Saturday, December 31, 2011

சமையலறையில் விடுகதைப் போட்டி

பரம்பரையாக நீண்டகாலமாக வாய் மொழியாக சொல்லப்பட்டு வந்தவைதான் விடுகதைகள். பாட்டிமார்கள் குழந்தைகளின் அறிவை வளர்க்க, சிந்திக்க வைக்க விடுகதை கூறுவார்கள்.

ஓய்ந்திருக்கும் வேளைகளில் விடுகதைகளைச் சொல்லி  அவிழ்க்க முடியுமா என கேட்பதுண்டு. கணவன் மனைவி, காதலன் காதலியும் விடுகதைகளை ஒருவருக்கு ஒருவர் வீசி திக்குமுக்காட வைப்பதுண்டு.

  • நாட்டுப்புறப் பாடல்கள், இலக்கியங்கள் இவற்றுள் விடுகதையும் ஒன்று எனச் சொல்லலாம். 
  • விடுகதைகள் ஓரிரு வரிகளில் மறைமுகமாக விபரித்து எடுத்துச் சொல்லப்படுபவை. 
  • சிந்தனையைத் தூண்டி வைப்பது இதன் நோக்கம்.
விடுகதையை புதிர், வெடி, நொடி என்றும் சொல்லுவார்கள்.

சில விடுகதைகள் சொல்கிறேன். உங்களால் விடுவிக்க முடிகின்றதா?

  1. குச்சி உடம்பில் குண்டுத் தலை, தீக்குச்சியுமல்ல, அது என்ன?
  2. சடசட மாங்காய் சங்கிலி ரோடு விழுந்தா கறுப்பு, தின்னால் தித்திப்பு. அது என்ன?
  3. குண்டப்பன் குழியில் வீழ்ந்தான். எழுந்தான், எல்லார் வாயிலும் விழுந்தான் அவன் யார்?
  4. ஊளை மூக்கன் சந்தைக்குப் போறான். அவன் யார்?
  5. வெள்ளைக்காரனுக்கு கறுப்புத் தொப்பி அது என்ன?
  6. மரத்து மேலே பழம் பழத்து மேலை மரம் அது என்ன?
  7. காற்றுப் புகாத வெள்ளைக் கூண்டில் மஞ்சள் புறா மயங்கிக் கிடக்கு அது என்ன?
  8. உச்சிக் குடும்பியன் சந்தைக்கு வந்தான். அவன் யார்?
  9. அம்மா போடும் வட்டம் பளபளக்கும் வட்டம், சுவையைக் கூட்டும் வட்டம், சுட்டுத் தின்ன இஸ்டம் அது என்ன?
  10. நாலு மூலைச் சதுரப் பெட்டி, அதன் மேல் ஓடுமாம் குதிரைக் குட்டி அவர்கள் யார்?
  11. பச்சைக் கதவு. வெள்ளை யன்னல் திறந்தால் கறுப்பு ராஜா அது யார்?
  12. சொறி பிடிச்சவனை கறி சமைத்து சோறெல்லாம் கசப்பு அவன் யார்?
விடைகள் சொல்லிவிட்டீர்களா?

விடைகளைச் சரிபார்க்க  கீழே வாருங்கள்.

 .................................
 ..................................................................
...................................................................................................

உங்களுக்கு எத்தனை விடைகள் சரி்யாக வந்தன?

3 மார்க்குக்கு கீழே விடை தெரிந்தவர்களுக்கு ஹோம்வேக் நிறையவே இருக்கிறது. இன்னும் கொஞ்சம் சமையலும் தமிழும் கற்றுக் கொண்டு அடுத்த பரீட்சைக்கு வாங்க.

6 விடுகதைகளுக்கு மேலே கண்டு பிடித்தவர்களுக்கு பாஸ் சேர்டிபிக்கற் கிடைக்கிறது.

எல்லா விடைகளையும் சரியாகச் சொன்னவர்களுக்கு  ஒரு பரிசு தரலாமா.....

12 விடுகதைகளுக்கும் சரியான விடைகளை கண்டு பிடித்தவர்களுக்கு சின்னுரேஸ்டி விடுகதை  வெற்றிக் கேடயம் வழங்கப்படுகிறது. எடுத்துக்கொண்டு சென்று உங்கள் வீட்டில் சேமியுங்கள்.

10 எடுத்தவர்களின் அழும் ஓசை காதில் விழுகிறது சரி நீங்களும் கேடயத்தை பிடித்துக் கொள்ளுங்கோ....

பிறக்கும் 2012 அனைவருக்கும்  சகல சிறப்புகளும் அள்ளித் தரும் ஆண்டாக அமைய  வாழ்த்துகிறேன்.

- மாதேவி -

Sunday, December 4, 2011

பனம் பழத்தில் பதமான பணியாரம்

சிறுவயதில் பனம்பழம் சாப்பிடதில்லையா?

மாம்பழமும் பனம்பழமும் யாழின் தனித்துவத்திற்கு அடையாளமான பழங்களாகும்.

தின்னத் தின்ன ஆசை..

பனம்பழம் நன்கு கனிய முன்னர் நுங்கு என அழைக்கப்படும். நுங்கை வெட்டி நுங்கை அதன் மூளில் வைத்துச் சுவைத்ததை என்றும் மறக்க முடியாது.

முற்றிய சீக்காயை ஆசையால் நிறையச் சாப்பிட்டு வயிற்றுக் குத்து வந்தவர்களும் இருக்கத்தான் செய்தார்கள்.

சூப்பப் போறார் பனம் பழத்தை..

ஏழைகளின் உணவாகவும் பனம்பழப் பொருட்கள் இடம் வகித்திருக்கின்றன என்பதையும் மறக்க முடியாது. பனம்பழம் துவர்ப்பும் இனிப்பும் கலந்த அலாதியான சுவையைக் கொடுக்கும்.

பனம்பழத்தை பழமாகவும் அவித்தும் சுட்டும் உண்பார்கள்.  சுவைக்குப் பனங்களியுடன் புளியும் கலந்து சாப்பிடுவார்கள். சண்டைக் காலத்தில் சவர்க்காரம் ஆனை விலை விற்ற போது பனம்பழத்தை தோய்த்து உடைகளைக் கழுவிய காலம் நினைவுக்கு வருகிறது.

கழுவிய உடைகளை உலரவிட்ட நேரம் மாடுகளும் அவற்றைச் சுவைத்துப் பார்த்தது பொய்க் கதையல்ல.

பனம்பழக் காலத்தில் வீடுகளில் செய்யும் பனங்காய்ப் பணியாரம். ஓலைப் பெட்டியில் அமர்ந்து தென் இலங்கையில் உள்ளோர் சுவைக்கப் பயணமாகும். ரெயில் ஏறி பயணித்த காலமும் ஒன்று இருந்தது.

இப்பொழுது இரயிலும் ஓலைப் பெட்டிகளும் யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போய்விட்டன.

கொழும்பில் பம்பலப்பிட்டி கற்பகம் பனம்பொருள் கடையில் பனம்பொருட்கள் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. இது பனை அபிவிருத்தி சபையினால் நடாத்தப்படுகிறது.

பனம் களியும் போத்தல்களில் கிடைக்கிறது.

பனம்பழக் காலத்தில் புத்தளம், சிலாபத்திலிருந்து வரும் பனம் பழங்கள் ரூபா 100- 150 என கொழும்பில் விற்பனையாகும்.

'....பச்சோலை சல சலத்து,
நுங்குக்கண் முற்றி, அடிக்கண் கறுத்து, நுனி சிவந்து
பங்குக்கு மூன்று பழம் தரவேண்டும் பனந்துண்டமே!..'

நம் ஊர் பனங்காணி

என ஒளவையார் பனம்பழத்தின் அழகை அருமையாகப் பாடியுள்ளார்.

 '..சேரனும், சோழனும்,
பாண்டியனும் ஒளவை சொற்படியே
மங்கலமாயுண்ட தெய்வப் பனம்பழம்..'

எனச் சோமசுந்தரப் புலவர் என எமது பனம்பழத்தை விதந்து பாடியிருப்பதும் குறிப்பிடத்தக்கது..

இன்று நாம் செய்யப்போகும் பனங்காய்ப் பணியாரத்துக்கான களி யாழ்ப்பாணத்திலிருந்து எனது நண்பியின் அக்கா அனுப்பியது. பனங்காயைப் பிழிந்து களி எடுத்து காச்சி போத்தலில் நண்பிக்கு அனுப்பியிருந்தார்.

நண்பியின் தயவால் கிடைத்த களியில் நான் செய்தது. பயணப்பட்டு வந்த களியில் செய்த பணியாரத்தின் சுவைக்கு ஈடு ஏதும் உண்டா.

சென்ற வருடம் யாழ் சென்ற போது எமது தோட்டத்து பனம் பழத்தை கொழும்பு கொண்டுவந்து பணியாரம் செய்தேன். 

செய்வோமா பணியாரம்.

நன்கு பழுத்த ஒன்று அல்லது இரண்டு பனம் பழத்தை நன்கு கழுவி எடுங்கள். மேலுள்ள மூளைக் கழட்டி விடுங்கள்.

துணியும் துவைக்கலாம், மாடும் நாமும் சாப்பிடுவோம்.

பனம் பழத்தின் மேலுள்ள நாரை சிறிய மேசைக் கத்தியினால் பழத்தின் மேல் பகுதியிலிருந்து நீள் பக்கமாக சீவி எடுங்கள்.

நார் வெட்டும் கைகள் பத்திரம்.

வெட்டி அகற்றிய பின்மீண்டும் பழத்தை தண்ணீரில் நன்கு கழுவுங்கள்.
பழத்தைப் பிரித்து இரண்டு மூன்றாக விதையுடன் பிரியும்.

அவற்றைப் பிழிந்து அதிலுள்ள களியை இரு கைகளாலும் அழுத்தி எடுங்கள்.

களி தும்புகளுடன் கூடி இருக்கும். மெல்லிய வெள்ளைத்துணி அல்லது கண்ணறைத் துணியை வைத்து களியை வடித்தெடுங்கள்.

வடித்தெடுத்த களியை அடுப்பில் வைத்து சீனி சேர்த்து  பச்சை வாடை போக காச்சி எடுங்கள். ஆறவையுங்கள்.

இப்பொழுது காச்சிய பனம்களி தயாராகிவிட்டது.

பணியாரத்துக்கு தேவையான பொருட்கள்

பனங்களி - 1 கப்
சீனி- ¼ கப்
பொரிக்க எண்ணெய் - அரை லீட்டர்.
அவித்த மைதாமா அல்லது வறுத்த உழுந்துமா அல்லது அரிசிமா - ¼ கப்
உப்பு சிறிதளவு.

பனங்களியும் நான் சுட்ட பலகாரமும்

செய்முறை

காச்சிய பனங்களியுடன் மைதாமா உப்பு சேர்த்து கிளறி எடுங்கள்.
தாச்சியில் எண்ணையை விட்டு நன்கு கொதிக்க மாவைக் கையில் எடுத்து சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு பொன்னிறத்தில் பொரித்து எடுங்கள். மீதிக் களியையும் அவ்வாறே செய்து கொள்ளுங்கள்.

ரிசூ பேப்பரில் போட்டு ஓயில் வடியவிட்டு ஆற வைத்த பின் இரண்டு மூன்று நாட்கள் வைத்துச் சாப்பிடுங்கள்.

மீண்டும் மீண்டும் சாப்பிட்டு உடனேயே தட்டுக் காலியாகிவிடும்.

சற்று நேரத்தில் காலியாகப் போகும் ..

குறிப்பு -
  • (மைதாமா கலந்தால் மெதுமையான பணியாரம் கிடைக்கும்.
  • அரிசிமா, உழுந்துமா சற்று உரமாக இருக்கும். 
  • மா கலக்காமல் தனியே களியிலும் செய்வார்கள் இது கடித்துச் சாப்பிடும் போது களிப் பிடியாக இருக்கும்.
0.0.0.0.0.0