Wednesday, January 21, 2009

பலாக்கொட்டை பொரியல்

'பிள்ளை கடிக்க முடியாமல் கிடக்கு' என்பார் அப்பா. சற்று மொறுகலாகப் பொரித்தால்.

'என்னம்மா சப்பென்று வாய்க்குள் நொளுநொளுக்குது' என்பான் மகன் சற்று முன்னதாகவே எடுத்தால்.

ஆம்! கடிப்பதற்கு நல்ல கடினமாக இருக்கும். ஆனால் சற்று முன்பே எடுத்துக் கொண்டால் மொறுமொறுப்பு இல்லாமல் வந்துவிடும்.

இரண்டையும் தவிர்க்க பலாக்கொட்டைகளை முதலில் சற்று அவித்தெடுத்த பின்பு பொரித்துக் கொண்டால் உள்ளே மாப்பிடியாகவும் இருப்பதுடன், மேலே மொறுமொறுப்பு சேர்ந்ததாகவும் இரண்டு வகை சுவையையும் சேர்ந்து கொடுக்கும்.

வயதானவர்களும் சப்பிச் சாப்பிடக் கூடியதாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

பலாக்கொட்டை – 15
மிளகாய்ப் பொடி – ¼ ரீஸ்பூன்
விரும்பினால் மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி - சிறிதளவு.
உப்பு தேவையான அளவு
பொரிப்பதற்கு எண்ணெய்

செய்முறை

நல்ல கெட்டியான பலாக்கொட்டைகளாகத் தேர்ந்தெடுங்கள். மிகப் புதியதும் சரிப்படாது. நாட்பட்டதும் கூடாது. அவற்றின் மேல்தோலை நீக்கி நீர் விட்டு இரண்டு கொதிவர அவித்து எடுங்கள்.

ஆறிய பின்பு அவற்றை குறுக்கே ஒரு வெட்டு வெட்டி இரண்டாக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.

எண்ணெயை கொதிக்க வைத்து பொரித்து எடுங்கள். பொன்னிறமாகப் பொரித்து எடுப்பது அவசியம். எண்ணெயை வடிய விட்டு உப்பு மிளகாய் பொடி தூவி விடுங்கள். இம்முறையில் பொரித்த பின் பொடிகள் தூவுவது வித்தியாசமான சுவையைக் கொடுக்கும்.

விரும்பினால் வழமை போன்று பொரிப்பதற்கு முன்பே உப்பு மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி பிரட்டிப் பொரித்துக் கொள்ளலாம்.

மாதேவி

Wednesday, January 14, 2009

அம்மா சுட்ட தோசைகள்

அம்மா சுட்ட தோசை
தின்னத் தின்ன ஆசை ...

அம்புலி மாமா தோசை
ஆனைத் தோசை
பூனைத்தோசை
வட்டத்தோசை
கோழிக் குஞ்சுத் தோசை
எனப் பலவிதமாய்
பாப்பாவுக்கு ஒண்டு.

குண்டுத்தோசை
பேப்பர் தோசை
மசாலாத் தோசை
அனியன் தோசை
நெய்த் தோசையாய்
உருவெடுக்கும்.
அப்பா அம்மா தாத்தா பாட்டிக்கு.

சாதாரண தோசைமா இன்னும் பலவடிவில் உருமாறும்.

சாதாரண தோசையை சட்னி சாம்பாருடன் உண்பதைவிட பருப்புக்கள் மரக்கறிகள் பரப்பி சுட்டு எடுப்பது வித்தியாசமான சுவையைக் கொடுப்பதுடன் புரதம், விட்டமின், நார்ச் சத்துக்களும் கிடைக்கும்.

முந்திரி நட்ஸ் பிளம்ஸ் தோசை

முந்திரி பாதம், பிட்ஸா, நட்ஸ், வகைகளை சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்து, இதனுடன் பிளம்ஸ் கலந்து வையுங்கள். தோசையை ஊற்றி அதன் மேல் இரண்டு டேபிள் ஸ்பூன் நட்ஸ் கலவையைப் போட்டு மூடி போட்டு ஒரு புறம் சுட்டு எடுங்கள்.



பருப்பு, தேங்காய் துருவல், சரக்கரை தோசை

அவித்தெடுத்த கடலைப் பருப்பு பாசிப்பருப்பு துவரம் பருப்பு சோளம் பட்டாணி ஏதாவது ஒன்றினை தேங்காய் துருவல் சர்க்கரை கலந்து வையுங்கள். தோசை மாவை ஊற்றி இரண்டு டேபிள் ஸ்பூன் பருப்புக் கலவையைப் பரப்பி ஒரு புறம் சுட்டு எடுங்கள்.

பிட்ஸா தோசை

கரட் ½, தக்காளி - 1, வெங்காயம் - ½, மல்லித்தளை சிறிதளவு
கரட்டை துருவி எடுங்கள். ஏனையவற்றை சிறியதாக தனித்தனியே வெட்டி வையுங்கள். உப்பு மிளகு தூள் கலந்து விடுங்கள்.

தோசை மாவை ஊற்றி நடுவில் வெட்டிய வெங்காயம், அதை அடுத்து சுற்றி வர கரட் துருவல் அதைச் சுற்றி மல்லித்தழை ஓரத்தில் சுற்றி வர தக்காளித் துண்டுகள் எனத் தூவி விடுங்கள். சுற்றிவர சிறிதளவு எண்ணெய் விடுங்கள். வேக இறக்கி சீஸ் தூவி, தக்காளி ஸோசுடன் பரிமாறுங்கள்.

கலர் புல் பிட்ஸா தோசை அனைவரையும் கவரும்.
விரும்பினால் இவற்றுடன் அவித்த கடலை, பீன்ஸ், முளைத்த பாசிப் பருப்பு சேர்த்துக் கொள்ளலாம்.

இவற்றுடன் யாழ்ப்பாண முட்டைத் தோசை பற்றியும் கூறாமல் இருக்க முடியுமா?

நல்லெண்ணெய் வாசத்துடன் கமகமக்கும் அதன் ருசியை நினைத்தாலே ....

முட்டை ஒன்றை எடுத்து சிறிது உப்பிட்டு நன்றாக அடித்து வையுங்கள். தோசையை ஊற்றி அதன்மேல் முட்டையைக் கரண்டியால் ஊற்றிக் கொள்ளவும். சுற்றி வர நல்லெண்ணெய் ஊற்றி வேகவிட்டு, மறுபுறம் பிரட்டி ஒரு நிமிடம் விட்டு எடுத்துவிடுங்கள். ஒரு புறமாக மூடி போட்டும் சுட்டுக் கொள்ளலாம்.

:..... மாதேவி ......:

Monday, January 5, 2009

மரவள்ளிக் கிழங்கு தாளிதம்

உடன் கிண்டி எடுத்த 'பிரஸ்' மரவள்ளிக் கிழங்கை மறக்க முடியுமா? கிராமங்களில் மட்டுமே கிடைக்கக் கூடியது அது. ஏழை மக்களின் நாளாந்த உணவில் தவிர்க்க முடியாதது.

அடைமழை காலத்தில் வெளியே சென்று காய்கறிகள் வாங்க முடியாத வேளையில் பின் வளவில் வளர்ந்து நின்று அவசரத்திற்குக் கை கொடுக்கும்.

"முழுகிவிட்டு வரும் பருவப் பெண்ணின் கூந்தலில் இருந்து நீர் சொட்டுவது போல் தலைகளைத் தொங்கப் போட்டுக் கொண்டு நின்ற மரவள்ளி இலைகளிலிருந்து மழைத் துளிகள் சொட்டிக் கொண்டிருக்கின்றன."

என ஈழத்தின் மூத்த எழுத்தாளர் நீர்வை பொன்னையன் தனது 'சம்பத்து' சிறுகதையில் ஓரிடத்தில் சொல்கிறார். செழித்து வளர்ந்த நீர்வேலி மரவள்ளித் தோட்டங்களை ஆழ்ந்து ரசித்தவரல்லவா?

ஆம்! மரவள்ளிச் செடியின் அழகோ அழகுதான்.

மரவள்ளித் தோட்டங்களைச் சுற்றி ஒழித்து விளையாடிய நாட்கள் மீண்டும் வருமா? வெய்யிலுக்கு இதமான குளிர்மை தரும் மாலைக் காற்றில் ஆடி அசையும் அழகோ சொல்லி மாளாது. மாலைச் சூரியனின் ஒளியில் பசுமையான இலைகள் தங்கமென தகதகக்கும்.

கிழங்கை நெருப்பில் வாட்டி எடுத்துச் சுவைத்தால் சுவைதான். அவித்த கிழங்குடன் காரச் சம்பல் தொட்டுச் சாப்பிட்டால் அப்பபா ஊ ஊ என உறைக்கிறது. இருந்தும் நாக்கு மீண்டும் சுவைக்கத் தூண்டும்.

மரவள்ளி சிப்சின் சுவை அலாதியானது. குழந்தைகளின் ஆசைக்கு உகந்த உணவாகும். உப்பும் மிளகாய்ப் பொடியும் சேரும்போது ஆகா! அற்புதம்.

"போடா போய் குளிச்சிட்டு வா. புள்ளை அந்தப் பழஞ்சோறு, குரக்கன் புட்டு, மரவள்ளிக் கிழங்குக் கறி, தயிர் எல்லாத்தையும் எடுத்து வை. நான் கொண்ணைக்கு குழைச்சு உறுட்டிக் குடுக்க."

என அதே நீர்வை பொன்னையன் 'அழியாச் சுடர்' என்ற சிறுகதையில் விபரிக்கிறார்.

அதன்போது கிராமங்களில் மரவள்ளியின் முக்கியத்துவமும், தாயின் பாசமிகு ஊட்டலும், மரவள்ளிக் கிழங்குக் கறியின் சுவையையும் உணர முடிகிறது அல்லவா?

மரவள்ளியில் புரதச் சத்துக் குறைவு. எனவே புரதம் கூடிய உணவு வகைகளான கச்சான், கடலை, கௌபீ சேர்த்துச் சாப்பிடுவது நல்லது. சமபல உணவாக நன்மை தரும்.

ஆவியில் வேக வைத்த மரவள்ளிக் கிழங்கு தாளிதம்


தேவையான பொருட்கள்


1. மரவள்ளிக் கிழங்கு – 1
2. வறுத்த கச்சான் - ¼ கப்
3. தக்காளி – 2
4. வெங்காயம் - 1
5. வறமிளகாய் - 3
6. பூண்டு – 2
7. கறிவேற்பிலை – சிறிதளவு
8. உப்பு – வாய் ருசிக்கு ஏற்ப
9. கடுகு - விரும்பினால்
10. கறுவாத் தூள் ¼ ரீ ஸ்பூன்
11. ஓயில் - 2 ரீ ஸ்பூன்


செய்முறை

மரவெள்ளி வேரை நீக்கி அரை அங்குல அளவுள்ள சிறிய துண்டங்களாக வெட்டி எடுங்கள்.

அதை நீராவியில் வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

சிறிதளவு எண்ணெயில் கடுகு, கறிவேற்பிலை, பூண்டு, வறமிளகாய், வெங்காயம், தாளித்து தக்காளி போட்டு வதக்கி உப்பு கறுவாத் தூள் போட்டு, கிழங்குத் துண்டுகளைக் கொட்டிப் பிரட்டி எடுத்து வையுங்கள்.

இத்துடன் வறுத்த கச்சான் தூவி பரிமாறுங்கள்.

:- மாதேவி -: