Saturday, July 11, 2009

ஆட்டுக்கல்லு உழுந்துக் கறி?

பாட்டி காலத்தில் பக்குவ சமையல் முறைகள் மிகவும் சுவையாக இருக்கும்.

அம்முறைகளில் செய்யும்போது நீண்ட நேரம் எடுக்கும் என இப்பொழுதுள்ள அவசர யுகத்தில் பலர் முணு முணுப்பார்கள்.

அவ்வாறுள்ள சமையல் முறைகள் பலவும் இன்று இலகுவான முறைக்கு கூர்ப்படைந்துள்ளன.

பழைய காலத்துப் பெண்கள் போன்று அதிகாலை நாலு மணி தொடக்கும் இரவு பத்து மணி வரைக்கும் சமையல் அறையே கதி என்று இருந்து வேலை செய்ய இன்றைய பெண்களுக்கு முடியாது.

சமையலை ஒரு மணித்தியாலயத்திற்குள் முடித்துக் கொள்ள விரும்புவார்கள். சமையலறை இயந்திர சாதனங்கள் பலவும் அதைச் சாத்தியமாக்கி உள்ளன.


பாட்டியின் பக்குவத்தில் உழுந்தை ஆட்டுக்கல்லில் அரைத்து எடுத்தபின் வாழையிலையில் தட்டி இட்லித் தட்டில் வைத்து வேகவைத்து எடுப்பர்.

ஆறியபின் சிறிய துண்டங்களாக வெட்டி ஓரிரு வாரங்கள் வெய்யிலில் காய வைத்து எடுத்து டின்களில் அடைத்து வைத்து பல மாதங்களுக்கு உபயோகிப்பர்.

தேவையானபோது எடுத்து எண்ணெயில் பொரித்து குழம்பில் கலந்துவிடுவார்கள்.

திருமணம், விசேட தினங்களுக்குக் கூட முற்கூட்டியே தயாரித்து எடுத்து வைத்து, குழம்பு ஆக்கினர்.

இம்முறையே இப்பொழுது விரைவில் தயாரிக்கக் கூடியதாக மாற்றம் பெற்றுள்ளது. அவித்து எடுக்காது ஓயிலில் சிறுசிறு உருண்டைகளாக போட்டு, பொரித்து எடுத்து, குழம்பில் கலந்து செய்யும் முறையாக வந்துள்ளது.

பொரித்தெடுத்த உருண்டைகளை சாதத்திற்கு பஜ்ஜியாகவும் ஈவினிங் டிபனாகவும் கூட யூஸ் பண்ணலாம்.


இதே முறையில் பாசிப்பருப்பு, கடலைப் பருப்பையும் ஊற வைத்து அரைத்து எடுத்து செய்து கொள்ளலாம்.

கொலஸ்டரோல், டயபடிஸ் என எண்ணெய் தவிர்க்க விரும்புவோர் கொதிக்கும் குழம்பில் சிறுசிறு உருண்டைகளாகக் போட்டு அவிய வைத்து எடுத்து ஹெல்தியாகச் சாப்பிடலாம்

தற்காலத்தில் குழம்பு தயாரிக்கவே பலர் சிரமப்படுவர். ஐஸ்கிறீம் போல உணவுகள் யாவும் பொக்ஸ்களில் விற்றால் வாங்கி வாயில் போட்டுக் கொள்ளும் நிலையில்தான் அனைவரும் இருக்கிறார்கள்.

தேவையான பொருட்கள்

உழுந்து – 1 கப்
சோம்பு – 1 ரீ ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
வெங்காயம் - 3
கறிவேற்பிலை சிறிதளவு
உப்பு சிறிதளவு

பொரிப்பதற்கு

ஓயில் - ¼ லீட்டர்

வறுத்து அரைத்து எடுக்க

ஏலம் - 2
கராம்பு – 1
கறுவா – 1

குழம்பு செய்வதற்கு

மிளகாய்ப் பொடி – 1 ரீ ஸ்பூன்
தனியாப்பொடி – ½ ரீ ஸ்பூன்
தேங்காய்ப்பால் - 2 கப்
உப்பு தேவையான அளவு
எலுமிச்சம் பழம் - ½ மூடி

தாளிதம் செய்வதற்கு

கடுகு
உழுத்தம் பருப்பு
வெங்காயம்
கறிவேற்பிலை

செய்முறை

உழுந்தை ஊற வைத்து வடை மாவிற்கு அரைப்பது போல சோம்பு உப்புச் சேர்த்து கெட்டியாக அரைத்து எடுங்கள்.

இத்துடன் சிறிதாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேற்பிலை கலந்து விடுங்கள்.

எண்ணெயைக் கொதிக்க வைத்து மாவைக் கிள்ளி சிறுசிறு உருண்டைகளாக மெல்லிய பிரவுன் கலரில் பொரித்து எடுங்கள்.

சிறிது ஓயிலில் கடுகு, உழுத்தம் பருப்பு, வெங்காயம், கறிவேற்பிலை தாளித்து தேங்காய்ப்பால் ஊற்றி உப்பு மிளகாய்ப் பொடி, தனியாப் பொடி, பொரித்த உருண்டைகளைப் போட்டு கொதிக்க விடுங்கள்.

இடையிடையே மெதுவாகப் பிரட்டி எடுங்கள். மசாலாப் பொடி சேர்த்து, மெல்லிய தீயில் அடுப்பை வைத்து குழம்பு இறுக இறக்குங்கள்.

எலுமிச்சம் சாறு விட்டுப் பிரட்டிப் பரிமாறுங்கள்.

சாதம், பிரியாணி, புட்டு இடியாப்பத்திற்கு சேர்த்துச் சாப்பிட ருசியாக இருக்கும்.

பிள்ளைகள் 'சைவ' இறைச்சிக் கறியெனக் கூறிச் சுவைப்பார்கள்.

மாதேவி