Wednesday, March 12, 2014

தலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.

யாழ் மண்ணில் பிறந்து வளர்ந்த நாங்கள் முதல் முதலாக தலைநகர் கொழும்பு பார்க்க செல்ல இருக்கின்றோம். 'நீங்கள் எல்லோரும் அழுக்குப் போக நன்கு தேய்த்துக் குளித்து தங்கம் போல தகதகவென இருந்தால்தான் கொழும்பில் எல்லோரும் உங்களை மதிப்பார்கள்' என்று அம்மா கூறினார்.



நன்கு எங்களுக்கு அழுக்குப் போக உடல் எங்கும் தேய்த்து குளிக்க வார்த்தார். நாங்களும் தலைநகர் பார்க்கும் மகிழ்ச்சியில் உடல்நோவையும் மறந்து இருந்தோம்.

எம்மைப் பார்க்க எமக்கே பெருமைபிடிபடவில்லை. தங்க விக்கிரகங்கள் போல ஆகிவிட்டோமே நாம். மறுநாள் பக்கத்து வீட்டு அக்காவுடன் பிரயாணித்து 200 மைல்களுக்கு மேல் பல ஊர்களையும் கடந்துகொழும்பு வந்து சேர்ந்தோம்.

வான் உயர்ந்த பெரிய மாடிக் கட்டிடங்களையும் தலைநகரையும் பார்த்த மலைப்பில் இருந்தோம் நாங்கள்.

எங்களையும் அழைத்துக் கொண்டு அக்கா தமது உறவினர் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். அவர்கள் எம்மைக் கண்டதும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தங்கங்களே வாருங்கள் எனஅன்பாக அணைத்து கூட்டிச் சென்றார்கள்.

யாழ்ப்பாணத்து தங்கங்கள்
சற்றுஅன்றைய காலத்துக்கு செல்வோம் வருகிறீர்களா?

Thanks :- Stock food
அன்றைய காலம் பனம் பாத்தி கிண்டுவதென்றால் வீடே விழாக் கோலம் கொண்டுவிடும். அதிகாலையில் வானத்தைப் பார்த்து மழை வராமல் இருக்க குலதெய்வத்தை வேண்டிக் கொண்டே கூலிஆளை வரவழைத்து பனம்பாத்தியின் மேலுள்ள உமல்களை நீக்கி தென்மேற்கு மூலையில் இருந்து வெட்டி கிழங்குகளை எடுக்கத் தொடங்குவார்கள்.

Thanks :- ourjaffna.com

காலையில் தொடங்கும் வேலை சாயந்தரம் அளவில் முடிவிற்கு வரும். சில இடங்களில் அன்று பனம் பாத்திக்கு சோறு மாமிசம் சமைத்து வைத்து படையலும் நடக்கும்.  கார்த்திகை விளக்கீட்டு நாளில் பனம்பாத்திக்கும் விளக்கு ஏற்றிவைப்பார் அம்மா.

இரவு வீட்டில் திருவிழாத்தான். அன்று சுற்றுச் சூழ அக்கம் பக்கத்தார் மாமா, மாமி எனத் தொடங்கி சித்தப்பா குழந்தைகள் வரை உறவுக் கூட்டங்கள் யாவும் மாலை 6 மணிக்கு வந்து கூடிவிடுவார்கள்.வீடே நிறைந்திருக்கும்.

இரவு லைட் வெளிச்சம் இல்லாது போய்விட்டால் உதவுவதற்கு பெற்ரோமக்ஸ் இரண்டும் மாமாவின் கையால் தூசிதட்டி எண்ணெய் விட்டு புது மன்டில் கட்டித் தயாராகிவிடும். முற்றத்தில் பனங்கிழங்கு மலையாகக் குவித்து வைக்கப்பட்டிருக்கும்.

Thanks :- ta.wikipedia.org
வீட்டுப் பின் முற்றத்தில் சிமெந்துக் கல்லு  மூன்று வைத்து அவற்றில் அண்டாக்கள் இரண்டைவைத்து நீர் நிறைத்துத் தயாராக இருக்கும்.

முற்றத்தில் கிடக்கும் கிழங்குகளில்  நன்றாகவிளைந்த கிழங்குகளை எடுத்து பெண்கள் யாவரும் கூடிப் பேசி தோலுரித்து மூள் வெட்டி ஓரிடத்தில் வைப்பார்கள். சித்தப்பா மாமா அவற்றைச் சுமந்து சென்று அண்டாக்களுக்குள் இட்டு  தாம்பாளத்தால் மூடிவிடுவர். பாட்டி அம்மா அடுப்பை மூட்டி வைப்பார்கள்.

அப்பா தன் பங்கிற்கு இலங்கை வானொலியைப்  போட்டுவிடுவார். சௌந்தரராஜன் சுசீலாவின் பாடல்கள் அலறும்.  கூட்டு குழு வேலைகள் தொடரும்.

அவித்த கிழங்குகளை ஓலைப் பாயில் விறாந்தையின் ஓர் ஓரமாகக் கொட்டி வைப்பர். அடுத்த தொகுதி பச்சைக் கிழங்கு மீண்டும் அண்டாவிற்குள் அலறத் தொடங்கும். ஆறிய கிழங்கின் தோலைச் சீவி எடுப்பார்கள். சிறுவர்கள் நாம் கிழங்கைக் கிழித்து நடுவே உள்ள பீலியின் நுனியின் இனிப்பைச் சுவைத்து இன்புறுவோம்.

பெண்களின் வாய்கள் ஊர்க்கதைகள் பேச கைகளும் தம்பாட்டில் இயங்கும். அம்மா மணக்க மணக்கப் போட்ட காப்பி விநியோகம் ஆகும். இரவுச் சாப்பாட்டிற்காக புட்டும் குழம்பும் முட்டைப் பொரியலும் சம்பலும் அடுக்களையிலிருந்து சாப்பிட அழைக்கும்.


இரவு பத்து பன்னிரண்டு வரை வேலைகள் தொடரும். சிலர் வீடு செல்வர். சிலர் விடிய நான்கு ஐந்து மணிவரை விழித்திருந்து தோல்சீவிய கிழங்குளை புளுக்கொடியலுக்கென இரண்டாகக் கிழத்து வைப்பர். அன்றைய இரவுப் பொழுது பூங்காவனத் திருவிழாகத்தான் விடியும். சிறுவர்கள் நாமும் ஓடிப் பிடித்து விளையாடுவோம். அவித்த கிழங்கைச் சப்புவதும் ஓரிரு கிழங்குகளைச் சீவுவதும் தூங்கி வழிவதும் எழும்புவதுமாக இருப்போம்.

வீட்டில் முற்றத்தில் பாய்களை விரித்து அவித்த கிழங்குகளைக் கொட்டி வெயிலில் உலர விடுவர். கயிற்றில் கட்டியும் தொங்கவிடுவார்கள்.

அவிக்காமல் இருக்கும் நோஞ்சான் கிழங்குகளை மறுநாட்களில் கிழித்து வெயிலி;ல உலர வைத்துவிடுவர். காய்ந்த பின் மாவாக்கி ஒடியல் புட்டுமா, கூழுக்கு வைத்துக் கொள்வார்கள்.

பனங்கிழங்கில் காபோகைரேட், நார்பொருட்கள் இருக்கின்றன. மலச்சிக்கலுக்கு உகந்தது.  சாயந்தர உணவாக சாப்பிடலாம்.


  1. பனங்கிழங்கு அவித்து குந்து (நார்) எடுத்து உடைத்து அப்படியே சாப்பிடலாம்.  
  2. வட்டமாக வெட்டி எடுத்து தேங்காய்ப் பல்லுடன் சாப்பிடச் சுவைக்கும்.  
  3. காரம் விரும்புவோர் உப்பு மிளகுதூளுடன் தொட்டுச் சாப்பிடலாம். 
  4. தீயில் சுட்ட பனங் கிழங்கு தேங்காய்ச் சொட்டுடன் சுவைத்திடுவோம் மாலை நேரச் சிற்றுண்டியாக. 
  5. துவையல்கள் ( சிற்றுண்டியாக) செய்துகொள்ளலாம்.


உறைப்பு துவையல்

தேவையானவை
கிழங்கு - 10-15
பச்சை மிளகாய் - 4
உள்ளி - 4
சின்ன வெங்காயம் - 6
மிளகு - 10
உப்பு தேவையான அளவு

மிளகு பச்சை மிளகாய் உள்ளி வெங்காயம் உப்பு சேர்த்து இடித்து வெட்டிய கிழங்குகளை கலந்து நன்கு இடித்து உருண்டைகளாக உருட்டி எடுத்து சாப்பிடுங்கள்.

மேலேயுள்ளவை உறைப்பு உருண்டைகள் கீழேயுள்ளவை இனிப்பு உறைப்பு உருண்டைகள் 

இனிப்பு 

கிழங்கு- 10-15 சீனி 4 மேசைக் கரண்டி, உப்பு , தேங்காய்ப் பூ சேர்த்து இடித்துக் கொள்ளுங்கள்

இனிப்பு உறைப்பு

கிழங்கு - 10-15 உள்ளி 4, பச்சை மிளகாய் 4, சீனி 2 மேசைக் கரண்டி, உப்பு , தேங்காய்ப் பூ (துருவல்) 4 மேசைக் கரண்டி கலந்து இடித்து எடுத்துக் கொள்ளுங்கள். இதுவும் மிகசுவையாக இருக்கும்.

விரும்பியவாறு செய்து சாப்பிடுங்கள்.

பனம் பணியாரம் சாப்பிட கிளிக் பனம் பணியாரம்

- மாதேவி -