Wednesday, June 8, 2011

இமயமலை அடிவாரச் செடியில் எமது வீட்டில் பால்கறி

உச்சாணிக் கொப்பிலே உலக்கை கட்டித் தொங்குது!

அது என்ன?

அவர் இவர்தான்.

அனைத்து மண்ணிலும் வளரக் கூடிய மரம். சிறப்பாக வரட்சியான மணற்தரையில் சிறந்த பயன் தரும். இது 30 அடி உயரம் வரை வளரக் கூடியது. அதிக கிளைகளைக் கொண்டிருக்கும்.


வீ ட்டு வேலிகளிலும், முற்றத்திலும், கொல்லையிலும் நாட்டி இருப்பார்கள். தோட்டங்களிலும் பயிரிடப் படுகிறது. ஆறுமாதத்தில் பலன் கொடுக்கும்.


மரத்தின் பூர்வீகம் இமயமலையின் அடிவாரம் என்கிறார்கள். பின்பு பங்களாதேஸ், பாகிஸ்தான், அப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், ஆபிரிக்கா,  இந்தியா,  இலங்கை எனப் பரவி தாய்லந்து, தாய்வானிலும் பயிரப்படுகிறது.

Moringa ceae குடுப்பத்தைச் சேர்ந்தது. Moringa Oleifera என்கிறார்கள். கோடையில் தாரளமாகக் கிடைக்கும் காய் இனம் இது. மழை இதற்கு எதிரி. விளைச்சல் பாதிக்கப்படும். பூக்களை உதிர்க்கும்.

இதில் சிறிய கட்டைக் காய் இனம், ஒரு மீட்டர் வரை நீண்ட காய் இனம், களிக்காய் என மொத்தமான காய்,  எனப் பல புதிய ரகங்கள் இருக்கின்றன.

செடி இனம். விதை வைத்துப் பயிரிடப்படும். ஏனையவை கொப்புகளை வெட்டிப் பதியிட்டு வளர்ப்பர்.

  • பெங்காளியில் shojne,  
  • தெலுங்கு Munagakaya,  
  • தமிழ் முருங்கைக் காய். 
  • மலையாளம் Muringa.   
  • ராஜஸ்தானியில் Shenano,  
  • பிலிப்பினோ Malunggay.

100 கிராமில் கொழுப்பு 0.1 கிராம், காபோஹாரேட் 3.7 கிராம், நார்ச்சத்து 4.8 கிராம், புரதம் 2.5 கிராம், விற்றமின் C 120 மி.கிராம். விற்றமின் A 110 மி.கிராம், கல்சியம் 30 மி.கிராம்,

இதில் பலவகையான பைரோநியூரியன்டஸ் (Phytonutrients) பல உண்டு. Alpha-carotene, Beta-Carotene, Beta-cryptoxanthin, Lutein, Zeaxanthin and Chlorophyll. இவை உடலிலுள்ள நச்சுப் பொருட்களை அகற்றி உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். அத்துடன் 46 மேற்பட்ட வகையான ஒட்சிசனெதிரிகள் (antioxidants) இருக்கின்றன.

மரத்தின் இலை, பூ, பட்டை என சகலதுமே உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தக் கூடியது. மருத்துவப் பொக்கிஸங்கள் என்கிறார்கள். தமிழ் வைத்தியத்தில் நரம்புத் தளர்ச்சிக்கும், பசியின்மைக்கும் அருமருந்து என்கிறார்கள்.

குழம்பு,  வரட்டல்,  சாம்பார்,  தீயல்,  கூட்டு,  பொரித்த குழம்பு, முருக்கைக்காய்ப் பிரட்டல், காரக் கூட்டு முருக்கைக்காய்சரக்குத் தண்ணி - பத்திய உணவு , சூப்,  கட்லட்,  வடை,  வடகம்,  பொரியல்,  சாதம்,  அசைவம் கலந்த குழம்பு,  மிக்ஸ்ட் வெஜிற்றபில் சொதி எனப் பல வகையாக சுவை கொடுக்கும்.


தேங்காய்ப் பால்கறி
தேவையான பொருட்கள்

முருங்கைக் காய் - 2
பலாக்கொட்டை - 10
கிழங்கு - 1
பச்சை மிளகாய் - 2
சாம்பார் வெங்காயம் - 6-7
கட்டித் தேங்காய்ப்பால் - 4 டேபிள் ஸ்பூன்
தேசிப்புளி  -1 ரீ ஸ்பூன்
கறிவேற்பிலை - 1 இலை
உப்பு தேவையான அளவு

தாளிக்க

கடுகு - ¼ ரீ ஸ்பூன்
செத்தல் மிளகாய் - 1
கறிவேற்பிலை -1 இலை
எண்ணெய் - 1 ரீ ஸ்பூன்

செய்முறை


காயை விரலளவு துண்டங்களாக வெட்டி தோலை சீவி எடுங்கள். துண்டுகளை முக்காற் பாகம் வரை கீறிவிடுங்கள். 

பலாக்கொட்டையின் மேல்தோலை நீக்கி எடுத்து நீளவாட்டில் இரண்டாக வெட்டுங்கள்.

கிழங்கை தோல் சீவி விரும்பியபடி துண்டங்களாக வெட்டி மிளகாயைக் கீறி வைத்துக் கொள்ளுங்கள்.

வெங்காயம் நீள் துண்டுகளாக வெட்டிவிடுங்கள்.

பாத்திரத்தில் காய்களைப் போட்டு கிழங்கு பலாக்கொட்டை மிளகாய் வெங்காயம் உப்புச் சேர்த்து ஒரு கப் தண்ணீர் விட்டு மூடி போட்டு, 5 நிமிடங்கள் அவியவிடுங்கள்.

பின்பு பிரட்டி மூடிவிடுங்கள். 2 நிமிடத்தில் திறந்து தண்ணீர் வற்றிய பின்  தேங்காய்ப்பால் ஊற்றி ஒரு கொதி வர இறக்கி தேசிப்புளி விடுங்கள். பிரட்டிவிடுங்கள்.

தாளித்து கலந்துவிடுங்கள்.

( பத்தியக் கறியாகத் தயாரிக்கும்போது தாளிப்பதைத் தவிர்த்துவிடுங்கள்  )

முருங்கையின் பயன்கள் பற்றிய மேலும் பல தகவல்களை அறிய கீழே யூ ரியூப் கிளிக் பண்ணுங்கள்
முருங்கை அற்புதத் தாவரம்.

:- மாதேவி-: