  உதவுகின்றன.

"காய்ந்தோலை விழக் குருத்தோலை சிரிக்கும் " என்ற பழமொழியும் தெரிந்தது தானே.


மூரி மட்டையிலும் வேலி அடைப்பார்கள். பொதுவாக வெறும் காணிகளைச் சுற்றி வேலி அடைக்கவே மூரி மட்டையைப் பயன்படுத்துகிறார்கள்.

பனையோலையின் காம்பு மிக நீண்டது. இது பனை மட்டை எனப்படுகிறது. காய்ந்த பின் அதனை மூரி மட்டை என்பார்கள்.


அக்காலத்தில் கிணற்றிலிருந்து நீர் இறைப்பதற்கான துலா செய்வதற்கு பனை மரம் பயன்பட்டது.

துலா. நன்றி:- கட்டற்ற கலைக்களஞ்சியமான ...
ta.wikipedia.org

கிணறு இறைக்க கிணற்றுப் பட்டையும் வைத்திருந்தார்கள்.

... பட்டையால தண்ணி வார்க்க துலா மிதிச்சுப் ...
நன்றி:- newjaffna.com

தும்புக் கைத்தொழில் தொழிற்சாலை இயங்கியது. காய்ந்த ஏனைய பாகங்கள் விறகுக்காகப் பயன்படும். வீடு கட்டும்போது வளை, தீராந்தி, பனஞ்சிலாகை எனவும் பலவாறு பனை மரம் உபயோகப்படுகிறது.

ஆதிகாலத்தில் எமது அறிவையும், கல்வியையும் எதிர்காலப் பரம்பரையினருக்கு பாதுகாத்துக் கொடுக்கும் பொக்கிசங்களாக இருந்தவை ஏடுகளே. பனை ஓலைகளைப் பதப்படுத்தி அதில் எழுத்தாணிகளால் குறித்து வைத்தே எமது இலக்கியங்களும் பேணப்பட்டன.

உ.வே.சா கண்டெடுத்த ஓலைச்சுவடிகள் சில இவை என
ta.wikipedia.org சொல்கிறது.

இப்போதும் குழந்தைகளுக்கு ஏடு தொடக்குவது எனச்சொல்வார்கள். அன்றைய நாளில் ஏட்டுச் சுவடியுடன் செல்வது நமது தொன்று தொட்ட வழக்கமாக இருந்துவருகின்றது.

யுத்த காலத்தில், சென்றிப் பொயின்றுகளுக்காவும் பங்கர் மூடிகளுக்காகவும் பெரும் தொகையான மரங்கள் அழித்தொழிக்கப்பட்டன.
இராணுவ காவலரண் நன்றி:- tamilswin.blogspot.com

ஏவப்பட்ட செல்களின் தாக்கத்தால் தலையிழந்தன பெருமளவான பனைகள்.

செல்வீச்சினால் தலையிழந்த பனைகள் மனிதர்கள் போலவே... நன்றி:- panoramio.com

பனைகள் எங்கு தோன்றின என்பதற்கு சரியான சான்று இல்லை. ஆசிய நாடுகளில்தான் பனைகள் அதிகம், இலங்கை இந்தியா, இந்தேனீசியா, தாய்லந்து, மலேசியா, மியன்மார், சீனா, வியட்நாமிலும், மேற்கு ஆபிரிக்க நாடான கொங்கோவிலும் பனைகள் காணப்படுகின்றன.

பனைச் சமையல் அடுத்த இடுகையில்..

:- மாதேவி -:
0.0.0.0.0.0.0

Wednesday, October 26, 2011

தீபாவளி விசிட் வாங்களேன்.

தீபாவளி வாழ்த்துக்கள் அனைவருக்கும்


பாடலுடன் சுவைத்திடுங்கள் திருநாளை.....


பாட்டுக் கேட்ட அனைவருக்கும் 
இப்பொழுது தீபாவளி சுவீட்ஸ் தயாராக இருக்கு 
சாப்பிட வாங்க.


எள்ளுப்பாகு எடுத்துக் கொள்ளுங்கள். 
தித்தித்து மகிழுங்கள். 
எள்ளு கொள்ளு எல்லாம் 
ஆரோக்கியத்திற்கு நல்லதாமே !!



பயித்தம் பணியாரம் சுவைத்திடுங்கள்.


பனங்காய்ப் பணியாரம். 
எங்க யாழ்ப்பாணத்து பனம் பழத்தில் செய்ததில் 
அதன் சுவையே தனிதான்.



இனிப்புகள் சாப்பிட்ட வாயிற்கு 
சற்று சுவை மாற 
கார சிப்ஸ் தருகின்றேன்.



நொறுக்கி உண்ண 
முறுக்கு இருக்கு 
மறுக்காது உண்ணத் 
தோன்றுகிறதோ?


மசால்வடை இல்லாமல் 
பண்டிகை இருக்குமா?



 எமது ஊர் தட்டைவடை செல்லாத உலகநாடுகள் இருக்கின்றனவா ? 
நீங்கள் சுவைக்க 
இதோ தருகின்றேன்.


தின் பண்டங்கள் வேண்டாம் என்பவர்களுக்கு 
பழச் சுவை விருந்து 
காத்திருக்கு. 

சுவைத்த அனைவருக்கும் மாதேவியின் நன்றிகள்.

Tuesday, October 4, 2011

பூக்களைப் பறியுங்கள்

இயற்கையின் படைப்பில் பூக்கள் மிகவும் அற்புதமானவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான அழகைத் தருகின்றன.

பூ என்றாலே அழகு, மென்மை, நறுமணம், கவர்ச்சி என்பன அடங்கியனவாக இருக்கின்றன.


பூக்கள் அழகுடன் மருத்துவ குணங்களையும் கொண்டிருக்கின்றன.

மலர்களில் சிலவற்றை உணவுகளாகவும் நீண்ட காலங்களாக உட்கொண்டு வருகின்றார்கள்.

எல்லோரும் முகம் சுழிக்கும் வேப்பம்பூ, வாழைப்பூவுடன், இனிய பூசினிப் பூ, சிவப்பு செவ்வரத்தம் பூ, கற்றாழைப்பூ, வெங்காயப்பூ, குங்குமப்பூ, அகத்திப்பூ, முருங்கைப்பூ, ஆவாரம்பூ எனப் பலபல தொடரும்.

'ரோஜா.. ரோஜா.. ரோஜா... ரோஜா......' மயக்கும் ரோஜாவும் சமையலில் இடம் பிடிக்கும் கேக், புடிங், பானங்கள், ரோஸ் வோட்டர், எசேன்ஸ், எனக் கலக்கும்.


காலிப்ளவர் ,கோவா போன்றவற்றையும் பூ இனம் எனக் கொள்ளலாம்.

ஆங்கிலேய மரக்கறிகளில் புறக்கோலி, கோவா, கூனைப்பூக்கள் (artichokes)> , காளன், Broccoli rabe இலையும் பூக்களும் சாப்பிடக் கூடியன. இன்னும் பலவும் அடங்குகின்றன.

புறக்கோலி

இவ் இனம் ஏறத்தாள 2000 ஆண்டுகளுக்கு முன்பே அறியப்பட்டிருந்தது.


இதில் பல உப இனங்கள் உள்ளன.


நூறு கிறாமில் புறக்கோலியில் காபோகைதரேட் - 6.64 கிராம், நார்பொருள் - 2.6 கி, கொழுப்பு – 0.37 கி, புறோட்டீன் - 2.82 கி, கல்சியம் - 47 மி.கிராம், மக்னீசியம் - 21 மி.கிராம், விற்றமின் சி – 89.2 மி.கிராம், அடங்கியுள்ளன.


சலட், சூப், ஸ்டிம் என பல வகை தயாரிப்புகளாக உணவில் சுவைக்கும்.

காலி ப்ளவர்


  • இதில்உள்ள வேதிப்பொருள் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகம் கொண்டுள்ளன.
  • நிறமி புற்று நோயைத் தடுக்கும் என்கிறார்கள். 

சூப், மஞ்சூரியன், கூட்டு.... பஜ்ஜி, சப்பாத்தி, பகோடா என...சகலவிதமாகவும் மட்டன், சிக்கன், இறால், முட்டை... எனக் கூட்டுச்சேர்ந்தும் சுவைக்கும்.

கோவா

வளமுள்ள எல்லாவகை மண்ணிலும் வளர்ந்து பயன் தரக் கூடியது.


நீர்தேங்கி நிற்காதிருக்க வடிகால் வசதியிருக்க வேண்டும்.


மலைப் பகுதிகளில் 150 நாட்களில் 1 ஏக்கருக்கு 70 – 80 டன்களும் சமவெளிப் பகுதியில் 120 நாட்களில் 1 ஏக்கருக்கு 25 – 35 டன்களும் பயனாகக் கிடைக்கும்.


மாடியில் வீட்டுத் தோட்டமாகவும் பயிரிட்டுக் கொள்ளலாம்.


  • விற்றமின் சி,டீ (Vit C,D) அடங்கியுள்ளது. 
  • ஒரு கப் Cabbage ல், கொழுப்பு 0.5 கிராம், காபோஹைாதரேட் 5 கிராம், நார்ப்பொருள் 1.8 கிராம், கல்சியம் 41.1 மிகி, பொட்டாசியம் 218.9 மிகி, சோடியம் 16 மிகி,
இதிலும் பல இனங்கள் உள்ளன. 

பிரட்டல், ஸ்டீம் சலட், பால்க்கறி, பொரியல், சம்பல், தொக்கு எனப பலவகையாய் செய்து கொள்ளலாம். புட்டு, நூடில்ஸ், ரைஸ் இவற்றுடன் கலந்தும் தயாரிக்க சுவை சேர்க்கும்.

குங்குமப்பூ Saffron

செம்மஞ்சள் நிறத்தை உடையது. இந்தியாவில் கஸ்மீரில் பயிராகிறது.


வாசனையோடு இருக்கும். மருத்துவ குணமுடையது.


இதை உலர வைத்து, உணவுகளில்
  • வாசனை ஊட்டியாகவும், 
  • நிறத்திற்காகவும் சேர்க்கப்படுகிறது.
இன்னமும் பூக்களைப் பறியுங்கள்.

சின்னுவின் சமையலறையில் பூக்கள் மீண்டும் சுவைக்கும்

:- மாதேவி -:

0.0.0.0.0.0.0.0.0

Wednesday, June 8, 2011

இமயமலை அடிவாரச் செடியில் எமது வீட்டில் பால்கறி

உச்சாணிக் கொப்பிலே உலக்கை கட்டித் தொங்குது!

அது என்ன?

அவர் இவர்தான்.

அனைத்து மண்ணிலும் வளரக் கூடிய மரம். சிறப்பாக வரட்சியான மணற்தரையில் சிறந்த பயன் தரும். இது 30 அடி உயரம் வரை வளரக் கூடியது. அதிக கிளைகளைக் கொண்டிருக்கும்.


வீ ட்டு வேலிகளிலும், முற்றத்திலும், கொல்லையிலும் நாட்டி இருப்பார்கள். தோட்டங்களிலும் பயிரிடப் படுகிறது. ஆறுமாதத்தில் பலன் கொடுக்கும்.


மரத்தின் பூர்வீகம் இமயமலையின் அடிவாரம் என்கிறார்கள். பின்பு பங்களாதேஸ், பாகிஸ்தான், அப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், ஆபிரிக்கா,  இந்தியா,  இலங்கை எனப் பரவி தாய்லந்து, தாய்வானிலும் பயிரப்படுகிறது.

Moringa ceae குடுப்பத்தைச் சேர்ந்தது. Moringa Oleifera என்கிறார்கள். கோடையில் தாரளமாகக் கிடைக்கும் காய் இனம் இது. மழை இதற்கு எதிரி. விளைச்சல் பாதிக்கப்படும். பூக்களை உதிர்க்கும்.

இதில் சிறிய கட்டைக் காய் இனம், ஒரு மீட்டர் வரை நீண்ட காய் இனம், களிக்காய் என மொத்தமான காய்,  எனப் பல புதிய ரகங்கள் இருக்கின்றன.

செடி இனம். விதை வைத்துப் பயிரிடப்படும். ஏனையவை கொப்புகளை வெட்டிப் பதியிட்டு வளர்ப்பர்.

  • பெங்காளியில் shojne,  
  • தெலுங்கு Munagakaya,  
  • தமிழ் முருங்கைக் காய். 
  • மலையாளம் Muringa.   
  • ராஜஸ்தானியில் Shenano,  
  • பிலிப்பினோ Malunggay.

100 கிராமில் கொழுப்பு 0.1 கிராம், காபோஹாரேட் 3.7 கிராம், நார்ச்சத்து 4.8 கிராம், புரதம் 2.5 கிராம், விற்றமின் C 120 மி.கிராம். விற்றமின் A 110 மி.கிராம், கல்சியம் 30 மி.கிராம்,

இதில் பலவகையான பைரோநியூரியன்டஸ் (Phytonutrients) பல உண்டு. Alpha-carotene, Beta-Carotene, Beta-cryptoxanthin, Lutein, Zeaxanthin and Chlorophyll. இவை உடலிலுள்ள நச்சுப் பொருட்களை அகற்றி உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். அத்துடன் 46 மேற்பட்ட வகையான ஒட்சிசனெதிரிகள் (antioxidants) இருக்கின்றன.

மரத்தின் இலை, பூ, பட்டை என சகலதுமே உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தக் கூடியது. மருத்துவப் பொக்கிஸங்கள் என்கிறார்கள். தமிழ் வைத்தியத்தில் நரம்புத் தளர்ச்சிக்கும், பசியின்மைக்கும் அருமருந்து என்கிறார்கள்.

குழம்பு,  வரட்டல்,  சாம்பார்,  தீயல்,  கூட்டு,  பொரித்த குழம்பு, முருக்கைக்காய்ப் பிரட்டல், காரக் கூட்டு முருக்கைக்காய்சரக்குத் தண்ணி - பத்திய உணவு , சூப்,  கட்லட்,  வடை,  வடகம்,  பொரியல்,  சாதம்,  அசைவம் கலந்த குழம்பு,  மிக்ஸ்ட் வெஜிற்றபில் சொதி எனப் பல வகையாக சுவை கொடுக்கும்.


தேங்காய்ப் பால்கறி
தேவையான பொருட்கள்

முருங்கைக் காய் - 2
பலாக்கொட்டை - 10
கிழங்கு - 1
பச்சை மிளகாய் - 2
சாம்பார் வெங்காயம் - 6-7
கட்டித் தேங்காய்ப்பால் - 4 டேபிள் ஸ்பூன்
தேசிப்புளி  -1 ரீ ஸ்பூன்
கறிவேற்பிலை - 1 இலை
உப்பு தேவையான அளவு

தாளிக்க

கடுகு - ¼ ரீ ஸ்பூன்
செத்தல் மிளகாய் - 1
கறிவேற்பிலை -1 இலை
எண்ணெய் - 1 ரீ ஸ்பூன்

செய்முறை


காயை விரலளவு துண்டங்களாக வெட்டி தோலை சீவி எடுங்கள். துண்டுகளை முக்காற் பாகம் வரை கீறிவிடுங்கள். 

பலாக்கொட்டையின் மேல்தோலை நீக்கி எடுத்து நீளவாட்டில் இரண்டாக வெட்டுங்கள்.

கிழங்கை தோல் சீவி விரும்பியபடி துண்டங்களாக வெட்டி மிளகாயைக் கீறி வைத்துக் கொள்ளுங்கள்.

வெங்காயம் நீள் துண்டுகளாக வெட்டிவிடுங்கள்.

பாத்திரத்தில் காய்களைப் போட்டு கிழங்கு பலாக்கொட்டை மிளகாய் வெங்காயம் உப்புச் சேர்த்து ஒரு கப் தண்ணீர் விட்டு மூடி போட்டு, 5 நிமிடங்கள் அவியவிடுங்கள்.

பின்பு பிரட்டி மூடிவிடுங்கள். 2 நிமிடத்தில் திறந்து தண்ணீர் வற்றிய பின்  தேங்காய்ப்பால் ஊற்றி ஒரு கொதி வர இறக்கி தேசிப்புளி விடுங்கள். பிரட்டிவிடுங்கள்.

தாளித்து கலந்துவிடுங்கள்.

( பத்தியக் கறியாகத் தயாரிக்கும்போது தாளிப்பதைத் தவிர்த்துவிடுங்கள்  )

முருங்கையின் பயன்கள் பற்றிய மேலும் பல தகவல்களை அறிய கீழே யூ ரியூப் கிளிக் பண்ணுங்கள்
முருங்கை அற்புதத் தாவரம்.

:- மாதேவி-:

Saturday, April 23, 2011

கனவாகிப்போன அடுக்களைப் பொருட்கள்

சமையலறையை யாழ் தமிழில் அடுப்படி மற்றும் அடுக்களை என்றும் சொல்லுவார்கள்.


குசினி என்றும் பலர் பேசிக் கொள்வார்கள். குசிய எனச் சிங்களத்தில் சொல்லுவார்கள். போர்திக்கீசிய மொழியிலிருந்து பெற்றதாக ஞாபகம். குசினி என்னும் இச்சொல் Cozinha (குசினா) என்ற போர்திக்கீசிய மொழியிலிருந்து இலங்கைக்கு வரப்பெற்றதாக( சமையலறை.) தமிழ் விக்கிபீடியா உறுதிப்படுத்துகிறது.


அடுக்களையில் மேலதிகமான பாத்திரங்களை வைத்தெடுக்கவும் அரிசி, பருப்பு பண்டங்களை வைக்கவும் நீண்ட பலகையால் செய்யப்பட்ட பரண்கள் குசினியில் தொங்கவிடப்பட்டிருந்தன. அவை பொருட்களை எட்டி எடுக்கக் கூடிய உயரத்தில் இருக்கும்.


நிலத்தில் இருந்து வேலை செய்வதற்கு பலகை ஆசனங்கள் வைத்திருந்தனர். பலகைக் கட்டை என்பர்.

மரத்தாலான அகப்பைக்கூடு துளைகள் உள்ளது தொங்கவிடப் பட்டிருக்கும். அகப்பை, மத்து ,கரண்டி, தட்டகப்பை, போன்றவற்றை அவசரத்திற்கு எடுப்பதற்காகச் செருகி வைத்திருப்பர்.

அகப்பை கூடு

வெண்கலம், ஈயம், அலுமினியப் பொருட்களின் பிற்பாடு எனாமல் பூசப்பட்ட பாத்திரங்கள் பாவனைக்கு வந்தன.

கறிக் கோப்பைகள், பேசின், ரிபன் கரியர், கேத்தல், பிளேட்ஸ், ரீ யக் ( Jug )    ரீ பொட்; (Pot) இருந்தன. பல வர்ணங்களில் அழகாய் இருந்தன. ஒரே ஒரு குறை  நிலத்தில் விழுந்து அடிபட்டால் எனாமல் எடுபட்டு அசிங்கமாகும். பின்னர் அவ்வடத்தில் பாத்திரத்தில் ஓட்டை வந்து விடும்.




சீன தயாரிப்புப் பீங்கான் பிரபலமாக விற்பனைக்கு வந்தது. சுத்தம் செய்வது இலகு என்பதால் பலரும் விரும்பி வாங்கிக் கொண்டனர். இவற்றில் ரீசெட், டினர்செற் பிரபலமாக அறிமுகமாகி இருந்தது. இப்பொழுதும் வீடுகளில் இடம் பிடித்து இருக்கிறது.



அடுத்து ஆட்கொல்லி பிளாஸ்ரிக் அறிமுகமாயிற்று . தொடக்கத்தில் மனிதரைக்கொல்லும் என்பதை அறிந்திருக்கவில்லை. உடையாது, இலகுவானது என வாங்கிக் கொண்டார்கள். இது பல் தொகையாகப் பெருகிகாணும்இடம் எல்லாம் இடம்பிடித்து சுற்றுச் சூழலையும் கேடாக்கி நிற்கிறது. இதைப்பற்றி தனிப் பதிவே போடலாம்.


ஸ்ரெயின்லெஸ் பாத்திரங்கள் வந்தன. இதற்கு ஏகக் கிராக்கி இருந்தது. மெலமின்கோப்பைகள்அறிமுக மாயின. 

இதைத்தொடர்ந்து பைரக்ஸ் அவன் (oven) பாத்திரங்கள் பிரபல்யம் ஆகியது. நொன்ஸ்ரிக் சமைக்கும் பாத்திரங்கள், மைக்ரோ பாத்திரங்கள், என பல்வகையும் உபயோகத்தில் இருக்கின்றன.       

அரிக்கன் லாம்பு (விளக்கு)
இரவில் வெளிச்சம் ஏற்ற கைவிளக்கு, குப்பி விளக்கு, அரிக்கன் விளக்கு, வைத்திருப்பார்கள்.


நமக்கும் மின்சாரம் இல்லாத சண்டைக்காலத்தில் இவ்விளக்கு நல்ல அனுபவம்.


மண்ணெண்ணை லீற்றர் 250ரூபா விற்றது. அதுவும் கிடைப்பதற்கு அரிது. கண்ணாடி (ஜாம்) போத்தலின் அடியில் தண்ணீரை விட்டு அதன்மேல் தேங்காய் எண்ணை சிறிதளவு ஊற்றி சைக்கிள் ரியூப் வாலில் திரியைச் செருகி விளக்கு எரித்திருக்கிறோம். மேலே கம்பிகட்டி கைபிடியும் இருக்கும் எடுத்துச்செல்வதற்கு.

காஸ்,மின்சாரம், இல்லாதகாலம் விறகு அடுப்பொன்றும் அக்காலத்தில் புதிதாக அறிமுகமாகி அனைவருக்கும் கைகொடுத்தது.


இரு அடுப்புக்கள் ஒன்றுடன் ஒன்று பக்கத்தே தொடுத்ததாய் இருக்கும் முன்பகுதியில் எரித்தால் பக்கத்திலே சற்று உயர உள்ள சிறிய அடுப்பிலும் சூடுபரவி இரண்டு சமையல் செய்யலாம்.அத்துடன் விரைவில் சமையலும் முடியும்.

கைக் கோடரி

விறகு தட்டுபாடான காலம் அது. . மறக்கக்கூடியவையா இவை எல்லாம்.  

சமைப்பதற்கு ஆதியில் விறகு அடுப்பு. நிலத்தில் மூன்று கல்லை வைத்து பாத்திரத்தை அதன் மேல் வைத்துச் சமைப்பர்.

கல்லடுப்பு

பின் களிமண்ணால்  அடுப்பு பிடித்து வெப்பத்திற்கு உடையாதிருக்க அதன் மேல் சாணம்பூசி வைத்திருப்பார்கள். குமட்டி அடுப்பும் இருந்தது.

இரும்பு அடுப்பு

குமட்டியில் தணலைப் போட்டு சமைத்த குழம்பை ஆறாமல் வைத்திருப்பார்கள். மரத்தூள் அடுப்பும் தகரத்தால் செய்யப் பட்டது இருந்தது. மரத்தூளை அடைந்து எரியவைத்துச் சமைப்பர். 

பின் இரும்பால் செய்த அடுப்புக்களை வைத்து சீமேந்தால் பூசிக் கட்டினார்கள். காலப் போக்கில் இவை வெப்பத்தால் வெடிக்கத்தொடங்கின. அத்துடன் மண்ணெண்ணை பாவனைக்கு வர இவையும் இல்லாது போயின.

மண்ணெண்ணை ஸ்ரவ், குக்கர், பாவனையில் இருந்தது. ப்ரஷர் குக்கர், ப்ரிஜ் வந்தன. இலகு மின்சார அடுப்புகள் வர  பலரும் மின்சார, காஸ் அடுப்புகளுக்கு மாறினர். ரைஸ்குக்கர் குடியேறியது.

அம்மி
கல்லாலான ஆட்டுக்கல்லு, அம்மி, தோசை, இட்லி மா, சட்னி, மசாலாச் சரக்கு, அரைப்பதற்கும்.
ஆட்டுக்கல்லு

திரிகை, பயறு, உழுந்துமா திரிக்கவும், உடைக்கவும் பயன்பட்டன.

உரல், உலக்கை அரிசி குத்தவும். மா இடிப்பதற்கும் உபயோகித்தனர்.
 
திரிகை
 இலங்கையில் விசேடமாக இடிசம்பல் இடிப்பதற்கும், பனம்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, துவைக்கவும்; பயன்பட்டன.


பின் விறாந்தையில் கல்லுரல், திரிகை

மிக்ஸி, கிரைண்டர், அரங்கேற கல்லுரல்கள் வீட்டின் பின் விறாந்தைகளில் தஞ்சம் புகந்தன. காலம் போக பின்புறம் வாழைப்பாத்திகளுக்குள்ளும் உட்கார்ந்திருந்து அழுதன..

இன்னும் சில கனவாகிப்போன அடுக்களைப் பண்ட பாத்திரங்கள் 

பழையன ஒழிந்து சமையலறையும் புதுப்பொலிவுடன் கிச்சன் யூனிற் பூட்டப் பட்டு புதுப்பொலிவு பெற்றன. தூசி தட்டும் ஒட்டடைக் கம்புக்கும் வேலை இல்லாது போய் விட்டது. வக்கூம் க்ளீனரும் வந்தது.

இப்பொழுது மின்சார . காஸ்அடுப்புகளுடன். சூரிய அடுப்பு, மைக்ரோ. இன்டெக்சன் என பவனி தொடர்கிறது….

டிஸ்வோசர் பூட்டப் பட்டு கிச்சன் அழகிய மாளிகையாகியது. மாளிகையில் அழகிய பொருட்கள் கண்ணைச் சிமிட்டிநிற்கின்றன…

சமையலோ பல வீடுகளில் அம்போ…. ஆகிவிட்டது.

ரெஸ்ரோறன்ஸ் பக்கற்றுகள் ப்ரிஜ்ஜில்அடைக்கப்பட்டு மூச்சுத்திணறி… மைக்ரோவில் சூடேறி பலவீட்டு டைனிங் டேபல்களில் சிரித்திருக்கின்றன……