Friday, March 12, 2010

பீர்க்கங்காய் தேங்காய்ப்பால் கறி & வறை

கோடை வெய்யிலுக்கு உடலிலிருந்து வெளியேறும் வியர்வைக்கு ஈடு செய்ய நீர்த் தன்மையுடைய உணவுகளை உண்ணவேண்டும். உடலுக்கு குளிர்ச்சியுடன் வெப்பத்தால் வரண்ட நாவுக்கு சுவையையும் கொடுக்கக் கூடியது இது.

புடலங்காய், பாவற்காய், சுரைக்காய், கொடியினத்தைச் சேர்ந்த காய்களுள் பீர்க்கங்காயும் ஒன்று.
நாங்கள் இங்கு பிசுக்கங்காய் என யாழ்ப்பாணத்தில் அழைப்போம்.
சிங்களத்தில் வட்டகொலு என அழைப்பார்கள்.

கருக்குப் பிசுக்கு பால்பிசுக்கு என இருவகையில் கிடைக்கும்.


கருக்கு பிசுக்கானது கரும் பச்சை நிறமானது. தோலின் மேற்பரப்பில் உச்சி வரப்புகள் பத்துவரை நீளவாக்காக இருக்கும். 10முதல் 30 செமி வரை நீளமாகும். இவை பனங்கருக்குப் போல அல்லது அரிவாள் நுனி போல கூர்மையாகவும் அத்துடன் வரிவரியாகவும் இருக்கும். இவை நுனியில் ஒடுங்கி வந்து இணைவது போலிருக்கும். அதனால்தான் Ribbed gourd, Ridged gourd என்பார்கள். Angular எனவும் அழைப்பதுண்டு.

பொட்டனிக்கல் பெயர்
Luffa acutangula. கொடியினத்தைச் சார்ந்த Cucurbitaceae இனத்தைச் சேர்ந்தது. அழகிய மஞ்சள் பூக்களுடன் இருக்கும்.




பால்பிசுக்கு மெல்லிய பச்சை நிறமாக இருக்கும். இது கருக்குப் பிசுக்கு போல சொரசொரப்பு இல்லாமல் வழுவழுப்பாக இருக்கும். தோலையும் உட்பகுதியையும் வௌ;வேறு விதமாகச் சமையல் செய்யலாம். தேங்காய்ப் பால்கறி, காரக்கறி, கூட்டு, சாம்பார், பருப்பு மசியல், பால் சொதி, சட்னி, பச்சடி, துவையல், தொக்கு, பொரியல் போன்று பலவாக செய்து கொள்ள முடியும்.




கொழ கொழவென நீராளமாக இருப்பதால் சிலருக்குச் சாப்பிடப் பிடிப்பதில்லை.

மாமிசம் சாப்பிடுபவர்கள் கருவாடு, இறால், அவித்த முட்டை சேர்த்துச் சமைத்துக் கொண்டால் சுவை அதிகரிக்கும்.

சமைத்த கறியும் காணாமல் போய்விடும்.

போஸாக்கு 100 கிராமில்

கலோரி 17
புரதம் 0.5
கொழுப்பு 0.1
கல்சியம் 18 மிகி
இரும்பு 0.5 மிகி
கரோட்டின் 12,
விற்றமின் சி 5
பொட்டாசியம் 50மிகி




பொதுவாக சத்துக்கள் நிறைந்த காய் அல்ல.

நீர்ச் சத்தும் நார்ப்பொருளுமே குறிப்பிடத்தக்க அளவு உண்டு.

கொழுப்பும் கலோரிச் சத்தும் குறைவாக இருப்பதால் கொலஸ்டரோல், நீரிழிவு நோயாளருக்கு சிறந்தது. எடை அதிகரிப்பை விரும்பாதவர்களுக்கும் ஏற்றது.

வெயில் காலத்தில் ஏற்படும் உடற் சூடு, சிறுநீர்க்கடுப்பு, இரண்டையும் நீக்கும் தன்மையுள்ளதாகக் கூறுகிறார்கள்.

வெப்பத்திற்கு தோன்றும் வாய்ப்பருக்களைத் தடுக்கும் என்பர்.

கிராமங்களில் காயவைத்து எடுத்த இதன் உள்நார்ப் பகுதியை உடலில் தேய்த்துக் குளிப்பதற்குப் பயன்படு;துவார்கள்.

அலங்காரப் பொருட்கள் செய்வதற்கும் பயன்படுகிறது.

எண்ணெய் சேர்க்காத தேங்காய்ப் பால்கறி நோயாளர்களுக்கு மிகவும் ஏற்றது. பத்தியக்கறியாக அமையும்.

பீர்க்கங்காய் கொழகொழப்பாக இருப்பதால் கிழங்கு சேர்த்தால் சுவை தரும். கறியும் தடிப்பாக இருக்கும். அதனால் உருளைக் கிழங்கு சேர்த்துக் கொள்ளலாம்.

குப்பைத் தொட்டியல் வீசும் தோலை வைத்தே ஒரு வறை செய்து கொள்ளலாம்.

தோலில் நிரம்பிய சத்துக்கள் இருப்பது நமக்குத் தெரிந்ததுதானே.


தேங்காய்ப் பால்க் கறி


தேவையான பொருட்கள்.


பீர்க்கங்காய் - 1
உருளைக்கிழங்கு -1
சின்ன வெங்காயம் - 10 அல்லது பெரியவெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கறிவேற்பிலை- 2 இலைகள்.
ரம்பை இலை – 1 துண்டு
தேங்காய் கட்டிப்பால்- 2 மேசைக்கரண்டி
உப்பு – தேவைக்கு ஏற்ப
தேசிச்சாறு – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - (விரும்பினால்) சிறிதளவு.


செய்முறை –

காயிலுள்ள உயர்ந்த கருக்குகளை சீவி எறிந்து விடுங்கள்.

மேல் தோலை சற்று ஆழமாக சிறிது சதையுடன் சீவி எடுங்கள்(வறை செய்வதற்கு).

உட்பகுதியை எடுத்து துண்டங்களாக வெட்டி வையுங்கள்.

உருளைக்கிழங்கை சிறிய துண்டங்களாக வெட்டி சிறிது நீர் விட்டு உப்புப் போட்டு அவிய விடுங்கள்.



முக்கால் பாகம் வெந்ததும் பீர்க்கங்காய் துண்டுகள்,பச்சை மிளகாய் சேர்த்து இரண்டு நிமிடம் அவியவிடுங்கள்.

அவிந்ததும் வெட்டிவைத்த வெங்காயம், ரம்பை, கறிவேற்பிலை, தேங்காய்பால் விட்டு சிறிது உப்பு சேர்த்து ஓரு கொதிவர இறக்கிவிடுங்கள்.

எலுமிச்சம் சாறுவிட்டு பிரட்டி எடுத்து வையுங்கள். தேங்காய் பால் வாசத்துடன் எலுமிச்சை வாசமும் சேர்ந்து மணம் கமழும்.

( சாதம், இடியப்பத்துக்கு பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். )


வறை (பொரியல்)

தேவையான பொருட்கள்.

வெட்டி வைத்த மேல்தோற் பகுதி.
செத்தல் மிளகாய் - 1
வெங்காயம் - ¼
தேங்காய் துருவல் - 4 மேசைக்கரண்டி.
மிளகாய் பொடி – ¼ தேக்கரண்டி.
சீரகப் பொடி - ¼ தேக்கரண்டி.
பூண்டு விழுது – சிறிதளவு
உப்பு – தேவைக்கு ஏற்ப
எண்ணைய் - 2 தேக்கரண்டி
கடுகு – சிறிதளவு
உழுத்தம்பருப்பு – சிறிதளவு
கறிவேற்பிலை – சிறிதளவு

செய்முறை –

தோலைக் கழுவி மிகவும் மெல்லிய குறுனல்களாக (பொடியாக) வெட்டிவையுங்கள்.

செத்தல்,வெங்காயம் வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.

எண்ணையில் கடுகு, உழுத்தம் பருப்பு, செத்தல் தாளித்து, வெங்காயம், பூண்டு, கறிவேற்பிலை சேர்த்துக் கிளறுங்கள்.

பொடியாக வெட்டிய காயை கொட்டி உப்பு,மிளகாய் பொடி ,சீரகப்பொடி போட்டுக்கிளறி விடுங்கள்.

அவிவதற்கு சிறிது நீர் தெளித்து அவியவிடுங்கள்.

அவிந்தபின் (கரண்டியால் காயை அமர்த்திப்பார்த்தால் காய் அவிந்தது தெரியும்) தேங்காய் துருவல் கலந்து ஒருநிமிடம் வறுத்து எடுத்து வையுங்கள்.

வறையின் வாசத்தில் பக்கத்து வீட்டுக்காரர்களுக்குப் பசி வந்துவிடும்.

( காரம் விரும்பாதவர்கள், சிறுவர்களுக்கு மிளகாய் பொடிக்குப் பதில் மஞ்சள் பொடி சேர்த்து வறை செய்யலாம் )

மாதேவி