Monday, November 24, 2008

பிரைட் ரைஸ்


நாள்தோறும் சாதம், சாம்பார் எனச் செய்வதை விட்டு, சாம்பாரில் சேர்க்கும் மரக்கறிச் சத்திற்கு நிகராக சாதத்தில் மரக்கறிகளைச் சேர்த்து இவ்வாறு செய்து கொள்ளலாம். சுவையாகவும் இருக்கும். வழமையில் மாற்றத்தையும் அளிக்கும்


தேவையான பொருட்கள்

1. பசுமதி அல்லது சம்பா அரிசி – 1 கப்

2. கரட் -1

3. லீக்ஸ் -1

4. கோவா – 5-6 இலைகள்

5. பீன்ஸ் - 10

6. வெங்காயம் - 2

7. கஜீ – 10

8. பிளம்ஸ் - சிறிதளவு

9. மஞ்சள் பொடி சிறிதளவு

10. உப்பு சிறிதளவு

தாளிக்க

1. பட்டர் - 1 டேபிள் ஸபூன்

2. பட்டை – 1

3. கிராம்பு – 2

4. ஏலம் - 4

5. பிரிஞ்சி இலை – 2
செய்முறை

1. குக்கரில் பட்டர் ½ டேபிள் ஸ்பூன் விட்டு, பட்டை, கிராம்பு, ஏலம், பிரிஞ்சி இலை தாளித்து ரைஸ் சேர்த்து, 2 கப் தண்ணீர் விட்டு, மஞ்சள் பொடி, சிறிது உப்பு சேர்த்து, 2 விசில் விட்டு அவித்து எடுங்கள்.

2. கரட், லீக்ஸ், கோவா, பீன்ஸ், வெங்காயம், சிறியதாக வெட்டி வையுங்கள். தாச்சியில் ½ டேபிள் ஸ்பூன் பட்டர் விட்டு, வெங்காயம் போட்டு வதங்க மரக்கறிகளைப் போட்டு உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, சாதத்தைக் கிளறி இறக்குங்கள்.

3. சிறிதளவு பட்டரில் வட்டமாக வெட்டிய கரட் துண்டுகள், கஜீ, பிளம்ஸ் வறுத்து எடுங்கள்.

4. சேவிங் பிளேட்டில் சாதத்தைப் போட்டு கரட், கஜீ பிளம்ஸ், வெங்காய வளையங்கள் கொண்டு அலங்கரித்துக் கொள்ளுங்கள்.


குறிப்பு

பட்டாணிக்கறி, எண்ணைய்க் கத்தரிக்காய் சுவை தரும்.விரும்பிய கறிவகைகள் கொண்டு பரிமாறுங்கள். முட்டை இறைச்சி கடல்வகை உணவு ஏதாவது ஒன்றுடன் அசைவம் விரும்புவோர் பரிமாறிக் கொள்ளலாம்.


-: மாதேவி :-


Monday, November 17, 2008

கறி ரொட்டி


பாஸ்ட பூட் உணவு வகைகளை அநேகம் விரும்பி உண்ணும் பிள்ளைகளுக்கும், பெரியவர்களுக்கும் நாங்களே இலகுவாக வீடுகளில் தயாரித்துக் கொள்ளலாம்.


ஈவினிங் டிபனுக்கு ஏற்றது. குழந்தைகளின் டிபன் பொக்ஸ்க்கும் கொடுத்து விடக் கூடியது. இரவிலே மாவைத் தயாரித்து வைத்துக் கொண்டால் காலையிலே செய்து கொள்ளலாம். குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் போதும் செய்து எடுத்துச் செல்லலாம்.


கறி ரொட்டி


தேவையான பொருட்கள் மேல் மாவுக்கு


1. மைதா மா – 2 கப்

2. ஈஸ்ட் - 1 ரீ ஸ்பூன்

3. உப்பு சிறிதளவு

4. மார்ஜரீன் - 1 டேபிள் ஸ்பூன்



கறி தயாரிக்க


1. மீன் துண்டுகள் - 1 கப்

2. வெங்காயம் - 1

3. பூண்டு - 2

4. சீரகப் பவுடர் – ½ ரீ ஸ்பூன்

5. கடுகு – ¼ ரீ ஸ்பூன்

6. மிளகாய்த் தூள் - ரீ ஸ்பூன்

7. மஞ்சள் தூள் - ½ ரீ ஸ்பூன்

8. கறிவேற்பிலை சிறிதளவு

9. உப்பு, புளி தேவையான அளவு

10. ஓயில் - 1 டேபிள் ஸ்பூன்






செய்முறை


1. தயாரிக்கும் மாவை 5-6 மணித்தியாலங்கள் முன்பு குழைத்து வைத்துவிடுங்கள். மா, ஈஸ்ட், உப்பு, மார்ஜரீன் கலந்து வையுங்கள். தண்ணீரை எடுத்து சிறிது சிறிதாக ஊற்றி பூரிமா பதத்தில் தயார்த்து வையுங்கள்.


2. எண்ணெயில் கடுகு தாளித்து, வெங்காயம், உள்ளி லேசாக வதக்கி கறிவேற்பிலை சேர்த்து உப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள், சீரகத் தூள் சேர்த்து கரைத்த புளிக் கரைசல் விட்டு மீன் துண்டங்களைப் போட்டு அவித்து எடுத்து, ஆற முள்ளை நீக்கி சற்று மசித்து எடுங்கள்.


3. மாவை சிறு பந்து போல எடுத்து, போர்ட்டில் வைத்து ரோலரால் மெல்லியதாக உருட்டி, கறியை வைத்து பார்சல் போல மடித்து வையுங்கள். அதை பேக் செய்து எடுத்துக் கொள்ளுங்கள்.


4. தோசைக் கல்லிலும் செய்து கொள்ளலாம். தோசைக் கல்லில் செய்வதாக இருந்தால் பூரி போன்று வட்டமாக உருட்டி கறியை வைத்து இன்னொரு பூரியால் மூடி மேலே சற்று உருட்டிவிட்டால் அமர்ந்து வரும். இதை மெல்லிய தீயில் இரு புறமும் விரும்பிய எண்ணையை விட்டு சுட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.


5. அவசரத்திற்கு செய்வதாயின் மாவை எடுத்து கிண்ணம் போல செய்து, அதற்குள் கறியை வைத்து மூடி கையால் தட்டியும் செய்து கொள்ளலாம்.


6. சதுரம், முக்கோணி, அரை வட்டம் என நாளுக்கு ஒவ்வொன்றாக விரும்பிய வௌ;வேறு கறிவகைகளில் செய்து அசத்துங்கள்.



:- மாதேவி -:

Thursday, November 6, 2008

பிஸி பேளா பாத்


துவரம் பருப்பில் நிறைந்த புரோட்டின் இருப்பதால் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இவ் வகையில் தயாரிக்கப்பட்ட உணவுதான் இது.

மிக விரைவாகச சமைக்கவும் பச்சிலேஸ்சிற்கும் இலகுவானது என்பதால் அனைவரும் விரும்புவர்.

சாதத்துடன் பருப்பும் சேர்வதால் போஷாக்கைக் கொடுக்கும். பசியையும் தணிக்கும்.

டயபடிஸ், கொலஸ்டரோல் உள்ளோரும் நெய் தவிர்த்து செய்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்


1. அரிசி - 1 கப்
2. துவரம் பருப்பு – ½ கப்
3. தக்காளி – 5
4. சின்ன வெங்காயம் - 10, அல்லது பெரிய வெங்காயம்
5. பெருங்காயம்- சிறிதளவு
6. மஞ்சள் பொடி – சிறிதளவு
7. புளி - சிறிதளவு
8. உப்பு தேவைக்கு ஏற்ப
9. நெய் - 2 டேபிள் ஸ்பூன்


வறுத்து அரைக்க


கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - ½ ரீ ஸ்பூன்
வெந்தயம் ¼ ரீ ஸ்பூன்
செத்தல் மிளகாய் - 4-5
தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்


தாளிக்க


கடுகு – சிறிதளவு
கருவேற்பிலை – சிறிதளவு
செய்முறை

வெங்காயத்தை நீளவாட்டில் வெட்டுங்கள்.

தக்காளியை சிறு துண்டுகளாக வெட்டுங்கள்.

அரிசி பருப்பு மஞ்சள் பொடி கலந்து 2 ½ கப் தண்ணீர் விட்டு பிரஷர் குக்கரில் அவித்து எடுங்கள்.

நெய்யில் கடுகு கருவேற்பிலை தாளித்து வெங்காயம் வதக்கி தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.

வதங்கியதும் உப்பு புளி விட்டு அரைத்த பொடி சேர்த்து கொதிக்க, ரைஸ் போட்டு கிளறி இறக்குங்கள்.

பரிமாறும் பிளேட்டில் போடுங்கள்.

விரும்பிய கறியுடன் பரிமாறுங்கள்.

பப்படம் சுவை கொடுக்கும்

:- மாதேவி -:

Tuesday, November 4, 2008

கிழங்கு பட்டாணி சூப்

மனித இனம் உணவைச் சமைக்கக் கற்றுக் கொண்ட ஆதி காலம் முதல் பயன்பட்ட உணவு வகை இது. நீர் அதிகளவில் கலந்திருப்பதால் வயிற்றை நிரப்பும். அதனால் ஏழைகளின் உணவும் கூட. இங்கு இலைக் கஞ்சி பிரபலம். (சிங்களத்தில் கொள கந்த - வீதிக்கு வீதி விற்பனையாகிறது) பாட்டி கால சாதக் கஞ்சியும் ஒரு சூப்தானே.

வீட்டு உணவாக இருந்த இது 18ம் நூற்றாண்டில் பாரீஸ் நகர ரெஸ்டரன்ட்களில் உணவுக்கு முன் பரிமாறப்படும் உணவாக நாகரீகம் அடைந்தது. இன்று ஐந்து நட்சத்திர ஹோட்டல்களின் மிக ஆடம்பரமான விலையுயர்ந்த உணவாகவும் இருக்கிறது.


சாப்பாட்டின் முன் பசியைத் தூண்டுவதற்காக அருந்தும் உணவாகக் கருதப்படுகிறது. அதே நேரம் பல்வேறு முறைகளில் தயாரித்துக் கொள்ளலாம். சேர்க்கும் பொருட்களுக்கு அமைய போஷாக்குச் செறிவும் வேறுபடும்.


குழந்தைகள் முதல் சகல வயதினருக்கும் உகந்தது. உண்ண விருப்பமின்றி இருக்கும் நோயாளர்களுக்கு சக்தியையும், விற்றமின்களையும் கொடுப்பதுடன், இலகுவாக அருந்தவும் கூடியது. எளிதில் ஜீரணமடையும்.


உடல் பருமனைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஹெல்த் சூப் பொருத்தமானது. அவை பசியைத் தணிப்பதுடன், கலோரி அளவும் குறைவாக இருப்பதால் எடையைக் குறைக்க உதவும்.




கிழங்கு பட்டாணி சூப்








தேவையான பொருட்கள்

1) கிழங்கு – 1
2) பச்சைப் பட்டாணி – ¼ கப் (சுடுநீரில் போட்டு எடுத்து வைக்கவும்)
3) கரட் - 1
4) பெரிய வெங்காயம் - ½
5) மிளகு – 3 -4
6) பூண்டு – 2
7) பிரியாணி இலை – 2
8) மார்ஜரின் - 1 ரீ ஸ்பூன்
9) உப்பு தேவையான அளவு
10) தண்ணீர் - 2 கப்
11) துவரம் பருப்பு அவித்த நீர்– 1 கப்
12) மிளகுப்பொடி சிறிதளவு
13) எலுமிச்சை துண்டுகள்

செய்முறை


காய்கறிகளை சிறியதாக வெட்டி எடுக்கவும். பாத்திரத்தை வைத்து மார்ஜரின் போட்டு மிளகு பிரியாணி இலை வதக்கவும்.

பூண்டு சேர்த்து வதக்கி காய்கறிகளையும் போட்டு 5 நிமிடங்கள் வதக்கவும்.

தண்ணீர்விட்டு அவியவிடவும். அவிந்ததும் இறக்கி வடி கொண்டு வடித்து, வடியில் விழும் மரக்கறிகளை நன்றாக மசித்துவிடவும்.

சூப்பை அடுப்பில் வைத்து, துவரம் பருப்பு அவித்த நீர், உப்பு, மிளகு பொடி போட்டுக் கலக்கி ஒரு கொதி விடவும்.

பட்டாணியைச் சேர்த்து இறக்கவும்.

கோப்பையில் ஊற்றி எலுமிச்சம் துண்டுகளுடன் பரிமாறுங்கள்.கண்ணைக் கவரும் வர்ணத்தில் சூப் தயார்.

சூப்புடன் இடையே கொறித்துக் கொள்ள சீஸ் பிஸ்கட் 2-3 வைத்துக் கொண்டால் சுவை சேர்க்கும்.

-: மாதேவி :-