Tuesday, August 19, 2008

வெள்ளிக்கிழமை ஸ்பெசல்

வெள்ளிக் கிழமை நாட்களில் அதிகாலையிலேயே வீடுகளில் பரபரப்பு. பாத்ரூம்களில் ஓடும் நீரால் தண்ணி பில் அன்றே இரட்டையாகும். பலர் வீடுகளில் விரதம். விரதம் இல்லாவிட்டாலும் சைவம். வீடு மொப் செய்தல், உடுப்பு அலசல் எனப் புனிதப்படுத்தும் வீட்டு வேலைகள் நாரியை முறிக்கும்.

கோவிலில் வருகை பதியும் பணியும் காத்திருக்கும்.

திரும்பும் வழியில் வெள்ளவத்தை காலி வீதி முழுவதும் பலரது கைகளிலும் தொங்கும் பைகளில் மரக்கறிகளும் பழங்களும் நிறைந்து வழியும்.

பாக்கிற்குள் இருந்து ஒருவர் எட்டிப் பாரப்பார். ஒல்லியாக நீட்டம் நீட்மாக, பச்சைக் கலரில்!

அன்று அவருக்கு சந்தையில் டிமான்ட அதிகம். சந்தை வியாபாரி கூசாமல் விலையை 10, 20 கூட்டிச் சொல்வான்.

மஹியங்கனவில் இருந்து வந்தாலும் யாழ்ப்பாண முருங்கா! மலிவு மலிவு எனக் கூவுவார்கள்.

மதியமானால் காக்காக் கூட்டங்களின் பாட்டும் கூடிவரும். மாமிசப் பிரியர்களும் இவர் இருந்தால் சமாளித்துவிடுவார்கள். வெள்ளிக்கிழ்மைக்கு எல்லாரும், எல்லாமும் இசைவாக்கம் ஆகிவிடுகின்றனவா?

பொதுவாகவே முருங்கைக் காயை பலரும் குழம்பாகவே செய்து கொள்வர். இது சற்று வித்தியாசமான பிரட்டல் கறிவகை. வாய்கு மிகவும் ருசியானது.

முருக்கைக்காய்ப் பிரட்டல்

தேவையான பொருட்கள்

1. முருங்கைக் காய் - 2
2. உருளைக் கிழங்கு பெரியது - 1
3. பெரிய வெங்காயம் - 1
4. தக்காளி -4
5. பச்சை மிளகாய் - 1
6. பூண்டு – 2
7. வெந்தயம் - 1 ரீ ஸ்பூன்
8. தேங்காய்த் துருவல் - 1 கப்
9. மிளகாய்ப்பொடி – 1 ரீ ஸ்பூன்
10. தனியாப்பொடி – 1/2 ரீ ஸ்பூன்
11. சீரகப்பொடி - 1/2 ரீ ஸ்பூன்
12. மஞ்சள்பொடி சிறிதளவு
13. உப்பு தேவைக்கு ஏற்ப

தாளித்துக்கொள்ள

1. கடுகு சிறிதளவு

2. உழுத்தம் பருப்பு - 1/2ரீ ஸ்பூன்
3. ரம்பை ஒரு துண்டு
4. கறிவேற்பிலை சிறிதளவு
5. தாளிக்க எண்ணெய் - 2 ரேபில் ஸ்பூன்

செய்முறை

முருங்கைக்காயை சின்ன விரலளவு துண்டங்களாக வெட்டி எடுங்கள். கிழங்கையும் தக்காளியையும் தனித்தனியே துண்டங்களாக வெட்டி வையுங்கள். வெங்காயத்தை சிறியதாக வெட்டுங்கள். மிளகாயை நீளவாட்டில் 2 துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள். உள்ளியை பேஸ்ட் செய்து வைத்துக் கொள்ளுங்கள். தேங்காய்த் துருவலிலிருந்து 2 கப் பால் தயாரித்துக் கொளளுங்கள்.

பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயை விட்டு கடுகு உழுத்தம் பருப்புப் போட்டு, உள்ளிப் பேஸ்ட் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். பின்பு வெந்தயம் ரம்பை கருவேற்பிலை போட்டு முருங்கைக்காய்களைக் கொட்டி 2 நிமிடங்கள் வதக்குங்கள். சற்றுப் பச்சை வாசம் போக பாலூற்றி கிழங்கு சேர்த்து 9-13 வரையான பொருட்களைச் சேர்த்துக் கிளறி, இறுக்கமான மூடி போட்டு அவிய விடுங்கள்.

5 நிமிடத்தின் பின் திறந்து பிரட்டி விடுங்கள். மீண்டும் மூடி போட்டு 2 நிமிடம் அவிய விடுங்கள்.

2 நிமிடத்தின் பின் திறந்து தக்காளி சேர்த்து திரும்பவும் மூடி, அடுப்பைக் குறைத்து 5 நிமிடம் விடுங்கள்.

இப்பொழுது திறந்தால் இறுக்கமாக வந்திருக்கும். அடியில் சற்று குழம்பு இருந்தால் திறந்தபடி விட்டுப் பிரட்டி, குழம்பு நன்றாக வற்றி வரள இறக்குங்கள்.

முருங்கைக் காய்களின் மேற் தோலும் மென்மையாக வந்து விடும். மணமும் ஊரைக் கூட்டும்.

காரக் கூட்டு முருக்கைக்காய்

தேவையான பொருட்கள்

1. முருங்கைக்காய் - 3 சற்று சதைப்பிடியான காயாக இருக்க வேண்டும்.
2. வாழைக்காய் -1
3. சின்ன வெங்காயம் -10
4. பச்சை மிளகாய் -1
5. தேங்காய்த் துருவல் - 4 டேபிள் ஸ்பூன்
6. செத்தல் மிளகாய் - 5,6
7. மிளகு – ½ ரீ ஸ்பூன்
8. சீரகம் - ½ ரீ ஸ்பூன்
9. மஞ்சள் சிறிதளவு
10. பூண்டு – 4
11. புளி – ஒரு சிறிய எலுமிச்சையளவு
12. உப்பு தேவையான அளவு

தாளித்துக்கொள்ள

1. கடுகு – சிறிதளவு

2. கருவேற்பிலை – சிறிதளவு
3. எண்ணெய் - 1 ரீ ஸ்பூன்

செய்முறை

முருங்கைக்காயை விரலளவு துண்டங்களாகவும், வாழைக்காயை நீளத் துண்டுகளாகவும் வெட்டிக் கொள்ளுங்கள். வெங்காயங்களை இரண்டு மூன்றாக வெட்டிக் கொள்ளுங்கள். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிவிடுங்கள்.

தேங்காயைத் தனித்தும், செத்தல் மிளகாய், மிளகு, சீரகம், மஞ்சள், பூண்டு ஆகியவற்றைப் பிறிதாகவும் அரைத்து எடுங்கள்.

பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணி விட்டு முருங்கைக்காயையும் வாழைக்காயையும் உப்பு சேர்த்து, மூடி போட்டு அவிய விடுங்கள். முக்கால் பாகம் வெந்ததும், மிளகாய்க் கூட்டுப் போட்டு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து கிளறி மூடிவிடுங்கள். இரண்டு நிமிடம் ஆனதும் திறந்து, தேங்காய்க் கூட்டுப் போட்டு கிளறி புளி கரைத்து ஊத்திவிடுங்கள்.

தடிப்பாக வர இறக்கி எடுத்து வையுங்கள். பின்பு தாளித்துக் கலந்து கொள்ளுங்கள்.

காரக் கூட்டு மணத்துடன் கறி தயார்.

:-மாதேவி-:

No comments:

Post a Comment

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்