Friday, February 11, 2011

இராசவள்ளி டெசேர்ட்

சுவையான பல சிற்றுண்டிகளைச் செய்வதற்கு ஏற்ற ஒரு கிழங்குதான்  இராசவள்ளிக் கிழங்கு ஆகும்.


 இதில் பல வகைகள் உள்ளன. கிழங்குகள் மங்கலான பழுப்பு நிறத்தில் இருக்கும். உள்ளேயுள்ள சதைப்பகுதி ஊதா, மஞ்சள், வெள்ளை, சிவப்பு என வெவ்வேறு நிறங்களில் இருக்கும்.
 
இலங்கையில் ஊதா நிற இராசவள்ளிக் கிழங்கு கிடைக்கிறது.

முளையை நட்ட ஒரு மாதத்தில் முளைத்து வளர ஆரம்பிக்கும். இலைகள் வெற்றிலைபோல இருக்கும் தண்டு அழகிய ஊதா நிறத்தில் இருப்பதால் கொடி அனைவரையும் கவரும்.

கொடிகள் வளர்ந்துவர பட்டமரக் கொப்புகள் அல்லது மூங்கில் தட்டிகள் வைத்துப் படர விடுவார்கள். இரண்டு மாதத்தில் களைகள் பிடுங்கி மண் அணைத்து விட வேண்டும்.


இலைகள் மஞ்சள் நிறம் கலந்து பழுப்பு நிறமாகி உதிரத் தொடங்கும்போது நிலத்தில் வெடிப்புகள் ஏற்படும் அப்போது அறுவடைசெய்து கொள்ளலாம். வீட்டுத்தோட்டங்களில் நாட்டிக் கொள்வார்கள். நவீனத்தில் பூச்சாடிகளில் வளர்த்து பல்கனிகளில் அழகுக்குப் படரவிடுவதுடன் கிழங்கும் பெறலாம்.

விநாயக ஷஷ்டி இருபது நாட்களும் கோவில்களில் விநாயகருக்கு நாள்தோறும் ஒரு நிவேதனம் படைக்கப்படும். அதில் இக்கிழங்கும் ஒருநாள் படைக்கப்படும் அளவு முக்கியத்துவம் பெற்றது. சர்க்கரை வள்ளிக் கிழங்கைப்போல இதில் இனிப்பு அதிகம் கிடையாது.

தாவரவியில் பெயர் Dioscorea  alata  ஆகும். இதில் water yam,  winged yam,  purple yam என மூன்று வகைகள் உண்டு. தெற்கு ஆசியாவில் முதன்முதல் பயிரிடப்பட்டது. 

பிலிப்பைன்ஸ் இல் Ube என்கிறார்கள். பலவிதமான இனிப்பு டெசேட்களில் பயன் படுத்துகிறார்கள். 

வியட்னாமில் khoaimo என்பர். பிரதானமாக சூப்பில் கலக்கிறார்கள். இந்தியாவில் ratalu  அல்லது violet yam பெருவள்ளிக் கிழங்கு என்றும் அழைப்பார்கள். 

ஹவாயில் Uhi   என அழைப்பர். 


இலங்கையில் இராச வள்ளிக் கிழங்கு என்ற பதமே பயன்படுத்தப்படுகிறது.

போசனை

100 கிராமில் 20.6 கலோரி, புரதம் 1.4 கி, கொழுப்பு மிகக் குறைவு 0.2 கி, நார்ப்பொருள் 8.8 கி, நீர்ப்பிடிப்பு 72.4 மி.லி, பொட்டாசியம் 256 மி.கி, மக்னீசியம் 15 மிகி, கல்சியம் 15 மிகி, சோடியம் 9 மிகி, இரும்புச் சத்து 0.8மிகி. Zinc 0.3 மிகி. B3 0.2மிகி, விட்டமின C 15மிகி வரையே இருக்கிறது.

கொலஸ்டரோலைக் குறைக்கும் தன்மையும், Antioxidant அதிகம் இருப்பதும் இதன் நன்மைகளாகும். ஓஸ்டியோபொரோசிஸ் சைத் தடுக்கும் தன்மையும் இருப்பதாக நம்பப்படுகிறது.

எங்கள் பாட்டி இக்கிழங்கை சீவி எடுத்து பொரித்து ஒருவகை சிப்ஸ் செய்து தருவார்.

கிழங்கை அவித்து மசித்து சர்க்கரை தேங்காய்ப் பால் விட்டு கட்டியாக வருவதற்காக  உழுந்துமா கலந்து கிளறி ஆறவைத்து துண்டுகளாக வெட்டிப் பரிமாறுவார்கள்.

டெசேர்ட்


தேவையான பொருட்கள்.


கிழங்கு – ½ கிலோ
சீனி – 4 - 5 டேபல் ஸ்பூன்
கட்டித் தேங்காய்ப்பால் - 4 டேபல் ஸ்பூன்
முந்திரி பிளம்ஸ் சிறிதளவு.
உப்பு - சிறிதளவு.
ஆமன்ட் அல்லது வனிலா எசென்ஸ் சில துளிகள்.

செய்முறை –


சொறியும் தன்மையுள்ளது இக்கிழங்கு கைக்கு கிளவுஸ் உபயோகியுங்கள். கிழங்கை தோல் சீவி நன்கு கழுவி எடுங்கள். சிறு சிறு மெல்லிய துண்டுகளாகச் சீவுங்கள்.

பாத்திரத்தில் போட்டு கிழங்கின் ¾ பாகம் தண்ணீர்விட்டு அவித்தெடுங்கள்.
நன்கு அவிந்ததும் மசித்து விடுங்கள். சீனி , உப்பு, முந்திரி, பிளம்ஸ் சேருங்கள்.

தேங்காய்ப் பால் ஊற்றிக் கலக்கி இறக்கிவையுங்கள்.

சற்று ஆறியபின் எசன்ஸ் கலந்து டெசேட் கப்களில் ஊற்றுங்கள். மேலே வறுத்த முந்திரி தூவி  நன்கு ஆறவையுங்கள்.

ப்றிச்சில் குளிரவைத்துப் பரிமாறுங்கள். கலர்புல் டெசேட் காணாமல் போய்விடும். மியா மியாப் பூனைகளும் வந்துவிடும்.  

மாதேவி