Saturday, August 29, 2009

வத்தாளை கிழங்கு சிப்ஸ்

படர்ந்து வளரும் கொடி இனத்தைச் சேர்ந்த கிழங்கு வகைகளில் இதுவும் ஒன்று. மத்திய அமெரிக்காவிலிருந்து வந்த இது இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் அதிகம் வளருகிறது.

இலங்கையில் வத்தாளை என்பதை தமிழ்நாட்டில் வள்ளிச் சீனிக் கிழங்கு என்பர். Sweet potatoes என ஆங்கிலத்தில் அழைக்கப்படுவதை தாவரவியலில் Ipomoea batatas எனப்படும்.

ஆபிரிக்காவில் நயமி Nyami என அழைக்கப்பட்டதே Yam என ஆங்கிலத்தில் மருவியது என்கிறார்கள் மொழி வல்லுணர்கள். அதிக மாப்பொருளும், ஈரலிப்புத் தன்மையும் கொண்ட இது உருளைக்கிழங்கு போல் மஞ்சளாக அல்லாது இளம் கத்தரிப்பூ நிறம் கொண்டது.

போஷணைக் கிழங்கு

இதில் மாப்பொருள் 28 சதவிகிதமும், 2 சதவிகித புரதமும் உண்டு. ஆயினும் உருளைக் கிழங்கில் 28 சதவிகிதம் மட்டுமே மாப்பொருள் உண்டென்பது குறிப்பிடத்தக்கது. நார்ப்பொருள் அதிகம் உண்டு.

இவ்வாறு பல்வேறு போஷணைப் பொருட்கள் கொண்டதால் பல நாடுகளில் பிரதான உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது.

இதில் அதிகளவு விற்றமின் ஏ, மற்றும் சீ (Vitamin A, C) உள்ளது. பொட்டாசியம், போலிக் அமிலம், விற்றமின் B6 ஆகியனவும் உண்டு.

சுவையான கிழங்கு

இனிப்புச் சுவை கூடியது. சேமித்து வைக்கும் போதும் சமைக்கும் போதும் இதன் இனிப்புத் தன்மை மேலும் அதிகரிக்கும். அதனால் சிறுவர்கள் விரும்பி உண்பர்.

கிழங்கை அவித்து எடுத்து காலை உணவாகவும், ஈவினிங் சிற்றுண்டியாகவும் உண்பதுண்டு.

பச்சை மிளகாய், மஞ்சள் இட்டு தேங்காயப் பால் கறியாகவும், மிளகாய்ப் பொடி இட்டு குழம்பாகவும், அவித்தெடுத்த கிழங்கை சலட் வகைகளிலும் கலந்து கொள்ளலாம்.

வேண்டியவை

வத்தாளைக் கிழங்கு – 2
மிளகாய்த் தூள் – ½ ரீ ஸ்பூன்
உப்பு தேவைக்கு ஏற்ப
பொரிப்பதற்கு ஓயில் ¼ லீட்டர்
விரும்பினால்
மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி சிறிதளவு

செய்து கொள்வோம்


கிழங்கின் தோலை நீக்கி தண்ணீரில் நன்கு கழுவிக் கொள்ளுங்கள். தோல் நீக்கியவுடன் கிழங்கு கறுக்கும் தன்மை அடைந்துவிடும். அதனால் பெரிக்கும் நேரம் சீவி எடுத்துக் கொள்ளுங்கள்.

கிழங்கை மெல்லிய வட்டங்களாகச் சீவி எடுத்துக் கொள்ளுங்கள். பெரிய கிழங்காக இருந்தால், இடையே கீறி வெட்டிக் கொள்ளுங்கள்.

தாச்சியில் எண்ணெயை விட்டு நன்கு கொதி வந்ததும் வெட்டிய துண்டங்களைப் போட்டு பிரவுன் கலரில் பொரித்து எடுங்கள்.

அடிக்கடி கிளறிக் கொண்டால் ஒரு புறமாகக் கருகிவிடாமல் இருக்கும்.

இறுதியில் விரைவில் பொரிந்துவிடும் ஆதலால் கவனமாக தீயைச் சற்றுக் குறைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

எண்ணெய் வடியவிட்டு சற்று ஆற உப்பு, மிளகாய்ப் பொடி தூவிக் கொள்ளுங்கள்.

உப்பு, இனிப்பு, உறைப்புச் சுவையுடன் இருக்கும் சிப்ஸ் அனைவரும் விரும்பிக் கொறிப்பார்கள்.

போத்தலில் இட்டு இறுக மூடி வைத்துக் கொண்டால் இரண்டு மூன்று நாட்களுக்கு கொறித்துக் கொள்ளலாம்.

மிளகாய்ப் பொடி பிடிக்காதவர்கள் உப்பு, மஞ்சள் பொடி, சிறிதளவு மிளகுப் பொடி, பெருங்காயப் பொடியை முதலே பிரட்டி பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

மாதேவி


Saturday, August 15, 2009

பயத்தங்காய் பலாக் கொட்டைப் பிரட்டல்

இந்துக்களின் முக்கிய விரத நாட்களில் இக் கறியும் சமைக்கப்படும். திவசம், அமாவாசை, பௌர்ணமி போன்ற பிதுருக்கு படைக்க வேண்டிய படையலில் நிச்சயமாக இக் கறியும் இடம் பெறுவது வழக்கம்.

பீன்ஸ் இனத்தைச் சேர்ந்த இது புரொட்டின் சத்தும் கூடியது. விரத நாட்களில் மட்டுமின்றி வீடுகளில் சாதாரண நாட்களிலும் இது சமையலில் இடம் பிடிக்கும்.

நீண்ட முற்றல் இல்லாத ஊர்ப் பயிற்றங்காயாக இருப்பது சுவையைக் கூட்டும்.


இக்காயுடன் வாழைக்காய் அல்லது உருளைக் கிழங்கு சேர்த்து குழம்பு செய்வதுண்டு.

இத்துடன் தேங்காய்ப்பால் வெள்ளைக்கறியும் சமைக்கலாம்.

பொரியல், கூட்டு செய்வதும் வழக்கம்.

முற்றிய விதைகளைப் பொரித்தெடுத்து சிப்ஸ்சும் செய்து கொள்வார்கள். காய்ந்த விதைகளை அவித்தெடுத்து சுண்டலாக உண்ணுவதும் வழக்கம்.

பொதுவாக முதலில் எண்ணெய் விட்டு, கடுகு வெங்காயம் தாளித்த பின் காயையும் போட்டு நன்கு வதக்கிய பின்பு தேங்காய்ப்பால், உப்பு, மிளகாய்ப் பொடி போட்டு சமைப்பார்கள்.

இன்றைய முறையில் காயை வதக்காமல் நேரடியாகச் சமைத்த பின்பு தாளித்து சேர்ப்பதால் காய் நன்றாக அவிந்து மென்மையாக இருக்கும்.

கறியும் நல்ல வாசத்துடன் இருக்கும்.

செய்து கொள்வோமே!

பொருட்கள்

பயிற்றங்காய் - ¼ கிலோ
பலாக்கொட்டை – 10
சின்ன வெங்காயம் - 5-6
பச்சை மிளகாய் - 1
வெந்தயம் - ½ ரீ ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 ரீ ஸ்பூன்
தனியா தூள் - ½ ரீ ஸ்பூன்
சீரகத் தூள் - ½ ரீ ஸ்பூன்
தேங்காய்ப்பால் - 1 ½ ரீ கப்
தேசிப் புளி – 1 ரீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிக்க

ஓயில் - 2 ரீ ஸ்பூன்
கடுகு – ½ ரீ ஸ்பூன்
உழுத்தம் பருப்பு- ½ ரீ ஸ்பூன்
சாம்பார் வெங்காயம் - 4-5
கறிவேற்பிலை – சிறிதளவு

செய்முறை

காயை இரண்டு அங்குல நீள் துண்டங்களாக முறித்து எடுங்கள்.


பலாக்கொட்டையின் மேல் தோலை நீக்கிவிடுங்கள். உட் தோலை விரும்பாதுவிட்டால் தண்ணீரில் 5 நிமிடங்கள் போட்டு தோலைச் சுரண்டி எடுத்துவிடுங்கள். ஆனால் அதில் அதிக ஊட்டச் சத்து உள்ளதை மறந்து விடாதீர்கள்.

பாலாக்கொட்டையை பாதியாக நீளவாட்டில் வெட்டி வையுங்கள்.

வெங்காயம் சிறியதாக வெட்டிக் கொள்ளுங்கள்.

பச்சை மிளகாயை இரண்டு துண்டுகளாக வெட்டி விடுங்கள்.

தாச்சியில் காய், பலாக்கொட்டை, வெட்டிய வெங்காயம் மிளகாய் இவற்றுடன் வெந்தயம், உப்பு, தூள் வகைகள் சேர்த்து, தேங்காய்ப்பாலை ஊற்றி கலக்கி இறுக்கமான மூடி போட்டு அவியவிடுங்கள்.

பத்து நிமிடங்களின் பின் திறந்து தட்டைக் கரண்டியால் பிரட்டிவிட்டு, தீயை சற்றுக் குறைத்து வையுங்கள்.

இரண்டு நிமிடங்களின் பின் மூடியைத் திறந்து பிரட்டிவிடுங்கள்.

தீயை நன்றாகக் குறைத்து வைத்து காய் நன்கு வரண்டு வர தீயை அணைத்து
எலுமிச்சம் சாறு விட்டு பிரட்டி இறக்குங்கள்.

ஓயிலில் தாளிக்கும் பொருட்களைத் தாளித்து, சமைத்த காய்களைக் கொட்டி ஒரு தடவை பிரட்டி இறக்கிவிடுங்கள்.

சேவிங் போலில் எடுத்து வையுங்கள்.

கமகம மணத்துடன் பயிற்றங்காய் பிரட்டல் தயார்.

மாதேவி

Sunday, August 2, 2009

சுவீற் அன்ட் சவர் டால்

பருப்பு வகைளிலே பாசிப்பருப்பிற்கு தனி ஒரு இடம் உண்டு. முழுப் பாசிப் பருப்பாகவும் உடைத்த பாசிப் பருப்பாகவும் பயன்படுத்திக் கொள்கிறோம்.

பச்சையாகவும், வறுத்தெடுத்தும் சமையல் செய்யலாம். வறுத்தெடுத்த பருப்பு நல்ல மணத்தையும் சுவையையும் கொடுக்கும்.

பாசிப்பருப்பில் குழம்பு, சுண்டல், இனிப்புத் துவையல், பொரியல், சட்னி, சாம்பார், கூட்டு, போன்ற கறிவகைகளைச் செய்யலாம்.


அடை, கொழுக்கட்டை, மோதகம், பிட்டு, வடை, தோசை போன்ற சிற்றுண்டி உணவு வகைகளும் செய்து கொள்ளலாம்.

இன்றைய சமையல் வறுத்து உடைத்;தெடுத்து தோல் நீக்கிய பாசிப்பருப்பில், மாங்காய் சேர்த்து சுவைக்கு வெல்லங் கலந்து சுவீற் அன்ட் சவர் டாலாக செய்தது.

காரச் சுவைக்கு சிறிது மிளகாய்ப் பொடி சேர்த்து ரொட்டி , தோசை, சாதம். பிரியாணி, சப்பாத்தி, நாண், என எதற்கும் ஏற்றது. சைட் டிஸ்சாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

1. பாசிப்பருப்பு வறுத்து உடைத்தெடுத்தது – ½ கப்
2. மாங்காய் - 1
3. மிளகாய்ப் பொடி - 1 ரீ ஸ்பூன்
4. மஞ்சள் பொடி - ¼ ரீ ஸ்பூன்
5. கறுவாப் பொடி – சிறிதளவு
6. உப்பு தேவைக்கு ஏற்ப
7. வெல்லம் - 2 கட்டி

தாளிக்க

ஓயில் - 1 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1
பூண்டு – 3
செத்தல் - 2
கடுகு சிறிதளவு
உழுத்தம் பருப்பு சிறிதளவு
கறிவேற்பிலை சிறிதளவு

செய்முறை


முற்றிய புளிப்பான மாங்காயை தோலுடன் நடுத்தரத் துண்டுகளாக வெட்டி வையுங்கள்.

வெங்காயம் பூண்டு செத்தல் சிறியதாக வெட்டி எடுங்கள்.

பருப்பை 2 ½ கப் நீரில் அவிய வைத்து, வெந்ததும் மாங்காய்த் துண்டங்களைப் போட்டு அவிய விடுங்கள்.


பின்பு மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, கறுவாப் பொடி, தேவைக்கு ஏற்ப உப்பு கலந்து கிளறி ஒரு கொதிவிட்டு, வெல்லம் சேர்த்து இறக்குங்கள்.

ஓயிலில் செத்தல், கடுகு, உழுத்தம் பருப்பு தாளித்து, பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கி இறுதியில் கறிவேற்பிலை சேர்த்து பருப்பில் கொட்டிக் கிளறி விடுங்கள்.

வறுத்த பருப்பும் தாளித வாசமும் கமகமக்க சுவை தரும்.

மாதேவி.