Sunday, August 3, 2008

இடியப்பம் + அதற்கான வெஜி டிஸ்களும்


காலைத் தூக்கம் பற்றி சொல்லவே தேவையில்லை. இதமான மெல்லிய குளிர் காற்று உடலை வருடிக் கொண்டிருக்க ஆழ்ந்து உறங்குவதிலுள்ள சுகம் எழுத்தில் சொல்லி மாளாது.

அவ் உறக்கத்தின் ஊடே அம்மாவி்ன் அம்மாவின் கைமணமும் சேர்ந்து வருமே அடுக்களையிலிருந்து. முட்டைப் பொரியலின் மணமும் அதனுடன் கூடிய பாற்சொதியின் வாசமும் சேர்ந்து மூக்கைத் துளைக்க தூக்கம் தானே பறக்கும். வயிறு எழ ஆரம்பிக்கும்.

'இன்று என்ன சாப்பாடு என்ற எண்ணமும் பிறக்குமே'. அதற்குள் மிளகாய் வறுத்த கார வாசமும் எழ புரிந்துவிடும்.

ஐ . . . இடியாப்பம்.
உரலின் ஓசை உறுதிப்படுத்தும்.

அடி சக்கை இடிசம்பலும் கிடைக்கும்போல!

இடியப்பத்திற்குள் நாமும் செல்வோமா?

இடியப்பம்
தேவையான பொருட்கள்

வறுத்த அரிசிமா -2 கப்
அவித்த மைதாமா - 1/4 கப்
உப்பு சிறிதளவு
கொதிநீர்


செய்முறை

ஒரு பாத்திரத்தில் மாவைப் போட்டு உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து ஆவி பறக்கும் சூட்டில் எடுத்து சிறிது சிறிதாக ஊற்றி மரக்கரண்டிக் காம்பால் கிளறி இறுக்கமான மாவு தயாரித்து எடுக்கவும்.

இட்லிப் பாத்திரம் அல்லது ரைஸ் குக்கரில் நீர் விட்டு, ஸ்ரிம் தட்டு போட்டு பாத்திரத்தை மூடி கொதிக்க வையுங்கள். இடியப்ப உரலை எடுத்து மாவை வைத்து தட்டுக்களில் பிழிந்து வையுங்கள். அழகாக வட்டம் போல சுற்றுங்கள். இரண்டு தடவை மட்டும் சுற்றினால் சிறிதாக, பார்வைக்கும் உண்பதற்கும் இதமான அளவில் இடியப்பம் இருக்கும்.

தண்ணீர் கொதித்ததும் பிழிந்த இடியப்பங்களை அவித்து எடுங்கள். 5-7 நிமிடங்கள் வரை அவியவிட்டால் பதமாக இருக்கும்.

ஐ! இடியப்பம் தயார். சாப்பிடக் கூப்பிடுங்க.

குறிப்பு :- வெள்ளை அரிசி மாவாக இருந்தால் கண்ணுக்கு அழகாக இருக்கும். ஆனால் சிவத்த மாவில் செய்தால் தவிட்டுச் சத்தும் சேர்வதால் ஆரோக்கியத்திற்கு நல்லது.
அவித்த மைதா மாவிலும் செய்து கொள்ளலாம். கொதிநீரை சற்று ஆறவிட்டு மாவைக் குழைத்தால்தான் இடியப்பம் பதமாக வரும்.


மிக்ஸ்ட் வெஜிற்றபில் சொதி

தேவையான பொருட்கள்

முருங்கைக் காய் - 5,6 துண்டுகள்
கரட் - சின்னது - 1
உருளைக்கிழங்கு - 1
போஞ்சி - 5,6
தக்காளிப்பழம் - 2
சின்ன வெங்காயம் - 6,7 அல்லது பெரிய வெங்காயம் பாதி
பச்சை மிளகாய் - 4
தேங்காய்த் துருவல் - 2 கப்
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
சோம்பு -
1/4 தேக்கரண்டி
தேசிச்சாறு -
1/2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி சிறிதளவு (விரும்பினால்)
உப்பு தேவைக்கு ஏற்ப
கறிவேற்பிலை -
சிறிதளவு

தாளிக்க விரும்பினால்

கடுகு -
1/4 தேக்கரண்டி
உழுத்தம் பருப்பு -
1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 2
தேக்கரண்டி

செய்முறை

மரக்கறிகளை சிறிய துண்டங்களாக வெட்டி எடுங்கள்.
வெங்காயத்தையும் சிறியதாக வெட்டிக் கொள்ளுங்கள். மிளகாயை நீளவாட்டில் பிளந்து விடுங்கள்.

தேங்காயத் துருவலுடன் 1/2 கப் தண்ணீரர் விட்டு மிக்சியில் அடித்து கோப்பையில் வடித்து வையுங்கள். மீண்டும்
1/2 கப் தண்ணீர் விட்டு பால் எடுத்து, முதல் எடுத்த பாலுடன் கலந்து விடுங்கள். திரும்ப ஒரு கப் தண்ணீர் விட்டு பால் எடுத்து பால் கோப்பையில் கலந்துவிடுங்கள்.

அடுப்பில் வைக்கும் பாத்திரத்தில் தக்காளி தவிர்ந்த ஏனைய மரக்கறிகளைப் போட்டு
வெங்காயம், பச்சை மிளகாய், வெந்தயம், சோம்பு, கறிவேற்பிலை, உப்பு, ஒரு கப் தண்ணீர் ஊற்றி அவியவிடுங்கள். முக்கால் பாகம் அவிந்ததும் தக்காளியைச் சேர்த்து விடங்கள். இரண்டு நிமிடம் அவிந்ததும் தேங்காயப் பாலை ஊற்றி கலக்கிவிடவும்.

பால் திரளாமல் இருக்க அரை தேக்கரண்டி எலுமிச்சம்சாறு சேர்த்து கொதிக்கிடுங்கள். அடிக்கடி கலக்கிக் கொள்ளுங்கள். கொதித்துவர இறக்கி பரிமாறும் கோப்பையில் ஊற்றிக் கொள்ளுங்கள்.

தாளிக்க விரும்பினால் தாளிதத்தை கலந்து விடுங்கள்.

கமகமக்கும் பால் சொதி தயார்

கிழங்கு தக்காளி குழம்பு

தேவையான பொருட்கள்

தக்காளி - 500 கிராம்
அவித்த உருளைக்கிழங்கு - 4
பெரிய வெங்காயம் -2
பச்சைமிளகாய் - 1
தேங்காய்த் துருவல் - 1 1/2 கப்
மிளகாய்ப் பொடி- 1 தேக்கரண்டி
தனியாபபொடி - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் சிறிதளவு
உப்பு தேவைக்கு ஏற்ப

தாளிக்கத் தேவையானவை

தேங்காய் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
சோம்பு -
1/4 தேக்கரண்டி
கறுவா 1 துண்டு
உள்ளி பேஸ்ட் சிறிதளவு
ரம்பை 1 துண்டு
கறிவேற்பிலை -
சிறிதளவு

செய்முறை


தக்காளி கிழங்கு இரண்டையும் துண்டங்களாக தனித்தனியே வெட்டி வையுங்கள். வெங்காயம் சிறியதாகவும், பச்சை மிளகாயை இரண்டு தண்டங்களாகவும் வெட்டிக் கொள்ளவும்.

தேங்காயத் துருவலுடன் 1/2 கப் தண்ணீரர் விட்டு மிக்சியில் அடித்து கோப்பையில் வடித்து வையுங்கள். மீண்டும் 1/2 கப் தண்ணீர் விட்டு பால் எடுத்து, முதல் எடுத்த பாலுடன் கலந்து விடுங்கள்.
திரும்ப ஒரு கப்
தண்ணீர் விட்டு பால் எடுத்து பிறிதொரு கோப்பையில் எடுத்து வையுங்கள்.

எண்ணெயைச் சூடாக்கி தாளிக்கும் பொருட்களை மேலே சொன்ன வரிசையில் தாளியுங்கள். இத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கி, பச்சை மிளகாய், தக்காளித் துண்டங்கள் போட்டு ஒரு நிமிடம் கிளறுங்கள். உப்பு, மிளகாய்ப்பொடி, தனியாப்பொடி, மஞ்சள்பொடி சேர்த்து கிழங்கையும் போட்டு தனியே எடுத்து வைத்த பால் விட்டு மூடி போட்டு 5-7 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். மூடியைத் திறந்து கெட்டிப்பால் ஊற்றி விடுங்கள்.

கொதித்துவர கிளறி இறக்கி பரிமாறும் கோப்பையில் விட்டுக் கொள்ளுங்கள்.
மிளகாயத்தூள் வாசம் கமழ குழம்பு அழைக்கும்.



4 comments:

  1. இந்த சொதி எனக்கு புதிது...முயற்சி செய்து பார்க்க போகின்றேன்..

    ReplyDelete
  2. சொதி செய்யும் போது தண்ணீர் தனியாகவும் தேங்காய்ப் பால் தனியாகவும் இரு லேயர்களாக பிரிந்தது. தண்ணீரின் மீது தேங்காய்ப் பால் மிதந்தது
    ஏதாவது தீர்வு? நன்றி!

    ReplyDelete
  3. நன்றி சம்பத்.
    தேங்காய்ப் பாலை விட்டவுடன் தேசிச்சாறு சிலதுளிகள் சேர்த்துக் கலக்கி சொதியைக் கொதிக்கவிட வேண்டும்.
    கொதிக்க தொடங்கும்போதே கவனமாகக் கலக்கிக் கொள்ள வேண்டும். 2,3 தரம் மேற் கூறியவாறு கலக்கி்க் கொண்டு இறக்கிவிட வேண்டும்.

    நன்றாகப் பால் கொதித்தால் திரண்டு தண்ணீர் வேறு பால வேறாக வந்துவிடும்.

    இன்னும் சுலபமாகச் செய்ய ஒரு வழி. முயற்சித்துப் பாருங்களேன். தண்ணிப்பாலை விட்டு கொதிக்க வைத்து இறக்கி கீழே வைத்த பின் முதலாம் கெட்டிப் பாலை ஊற்றி கலக்கிவிடுங்கள்.

    ReplyDelete
  4. //தண்ணிப்பாலை விட்டு கொதிக்க வைத்து இறக்கி கீழே வைத்த பின் முதலாம் கெட்டிப் பாலை ஊற்றி கலக்கிவிடுங்கள்.//

    நல்லது, நன்றி. சகோதரி. இவ்வார இறுதியில் முயற்சிக்கிறேன்

    -சம்பத்

    ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்