Wednesday, March 9, 2011

சின்னுவின் ஹொஸ்டல் சமையல்- ரவை கேசரி

அடைக்கலம் குருவிக் குஞ்சுகளாய் அணைப்பில் வளர்ந்து, சிறகு முளைத்ததும்  சிட்டுக் குருவிகளாய் வீட்டினுள் சிறகடித்துப் பறந்து திரிந்த காலங்கள் இனியவை.


காலம் மாற, சிறகு விரித்து வானத்தையும் வெற்றி கொள்ளப் பறக்கும் காலம் வந்ததும், உறவுகளைப் பிரிந்து இருக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் வாழ்க்கையில் வரத்தானே செய்யும்.

பலருக்கும் வந்தது. எங்கள் வீட்டிலும் வந்தபின்தான் புரிந்தது.

“மம்மி டடி நான் சமாளிப்பேன். என்னை விட்டிட்டு இருப்பீர்களா? தனிய என்ன செய்வீர்கள்?” கேள்விகள் வந்தன. பல மாறுவேடங்களிலும் கேள்விகள் வந்தன.


நான் குடும்பத்தை விட்டுப் பிரிந்து ஹொஸ்ரல் வாழ்க்கை வாழ்ந்தவளல்ல. சின்னுவின் கேள்விகளால் என்னை நானே தயார்படுத்திக் கொண்டேன்.

ஆரம்பத்தில் தினந்தோறும் தொலைபேசி,குறுந்தகவல்கள் எனப் பறந்த வண்ணம் நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. அவளின் படிப்பை குழப்பக்கூடாது என்பதற்காக நாளடைவில் தினந்தோறும் என்பதைக் கட்டுப் படுத்திக் கொண்டேன்.

எப்பொழுது விடுமுறை வரும் என ஆவலுடன் காத்திருப்போம்.  

உறவுகளைப் பிரிந்து இருக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் வாழ்க்கையில் வரும்போது அப் புதிய சூழலுக்கு தம்மை மாற்றிக்கொள்வது என்பது சிலருக்கு இலகுவாகவும் பலருக்குத் துயரமாகவும் மாறிவிடுவதுண்டு.

இவ்வகையில் சவாலுடன் தன்னைத்தானே கொண்டு நடத்தி பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து தீர்மானங்கள் எடுத்து நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கும் இவர்கள் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள் தான்.

உங்கள் வாழ்க்கையிலும் வந்திருக்கலாம் இனிமேலும் வரலாம்.

எங்களுக்கு வந்தது.


ஓரிரு பாத்திரங்களுடன் சமையல் செய்வது இலகுவானதல்ல என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்தான். அதுவும் ஹொஸ்டலில் பொதுவான கிச்சனில். நாலுஅடுப்புக்கள் கூடிய எலெக்ரிக் குக்கரில் இருபத்தைந்து பெயர் சமையலைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

சமையல் என்பது கிரிக்கற் மச்சில் பந்தைப் பிடிக்க ஓடும் ஓட்டம்தான்.

முதல்கட்டம் சமையலுக்கு தயாராகுமுன் கூடையில் சமைக்கும்பொருட்கள், பாத்திரங்கள் யாவற்றையும் மறக்காமல் எடுத்துவைக்க வேண்டும்.

அடுத்து கிச்சனில் அடுப்பு பிரீயாக இருக்கிறதா எனப் போய்பார்க்க வேண்டும். ப்ரியாக இருந்தால் உடனே விரைந்து சென்று கூடையை எடுத்துக்கொண்டு செல்லவேண்டும். சற்றுத் தாமதமானால் அடுப்பில் வேறொருவர் தனது பாத்திரத்திற்கு முடி சூட்டிவிடுவார். 

ப்ரியாக இல்லாவிட்டால் சமைத்துக் கொண்டிருப்பவர்களிடம்; சொல்லி அடுப்பு முன்பதிவு செய்துவைக்க வேண்டும். அடிக்கடி சென்று ப்ரீயாகிவிட்டதா எனப் பார்த்தும் வர வேண்டும்.

பானில் தண்ணீரைப் பிடித்துக் கொடுத்து அடுப்பில் வைக்கச் சொல்லிவிடுவார்கள். எல்லாம் ரன் அவுட் ஆனபின் வந்த எக்ஸ் பீரியன்ஸ்தான்.  இப்பொழுதெல்லாம் சிக்ஸர் அடிக்க தருணத்தில்  மொபைலில் அழைத்துக் கொள்கிறார்கள்.

இப்படியாக சிரமத்தின் மத்தியில் தயாரிக்கும் உணவுகள்தான் இவை.

கூடையில் ஏதாவது பொருட்கள் வைக்க மறந்து அறையில்சென்று எடுத்துவர நேர்ந்தால் கூடையில் உள்ள எண்ணைப்போத்தல் அல்லது முக்கியமான பொருள் கால் முளைத்து யார் கூடவோ ஓடிப்போயிருக்கும்.

சிலநேரங்களில் பாத்திரங்களும் சுடப்பட்டு புது அறைக்கு குடிபோயிருக்கும். அன்று சமையல் அம்போ ஹோட்டல் சாப்பாடுதான் கிடைக்கும். 

வீட்டில் ஒம்லட் தவிர வேறு எதுவுமே செய்யத் தெரிந்திராதவள் சின்னு…? 

சிறுபிள்ளை என நாமே எல்லாவற்றையும் செய்து கொடுத்து விடுவோமே பிறகு எப்படி அவர்கள் தெரிந்து கொண்டிருப்பார்கள். 


இப்பொழுது படிப்பு, சமையல், வோசிங், கிளீனிங் என சகலதிலும் அசத்துகிறாள்.

ஐ ஆம் வெரி ப்ரவுட் ஆப் மை டியர் சின்னு.

சின்னு தனது சமையல் படங்கள்  அனுப்பி இருந்தாள். அவளின் ஹொஸ்ரல் சமையல் சிலவற்றைப் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். பச்சலஸ்களுக்கும் உதவியாக இருக்கும்.

இனிப்புடன் ஆரம்பிப்போம். அனைவருக்கும் தெரிந்ததுதான். ஹொஸ்டல் இனிப்பு  அமிர்தம்தான்.

ரவை கேசரி படைப்போம்.

தேவையானவை

ரவை – 1 கப்
தண்ணி – 1 கப்
பால் - 1 கப்
சீனி – 1 ½ கப்
நெய் அல்லது மாஜரின் - 4 மேசைக்கரண்டி
கலர் பவுடர் அல்லது கலரிங் சிறிதளவு
ஏலம் அல்லது வனிலா சிறிதளவு
உப்பு சிறிதளவு
சாப்பிட்டு மிஞ்சிய பாதாம் அல்லது முந்திரி சிறிதளவு
பிரிச்சில்  கிடந்த ஜெலி.

செய்வோம்

1 டேபல் ஸ்பூன் நெய்யில் பிளம்ஸ் முந்திரி இருந்தால் வறுத்து எடுங்கள். அதே தாச்சியில் லேசாக ரவையை வறுத்து எடுத்து வையுங்கள்.

அதே பாத்திரத்தில் பால் தண்ணீரை ஊற்றிக் கொதிக்க விடுங்கள் கலர் பவுடர் சேருங்கள்.

கொதித்துவர ரவையை சேர்த்து கிளறி சற்று வேக விடுங்கள்.
சீனி, உப்பு  கலந்து இறுக வனிலா மாஜரின் விட்டு கிளறி இறக்குங்கள்.

சட்டியுடன் தொலையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். பிரிச்சில் இருந்து எடுத்த ஜெலி பாதாம் மேலே வைத்துச் சாப்பிடுங்கள். உங்கள் நெருங்கிய நண்பிகளுக்குக் கொடுங்கள். மிகுதியை பிரிஜ்ஜில் ஒளித்து வைத்துவிடுங்கள் நாளை பசிக்கும்போது சாப்பிட்டுக் கொள்ளலாம்.

சின்னு.

35 comments:

  1. ஹஸ்டல் வாழ்கை என்பது ஒரு வகை சுவாரஸ்யமாக போகும் அதை கண் முன்னே கொண்டு வந்துட்டீங்க .அதுவும் ரவா கேசரியுடன் :-))

    ReplyDelete
  2. வாசித்தபின் அந்தப் படங்களும் சேர்ந்து பேசுகின்றன. குறிப்பா சின்னு பறப்பதும் நீங்க பார்த்து நிற்பதும்..

    சின்னு அசத்துகிறாள். அப்படியே இருக்கு அம்மாவின் கைப்பக்குவம். வாழ்த்துக்கள் சின்னு.

    ReplyDelete
  3. படங்கள் நல்லா இருக்கு. அனவைரும் அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்

    ReplyDelete
  4. சாப்பிட்டு மிஞ்சிய பாதாம் அல்லது முந்திரி சிறிதளவு


    .....ha,ha,ha,ha,ha,ha... I like the way recipe is written. ... Super!

    ReplyDelete
  5. க்யூட் சிட்டுக் குருவி படங்களுடன் உறவுகளின் தன்மையை அழகாகச் சொன்னீர்கள் :) சின்னுவின் கேசரி பார்க்கவே வெகு சுவை. மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. ஹாஸ்டல் சமையல் நல்லா இருக்குது சின்னு!!!

    ReplyDelete
  7. சூப்பர்.

    எங்க ஹாஸ்டல் வாழ்க்கை நினைவுக்கு வருது:-)

    ReplyDelete
  8. ரவாகேசரி சூப்பரா இருக்கே. உங்க பக்கம் இன்று தான் வந்தேன்.கலக்குரீங்க தோழி.

    ReplyDelete
  9. வாருங்கள் ஜெய்லானி.

    சுவாரஸ்யத்துடன் சவால்களும் வரும் :)

    எனக்கு இந்த சுவாரஸ்யம் எல்லாம் கிடைக்கவில்லை :(

    நன்றி.

    ReplyDelete
  10. வாழ்த்துக்கு மிக்க நன்றி ராமலஷ்மி.

    சின்னு உங்கள் வாழ்த்தைப் படித்து மகிழ்ச்சி அடைவாள்.

    ReplyDelete
  11. மிக்க நன்றி எல்.கே.

    மிகவும் சரி.

    ReplyDelete
  12. Jaleela Kamal said..."யம்மீ"

    டபுள் தாங்ஸ் ஜலீலா.

    ReplyDelete
  13. சித்ரா எல்லோருக்கும் தெரிந்ததுதானே ஹொஸ்டலில் மிச்சம் மீதி வேறு என்ன இருக்கப்போகிறது :)

    மிக்க நன்றி.

    ReplyDelete
  14. வாழ்த்துக்களுக்கு நன்றி கவிநயா.

    ReplyDelete
  15. வாருங்கள் தெய்வசுகந்தி.
    சின்னுவின் நன்றி.

    ReplyDelete
  16. மிக்க நன்றி.

    அந்தநாள் ஞாபகம் வந்ததா... இனித்திருக்கும் நினைவுகள்....

    நன்றி துளசிகோபால்.

    ReplyDelete
  17. வாருங்கள் லஷ்மி.

    உங்கள் வருகை மகிழ்ச்சியைத் தருகிறது. மிக்க நன்றி.

    ReplyDelete
  18. சிட்டுவாக உங்கள் சின்னு.பறப்பதும் கூட்டுக்குள் வருவதுமாய்.எங்கள் வாழ்வியல்.அதுவும் பெண் பிள்ளைகளுக்கு வீட்டு வேலைகள் தானாகவே வந்துவிடுகிறது.எனக்குச் சுவிஸ் வந்த பொழுதில் எதுவுமே தெரிந்திருக்கவில்லை.அதுவும் எங்கள் சமையல் சாமான்கள் கிடைப்பதும் அரிதானகாலம் அப்போ.ஆனாலும் சமாளித்து இப்போ ஓரளவு சமைக்கப் பழகிவிட்டேன்.

    கேசரிகூடச் செய்யத் தெரியும்.
    யாராவது விருந்தினர் வந்தால் தேனீரோடு கொடுக்க உடனடியாகச் செய்துகொள்ள ஒரு சுவையான சிற்றுண்டி !

    ReplyDelete
  19. வீட்டில் சில நேரங்களில் சமையல் அறைக்குள் நுழைந்திருக்கிறேன்.. ஒரு முறை நான் செய்த வாழைக்காய் பொரியலை இன்னமும் என் தங்கை பாராட்டிக் கொண்டிருக்கிறாள்.. சமையல் செய்வது கிட்டத்தட்ட தியான வகுப்பு போல! கவனம் சிதறினால் ஏதோ ஒரு நிகழ்ந்து குடும்ப சுனாமியில் மாட்டிக் கொள்வோம்..

    ReplyDelete
  20. படங்களும்,பகிர்வும் அருமை மாதேவி.

    ReplyDelete
  21. ரொம்ப டேஸ்டி மற்றும் சூப்பர்..:)

    ReplyDelete
  22. //பலருக்கும் வந்தது. எங்கள் வீட்டிலும் வந்தபின்தான் புரிந்தது.//

    என் மகனும் வரும் கல்வியாண்டில் ஹாஸ்டல் போக இருக்கிறார்.உங்கள் மனநிலை தான் எனக்கும்..

    மாதேவி,மிக ரசித்து படித்தேன்,எப்பவும் பதிவு இருக்கா என்று உங்கள் பக்கம் பார்ப்பதுண்டு,இந்த முறை வந்த பொழுது சின்னுவின் சமையல் ஹாஸ்டல் அனுபவம் அறிந்து மகிழ்ச்சி.

    ReplyDelete
  23. //உறவுகளைப் பிரிந்து இருக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் வாழ்க்கையில் வரத்தானே செய்யும்.//

    நிச்சியமாய்.

    அருமை எழுத்தில் காவியம் படைத்து விட்டீர்கள் தேர்ந்து எடுத்த படங்கள் அருமை.

    சின்னுவின் ஹொஸ்டல் அனுபவங்கள் நல்லா இருக்கு.

    சின்னுவின் ரவை கேசரி அருமை.
    வாழ்த்துக்கள் சின்னுவிற்கு. கல்வியிலும் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்.

    குழந்தையை பிரிந்து இருப்பது கஷ்டம் தான். இரண்டு குழந்தைகளுமே ஹாஸ்டலுக்கு போகவில்லை திருமணம் வேலை என்று தான் பிரிந்தார்கள். அவர்கள் வரும் நாளுக்காக காத்திருக்கும் கண்கள் இப்போது.

    ReplyDelete
  24. அழகாக உங்கள் அனுபவங்களையும் எடுத்துக் கூறியுள்ளீர்கள்.நன்றி ஹேமா.

    ReplyDelete
  25. வாருங்கள் ரிஷபன்.

    உங்கள் கருத்து சுவாரஸ்யத்துடன் இருந்தாலும் உண்மையும் கூட.நன்றி.

    ReplyDelete
  26. மிக்க மகிழ்ச்சி தேனம்மைலெக்ஷ்மணன்.

    ReplyDelete
  27. வாருங்கள் ஆசியா.

    உங்கள் மகனுக்கு எனது வாழ்த்துக்கள்.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  28. வாருங்கள் கோமதி அரசு.

    உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.

    ஆமாம் அழகாகச் சொன்னீர்கள் ”காத்திருக்கும் கண்கள்”.

    வாழ்த்திய அனைவருக்கும் சின்னு தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறாள்.

    ReplyDelete
  29. சின்னுவின் அம்மாவுக்கு வாழ்த்துகள்.
    அம்மாவின் பக்குவம் அப்படியே வந்திருக்கிறது. படங்கள் பிரமாதம் மாதேவி. மனம் நிறைந்த பாராட்டுகள்.

    ReplyDelete
  30. வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி வல்லிசிம்ஹன்.

    ReplyDelete
  31. கோதுமை ரவா அடை செய்வது எப்படி?
    Jennifer Rajasekar, Canada
    web:AYUREXPRESS

    தேவையானப்பொருட்கள்:

    கோதுமை ரவா - 1 கப்
    துவரம்பருப்பு - 1/2 கப்
    கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
    உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
    பயத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 4
    பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
    உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
    வெங்காயம் - 1
    கறிவேப்பிலை - சிறிது
    நல்லெண்ணை - தேவையான அளவு

    செய்முறை:

    பருப்புகள் அனைத்தையும் தண்ணீரில் 2 முதல் 3 மணி நேரம் ஊறவைக்கவும்.

    கோதுமை ரவாவை, அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரைச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற விடவும்.

    பருப்புகள் ஊறியபின்னர், நன்றாகக் கழுவி, தண்ணீரை வடித்து விட்டு, அத்துடன் மிளகாய், பெருங்காயம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

    அரைத்த மாவுடன், ஊற வைத்துள்ள கோதுமை ரவாவைச் சேர்த்து கலக்கவும்.

    கறிவேப்பிலை, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி மாவில் சேர்க்கவும். தேவைப்பட்டால், சிறிது தண்ணீரைச் சேர்த்து, தோசை மாவை விட சற்று கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். உப்பு சரி பார்த்து, தேவையானால் இன்னும் சிறிது உப்பைச் சேர்க்கலாம்.

    தோசைக்கல்லை காயவைத்து, சூடானதும், எண்ணைத் தடவி ஒரு பெரிய குழிக்கரண்டி மாவை நடுவில் ஊற்றி பரப்பி விடவும். அடையைச் சுற்றி ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, ஒரு புறம் வெந்ததும், திருப்பிப் போட்டு, மறு புறமும் சிவக்க வெந்ததும் கல்லிலிருந்து எடுத்து வைக்கவும்.

    விருப்பமான சட்னியுடன் பரிமாறவும்.

    ReplyDelete
  32. வருகைக்கும் சமையல்குறிப்புக்கும் நன்றி தேவர்.

    ReplyDelete
  33. ரசனையுள்ள அருமையான இனிப்புக்குறிப்பு..வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..

    ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்