Friday, June 15, 2012

பாகற்காய் பலாக்கொட்டை பால்கறி


'பார்த்தால் பசப்புக்காரி கடித்தால் கசப்புக்காரி' அவள்தான் இவள்.

Cucurbitaceae  குடும்பத்தைச் சார்ந்தது விஞ்ஞானப் பெயர் Momordica charantia என்பதாகும். ஆசியா ஆபிரிக்கா, கரீபியன் தேசங்களில் வாழும் தாவரம். தாயகம் தெரியவில்லை என்கிறார்கள்.

இவற்றில் பல இனங்கள் உள்ளன. வடிவங்களும் பலவாகும். அதன் கசப்புத் தன்மையும் இனத்திற்கு இனம் வேறுபடும்.


பச்சை, வெளிர் பச்சை, முள்ளுப் பாகற்காய், கரும் பச்சை நிறத்தை உடைய குருவித்தலைப் பாகற்காய். பெரிதாக நீளமாக இருப்பது கொம்புப் பாகற்காய்.

பச்சையாக இருக்கும் பாகற்காய் பழுக்கும்போது செந்நிறமாக மாறுகிறது. அத்துடன் கசப்பும் கூடுகின்றது.


ஓர்க்கிட் பூவல்ல! பாகற்காய் பழமாக..

மிகவும் சிறிய ஒருவகை மேல்புறம் தும்புகள் காணப்படும் சிங்களத்தில் 'தும்பக் கரவல' என்கிறார்கள். இது கசப்புத்தன்மை இல்லாதது.




சீனவகை பாவற்காய் சற்று வெளிர் பச்சை நிறமுடையது. 30-40 செமி நீளமானது.  



பாவற்காய் ஓர் கொடித் தாவரம். நிலத்திணை வகையைச் சார்ந்தது. மஞ்சள்நிறப் பூக்கள் காணப்படும். இதன் பூக்களில் ஆண் பூ, பெண் பூ என வித்தியாசம் இருக்கிறது.


 எங்கவீட்டு பூச்சாடியில் மலர்ந்த பாகல்கொடி

பாகல்கொடி என அழைப்பார்கள். புடோல், வெள்ளரி, தர்ப்பூசணி, பூசணிக்காய் வகைகளைச் சார்ந்தது.

ஆங்கிலத்தில் bitter melon,  bitter gourd, bitter squash, தமிழில் பாகற்காய். சிங்களத்தில் கரவல.

100 கிராமில் காபோகைதரேற் 4.32 கிராம், சீனி 1.95 கிராம், நார்சத்து 2.0 கிராம், நீர் 93.96 கிராம், கொழுப்பு 0.18 கிராம், பொற்றாசியம் 319 மை.கி, பொஸ்பரஸ் 36 மை.கி,

யூஸ், ரீ, தயிர் சலட், சப்ஜி ஊறுகாய், சிப்ஸ் குழம்பு, வறுவல், சூப் எனப் பலவாறு தயாராகின்றன.

வட இந்திய சமையல்களில்

மசாலாக்களை ஸ்ரவ் செய்து பொரித்து எடுப்பார்கள்.

தென் இந்திய சமையல்களில்

துவரன், தீயல், பிட்லா, பொடிமாஸ், ரசவாங்கி. புளிக் குழம்பு, வத்தல் குழம்பு என இன்னும் பலவகை.

இலங்கைச் சமையலில்

காரக் குழம்பு, பால்க் கறி, சிப்ஸ், சம்பல், தயிர் சலட், பொரித்த குழம்பு, புளிக் குழம்பு, வத்தல் குழம்பு, பாவற்காய் முட்டை வறை, பாவற்காய் முட்டை ஸ்ரவ், கருவாட்டுப் பாகற்காய் எனப் பலவாறு சுவைக்கும்.

பாகிஸ்தான் சமையலில்

காயை அவித்து எடுத்து அரைத்து அவித்த இறைச்சியை ஸ்டவ் செய்துகொள்கிறார்கள்.

மருத்துவப் பயன்பாடு 

ஆசியா, ஆபிரிக்க நாடுகளில் பழைய காலம் தொட்டு மருத்துக்காகப் பயன் படுத்தி இருக்கின்றார்கள்.

  • நீரிழிவு நோயளர்களுக்கு மிகவும் உகந்தது. இரத்ததில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கும். 
  • பாவற்காய் டயபற் ரீ கிடைக்கின்றது. 
  • வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும். 
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது. 
  • மலச்சிக்கலைத் தீர்க்கும். 
  • பாகற்காயின் இலையும் மருத்துவப் பயன் உடையது. 
  • சாறு எடுத்து பலவித நோய்களுக்கும் பயன்படுத்துகிறார்கள்.

அலம்பல் வேலியில்லையாம்! பல்கணி சுவரில் படர்கிறார்.

உடல் நலத்துக்கு

கசப்புத் தன்மை அதிகமாக இருப்பதால் பலரும் உண்ண விரும்புவதில்லை. பெயரைக்கேட்டாலே ஓட்டம் எடுப்பர்.

உடல் நலத்திற்கு வேண்டியது என்பதால் உண்பது அவசியம்.
தேங்காய் நீர், பலாக்கொட்டை, தக்காளிப் பழம், முட்டை, கருவாடு, சேர்த்துச் செய்தால் கசப்புத்தன்மை தெரியாமல் பலவித சமையல்கள் செய்ய முடியும்.

பாவற்காய் பலாக்கொட்டை பால்கறி
 
வீட்டில் காய்க்கவில்லை. சமையலுக்கு சட்டிக்குள் போக காத்திருக்கிறார்

தேவையானவை

பாகற்காய் - 1
பலாக்கொட்டை – 5 - 6
சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - 2
கருவேற்பிலை சிறிதளவு
தேசிப்புளி- 1 ரீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் நீர் - ½ டம்ளர்
தேங்காய்ப் பால் - 2 டேபிள் ஸ்பூன்

தாளிக்க தேவையானவை

சின்ன வெங்காயம் - 3
செத்தல்மிளகாய் - 1
கடுகு, உழுத்தம் பருப்பு, கருவேற்பிலை சிறிதளவு
ஓயில் - 2 ரீ ஸ்பூன்



பலாக்கொட்டை மல்லித்தழைத் தளுவலுடன் பாகற்காய் பாற்கறி.

செய்முறை

  • பாகற்காயை  3 அங்குல நீளமாகவெட்டி, உட்பகுதியை நீக்கி கழுவி எடுக்கவும். துண்டங்களை நீள் பக்கமாக மெல்லியதாக வெட்டிக் கொள்ளுங்கள்.
  • பலாக்கொட்டையை தோல் நீக்கி கழுவி எடுங்கள். 
  • மேல்தோலை நீக்கி விடுங்கள். 
  • சிறிய நீள் துண்டுகளாக வெட்டுங்கள். 
  • வெங்காயம் மிளகாயை நீளமாக வெட்டிக் கொள்ளுங்கள். 
  • காய்களைப் பாத்திரத்தில் போட்டு, உப்பு, தேங்காய் நீர் விட்டு, கருவேற்பிலை சேர்த்து மூடி போட்டு, 5-7 நிமிடம் அவிய விடுங்கள். 
  • திறந்து பிரட்டிக் கொள்ளுங்கள். 
  • நீர் வற்றிய பின் தேங்காய்ப்பால் விட்டுக் கிளறி இறக்கி வையுங்கள்.

ஓயிலில் தாளிதப் பொருட்களை தாளித்து சமைத்த பாகற்காயைக் கொட்டி நன்கு ஓரிரு நிமிடங்கள் கிளறி இறக்குங்கள். தேசிப்புளி கலந்து எடுத்து வையுங்கள்.

' கசப்பும் இனிப்பும் சேர்ந்த பசப்புக்காரி' சாப்பிடத் தயாராகிவிடுவாள்.


மேசையில் சாப்பிடத் தயாராக இருக்கிறது
குறிப்பு

தேங்காய் நீர் சேர்ப்பதால் கசப்புத்தன்மை குறைந்துவிடும்.
மேலும் சிறுவர்களுக்கு நன்கு கசப்பைக் குறைக்க விரும்பினால் ½ ரீ ஸ்பூன் சீனியை இறக்கும்போது கலந்துவிடுங்கள்.
( வெல்லம் சேர்த்தால் கறியின் நிறம் மாறிவிடும் )

பலாக்கொட்டை சேர்த்த மற்றொரு சமையல் பயத்தங்காய் பலாக் கொட்டைப் பிரட்டல்

மாதேவி