Saturday, October 19, 2013

குண்டாவதைத் தடுக்கும் குண்டுப் பூசணிக்காய்


கொடிக்காய் இனத்தைச் சேர்ந்த படர்கொடித் தாவரம்.


பறங்கிக் காய் பிஞ்சாக இருக்கும்போது பச்சையாக இருக்கும். நன்றாக முற்றிய பின்னர் பழுப்பு நிறத்தில் இருக்கும். வெட்டினால் உள்ளே மஞ்சள் நிறச் சதைப் பகுதி இருக்கும். பறைபோன்று உள்ள காய் என்ற பொருளால் பறங்கிக்காய் ஆனது என்கிறார்கள்.

பூசணிக்காய் என்பது பச்சை நிறத்தின் மேல் வெண்படலாம் பூசியது போல இருக்கும். உள்ளே வெண்சதைப் பகுதி இருக்கும். இதை வெள்ளைப்பூசணி, நீர்த்துப்பூசணி எனவும் அழைப்பார்கள்.


பூசுணைக்காய் என்ற பெயர்தான் பூசணிக்காய் ஆகிவிட்டது. டுபாய் பூசணி என்ற சிறுவகை இனமும் இருக்கின்றது.


16ம் நூற்றாண்டில் குண்டு வடிவமான புதுவகைப் பூசணிக்காய் அறிமுகமானது. அது பறங்கியர் நிறத்தைப் போன்று இருந்ததால் பறங்கிப் பூசனி என அழைத்தார்கள்.

என்ன யெபர் வைத்தாலும் நம்ம பூசணிதான்

இலங்கையில் பறங்கிக் காயையும் பூசணி என்றே சொல்கிறார்கள். சிங்களத்தில் வட்டக்கா என்கிறார்கள்.

பல்வேறு மொழிகளிலும்  இவ்வாறு அழைக்கிறார்கள்.

Afrikaans - Pampoen
Arabic      - Kara' Safra
Chinese(Mandarin) Nangua
French   Potiron
Hindi Kaddu
Marathi Lal Bhopala
Japan Kabocha
Malayasia Labu
Russia  Tikba

ஆண் பூவும் பெண் பூவும்



இதன் தாயகம் வட அமெரிக்கா வடக்கு மெக்சிக்கோ என்கிறார்கள். தாவரவியல் பெயர் Banincasa hispida ஆகும்.

பேணிப் பாதுகாக்கப்படும் காய்களில் ஒன்று. பல மாதங்கள் வரை முழுக்காய்கள் பழுதடையாது இருக்கும்.

பூசணியின் பயன்கள்

இக்காய் பிதுர் விரத நாட்களுக்கு சிறப்பாகச் சமைக்கப்படும்.

அலங்காரக் கலைப் பொருளாகவும் அனைவரையும் கவர்ந்து இழுக்கின்றது. லாம் ஷேட், ப்ளவர் வாஸ் என பல அலங்காரங்கள் இருக்கின்றன.

முக அலங்காரத்திற்கும் சருமப் பொலிவிற்கும் பூசணிகாய் கூழ் பயன்படுத்தப்படுகின்றது.


கரட்டீன் சத்து அதிகம் இருக்கிறது. வெப்ப காலத்தில் உடலில் அதிகரிக்கும் வெப்பத்தை நீக்குகிறது.

நீர்ச் சத்து இருப்பதால் சிறுநீரக நோய்களுக்கு நல்லது. நார்ப் பொருள் இருப்பதால் மலச்சிக்கலைப் போக்கும்.


பூசணி விதைகள் டயற்றில் இருப்போருக்கு சிறந்தது என்பார்கள். கலோரி குறைவாக இருப்பது காரணமாகும். கொழுப்பும் குறைந்தது.

பூசணியின் போசனை

கலோரி 33
கொழுப்பு 0.2 கிராம்
புரதம் 1.3 கிராம்
கல்சியம் 18 மிகி
இரும்பு 0.6 மிகி
நார்ப்பொருள் 0.5 கிராம்
சர்க்கரை 2.8 கிராம்
விற்றமின் சி -11 மி.கி
விற்றமின் பி1 - 0.06 மி.கி
கரோடின் 2400 மைக்ரோ கிராம்

பூசணியின் போசனை அளவுகளைக் கவனித்தால் அதில் உடலைக் குண்டாக்கும் கொழுப்புப் பொருள் இல்லை எனவும் அளவிற்கு (0.2 கிராம்) குறைவாகவே உள்ளது. அதேபோல எடை அதிகரிப்பிறகு மற்றொரு காரணியான  காலோரி அளவும் (கலோரி 33) மிகக் குறைவாகவே உள்ளது.

எனவே பூசணியானது தான் குண்டாக இருந்தாலும் எம்மைக் குண்டாக விடாது என்று நம்பலாம். தாராளமாகச் சுவைத்து  உண்ணலாம்.

பூசணியின் இலைகளும் உணவாக உண்ணப்படுகின்றன. அவித்து எடுத்து அவித்த கிழங்கு இறைச்சி மீன் வகைகளை வைத்து சுற்றி எடுத்து சோசில் தோய்த்து உண்ணலாம். கிராமத்தில் பொரியல் செய்துகொள்வோம். இங்கு கிடைப்பதில்லை.

பூசணிப் பூவும் பொரியல் செய்வோம். வெளிநாட்டில் ஸ்டாட்டர் ஆகவும் டீப் ப்ரை செய்து உண்கிறார்கள்.


ரோஸ்டட் விதையிலிருந்து ஓயில் தயாரிக்கிறார்கள். சமையலுக்கும், சலட் டிரெஸிங்கிக்கும்.      பூசணி விதைகளை பச்சையாகவும் வறுத்தும் சுட்டும் உண்ணலாம். சூப், சலட் வகைக்கும் கலந்து கொள்ளலாம்.

பிரபல பூசணி்கள்

அமெரிக்காவில் டல்லே பாரி பூசணிக்காய் எறியும் போட்டி ஒன்றும் நடாத்துகிறார்கள். ஆரம்பத்தில் கைகளால் தூக்கி எறிந்த போட்டி இப்பொழுது பீரங்கியில் வைத்து அடிக்கும் போட்டியாக மாறிவிட்டது. பீரங்கியில் வைத்து அடித்தபோது கால் மைலுக்கு மேல் சென்று விழுந்தது. ரீவி நிகழ்ச்சி ஒன்றில் காட்டினார்கள்.

மிகவும் பெரிய பறங்கிக் காய் அமெரிக்காவில் கிறிஸ்டீபன்ஸ் என்பவரது தோட்டத்தில் விளைந்தது. இதன் நிறை 821 கிலோகிறாம். பூசணியின் அகலம் 15 அடி.


இலங்கையில் முன்னேரியா கல்வானை பகுதியில் 30கிலோ எடையுடைய வெளிநாட்டு வகையைச் சேர்ந்த பூசணிக்காய் சரத் குருவிட்ட என்பவரது தோட்டத்திலே அண்மையில் விளைந்தது.

'பேக்ட் பம்கின் பை' ஐக்கிய ராச்சியத்தின் பாரம்பரியம் மிகவும் பிரபலமான உணவு. எமது நாடுகளில் எரிசேரி, பச்சடி, அல்வா, துவையல், என பலவும் செய்துகொள்கிறார்கள்.


இக்காரக்கறி சாதத்துக்கு ஏற்றது. இன்னுமொரு இலகுவழி இரவு ரொட்டி, சப்பாத்தி, தோசை,இட்லிக்கு பகல்வைத்த கறியை நன்கு மசித்து விட்டால் சட்னிபோல தொட்டுக்கொள்ளலாம் புளிப்பாகவும் இனிப்பாகவும, காரம்சேர்ந்தும்; இருக்கும்;.

பூசணிகாய் காரக்கறி


பழப்பூசணி காய் - ¼ கிலோ
வெங்காயம்  - 1
பூண்டு - 5 பல்லு
மிளகாய்த் தூள் - 1 ரீ ஸ்பூன்
மஞ்சள் தூள் -சிறிதளவு
கட்டித் தேங்காயப் பால் - 1 டேபிள் };பூன்
உப்பு புளி தேவைக்கு ஏற்ப
தண்ணீர் சிறிதளவு.

தாளிக்க

கடுகு - ¼ ரீ ஸ்பூன்
செத்தல் -  1
உழுத்தம் பருப்பு - ¼ ரீ ஸ்பூன்
வெங்காயம் சிறிதளவு
கறிவேற்பிலை, ரம்பை இலை


செய்முறை

காய்களை சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

வெங்காயம் செத்தல் இரண்டையும்வெட்டி வையுங்கள்.

பூண்டை தட்டி எடுங்கள்.

காய், தண்ணீர், உப்பு, வெங்காயம,; பூண்டு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் கலந்து வேக விடுங்கள்.

வெந்த பின் புளித் தண்ணி ஊற்றி கொதிக்க விட்டு தேங்காய்ப் பால் ஊற்றி கிளறிவிடுங்கள்.


தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து கொட்டிக் கிளறுங்கள்.

:- மாதேவி -:
0.0.0.0.0



Sunday, September 22, 2013

தொட்டால் சிவக்கும் வடிவழகி தரும் சுவை என்ன?

கரட்,முள்ளங்கியைப் போன்றதே பீற்ரூட் இனமும். வேர்க்கிழங்கு தாவரம். ஆங்கில மரக்கறி, வெள்ளைக்காரன் மரக்கறி, வெளிநாட்டு மரக்கறி என முன்னர் அழைத்தார்கள்.சிகப்புக் கிழங்கு என பாட்டிமார் சொல்வார்கள். பலருக்கும் பிடிக்காத மரக்கறிகளில் இதுவும் ஒன்று எனச் சொல்லலாம்.

நிறத்தில் மயக்கும் இது சுவையில் சுமார்தான்.

'பீற்ரூட் நிற அழகி' என கானா பாடல்களில் பெண்ணை வர்ணித்து இருக்கிறார்கள்.





பொதுவாக வருடம் பூராவும் விளையும் பயிராகும். வீட்டுத்தோடங்களிலும் பயிரிடப்படுகிறது. சாடிகளுக்கும் உகந்த பயிர்தான். வெளிநாடுகளில் கிடைக்கும் காலங்களில் புரோசன் செய்யப்பட்டு பாதுகாத்தும் வைக்கிறார்கள். நம் நாடுகளில் எல்லாக் காலங்களிலும் தாராளமாகக் கிடைக்கும்.


தோட்டங்கள் சிகப்பு முளைத்ததுபோல பார்க்க அழகாக இருக்கும். பச்சை இலையும் சிகப்பு கலந்த வர்ணம் கவர்ந்திழுக்கும்.

வட அமெரிக்காவில் டேபிள் பீற், கார்டன் பீற், ரெட் பீற் எனப் பலவாறு அறியப்பட்டது.


போசாக்கு

100 கிராமில்

கலோரிச் சத்து 180 KJ
காபோஹைரேட் 9.96 கிராம்
நார்ப்பொருள் 2.0 கிராம்
இனிப்பு 7.96 கிராம்
புரதம் 1.68 கிராம்
கொழுப்பு 0.18 கிராம்
பொட்டாசியம் 305 மை.கி
சோடியம் 77 மை. கி
பொஸ்பரஸ் 38 மை .கி
இரும்பு 0.79 மை.கி
கல்சியம் 16 மை. கி
விற்றமின ஊ 3.6 மை.கி
நியாசின் 0.331 மை. கி


ஹெல்தியாக இருக்க விரும்புவோர்கள், முகம் பொலிவுடனும் முகப் பருக்கள் தோன்றாமல் இருக்கவும் பீற்ரூட் சாறு அருந்துவது நல்லது. குழந்தைகளுக்கானது கீழே

இனிப்பு இருப்பதால் நீரிழிவாளர்கள் அளவோடு சாப்பிட வேண்டும்.

உடல் எடைக் குறைப்பிற்கும் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் பீற்ரூட் உதவுகின்றது.

இரத்தக் குழாய்களை விரியச் செய்யும் நைட்ரேட் பீற்ரூட்டில் அதிகம் இருப்பதால் உயர் அழுத்தத்தைக் குறைக்கும் என ஒரு ஆய்வு சொல்கிறது.
70 ml of beetroot juice இல் சுமார் 5 mmol of nitrate இருக்கிறதாம்

ஆயினும் இது சிறு ஆய்வு எனவும், இதனால் குறையும் இரத்த அழுத்தமானது 24 மணிநேரத்;திற்கு பிறகும் தொடர்ந்து இருக்குமா? என்பது பற்றியும் சர்ச்சைகள் உள்ளன. மேலும் படிக்க

Beetroot's effect on blood pressure is uncertain


  • கிழக்கு ஐரோப்பாவில் பீற்ரூட் சூப் பிரபலமான உணவாகும்.
  • பென்சில்வேனியாவில் டச் டிஸ் பாரம்பரியமான ஒன்று அவித்த முட்டைகளை பீற் சாறில் இட்டு ஊற வைத்து ரோஸ் கலராகச் செய்வது.  
  • வடஅமெரிக்காவில் பீற் ஊறுகாய் பாரம்பரிய உணவாக இருக்கின்றது. 
  • அவுஸ்திரேலியா, நியூசிலந்து, அரபிய நாடுகளில் ஹம்பேஹர் உடன் பீற் பிக்கிள் பரிமாறப்படுகிறது.

பீற்றின் பச்சை இலைகள் அவித்து எடுக்கப்பட்டு அல்லது ஸ்டீம் பண்ணப்பட்டு பரிமாறப்படுகிறது. இவை பசளைக் கீரையை ஒத்த சுவையைத் தருகின்றன.

க்றில் செய்து அவித்தும் ரோஸ்ட் செய்தும் உண்கிறார்கள்

வைன், பீற்ரூட் யூஸ், சூப், கேக், அல்வா, கட்லட், சான்விச், பிரியாணி, கலர்சாதங்கள், சலட், பொரியல், கறிவகைகள் என பலவாக சமைக்கப்படுகின்றன.

பீற்றூட்டில் இனிப்பு இருப்பதால் கறி இனிக்கும் அதனால் காரத்தை கூட்டி போட்டு சமைப்பது சாப்பிடக் கூடியதாக இருக்கும்.

பீற்றூட் பிரட்டல்

தேவையானவை

பீற் -1
வெங்காயம் - ½
பச்சை மிளகாய் - 2
மிளகாய்த் தூள் - 1 ரீ ஸ்பூன்
விரும்பினால் மசாலா தூள் - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
தேசிச் சாறு - ½ ரீ ஸ்பூன்
கட்டிதேங்காய்ப் பால் -1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - அவியவிடுவதற்கு

தாளிக்க தேவையானவை

ஓயில் - 1 டே ஸ்பூன்
வெங்காயம் -சிறிதளவு
சோம்பு - சிறிதளவு
கடுகு - ¼ ரீ ஸ்பூன்
கறிவேற்பிலை - சிறிதளவு

செய்முறை





பீற்ரூட்டை தோலுடன் நன்கு கழுவி எடுங்கள். பீல் செய்துவிட்டு மெல்லிய சிறு நீள் துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.


வெங்காயம் சொப்ஸ் செய்து வையுங்கள்.

பச்சை மிளகாயை கீறி எடுங்கள்.

பாத்திரத்தில் போட்டு தண்ணீர் உப்பு கலந்து மூடி போட்டு அவித்து எடுங்கள்.
அவிந்த பின் மிளகாய் தூள் போட்டு கிளறுங்கள்.

தேங்காய்ப் பால் ஊற்றி கலந்து சுரூண்டு வர மசாலாத் தூள் சேர்த்து எடுத்து வையுங்கள்.

ஓயிலில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து

பீற்ரூட் கறியை தாளிதத்தில் கொட்டி ஒரு நிமிடம் கிளறுங்கள்.

தாளித்த வாசத்துடன் பீற்ரூட் மணக்கும்.

அடுப்பை அணைத்து தேசிசாறை விட்டு பிரட்டி கோப்பையில் எடுத்து வையுங்கள்.



 பீற்ரூட் பற்றிய மற்றொரு (முன்னைய) பதிவு 

பீற்ரூட் சாதம்

-மாதேவி-

Saturday, August 31, 2013

உணவுக் கண்காட்சி - பண்ணையிலிருந்து சமையலறைக்கு

பண்டாரநாயக சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் (BMICH)  கடந்த 23,24, 25ம் திகதிகளில் Profood propack  'பண்ணையிலிருந்து சமையலறைக்கு' என்ற தொனியில் அங்காடிகளின் கண்காட்சி நடைபெற்றது.


 இக்கண்காட்சி 12 வருடங்களாக நடை பெற்று வருகிறது.  விவசாயம் சம்பந்தமான Agbiz கண்காட்சி 8 வது வருடமாக நடாத்தப்பட்டது.20 கம்பனிகள் 4 பல்கலைக் கழகங்கள், 252 கடைகள் அடங்கியதாக இக் கண்காட்சி இடம் பெற்றது.

ஏறத்தாள 22,500 பார்வையாளர்கள் கண்டு களித்ததாக சொல்கிறார்கள். கண்காட்சியின் விசேட அம்சமாக புதிய விவசாய கண்டுபிடிப்புகளும், உணவு பதனிடுதல், நவீன பொதியிடல் தொழில் நுட்பங்கள், நகர்ப்புற விவசாய செயல்முறைகள், விவசாயம் வியாபாரம் சார்ந்து உள்ளடங்கியதாக இக் கண்காட்சி அமைந்தது.


பார்வையாளர்களுக்கு உணவுப் பொருட்களில் விலை தள்ளுபடிகள், மணித்தியாலயத்திற்கு ஒருமுறை அதிஷ்ட சீட்டிழுப்புகள் எனப் பலவும் நடாத்தப்பட்டிருந்தன.


நானும் கண்காட்சியை சென்று பார்க்க விரும்பியிருந்தேன். விருந்தினர் வருகையால் செல்ல முடியவில்லை. மகள் நண்பிகளுடன் சென்று எனக்கான தகவல்களையும், புகைப்படங்களையும் கிளிக்கி வந்திருந்தாள்.அவற்றை இங்கு தருகின்றேன்.

இக்காட்சி வருடாவருடம் நடாத்தப்படும்போது பலரும் ஆவல் எதிர்பார்ப்புடன் சென்று வருகிறார்கள். விதை பொருட்கள் பெறப்படுவது தொடங்கி உற்பத்தி செய்யப்பட்டு பொதியாக்கப்பட்டு விற்பனைக்கு எடுத்து வருவது வரை நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தையும் இங்கு எடுத்துக் காட்டினார்கள்.


விவசாயத்திற்கு பயன்படுத்தும் தொழில் நுட்ப மிஷின்கள் பலவும் காட்சி படுத்தப் பட்டிருந்தன.

 இத்துறைகளில் ஈடுபட்டுள்ளோர்கள்.அனைவரும் ஓரிடத்தில் சந்தித்து தமது அனுபவங்களையும்  தகவல்களையும் பரிமாறிக் கொள்ள முடிந்ததால் பல நன்மைகளை பெற்றதாக இலங்கை உணவு பதனிடுவோர் சங்கம் தெரிவித்துள்ளது.

கலந்து கொண்ட மக்களும் பலஅனுபவங்களையும் பெற்று மகிழ்வுடன் வீடு திரும்பினர்.


கண்காட்சியில் பங்கு பற்றியோருக்கு விசேட கழிவு விலைகளில் பானங்கள் உணவுப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. சுவைத்துப் பார்த்து பொருட்கள் வாங்கக் கூடியதான முறையிலும் அமைந்திருந்தது இதன் சிறப்பம்சம் என்றாள் மகள்.


கண்காட்சியுடன் இணைந்ததாக குக்கிங் ஸ்டுடியோ சமையல் கூடம் பிரபல 'சினமன் கிறான்ட் ஹோட்டல் " சமையல் கலைஞர்களால் செய்து காட்டப்பட்டனவாம். இதில் கீழைத் தேய மேலைத் தேச உணவு வகைகள் இடம் பெற்றன என்று சொல்கிறார்கள்.

நெல்லி யூஸ், கரும்புச் சாறு, புளுபெரி பாதாம் ஐஸ்கிறீம் வகைகள்,   மலிவு விலைகளில் வாங்கிச் சாப்பிடதாக மகள் சொன்னாள். எனக்கு ஒலிவ் ஒயில், சூரியகாந்தி ஒயில் போத்தல்கள் வாங்கிவந்து தந்தாள்.

முந்திரிகை கண்ணாடி குவளை தூண்களுள் காட்சிக்கு

கண்காட்சியில் இடம்பெற்ற  கடைகள், உணவுகள், பானங்கள், பொதியிடல், இயந்திர வகைகள், என அவற்றில் சிறப்பானவைக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

நாடுகள் பலவற்றின் உற்பத்திப் பொருட்கள் அடங்கியிருந்தன. இந்திய உற்பத்திப்பொருட்கள் பலவும்  இருந்தனவாம்.


மஜிக் ரைஸ்,சுவீட்ஸ்,சினக்ஸ்,அணில்சேமியா எனப் பலதும் என்றாள்.


சீன பியஸ், அப்பிள் பழவகைகள் இருந்தன.

கனேடியன் தூதுவராலயம், பருப்புகளின் முக்கியத்துவம் பற்றியும் அதன் சமையல் முறைகள் பற்றியும் விளக்கினார்கள்.


பழங்களை நீரகற்றி (Dehydrate)  பக்கற்றுகளில் பொதியிட்டு விற்பனைக்கு வைத்திருந்தார்கள்.


 கஜீ ஸ்டோல்  அழகாக வடிவமைக்கப் பட்டிருந்தது.



உடன் வறுத்து சுடச்சுடக் கொடுத்தார்கள்.

கடை மேல் கூரையில் முழு முந்திரிகை.


பிளாஸ்டிக் அல்லாத சுற்றாடல் பாதுகாப்பிற்கு உகந்த  மீள உபயோகிக்கக் கூடிய பனை ஓலையால் செய்யப்பட்ட பைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது மிகவும் வரவேற்பிற்குரியது..


வாசனைச் சரக்குகள் சிறிய மண் பானைகளி்ல் இடப்பட்டு அழகுற காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.


பழங்கள்,  டிரகன் பழம் மரத்துடன்.


 பலவிதகாய்கறிகள்,


தாவரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.


நிச்சயம் இவ்வகையான கண்காட்சிகள் பலருக்கும் பயன்தரும் என்பதில் சந்தேகமில்லை. காட்சியை  சிறப்பாக நடாத்தியவர்களை பாராட்டுவோம்.

-: மாதேவி :-

Saturday, August 10, 2013

பிஞ்சு மென் விரலாளில் குழம்பு


வெண்டை, வெண்டி, வெண்டிக்காய், Ladies finger என அழைக்கப்படுகிறது. சிறிய 2 மீற்றர் உயரம் வரை வளரக் கூடிய தாவரம். சொரசொரப்பான தண்டுகளையும் இலைகளையும் கொண்டிருக்கும். மல்லோ என அழைக்கப்படும். 



Malvacea  குடும்பத்தைச் சார்ந்தது. அறிவியல் பெயர் Abeimoschus esculentus ஆகும். எதியோப்பிய உயர்நிலப் பகுதியே இதன் தாயகமாகக் கொள்ளப்படுகிறது.

அமெரிக்காவில் ஓக்ரா என்று அழைக்கின்றார்கள். வேறும் பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது. Bhindiஅல்லது  gumbo எனவும் அழைப்பார்கள்.

வெள்ளை மஞ்சள் நிறங்களுக்கு இடைப்பட்ட சாயல்களில் இதன் பூக்கள் காணப்படுகின்றன.


இதழ்களில் செந்நிற அல்லது ஊதா நிறத்தில் புள்ளிகள் இருக்கும். வெண்டியில் பால் வெண்டை எனவும் வெளிறிய மென் பச்சைநிறத்தில் ஓர் இனம் இருக்கின்றது.

சிகப்புக் கலரிலும் வெண்டைக் காய்கள் இருக்கின்றன. 


சாடிகளில் வைத்தும் வளர்க்கும் செடி வகை இனம் இது என்பதால் பல்கணி வீட்டுத் தோட்டங்களுக்கு வளர்க்க உகந்த காய்கறிச் செடியாகும்.


மிகப் பெரிய 0.5 மீற்றர் நீளமுள்ள வெண்டைக் காய் கேரள மாநிலத்தில் பாஸ்கரன் உன்னி என்பவரது தோட்டத்தில் விளைந்து சாதனை படைத்துள்ளது. இது 'சத்கீர்த்தி' எனற இன வகையைச் சார்ந்தது.

வேளாந்துறை அதிகாரிகள் 'லிம்கா புக் ஒவ் ரெகோட்ஸ் அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார்கள்.

வெண்டை ஹெல்தியான உணவாகக் கொள்ளப்படுகின்றது.

அன்ரிஒக்சிடன்ட், கல்சியம், பொட்டாசியம், விட்டமின் சீ பெருமளவு அடங்கியது. நாரப்பொருள் அதிகம் இருப்பதால் நீரிழிவு, கொல்ஸ்டரோல், மூலவியாதி  நோயாளிகளுக்கு நல்லது.

உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைக்கும் தன்மை இக்காயில் உள்ள பெக்டினில் இருக்கின்றது. கொழுப்பு இல்லாததால் உடல் எடையைக் குறைப்பதற்கும் உகந்த உணவாகக் கொள்ளப்படுகின்றது. நோயாளர்கள் ஸ்டீம் செய்து உண்பது சிறந்தது.






Okra, raw
Nutritional value per 100 g (3.5 oz)
33 kcal (140 kJ)
7.45 g
1.48 g
3.2 g
0.19 g
2.00 g
90.17 g
Vitamin A equiv.
36 μg (5%)
0.2 mg (17%)
0.06 mg (5%)
1 mg (7%)
23 mg (28%)
0.27 mg (2%)
31.3 μg (30%)
82 mg (8%)
0.62 mg (5%)
57 mg (16%)
299 mg (6%)
0.58 mg (6%)
Percentages are roughly approximated
from US recommendations for adults.
Source: USDA Nutrient Database



இலங்கை இந்திய பாகிஸ்தானிய சமையல்களில் பிரபலமானது.

பால்கறி, மோர்க் குழம்பு, தோசை, பச்சடி, பொரியல், வறுவல், மண்டி, ஸ்டப், எனப் பலவாறு இடம்பிடிக்கின்றது.

வெண்டைக் காய்சாம்பார் என்ற பெயரைக் கேட்டாலே ஓட்டம் பிடிப்பார் பலர் உண்டு. அவர்களையும் சாப்பிட வைக்க இந்த பொரித்த குழம்பு கை கொடுக்கும்.

சாதம் பிட்டு, இடியாப்பம், பாண், ரொட்டி, நாண் உணவுகளுக்கு சாப்பிட சுவையானது.

காய்கள் வாங்கும்போது பிஞ்சுக் காய்களாக தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்ளுங்கள். காய்களின் நுனிப் பகுதியை உடைத்தால் முறிந்தவிடும் காய்கள் பிஞ்சாக இருக்கும்.

வெண்டைக்காய் பொரித்த குழம்பு 



தேவையானவை
  • வெண்டைக்காய்  - 15-20
  • பம்பாய் வெங்காயம் - 1
  • பச்சை மிளகாய் - 2
  • கட்டித் தேங்காய்ப் பால் - ¼ கப்
  • மிளகாய்த் தூள் - 1 ரீ ஸ்பூன்
  • மல்லித்தூள் - ½ ரீஸ்பூன்
  • சீரகத்தூள் -  ¼ ரீ ஸ்பூன்
  • மஞ்சள் தூள் - சிறிதளவு
  • புளிக்கரைசல் உப்பு தேவையான அளவு
  • பூண்டு - 5 பல்லு
  • வெந்தயம் - ½ ரீ ஸ்பூன்
  • சோம்பு - ¼ ரீ ஸ்பூன்
  • கடுகு  - ¼ ரீ ஸ்பூன்
  • கறிவேற்பிலை - 2 இலைகள்
  • ரம்பை இலை  - 2 துண்டு
  • ஓயில் - ¼ லீட்டர்


செய்முறை

வெண்டைக் காயைக் கழுவி துடைத்து உலர வையுங்கள் வெங்காயம் பச்சை மிளகாய் வெட்டி வையுங்கள். பூண்டைத் தட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.


காய்களை  2 அங்குல நீள் துண்டுகளாக வெட்டுங்கள்.

எண்ணெயைக் காய விட்டு கொதித்ததும் காய்களைப் போட்டு நன்கு பிறவுன் கலர் வரும் வரை இடையிடையே கிளறிக்கொண்டு பொரித்து எடுங்கள்.

சிறிதளவு ஓயிலில் கடுகு, பூடு, சோம்பு, வெந்தயம், தாளித்து வெங்காயம,; பச்சை மிளகாயைப் போட்டு வதக்குங்கள்.

சிவந்ததும் கருவேற்பிலை, ரம்பை போட்டு இறக்குங்கள். காய்களைக் கொட்டி தூள் வகைகள் உப்பு புளிகரைசல் விட்டு கொதிக்க வையுங்கள். கொதித்ததும் தேங்காய்ப் பால் ஊற்றி ஒருகொதி வர இறக்குங்கள்.

பொரித்த வாசத்துடன் குழம்பு சாப்பிட தயாராகிவிடும்.

மாதேவி