அறிமுகம் இப்படித்தான் ஆரம்பமானது. எனது ஆறாவது வயதில் அண்ணா கொண்டு வந்திருந்தான், இந்த புதினமான சாப்பாட்டை. ஸ்கூல் ஸ்போர்ட்ஸ் மீட்டில் கொடுத்தார்களாம்.
கவனமாக பொக்கற்றில் பதுக்கி தங்கை எனக்காக கொண்டு வந்திருந்தான். மெத்தென கோல்டன் கலரில் என்னைக் கவர்ந்தது. சாப்பிட்டால் கொண்டு வந்த அண்ணனுக்கே அரைவாசி கொடுக்கவே அரைமனம்தான். அவ்வளவு சுவை! பேர் என்னவென்றே தெரியாது. அடுத்த ஸ்போர்ட்ஸ் எப்போவெனக் காத்திருந்தேன்.
பதின்னான்காவது வயதில் நானே செய்யக் கற்றுக் கொண்டேன். அதன் பின் அண்ணனுக்கு அடிக்கடி பரிசு கிடைத்தது. முன்பு தந்ததற்காக.
இங்குதான் கிடைக்கும் என்று எண்ணயிருந்தேன். சீனா, ஜப்பான், பிலிப்பையஸ் என உலகமயமானதுதான்.
கட்லட்
கறி செய்யத் தேவையான பொருட்கள்
எலும்பில்லாத கோழி ¼ கிலோ
உருளைக்கிழங்கு -1
வெங்காயம் - 2
இஞ்சி உள்ளி பேஸ்ட் - 2 ரீ ஸ்பூன்
மிளகு தூள் - 1/4 ரீ ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1/2 ரீ ஸ்பூன்
கறிவேற்பிலை சிறிதளவு
உப்பு சிறிதளவு
இறைச்சிச் சரக்குத் தூள் - 1/2 ரீ ஸ்பூன்
தேசிச்சாறு சில துளிகள்
எண்ணெய் - 2 டேபில் ஸ்பூன்
தோய்ப்பதற்கு தேவையான பொருட்கள்
முட்டை வெள்ளைக்கரு -2
ரஸ்க் தூள் - 1/2 பைக்கற்
பொரிப்பதற்கு
எண்ணெய் ¼ லீட்டர்
சோஸ் தயாரிக்க
தக்காளிப்பழம் - 4(சுடுநீரில் போட்டு தோலை நீக்கி மசித்து எடுங்கள்)
சிலி சோஸ் - ¼ கப்
வெங்காயம் - 1/2
இஞ்சி பேஸ்ட் - ½ ரீ ஸ்பூன்
வினாகிரி - ½ ரீ ஸ்பூன்
உப்பு சிறிதளவு-
எண்ணெய் 2 ரீ ஸ்பூன்
செய்முறை
இறைச்சியை அரைத்து எடுத்து உப்பு, மிளகாய்த் தூள், இஞ்சி, உள்ளி பேஸ்ட் கலந்து பத்து நிமிடம் வையுங்கள்.
கிழங்கை அவித்து எடுத்துக் கொள்ளுங்கள்
வெங்காயம் சிறிதாக வெட்டி வையுங்கள்.
கறிவேற்பிலையை நான்கு துண்டுகளாக வெட்டி எடுங்கள்.
தாச்சியில் எண்ணெயை விட்டு, வெங்காயத்தை மெல்லிய நிறத்தில் வதக்கி கறிவேற்பிலை சேர்த்து இறைச்சியைப் போட்டு கிளறி, மூடி போட்டு இரண்டு நிமிடம் விடுங்கள்.
திறந்து பிரட்டிவிட்டு ½ கப் தண்ணி விட்டு மூடிவிடுங்கள்.
இறைச்சி அவிந்து இறுக்கமாக வர அவித்த கிழங்கை மசித்து சேர்த்து, மிளகு தூள், இறைச்சிச் சரக்கு தூவி அடுப்பை நிறுத்தி சில துளி எலுமிச்சம்சாறு விட்டு பிரட்டி ஆறவிடுங்கள். பின்பு சிறு சிறு உருண்மைகளாக உருட்டி சற்றுத் தட்டி வையுங்கள்.
முட்டை வெள்ளைக் கருவை அடித்து எடுங்கள். ரஸ்க் தூளை ஒரு கோப்பையில் வைத்துக் கொள்ளுங்கள். தட்டிய கலவைகளை முட்டையில் தோய்த்து ரஸ்க்கில் நன்றாகப் பிரட்டி பிளேட் ஒன்றில் வையுங்கள்.
தாச்சியில் எண்ணெயை விட்டு நன்கு கொதித்த பின் உருண்டைகளைப் போட்டு பொன்நிறமாகப் பொரித்து எடுங்கள். ரிசு பேப்பரில் போட்டு எண்ணெயை வடிய விடுங்கள்.
இந் நேரம் சோஸ் தயாரியுங்கள். எண்ணெய் 2 ரீ ஸ்பூன் விட்டு வெங்காயம் லேசாக வதக்கி இஞசிப் பேஸ்ட் சேர்த்து கிளறி தக்காளிச் சாறைவிட்டு நன்கு வதங்க விடுங்கள். வதங்கியதும் உப்பு, வினாகிரி, சில்லி சோஸ் கலந்து இறக்கி சிறிய பரிமாறும் போலில் ஊற்றி வையுங்கள்.
கட்லட்டுகளை அழகாகப் பிளேட்டில் அடுக்கி சோஸையும் வைத்து வெங்காயத் துண்டங்கள் எலமிச்சை துண்டங்களுடன் பரிமாறுங்கள். விரும்பினால் வெட்டிய மல்லித் தளை தூவிவிடுங்கள்.
குறிப்பு
அசைவம் உண்பவர்கள் முட்டை, மீன், விரும்பிய இறைச்சி வகைகளிலும் செய்து கொள்ளலாம். சைவம் உண்பவர்கள் கிழங்கு, கரட், லீக்ஸ், கொண்டு கட்டிக்கறி தயாரித்தும், வாழைக்காய், மரவள்ளிக் கிழங்கு, கத்தரிக்காயிலும் செய்து கொள்ளலாம். முட்டைக்குப் பதில் மைதாமா கரைசலில் தோய்த்து ரஸ்க் தூளில் நன்றாகப் பிரட்டி பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.
:-மாதேவி:-
எனக்கு இது ரெம்பப் பிடிக்கும்... இது மிகவும் ருசியான உணவு.
ReplyDeleteநன்றி.எங்களுக்கும் பிடித்ததுதான். எண்ணெயில் பொரித்தது அடிக்கடி சாப்பிடக்கூடாது.
ReplyDeleteபார்க்கவே வாயூறுகிறது. இறைச்சிச் சரக்கு என்று நீங்கள் குறிப்பிடுவது எதனை? அதில் என்னென்ன வாசனைத்திரவியங்கள் எந்த அளவில் சேர்ந்திருக்கும்?
ReplyDelete