Saturday, June 27, 2009

சிம்பிள் ஹெல்த்தி புருட் சலட்

"தோடம்பழம் தோடம்பழம்
சோக்கான தோடம்பழம்
அம்மாவுக்கு ஒரு பழம்
அப்பாவிற்கு இரண்டு பழம்
பாட்டிக்கு ஒரு பழம்
அண்ணாவுக்கு ஒரு பழம்
தம்பிக்கும் எனக்கும் பாதிப் பழம்."

சிறுவயதில் ஆசிரியர் அபிநயத்துடன் சொல்லிக் கொடுத்து பாடிய பாடலின் நினைவுதான் இது.

பாடும்பொழுது கடைசி வரி பாடு முன்பே கவலை வந்துவிடும்.

"எனக்குப் பாதிப் பழம்" எனப் பாட விரும்பம் வராது.

அப்பாவின் அந்த இரண்டு பழத்தில் எனக்கு என்று மாற்றிப்பாடவே எண்ணம் வரும். எப்பொழுது அப்பாவின் இரண்டு பழத்தையும் பறிக்கலாம் என்ற நினைவே இருக்கும்.

இது எல்லாக் குழந்தைகளுக்கும் ஏற்படும் இயல்பான குணமே. என்னையும் எப்பொழுது பெரியவனாக நினைப்பார்கள் என்ற ஆதங்கம் அவர்களுக்கு மேலோங்கி நிற்பதில் வியப்பில்லை.

"அணிலே அணிலே ஓடி வா
கொய்யா மரம் ஏறி வா
குண்டும் பழம் கொண்டு வா ...."

பாலர் வகுப்பில் அனைவரும் விரும்பிப் பாடிய பாடல்தான்.

'குண்டுப்பழம்' என்று சொல்லும் போதே எல்லோர் முகங்களில் மகிழ்ச்சியும், 'கொறித்துக் கொறித்துத் தின்னலாம்' எனப் பாடுகையில் வாயில் சிரிப்புமாக ரசித்து ருசித்து கூட்டாகப் பாடிய நாட்கள் அழியாத தொடர்களாக வந்து போய்க் கொண்டே இருக்கின்றன.

இப்பொழுது இதைப் படிக்கும்போது உங்களுக்கும் எத்தனையோ 'பழப் பாடல்கள்' நினைவுகளில் வந்து போகலாம்.

கொழும்பு கண்டி வீதியில் பயணம் செய்யும்போது கஜுகமவில் (Cadju Gama) கஜீ (முந்திரி) விற்பனை செய்யும் அழகிய பெண்களைக் காணலாம்.

இரவில் வீதி ஓரங்களில் அமைக்கப்பட்ட குடிலில் பெற்றோல் மக்ஸ் வெளிச்சத்தில், அடர் வரணத்தில் பூக்களுடன் கூடிய பாரம்பரிய சிங்கள உடையான கம்பாயம் உடுத்திய பெண்களைக் காணலாம்.

கைகளிலே சுருக்கு வைத்துத் தைத்த டீப் நெக்குடன் கூடிய உடலை எடுப்பாகக் காட்டும் சிறிய பிளவுஸ் அணிந்திருப்பார்கள். அவர்கள் அழகை ரசிப்பதற்காகவே வாகனங்களை நிறுத்தி கஜீ வாங்குவோர் அதிகம்.

ரம்புட்டான், மங்குஸ்தான், அன்னாசி, டூரியான், பட்டர் புருட், கொய்யாப் பழங்கள் குவிந்து கிடப்பதையும் இப் பாதையால் பயணம் செய்வோர் கண்டு களிக்கக் கூடியதாக இருக்கும்.

பழங்களிலே யாழ்ப்பாணத்து கறுத்தக் கொழும்பு மாம்பழமும், ஊட்டி அப்பிளும், நுவரெலியா பியர்ஸ்சும், மல்வானை ரம்புட்டானும், மலை வாழப்பழமும், முல்லைத்தீவு பலாப்பழமும், அவுஸ்திரேலியன் மன்டரினும் என வேறு பலவும் சுவையில் பிரபலம் அடைந்துள்ளன.

இப்பொழுது கொழும்பு நகர் வீதிகளில் கூட தெருவோரங்களில் தள்ளு வண்டிகளில் எல்லா வகைப் பழங்களும் குறிப்பாக கறுத்தக் கொழும்பு மாம்பழமும், குவியல் குவியல்களாக கொட்டிக் கிடக்கின்றன. சீனிஆகாதோர் தவிர்த்து ஏனைய எல்லோருக்குமே கொண்டாட்டம்தான்.

பழங்கள் கெடாமல் இருப்பதற்கும், பளபளப்பு ஊட்டுவதற்கும் ரசாயன ஊட்டிகள் பயன்படுத்தப்படுவது வேதனைக்கு உரியதே. சம்பந்தப்பட்டோர் கவனத்தில் கொள்வார்களா?

பளபளப்பான, நீண்ட காலம் குளிர் ஊட்டியில் தவங் கிடந்த பழங்களை வாங்கி உபயோகிப்பதைத் தவிர்த்து இயன்றவரை புத்தம் புதிய பிரஸ் ஆன, மருந்தடிக்காத பழங்களை உண்பது நல்லது.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் இதையெல்லாம் தேட முடியுமா?

இலகுவாகத் தயாரிக்கக் கூடிய புருட் சலட்


இதில் கலரிங், எசன்ஸ், கஸ்ராட், பால், எவையுமே சேர்க்கப்படவில்லை. அதனால் ஹெல்த்திற்கும் நன்மை தரும்.

இரண்டு மூன்று வகை பழவகைகள் இருந்தாலே இந்த முறையில் தயாரித்துக் கொள்ளலாம். விரும்பினால் நட்ஸ் பிளம்ஸ் சேருங்கள்.

தேவையான பொருட்கள்.

ஆப்பிள் - 1
ஒரேன்ஞ் - 1
பைன் அப்பிள் - 2 துண்டுகள்
பப்பாளி சிறியது – ½
கிறேப்ஸ் அல்லது மாதுளை முத்துக்கள் - சிறிதளவு
தேன் - 1 டேபிள் ஸ்பூன் அல்லது சீனி- 2 ரீ ஸ்பூன்
லைம் ஜீஸ் - பாதி
தண்ணீர் - 4 டேபிள் ஸ்பூன்

1. பழங்களை பெரிய துண்டுகளாக வெட்டி எடுத்து ஒரு புருட் போளில் வையுங்கள்.
2. தண்ணீருடன் எலும்மிச்சம் சாறு சேர்த்துக் கலக்கி;க் கொள்ளுங்கள். இத்துடன் சீனி அல்லது தேன் கலந்து விடுங்கள்.
3. பழங்கள் மேல் ஊற்றி பிரிஜ் இல் வைத்து விரும்பிய நேரம் சாப்பிட்டுக் கொள்ளுங்கள்.

கவனத்திற்கு
எலும்மிச்சம் சாறை புருட் சலட்டில் சேர்க்கும் பழங்களின் புளிப்பின் தன்மையைப் பொறுத்து அளவைக் கூட்டிக் குறையுங்கள்.

மாதேவி

Sunday, June 21, 2009

கத்தரி கடலைக் குழம்பு

கத்தரிக்காய் (brinjal) என்றாலே எண்ணெயில் பொரிய வைத்து எடுத்து, கடுகு பூண்டு, வெங்காயம், வெந்தயம், கறிவேற்பிலை தாளித்துக் கொட்ட ஊரெல்லாம் மணம் கூட்டும்.

பின் அதற்கு உப்பிட்டு மிளகாய்ப் பொடி சேர்த்து, புளிக் கரைசல், கெட்டித் தேங்காய்ப் பால் விட்டு அடுப்பில் ஏற்ற கமகமக்கும்.

இப்பொழுது சாப்பிட வாருங்கள் என வீட்டில் உள்ளோரை அழைக்கத் தேவையில்லை.

சமையலறையை தாமாகவே எட்டிப் பார்ப்பார்கள்.

வாய்க்கு ருசியான கத்தரிக்காய் காரக் குழம்பு அனைவரையும் மயக்குவதில் வல்லது.

எண்ணெயில் பொரித்து எடுத்த உணவுகள் நாக்கிற்கு சுவை கொடுக்கும் எனச் சொல்லத் தேவையில்லை.

எண்ணெயில் பொரித்து எடுக்கும் போது அதிலுள்ள சத்துக்கள் அழிய வாய்ப்புண்டு. உடல் நலத்திற்கு நன்மை தரும் என்று கூற முடியாது.

எனவே இத்துடன் அவித்த கடலையைக் கலந்து கொண்டால் கத்தரிக்காய் குழம்பும் வித்தியாசமாக இருக்கும். கடலையின் புரதச் சத்தும் போனஸாகக் கிடைக்கும்.

ஒரு முறை செய்துதான் பாருங்களேன்.

முயற்சிக்கு தேவையானவை

கத்தரிக்காய் - 4
கடலை – ¼ கிலோ
தக்காளி - 2
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
பூண்டு – 4
இஞ்சி – 1 துண்டு
தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய்ப் பொடி – 1 ரீ ஸ்பூன்
தனியா பொடி - ¼ ரீ ஸ்பூன்
மஞ்சள் பொடி - ¼ ரீ ஸ்பூன்
உப்பு – விருப்பத்திற்கு ஏற்ப
புளிக் கரைசல் – விருப்பத்திற்கு ஏற்ப
பொரிக்க எண்ணெய் - ¼ லீட்டர்
கடுகு
கறிவேற்பிலை
ரம்பை

வறுத்து அரைத்து எடுக்க

பட்டை – 1
கராம்பு – 2
ஏலம் - 2

கடலையை அவித்து எடுத்து வையுங்கள்.

பூண்டு, இஞ்சி, தேங்காய்த் துருவல் அரைத்து எடுங்கள்.

வெங்காயம் மிளகாயை சிறியதாக வெட்டுங்கள்.

கத்தரிக்காயை இரண்டு அங்குல நீள மெல்லிய துண்டுகளாக தண்ணீரில் வெட்டி வையுங்கள்.

தக்காளியை நடுத்தரத் துண்டங்களாக வெட்டி வையுங்கள்.

எண்ணெயைக் கொதிக்க வைத்து பிழிந்து எடுத்த கத்தரிக்காய்த் துண்டுகளை பொன்னிறத்தில் பொரித்து எடுங்கள்.

இரண்டு டேபிள் ஸ்பூன் ஓயிலில் கடுகு, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேற்பிலை, ரம்பை தாளித்து, தக்காளி சேர்த்து பூண்டு, இஞ்சி, தேங்காய்த் துருவல் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசம் போக நன்றாகக் கிளறி புளிக் கரைசல் விட்டு, அரைக் கப் தண்ணீர் விட்டு உப்பு, மிளகாய்ப் பொடி, தனியா பொடி, மஞ்சள் பொடி, அரைத்த மசாலாப் பொடி சேர்த்து கொதிக்க விடவும்.

கொதித்த பின் கடலை, பொரித்த கத்தரிக்காய் சேர்த்து இரண்டு கொதி விட்டு இறக்குங்கள்.

சாதம், பிரியாணி, சப்பாத்தி, இடியாப்பம், பிட்டு, ரொட்டி, அப்பம் என எதற்கும் ஏற்ற சைட் டிஸ்சாக உதவும்.

மாறுதலுக்கு -

புளிக் கரைசலுக்கு பதிலாக சமைத்த பின் எலுமிச்சம் சாறு சேர்த்துக் கொள்ளலாம். வித்தியாசமான சுவையைக் கொடுக்கும். தக்காளி சேர்ப்பதால் புளியை சற்று குறைத்து விட்டுக் கொள்ளுங்கள்.

கத்தரி பற்றிய விபரங்களுக்கு:-
http://www.thefreedictionary.com/brinjal

மாதேவி

Wednesday, June 10, 2009

வாழை இலை விருந்து

இலை, பூ, காய், பழம், நார், தார், தண்டு, மடல் என அனைத்துமே பயன் பெறப்படும் ஒரே இனம் வாழைதான்.

கதலி, கப்பல், இரதை, ஆனை, சீனி, அம்பன், புளி, செவ்வாழை, மருத்துவ வாழை, மொந்தன், சாம்பல் எனப் பல் இனங்களாக.


உண்பதற்கு சுவை கொடுக்கும் பலவித ருசிகளாக ....


மடலை உலர வைத்து அழகிய கைப்பைகள், கைவினைப் பொருட்கள் என அலங்காரப் பொருட்களாக உருமாற்றுவர்.


இந்துக்களின் மங்கல, அமங்கல தினங்களிலும் மற்றும் கோவில் திருவிழாக்கள் பூசைகளிலும் வாசலில் தலைதாழ்த்தி வரவேற்கும். பச்சிளம் குழந்தையாய் தலைவாசலில் கழைகட்டும்.


நவீன தற்காலத்தில் அடுக்குமாடி பல்கனிகளில் கூட வளர்ந்து நின்று அழகேற்றும். அழகூட்டலுடன் மருத்துவ குணமும் மிக்கது. ஆதியில் விசக்கடிப் பொழுதுகளில் தார்களிலிருந்து பிழிந்தெடுத்த நீரை கடிவாசலில் பூசி உடனடி விச நீக்கியாகப் பயன்படுத்தினர்.


மணிகாட்டி பாவனையில் வராத வேளை இரவில் குழந்தைகள் பிறந்தபோது கதலிவாழையை நடுவே வெட்டிவிடுவார்கள். மறுதினம் காலையில் குருத்து வளர்ந்திருக்கும் நீளத்தை அளவையாகக் கொண்டு நேரம் கணித்து எடுத்தனர்.


வாடிய இலைகளும் வாழைக்குத்திகளும் விவசாயத்திற்கு பசளையாக தோட்ட மண்ணில் உட்புகுந்தன.


விரத காலங்கள், வெள்ளிக்கிழமை, வைபவங்கள், திருவிழாக் காலங்கள் உணவு படைத்து உண்ண இலைகள் பயன்படுகின்றன.

பூக்கள், மாலைகள் வாடாதிருக்கவும், சமைத்த உணவை மடித்துக் கொடுக்கவும், பொங்கல், தொதல், கேசரி, அல்வா போன்றவை செய்து கொட்டி வெட்டவும், உணவுகள் பழுதடையாமல் இருக்கவும் இலைகளை உபயோகித்தனர்.

வாரக்கணக்கில் முருங்கைக் காய் வாடாமல் இருக்க வாழை மடலில் சுற்றி யாழ்தேவியில் பயணித்தனர்.


கோயில்களில் சூடம் ஏற்றவும் பயன்படுத்தினர். இழைத்த காய்ந்த மடல்களை உணவு உண்ணப் பயன்படுத்தினர். இதனை வாழை மடல் அல்லது தடல் என்றும் அழைத்தனர்.


வாழைச்சாறு பட்டால் உடைகள் கறை நீங்காது படிந்து போய் இருக்கும். கைகளில் கறை படியாமல் தடுக்க உப்புத் தூளை கைகளில் தடிவிய பின் காயை நறுக்கிக் கொள்வது நன்று.


வாழைத்தண்டு மருத்துவத்திலும் பெரும் பங்கு வகிக்கின்றது.


சிறுநீரகக் கல் நோய்க்கு வாழைப் பூ, தண்டு போன்றவற்றை கூடியளவில் உணவில் பயன்படுத்துவார்கள். தண்டிலிந்து சாறு எடுத்தும் பருகுவர். மூலவியாதி உள்ளவர்கள் வாழைக்கிழங்கு, தண்டு சமைத்து உண்டு வந்தால் சுகத்தைத் தரும் என்பர். வாழைத்தண்டு உடலில் உள்ள தேவையற்ற நீரைப் போக்கி உடல் இளைப்பதற்கும் உதவி புரிகின்றது என ஹெல்த் உணவாகவும் உண்கிறார்கள்.


பச்சிளம் குழந்தைகள் உடலில் நல்லெண்ணெய் பூசி வாழையிலையில் கிடத்தி காலைச் சூரிய ஒளியில் படுக்க வைப்பர். இளம் சூரிய ஒளியினின்று பெறப்படும் விட்டமின் டி யையும், இலையினின்று கிடைக்கும் குளிர்மை மற்றும் விற்றமின்களைப் பெற்று சரும நோயின்று பாதுகாத்தனர்.


மோர்க் குழம்பு, கூட்டு, காரப்பிரட்டல், தேங்காய்ப் பால் கறி, பொரித்த குழம்பு, பொரியல்,சிப்ஸ், பொடிமாஸ், சட்னி, சம்பல், கட்லட், பஜ்ஜி என மெனுக்கள் பலவாக உருவாகும்.


வாழை இலைக் குளியல் அழகு சாதனக் குளிப்பாக பிரசித்து பெற்று வருவதை நீங்கள் எல்லோரும் அறிந்திருப்பீர்கள். இவ்வளவு நன்மைகளும் இருப்பதனால் போலும் வாழையடி வாழையாக குலம் தளைத்து வாழ்க என முன்னோர் வாழ்த்தினர்.


வாழை இலையில் விருந்துண்ண ஆசையாக இருக்கிறதா?
இதோ எங்கள் வீட்டு விருந்தும் தயாராகி இருக்கிறது.
வருகிறீர்களா விருந்துண்ண!


தலை வாழையிலையைப் போட்டு, அளவான சூட்டுடன் இருக்கும் நாட்டரிசி சோறு இட்டு பருப்பு மேல் உருக்கிய நெய்விட்டு கமகமக்கும் வாசத்துடன் இன்னும் சுவை சேர்ப்பதற்கு கீரை மசியல், கூட்டு, குழம்பு, கரட் சம்பல், பயிற்றங்காய்க் கறி, வாழைக்காய் சிப்ஸ், பப்படம், தயிர், பாற்சொதி, வாழைப்பழம் சேர்த்து விருந்துச் சாப்பாடு சாப்பிட்டால் எப்படி இருக்கும்.

இதோ ஞாபகத்திலிருந்து ஒரு பழைய நொடி.

என்ன?

அன்னம்
என்ன அன்னம்?
சோத்து அன்னம்
ஏன்ன சோறு?
பழம் சோறு
என்ன பழம்?
வாழைப்பழம்
என்ன வாழை?
திரிவாழை
என்ன திரி
விளக்குத் திரி.
என்ன விளக்கு
குத்து விளக்கு.
என்ன குத்து?
இந்தக் குத்து.






இந்தக் குத்து என்று சொல்லியபடி முஸ்டியை மடக்கி அக் காலக் குழந்தைகள் குத்துவிடுவார்கள்.



நீங்கள் அவ்வாறு குத்து விட்டதில்லையா?


மாதேவி