Friday, March 12, 2010

பீர்க்கங்காய் தேங்காய்ப்பால் கறி & வறை

கோடை வெய்யிலுக்கு உடலிலிருந்து வெளியேறும் வியர்வைக்கு ஈடு செய்ய நீர்த் தன்மையுடைய உணவுகளை உண்ணவேண்டும். உடலுக்கு குளிர்ச்சியுடன் வெப்பத்தால் வரண்ட நாவுக்கு சுவையையும் கொடுக்கக் கூடியது இது.

புடலங்காய், பாவற்காய், சுரைக்காய், கொடியினத்தைச் சேர்ந்த காய்களுள் பீர்க்கங்காயும் ஒன்று.
நாங்கள் இங்கு பிசுக்கங்காய் என யாழ்ப்பாணத்தில் அழைப்போம்.
சிங்களத்தில் வட்டகொலு என அழைப்பார்கள்.

கருக்குப் பிசுக்கு பால்பிசுக்கு என இருவகையில் கிடைக்கும்.


கருக்கு பிசுக்கானது கரும் பச்சை நிறமானது. தோலின் மேற்பரப்பில் உச்சி வரப்புகள் பத்துவரை நீளவாக்காக இருக்கும். 10முதல் 30 செமி வரை நீளமாகும். இவை பனங்கருக்குப் போல அல்லது அரிவாள் நுனி போல கூர்மையாகவும் அத்துடன் வரிவரியாகவும் இருக்கும். இவை நுனியில் ஒடுங்கி வந்து இணைவது போலிருக்கும். அதனால்தான் Ribbed gourd, Ridged gourd என்பார்கள். Angular எனவும் அழைப்பதுண்டு.

பொட்டனிக்கல் பெயர்
Luffa acutangula. கொடியினத்தைச் சார்ந்த Cucurbitaceae இனத்தைச் சேர்ந்தது. அழகிய மஞ்சள் பூக்களுடன் இருக்கும்.




பால்பிசுக்கு மெல்லிய பச்சை நிறமாக இருக்கும். இது கருக்குப் பிசுக்கு போல சொரசொரப்பு இல்லாமல் வழுவழுப்பாக இருக்கும். தோலையும் உட்பகுதியையும் வௌ;வேறு விதமாகச் சமையல் செய்யலாம். தேங்காய்ப் பால்கறி, காரக்கறி, கூட்டு, சாம்பார், பருப்பு மசியல், பால் சொதி, சட்னி, பச்சடி, துவையல், தொக்கு, பொரியல் போன்று பலவாக செய்து கொள்ள முடியும்.




கொழ கொழவென நீராளமாக இருப்பதால் சிலருக்குச் சாப்பிடப் பிடிப்பதில்லை.

மாமிசம் சாப்பிடுபவர்கள் கருவாடு, இறால், அவித்த முட்டை சேர்த்துச் சமைத்துக் கொண்டால் சுவை அதிகரிக்கும்.

சமைத்த கறியும் காணாமல் போய்விடும்.

போஸாக்கு 100 கிராமில்

கலோரி 17
புரதம் 0.5
கொழுப்பு 0.1
கல்சியம் 18 மிகி
இரும்பு 0.5 மிகி
கரோட்டின் 12,
விற்றமின் சி 5
பொட்டாசியம் 50மிகி




பொதுவாக சத்துக்கள் நிறைந்த காய் அல்ல.

நீர்ச் சத்தும் நார்ப்பொருளுமே குறிப்பிடத்தக்க அளவு உண்டு.

கொழுப்பும் கலோரிச் சத்தும் குறைவாக இருப்பதால் கொலஸ்டரோல், நீரிழிவு நோயாளருக்கு சிறந்தது. எடை அதிகரிப்பை விரும்பாதவர்களுக்கும் ஏற்றது.

வெயில் காலத்தில் ஏற்படும் உடற் சூடு, சிறுநீர்க்கடுப்பு, இரண்டையும் நீக்கும் தன்மையுள்ளதாகக் கூறுகிறார்கள்.

வெப்பத்திற்கு தோன்றும் வாய்ப்பருக்களைத் தடுக்கும் என்பர்.

கிராமங்களில் காயவைத்து எடுத்த இதன் உள்நார்ப் பகுதியை உடலில் தேய்த்துக் குளிப்பதற்குப் பயன்படு;துவார்கள்.

அலங்காரப் பொருட்கள் செய்வதற்கும் பயன்படுகிறது.

எண்ணெய் சேர்க்காத தேங்காய்ப் பால்கறி நோயாளர்களுக்கு மிகவும் ஏற்றது. பத்தியக்கறியாக அமையும்.

பீர்க்கங்காய் கொழகொழப்பாக இருப்பதால் கிழங்கு சேர்த்தால் சுவை தரும். கறியும் தடிப்பாக இருக்கும். அதனால் உருளைக் கிழங்கு சேர்த்துக் கொள்ளலாம்.

குப்பைத் தொட்டியல் வீசும் தோலை வைத்தே ஒரு வறை செய்து கொள்ளலாம்.

தோலில் நிரம்பிய சத்துக்கள் இருப்பது நமக்குத் தெரிந்ததுதானே.


தேங்காய்ப் பால்க் கறி


தேவையான பொருட்கள்.


பீர்க்கங்காய் - 1
உருளைக்கிழங்கு -1
சின்ன வெங்காயம் - 10 அல்லது பெரியவெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கறிவேற்பிலை- 2 இலைகள்.
ரம்பை இலை – 1 துண்டு
தேங்காய் கட்டிப்பால்- 2 மேசைக்கரண்டி
உப்பு – தேவைக்கு ஏற்ப
தேசிச்சாறு – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - (விரும்பினால்) சிறிதளவு.


செய்முறை –

காயிலுள்ள உயர்ந்த கருக்குகளை சீவி எறிந்து விடுங்கள்.

மேல் தோலை சற்று ஆழமாக சிறிது சதையுடன் சீவி எடுங்கள்(வறை செய்வதற்கு).

உட்பகுதியை எடுத்து துண்டங்களாக வெட்டி வையுங்கள்.

உருளைக்கிழங்கை சிறிய துண்டங்களாக வெட்டி சிறிது நீர் விட்டு உப்புப் போட்டு அவிய விடுங்கள்.



முக்கால் பாகம் வெந்ததும் பீர்க்கங்காய் துண்டுகள்,பச்சை மிளகாய் சேர்த்து இரண்டு நிமிடம் அவியவிடுங்கள்.

அவிந்ததும் வெட்டிவைத்த வெங்காயம், ரம்பை, கறிவேற்பிலை, தேங்காய்பால் விட்டு சிறிது உப்பு சேர்த்து ஓரு கொதிவர இறக்கிவிடுங்கள்.

எலுமிச்சம் சாறுவிட்டு பிரட்டி எடுத்து வையுங்கள். தேங்காய் பால் வாசத்துடன் எலுமிச்சை வாசமும் சேர்ந்து மணம் கமழும்.

( சாதம், இடியப்பத்துக்கு பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். )


வறை (பொரியல்)

தேவையான பொருட்கள்.

வெட்டி வைத்த மேல்தோற் பகுதி.
செத்தல் மிளகாய் - 1
வெங்காயம் - ¼
தேங்காய் துருவல் - 4 மேசைக்கரண்டி.
மிளகாய் பொடி – ¼ தேக்கரண்டி.
சீரகப் பொடி - ¼ தேக்கரண்டி.
பூண்டு விழுது – சிறிதளவு
உப்பு – தேவைக்கு ஏற்ப
எண்ணைய் - 2 தேக்கரண்டி
கடுகு – சிறிதளவு
உழுத்தம்பருப்பு – சிறிதளவு
கறிவேற்பிலை – சிறிதளவு

செய்முறை –

தோலைக் கழுவி மிகவும் மெல்லிய குறுனல்களாக (பொடியாக) வெட்டிவையுங்கள்.

செத்தல்,வெங்காயம் வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.

எண்ணையில் கடுகு, உழுத்தம் பருப்பு, செத்தல் தாளித்து, வெங்காயம், பூண்டு, கறிவேற்பிலை சேர்த்துக் கிளறுங்கள்.

பொடியாக வெட்டிய காயை கொட்டி உப்பு,மிளகாய் பொடி ,சீரகப்பொடி போட்டுக்கிளறி விடுங்கள்.

அவிவதற்கு சிறிது நீர் தெளித்து அவியவிடுங்கள்.

அவிந்தபின் (கரண்டியால் காயை அமர்த்திப்பார்த்தால் காய் அவிந்தது தெரியும்) தேங்காய் துருவல் கலந்து ஒருநிமிடம் வறுத்து எடுத்து வையுங்கள்.

வறையின் வாசத்தில் பக்கத்து வீட்டுக்காரர்களுக்குப் பசி வந்துவிடும்.

( காரம் விரும்பாதவர்கள், சிறுவர்களுக்கு மிளகாய் பொடிக்குப் பதில் மஞ்சள் பொடி சேர்த்து வறை செய்யலாம் )

மாதேவி


28 comments:

  1. பீர்க்கையில் தேங்காய் பால் கறி அருமையாக இருக்கு.

    ReplyDelete
  2. வாருங்கள் asiya omar."அருமையாக இருக்கு". மிக்க நன்றி.

    ReplyDelete
  3. ஏப்ரல், மேல வீட்டம்மா ஊருக்குப் போன பிறகு வந்து படிக்கிறேன். அப்பதான் அடுப்படி பக்கம் போவேன்.

    வேறு ஏதாவது ஈசியா பண்ற மாதிரி சொல்லுங்களேன்.

    ReplyDelete
  4. உடலுக்கு மிக நல்லது..:) சீசனுக்கேற்ற மெனுவா? கலக்குங்க..:)

    :)

    ReplyDelete
  5. சமையலை ஆரம்பிப்பதற்கு முன்னால் அந்தக் காயைப் பற்றிய எவ்வளவு தகவல்கள்!!! சபாஷ் :-)

    ReplyDelete
  6. படிக்கும்போதே செய்து சாப்பிட வேண்டும் போல் உள்ளது.உங்களை தொடர வைத்து விட்டீர்கள்.. (பதிவில் தான்)

    ரம்பை இலை என்ன என்று தெரியவில்லை.

    தேசி சாறு என்றால் எலுமிச்சம் சாறு என்று புரிந்து கொண்டேன்.

    ReplyDelete
  7. // அவிந்ததும் வெட்டிவைத்த வெங்காயம், ரம்பை, கறிவேற்பிலை, தேங்காய்பால் விட்டு சிறிது உப்பு சேர்த்து ஓரு கொதிவர இறக்கிவிடுங்கள். //

    அய்யே ரம்பையய் சேர்க்கனும்னா, நான் தேவலோகத்துக்குப் போயிதான் கூட்டி வரனும். அங்கனதான் ரம்பை,ஊர்வசி மேனகா எல்லாம் இருப்பாங்க.

    நல்லா எழுதி இருக்கீங்க. ஒரு சின்ன கண்டிசன் கொஞ்சம் சரும வியாதி இருப்பவர்கள் தள்ளி வைத்தால் நலம். இல்லை என்றால் பிடில் வாசிக்க வேண்டும். மிக்க நன்றி.
    இன்று உங்கள் பதிவில் எனக்கு ஒரு பதிவுக்கும் மேட்டர் கிடைத்தது. நன்றி.

    ReplyDelete
  8. வருகைக்கு நன்றி ஆடுமாடு.

    "வேறு ஏதாவது ஈசியா பண்ற மாதிரி சொல்லுங்களேன்".
    முடிந்தால் எழுதுகிறேன்.

    ReplyDelete
  9. "சீசனுக்கேற்ற மெனுவா?" :)

    நன்றி ஷங்கர்.

    ReplyDelete
  10. உழவன்" "Uzhavan" said..

    "சபாஷ் :-)"
    மிக்க நன்றி.

    ReplyDelete
  11. பெரிய இவளாட்டம் பேசறாளேனு நினைக்காதீர்கள் பிளீஸ். கொஞ்சம் இதை படியுங்களேன்.http://reap-and-quip.blogspot.com/2010/03/recipe-blogs.html

    ஆங்கில சமயல் புளொக்கை விட தரமானதான படங்களை எங்க ஆளுங்கள் குடுக்க வேண்டும் என்ற ஆசையில் எழுதியதே தவிர யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை எனக்கு.

    ReplyDelete
  12. இத்தனை விளக்கமாக சொல்லி இருப்பதே நல்லா இருக்கு. படங்களும் அருமை.

    ReplyDelete
  13. எனக்கு பிர்க்கங்காய் ரொம்பபிடிக்கும் மாதவி. தேங்காய்ப்பால் கறி செய்வேன்.
    இதையும் செய்துபார்க்கிறேன்..

    போட்டோக்கள் சூப்பர்.

    ReplyDelete
  14. நல்ல தகவல் மாதேவி. ஆனா உங்கலுடையது ஓப்பன் ஆகா ஏன் லோட்டாகுது. ஒவ்வொரு சமையம் ஒப்பன் ஆகா ரொம்ப லேட்டாகுது.

    ReplyDelete
  15. வருகைக்கு நன்றி இளந்தென்றல்.

    ரம்பை என்பது வாசனைக்குப் போடும் இலை.இது பற்றி மேலும் அறிய விரும்பினால் october 5th 20008 பதிவைப் பாருங்கள்.

    ReplyDelete
  16. வாருங்கள் பித்தனின் வாக்கு.

    "சரும வியாதி இருப்பவர்கள் தள்ளி வைத்தால் நலம்". கருத்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  17. அனாமிகா துவாரகன் வருகைக்கும் நல்லகருத்துக்கும் மிக்க நன்றி. முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  18. நீங்க கூப்பிடாவிட்டாலும் நாங்க வருவோம்ல . நமக்கு சாப்பாடு என்றாலே அவளவு பாசம் . கலக்கல் போங்க

    ReplyDelete
  19. மாதேவி, பீர்க்கங்காய் வதக்கியதும் கொஞ்சமாகிவிடும்.
    நீங்கள் சொன்ன முறைப்படி செய்தால் அளவு கூடி
    எல்லோருக்கும் ருசிக்கக் கிடைக்கும் செய்து பார்த்து சொல்கிறேன்

    ReplyDelete
  20. பீர்க்கங்காய் பால் கறி சூப்பர்.தோல்லில் பொரியல் செய்ததில்லை.நன்றாகயிருக்கு!!

    ReplyDelete
  21. // ரம்பை என்பது வாசனைக்குப் போடும் இலை.இது பற்றி மேலும் அறிய விரும்பினால் october 5th 20008 பதிவைப் பாருங்கள். //
    அட விளையாட்டுக்குச் சொன்னேன். அது கறிலீவ்ஸ் தாங்க.

    ReplyDelete
  22. pls collect ur award from my blog

    http://sashiga.blogspot.com/2010/03/blog-post_27.html

    ReplyDelete
  23. #####
    உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
    http://kjailani.blogspot.com/2010/03/blog-post_27.html.

    ########

    ReplyDelete
  24. மாதேவி ஆசியா சொல்வது உருளையுடன் பார்கக் ரொம்ப சூப்பாரா இருக்கு.

    அடுத்த முறை செய்து பார்க்கனும், பீர்க்கஙகாய் கடலை பருப்ப் சேர்த்து வைப்போம் ரொம்ப அருமைஆ இருக்கும்.

    வறையும் சூப்பர் இனி வறை வேஸ்ட் ஆகாது,

    எந்த ரெசிபியானாலும் அதை ஆய்ந்து விளக்கஙக்ளை கொடுக்க நம்ம மாதேவியால் தான் முடியும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. Chitra
    அன்புடன் மலிக்கா
    prabhadamu
    பனித்துளி சங்கர்
    வல்லிசிம்ஹன்
    Menagasathia
    அஹமது இர்ஷாத்
    Jaleela

    உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிகமிக நன்றி.

    ReplyDelete
  26. Menagasathia.


    ஜெய்லானி.

    நீங்கள் இருவரும் வழங்கிய விருதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கின்றேன்.

    மிக்கநன்றி.

    ReplyDelete
  27. கருக்குப் பிசுக்கு பால்பிசுக்கு என இருவகையில் கிடைக்கும்.
    மிகப் புதுமையான வார்த்தைகள், தகவல்கள்........சுவையும் அருமையாக இருக்கும் என்பதும் புரிகிறது. கண்டிப்பாக சமைத்துப் பார்க்கிறேன். நன்றிங்க.

    ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்