Saturday, August 9, 2008

ஆரோக்கிய ஜீஸ் வகைப் பானங்கள்



நாங்கள் காலையில் எழுந்ததிலிருந்து படுக்கைக்குச் செல்வது வரை அன்றாடம் தண்ணீர் அடங்கலாக 6-7 கிளாஸ் வரை, அல்லது அதற்கும் கூடுதலாக நீராகாரம் அருந்துகிறோம். கோப்பி, ரீ, கோலா, பன்ரா, சோடா, கோடியல் போன்ற எல்லாப் பானங்களும் அதற்குள் அடங்கும்.

இவற்றில் உள்ள இனிப்பு நாவுக்கு நல்ல சுவையாக இருப்பதால் அடிக்கடி குடிக்கத் தூண்டுகிறது. ஆயினும் மென்பானங்களை அருந்துவதால் உடலுக்கு ஏற்படக் கூடிய பாதகமான விளைவுகளை நீங்களும் கட்டாயம் வாசித்திருப்பீர்கள்.

மென்பானங்களை தொடர்ந்து அருந்தி வருபவர்கள் பலருக்கும் இளவயதிலேயே நீரிழிவு, கொலஸ்டரோல், அதீத எடை போன்ற உடல் நலக் கேடுகள் வருவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இதனைத் தவிர்ப்தற்கு எமது உணவுப் பழக்கத்தில் மாற்றம் செய்ய வேண்டும்.

இயற்கை எமக்கு இனிதே அளித்துக்கொண்டிருக்கும் பழவகைகள், காய்கறிகள் ஆகியவற்றின் சாற்றிலிருந்து தயாரிக்கும் பானங்களை அருந்துவதால் உடலை ஆரோக்கியமாகப் பேணிக்கொள்ளலாம்.

சீசனில் கிடைக்கும் அவற்றிலிருந்து உடலுக்கு வேண்டிய விற்றமின்களையும் பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களையும் இயற்கையாகப் பெற்றுக் கொள்ளலாம்.

அவ்வாறான சில பானங்கள் பற்றி இந்த இடுகையில் தர முயல்கிறேன்.

கோலாப் பிரியர்களிடமிருந்து வரவேற்பு கிடைக்குமா?

மனதைக் கவரும் விதமாக உயரமான கண்ணாடி கிளாஸ்களில் தயாரித்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுத்தால் ஜில் ஜில் என அருந்த அழைக்கும். மென்பானங்களுக்கு bye bye.

ஆரோக்கிய ஜீஸ் வகைப் பானங்கள் சில பற்றிப் பார்ப்போமா?

தோடை, எலுமிச்சை, லைம், நாரத்தை, பாஸன் வகைகள்

ஒருவர் பருகுவதற்கு பொதுவாக ஒரு பழம் போதுமாக இருக்கும். இருந்தாலும் விருப்பத்திற்கு ஏற்ப சாற்றைப் பிழிந்து எடுத்து ஒரு கப் தண்ணீர் விட்டுக் கலக்கி, வடித்து 2 ரீ ஸ்பூன் சர்க்கரை அல்லது சிறிது உப்பு கலந்து செய்து கொள்ளுங்கள். சுவை சேர்க்க விரும்பினால் எலுமிச்சை, லைம் இரண்டிற்கும் இஞ்சிச் சாறு சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த வகை பானங்களை குளிரூட்டியில் வைத்துப் பருகிக் கொள்ளலாம்.

பப்பாளி - 2 பெரிய துண்டுகள், மாம்பழம் -1, விளாம்பழம் -1 , வாழைப்பழம் - 2, பட்டர் புருட் - 1, கொய்யாப்பழம் - 1, சப்போட்டா - 1,2, அண்ணாமுண்ணாப் பழம் விதைகள் நீக்கி -1, நாவல்பழம் விதைகள் அகற்றி - 1/2 கப்.

இவ்வகைப் பழங்களுக்கு ஒரு கப் பால் கலந்து மிக்ஸியில் அடித்து எடுத்துக் கொள்ளுங்கள். விளாம்பழம், கொய்யாப்பழம் விதைகள் இருப்பதால் வடித்து எடுக்க வேண்டும். விருப்பத்திற்கும் பழத்தின் இனிப்புக்கும் ஏற்ப சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள்.
சில துளி எஸன்ஸ் வகைகள் இவ்வகைப் பானங்களில் சேர்த்துக் கொள்ளலாம். (வனிலா, லெமன், ஸ்டோபரி, பைன்அப்பிள், ரோஸ், ஆமென்ட்)

அப்பிள் - 1, அன்னாசி - பெரிய 2 துண்டுகள், திராட்சை - 1/2 கப், பியர்ஸ் - 1, மாதுளை - 1/2 கப், தக்காளி - 1-2, தற்பூசணி - 1 கப், வெள்ளரிப்பழம் - 1 கப்,

இவற்றில் வேண்டியதைத் தேர்ந்தெடுத்து மிக்ஸியில் அடித்தெடுத்து சீனி சேர்த்து பிரிட்ஜில் வைத்து எடுத்துக் கொள்ளலாம்.
அன்னாசி ஜீசில் பரிமாறு முன் chop செய்த அன்னாசிக் கலவை சேர்த்து, மேலே வனிலா ஐஸ்கிரீம் ஒரு ஸ்கூப் போட்டால் சுவை தித்திக்கும்.
அப்பிள் ஜீசுக்கு chop செய்த அப்பிள் தூவிவிட மேலே மிதந்து நின்று வாவா என்று அழைக்கும்.
உங்கள் விருப்பம் போன்று ஏனைய ஜீஸ்களையும் அலங்கரித்துக் கொள்ளுங்கள்.

பால் பொருட்களிலிருந்து தயாரிக்கக் கூடிய பானங்கள் சில

பால் - பாதாம். முந்திரிகைப் பருப்புகளை ஊற வைத்துக் கலந்து, சர்க்கரை சேர்த்து அருந்திக் கொள்ளலாம். பருப்புகளை பாலுடன் மிக்ஸியில் அடித்ததெடுத்தும் உங்கள் விருப்பம் போல் அருந்திக் கொள்ளுங்கள்.

லசி - 1/2 கப் தயிருடன் 1/2 கப் தண்ணீர் விட்டு அடித்தெடுத்து சர்க்கரை சேர்த்து பிரிட்ஸில் வைத்து எடுங்கள்.

மோர் - 1/2 கப் தயிருடன் 1 கப் தண்ணீர் விட்டு அடித்து, மேலே வரும் வெண்ணையை எடுத்துவிட வேண்டும். பின்பு சிறிதளவு உப்புக் கலக்கி அருந்திக் கொள்ளலாம். வாய்க்கு இதமாக வேண்டுமானால் சிறியதாகக் கொத்திய மாங்காய், வெள்ளரி, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய். மல்லித்தளை, கறிவேற்பிலை விரும்பியவற்றைக் கலந்து கொண்டால் சூப்பராக இருக்கும்.

இளநீர்- நேரிடையாகவே அருந்திக் கொள்ளுங்கள். இளநீருடன் இருக்கும் தேங்காய் வழுக்கலையும் சேர்த்து சில துளி எலுமிச்சம் சாறும் கலந்து குடித்தால் செம ரேஸ்ட்தான்.

பனம் நுங்கு - நேரிடையாக சுவைக்க சுவைக்க விரும்பிய அளவு அருந்திக் கொள்ளக் கூடியது. பிரிட்ஸில் வைத்தும் அருந்திக் கொள்ளலாம்.
கரும்புச் சாறு - சிறிதாக வெட்டிய கரும்புத் துண்டுகள் தேவையான அளவு எடுத்துக் கொண்டு மிக்ஸியில் அடித்து எடுத்து, வடித்து அருந்திக் கொள்ளுங்கள். கருப்பஞசாறைக் கண்டால் ஈயும் இளித்துக் கொண்டு வந்துவிடும். கவனமாக மூடி வையுங்கள்.

பதநீர்(கருப்பணி) - நேரடியாகவே பருகி கொள்ளக் கூடியது. அதிலுள்ள சுண்ணாம்புச் சத்திற்கு சுவை ஊட்ட சிறியதாக வெட்டிய மாங்காய்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.
பதநீரில் பச்சையரிசி போட்டு அவிய வைத்து கருப்பணிக் கஞ்சியாகவும் பருகிக் கொள்ளலாம்.

சர்க்கரைத் தண்ணீர் - எலும்மிச்சம்பழம், வெல்லம், அத்துடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பழத்தீர்த்தம் - இளநீர் பாலுடன் மாம்பழம், வாழைப்பழம், எலுமிச்சை, மாதுளை, பேரீச்சு, விளாம்பழம் இவற்றுடன் வெல்லம் கலந்து கரைத்துக் கொண்டால் மிக்ஸ் புருட் பானம் தயாராகிவிடும்.

சாதக்கஞ்சி - சாதம் அவிந்து தடிப்பாக வரும்போது வடித்தெடுத்து உப்புச் சேர்த்து அருந்தலாம். ருசிக்கு தேங்காயப் பாலும் ஒரு மேசைக்கரண்டி சாதமும் சேர்த்துக் கொள்ளலாம்.

தெளிந்த பழம் சோற்று நீர் - ஒரு கப் எடுத்து உப்பு, தயிர், வெங்காயம், ஊறுகாய், பச்சைமிளகாய் சேர்த்துக் கொண்டால் சுவையாக இருக்கும்.

கசப்பு இல்லாத, உடலுக்கு ஹெல்தியான பானங்கள

மல்லித்தழை, புதினாத்தழை இரண்டையும் தனித்தனியாகவோ சேர்த்தோ ஒரு கப் தண்ணீர் விட்டு அடித்து எடுத்து, உப்பு, மிளகுதூள், லைம் ஜீஸ் கலந்து அருந்துவது ஹெல்த்தியானது.

கரட அல்லது பீட்ரூட்- சிறிதாக வெட்டி ஒரு கப் எடுத்து உப்பு, மிளகுதூள், அல்லது ஒரு கப் பால் சீனி சேர்த்தும் அருந்திக் கொள்ளலாம்.
வெள்ளரிப் பிஞ்சு - பிஞ்சு வெள்ளரிக்காயாக எடுத்து ஒரு கப் தண்ணீர் விட்டு அடித்து எடுத்து, உப்பு, மிளகு. இஞ்சிச்சாறு கலந்து அருந்திக் கொள்ளுங்கள்.

நெல்லிக்காய் - 3,4 எடுத்து விதையை நீக்கி ஒரு கப் தண்ணீர் விட்டு அடித்து உப்பு சேர்த்துக் கொண்டால் புளிப்பு சுவையுடன் இருக்கும்.

தினமும் நாம் அருந்தும் தண்ணீரிலேயே ஒரு நாளுக்கு ஒன்றாக சீரகம், தனியா, துளசி இலைகள், கற்பபூரவெள்ளி இலைகள் சேர்த்து ஊறவிட்டு நேரடியாக பருகிக் கொள்ளலாம். சுவைக்கு எதுவும் சேர்க்க வேண்டியதில்லை. இவைகள் உடலுக்கு குளிர்மை தரக் கூடியன. தண்ணீர்த் தாகத்தையும் தணிக்கும்.

தேயிலை, கோப்பி, கொக்கோ வகைப் பானங்கள் அருந்த விருப்பமுடையவராக இருந்தால் இவ்வகைப் பானங்களில் ஏதாவது ஒன்றை நாளுக்கு இரண்டு தடவைக்கு மேல் அருந்துவதைத் தவிர்த்துக் கொண்டால் உடல ஆரோக்கியம் நல்ல நிலையில் இருப்பதை நீங்களே உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.

சர்பத், பலூடா போன்ற கலரிங் கலந்து செயயும் பானங்களைத் தவிர்த்துவிடுவது நன்மை தரக் கூடியதாக இருக்கும்.




12 comments:

  1. ஆகா, அருமையான செய்முறைகள். நானும் உங்களை போல பழசாறிலும், காய்கறிசாறிலும் வாழும் ஜீவன் தான். சிறுவயது முதல் என் மாமா ஒருவர் சொல்லி தந்தது. இன்று வீட்டில் அப்பிள்,தோடை சாறு..:)
    செய்முறைகளை பகிர்ந்தமைக்கு நன்றிகள்..

    ReplyDelete
  2. நன்றி தூயா, வருகைக்கும் கருத்துக்களுக்கும்

    ReplyDelete
  3. அருமையான ஜூஸ் வகைகள்!!
    இதில் பாதி என்னோட பேவரைட் பானங்கள். சில நாட்கள் ஜூஸிலேயே உயிர் வாழ்வேன். வயிறும் லேசாக இருக்கும், உடம்புக்கும் நல்லது.
    ரொம்ப நன்றி!!மாதேவி!

    ReplyDelete
  4. நன்றி நானானி. எனக்கும் குடும்பத்தவர்களுக்கும் கூட ஜூஸ் வகைகள் நன்கு பிடிக்கும்.

    ReplyDelete
  5. அது என்ன "அண்ணாமுண்ணாப் பழம்" கேள்விப்பட்டதில்லையே. அதன் புகைப்படம் இருந்தால் போடுங்களேன்.

    எதிர்ப்பார்ப்புடன்

    நன்றி

    கவிமலர்

    ReplyDelete
  6. "அண்ணாமுண்ணாப் பழம்" என்றால் சீத்தாப் பழம். Custard apple.
    இதைக் கிளிக் பண்ணி படத்தைப் பாருங்கள்.
    http://x98.xanga.com/a36c011720733154595057/
    m115631503.jpg

    ReplyDelete
  7. அடிக்கிற வெயிலுக்கு தேவையான பகிர்வு... நன்றி...

    Visit : http://hainallama.blogspot.in/2013/03/blog-post_22.html

    ReplyDelete
  8. அருமையான பயனுள்ள இப் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி !

    ReplyDelete
  9. மனைவிக்கு சொல்ல பதிவை காப்பி செய்ய முடியவில்லயே என்ற கவலை

    ReplyDelete
  10. மகிழ்கின்றேன்.

    மிக்கநன்றி திண்டுக்கல் தனபாலன்.

    ReplyDelete
  11. நன்றி அம்பாளடியாள்.

    ReplyDelete
  12. வருத்தமாகத்தான் இருக்கின்றது.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்கநன்றி கிருஸ்ண மூர்த்தி.

    ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்