Monday, November 28, 2011

கோடைக்கு நுங்கு பதநீரும் வாய்ருசிக்கு பனம் பட்சணங்களும்

பனை. இது வெட்ப வலயப் பிரதேசத்திற்கான தாவரம் . இயற்கையாகவே வளரும். புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம்.


கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம், கற்பகதரு என்கிறார்கள்.

தேசிய வளங்களான தேயிலை இரப்பர் தென்னையுடன் பனையும்அடங்கும்.

இளம் கன்றுகள் வடலி என அழைக்கப்படும்.


பனைகள் உயர்ந்து 30 மீட்டர் வரை வளரும். உச்சியில் முப்பது நாற்பது வரையிலான விசிறி வடிவமான ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும்.


பொதுவாக பனைகளுக்கு கிளைகள் இல்லை. அபூர்வமாகவே கிளைப் பனைகள் காணப்படும். இது வல்லிபுரத்துக் கோவிலடிக் கிளைப் பனை.


பனை விதை நாட்டப்பட்டு முதிர்வடைவதற்கு 15 வருடங்கள் வரை எடுக்கும். 20 வருடங்களின் பின்னர் வருடம் ஒன்றிற்கு ஆறாயிரம் ரூபா தொடக்கம் பதினையாயிரும் வரை வருமானத்தைத் தரும்.

ஒரு பனையிலிருந்து நூறுக்கும் அதிகமான பலன்களைப் பெறலாம் என்கிறார்கள். 20 வருடங்கள் முதல் 90 வருடங்கள் வரை பனைகள் மூலம் வருமானம் கிட்டும். மரத்தின் சகல பாகங்களும் பலன் தரக் கூடியன.

பனை அபிவிருத்தி சபை ஒன்று இலங்கையில் 1978ல் உருவாக்கப்பட்டது. இதனால் பனம்பொருள் உற்பத்திகள் ஊக்குவிக்கப்பட்டன.

' தொப்பென்று விழுந்தான் தொப்பிகழண்டான் ' அவன் யார் ?  என்ற சிறுவயதில் நொடி விளையாட்டுக்களும் நினைவில் வந்து செல்கின்றதல்லவா.

பனையிலிருந்து நுங்கு,சீக்காய், பனம் பழம் கிடைக்கும்.


பனம் பழத்தை பாத்தியிலிட்டு பனங்கிழங்கு, பூரான், பச்சை ஒடியல், புளுக்கொடியல், பனாட்டு, பனங்காய் பணியாரம், பாணி, பதநீர், வினாகிரி, கள்ளு,  சாராயம், கல்லக்காரம், பனஞ்சீனி, பனங்கட்டி, கோடியல், ஜீஸ், ஜாம், எனப் பலவும் ஒடியல் மாவில் கூழ், பிட்டும், தயாரிக்கலாம்.

பதநீர் உடலுக்கு குளிர்ச்சி என்பார்கள். அது உடல் நலத்திற்கு நல்லது என்பார்கள். பதநீரை எமது ஊரில் கருப்பணி என்றும் கூறுவர்.

ஆனால் கள்ளு போதை ஏற்றும்.

""....நாடெலாம் கள்ளின் நாற்றம்
நாற்றிசை சூழும் வேலிக்
கூடெல்லாம் பிழாக்கள் போத்தல்
குடியர்கள் அங்கு கூடித்
தேடிய பொருளை யெல்லாஞ்
சிதைத்தவர் குடித்தலாலே...""

இவ்வாறு யாழப்பாணத்தைத் தனது பெயரிலேயே சூடிக் கொண்ட மறைந்த கவிஞர் யாழ்ப்பாணன் அன்று பாடினார்.

பச்சை ஓலை ஆடு மாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படும். குருத்தோலையை வெட்டி எடுத்து காயவிட்டு பெட்டி, பாய், தடுக்கு, கூடை, சுளகு, உமல், பனங்கட்டிக் குட்டான், நீத்துப்பெட்டி, கொட்டைப்பெட்டி, விசிறி, இடியப்பத் தட்டுகள், தொப்பி, அழகிய கைவினைப் பொருட்கள், கைப்பைகள் எனப்பலவும் தயாரிக்கின்றார்கள்.


காய்ந்த ஓலைகள் வீட்டுக் கூரை மேயவும், வீட்டைச் சுற்றி வேலி அடைப்பதற்கும்  உதவுகின்றன.

"காய்ந்தோலை விழக் குருத்தோலை சிரிக்கும் " என்ற பழமொழியும் தெரிந்தது தானே.


மூரி மட்டையிலும் வேலி அடைப்பார்கள். பொதுவாக வெறும் காணிகளைச் சுற்றி வேலி அடைக்கவே மூரி மட்டையைப் பயன்படுத்துகிறார்கள்.

பனையோலையின் காம்பு மிக நீண்டது. இது பனை மட்டை எனப்படுகிறது. காய்ந்த பின் அதனை மூரி மட்டை என்பார்கள்.


அக்காலத்தில் கிணற்றிலிருந்து நீர் இறைப்பதற்கான துலா செய்வதற்கு பனை மரம் பயன்பட்டது.

துலா. நன்றி:- கட்டற்ற கலைக்களஞ்சியமான ...
ta.wikipedia.org

கிணறு இறைக்க கிணற்றுப் பட்டையும் வைத்திருந்தார்கள்.

... பட்டையால தண்ணி வார்க்க துலா மிதிச்சுப் ...
நன்றி:- newjaffna.com

தும்புக் கைத்தொழில் தொழிற்சாலை இயங்கியது. காய்ந்த ஏனைய பாகங்கள் விறகுக்காகப் பயன்படும். வீடு கட்டும்போது வளை, தீராந்தி, பனஞ்சிலாகை எனவும் பலவாறு பனை மரம் உபயோகப்படுகிறது.

ஆதிகாலத்தில் எமது அறிவையும், கல்வியையும் எதிர்காலப் பரம்பரையினருக்கு பாதுகாத்துக் கொடுக்கும் பொக்கிசங்களாக இருந்தவை ஏடுகளே. பனை ஓலைகளைப் பதப்படுத்தி அதில் எழுத்தாணிகளால் குறித்து வைத்தே எமது இலக்கியங்களும் பேணப்பட்டன.

உ.வே.சா கண்டெடுத்த ஓலைச்சுவடிகள் சில இவை என
ta.wikipedia.org சொல்கிறது.

இப்போதும் குழந்தைகளுக்கு ஏடு தொடக்குவது எனச்சொல்வார்கள். அன்றைய நாளில் ஏட்டுச் சுவடியுடன் செல்வது நமது தொன்று தொட்ட வழக்கமாக இருந்துவருகின்றது.

யுத்த காலத்தில், சென்றிப் பொயின்றுகளுக்காவும் பங்கர் மூடிகளுக்காகவும் பெரும் தொகையான மரங்கள் அழித்தொழிக்கப்பட்டன.
இராணுவ காவலரண் நன்றி:- tamilswin.blogspot.com

ஏவப்பட்ட செல்களின் தாக்கத்தால் தலையிழந்தன பெருமளவான பனைகள்.

செல்வீச்சினால் தலையிழந்த பனைகள் மனிதர்கள் போலவே... நன்றி:- panoramio.com

பனைகள் எங்கு தோன்றின என்பதற்கு சரியான சான்று இல்லை. ஆசிய நாடுகளில்தான் பனைகள் அதிகம், இலங்கை இந்தியா, இந்தேனீசியா, தாய்லந்து, மலேசியா, மியன்மார், சீனா, வியட்நாமிலும், மேற்கு ஆபிரிக்க நாடான கொங்கோவிலும் பனைகள் காணப்படுகின்றன.

பனைச் சமையல் அடுத்த இடுகையில்..

:- மாதேவி -:
0.0.0.0.0.0.0

34 comments:

  1. பனையைப்பற்றிய செய்தி தொகுப்பு அருமை..

    ReplyDelete
  2. மாதேவி,

    பனை பற்றிய பதிவு பயனுள்ளதாக இருந்தது.

    கிளைகளையுடைய பனையின் படம் வியப்பைத் தந்தது.

    தலையிழந்த பனை துக்கத்தை....

    ReplyDelete
  3. பனைமரம் என்ற கற்பக தருவைப் பற்றி நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டோம்.

    அடுத்து பனை சமையலுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.

    ReplyDelete
  4. படங்களும் தகவலும் அனைத்தும் அருமை

    ReplyDelete
  5. எத்தனை வித பயன்பாடுகள்.அறியத் தந்ததற்கு நன்றி. கிளைப்பனை அதுவும் இத்தனை கிளைகளுடன் இப்போதுதான் பார்க்கிறேன்.

    பனைச் சமையலுக்குக் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  6. ....நாடெலாம் கள்ளின் நாற்றம்
    நாற்றிசை சூழும் வேலிக்
    கூடெல்லாம் பிழாக்கள் போத்தல்
    குடியர்கள் அங்கு கூடித்
    தேடிய பொருளை யெல்லாஞ்
    சிதைத்தவர் குடித்தலாலே...""

    இவ்வாறு யாழப்பாணத்தைத் தனது பெயரிலேயே சூடிக் கொண்ட மறைந்த கவிஞர் யாழ்ப்பாணன் அன்று பாடினார்.//

    குடியினால தேடிய பொருளை இழத்தல் கவிதை அருமை பகிர்வுக்கு நன்றி.

    சிறு வயதில் பனைமரம் தன் வரலாறு சொல்வது போல் பாட்டு பாடமாக உண்டு.

    பனை மரமே! பனை மரமே! ஏன் வளர்ந்தாய் பனை மரமே! என்ற கேள்விக்கு தான் வளர்ந்த காரணத்தையும் தன் உபயோகத்தையும் பனை மரம் சொல்லும். அந்த பாடல் மிக அருமையாய் இருக்கும். ராகத்தோடு பாடுவோம்.

    நீங்கள் சொன்ன பயன்கள் எல்லாம் அது சொல்லும்.

    புட்டு கருப்பட்டி(சில்லு கருப்பட்டி என்ற பெயரும் உண்டு) எனற பண்டத்தை இதிலிருந்து செய்வார்கள் பனங்கற்கண்டு, பனை வெல்லம் எல்லாம் பனை மரத்தின் கொடைதான்.
    தை பொங்கலுக்கு முற்றத்தில் பொங்கல் வைக்க பனை ஒலை உபயோகிப்பார்கள். பனம் ப்ழம், பனங்கிழங்கு எல்லாம் மிக நன்றாக இருக்கும்.

    நன்றி மாதேவி.

    பட்சணங்களுக்கு காத்து இருக்கிறேன்.

    ReplyDelete
  7. கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம், கற்பகதரு என்கிறார்கள்.//

    உண்மை தான் மாதேவி.

    ReplyDelete
  8. அருமையான பகிர்வு.. 'பட்டை' இந்தச் சொல்லைக் கேட்டு எவ்ளோ நாளாச்சு!!

    ReplyDelete
  9. நுங்கு, பதநீர் இவை இரண்டும் கேள்விப்பட்டவை...

    நுங்கு ருசித்தது.... கிராமத்திற்குச் சென்றால் நிறைய சாப்பிட்டு இருக்கிறேன்.... இங்கே மனதுக்குள் நினைக்க மட்டுமே முடியும்... :(

    ReplyDelete
  10. யுத்த காலத்தில், சென்றிப் பொயின்றுகளுக்காவும் பங்கர் மூடிகளுக்காகவும் பெரும் தொகையான மரங்கள் அழித்தொழிக்கப்பட்டன.

    படங்களுடன் தகவல்கள் பார்த்து ஆனந்தப் பட்ட போது இந்த வரியில் திடுக்கிட்டுப் போனேன்.

    ReplyDelete
  11. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆசியா.

    ReplyDelete
  12. வாருங்கள் சத்ரியன்.

    தனித்தனியே உங்கள் கருத்துக்களை தெரிவித்தது மகிழ்ச்சியைத் தருகின்றது.

    நன்றி.

    ReplyDelete
  13. நன்றி கோவை2தில்லி.

    தருகின்றேன்.

    ReplyDelete
  14. மிக்க நன்றி சிநேகிதி.

    ReplyDelete
  15. வாருங்கள் ராமலஷ்மி.

    எங்கள் ஊர் கிளைப்பனையை ரசித்ததற்கு நன்றி.

    ReplyDelete
  16. வாருந்கள் கோமதி அரசு.

    ஆமாம் நீங்கள் கூறிய பாடல்போல் நாங்களும் பாடி இருக்கின்றோம் இப்போது மறந்துவிட்டது. மீட்டுத்தந்த உங்களுக்கு மிக்க நன்றி.

    இங்கும் சில்லுக் கருப்பட்டி இருக்கின்றது. நீங்கள் தந்த தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete
  17. ஆமாம் சாரல்.

    நீங்கள் கூறியதுபோல பட்டை என்ற சொல் எல்லாம் கிணற்றுக் காலத்துடன் போய்விட்டது.

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  18. வாருங்கள் வெங்கட் நாகராஜ்.

    இங்கும் கொழும்பில் நுங்கு,பதநீர் கிடைக்காது. பனங்கிழங்கு, பனம் பழம் கிடைக்கும்.
    வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  19. வாருங்கள் ரிஷபன்.

    காலத்தின் கோலத்தால் நடந்தவைதான்.
    :( ஆனால் பனைகள் பாவம்.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  20. தகவல்கள் அனைத்தும் அருமை. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  21. அழகான அந்தப் பனைமரம் பாடல் ஞாபகம் வருது.நம் நாட்டில் பனை அழிந்துகொண்டு போவதாகச் சொல்கிறார்கள்.நீங்கள் பனை பற்றிய செய்திகளை நிறைவாகத் தந்திருக்கிறீர்கள் மாதவி.பனையால் இறக்கியவுடன் கள் குடித்திருக்கிறீர்களா.குடித்துப் பாருங்களேன்.நல்ல சுவையாய் இருக்கும் !

    ReplyDelete
  22. அட!! அருமையான தகவல் தொகுப்பு!!!!

    'பனங்காய் பணியாரமே' பாட்டு நினைவுக்கு வருது:-)

    ReplyDelete
  23. நீங்கள் இட்டுள்ள கிளையுள்ள மரம், இது நம் இனப் பனையல்ல, PALM ( பாம்) வகையை சேர்ந்த மரம், இது மலேயாவில் இருந்து விதை கொண்டு வந்து வளர்ந்ததாக அறிந்தேன்.
    ஆனால் இலங்கையில் சில நம் இனக் கிளைப் பனைகள் இருந்துள்ளது. குறிப்பாக நெடுந்தீவில் 70 களில் இருந்த ஒரு கிளைப் பனையில் படம் என் நண்பர் காட்டினார். அதற்கு நான்கு கிளைகள் இருந்தது.
    அது இப்போ இல்லை.

    ReplyDelete
  24. நாங்க இருக்கும் இடத்தில் இதெல்லாம் பார்க்கவோகேள்விப்படவோ கூடமுடியாது.

    ReplyDelete
  25. வணக்கம் சகோதரி! பதிவுலகில் புதியவன். என் மனைவி உங்கள் தளத்தை விரும்பிப் பார்ப்பார்கள். நான் இன்று தான் உங்கள் வலைப் பக்கம் வந்தேன். பனையைப் பற்றி நிறைய தகவல்கள் அருமை. தங்களின் முந்தைய பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது வாழ்த்துக்கள். நன்றி நான் என் வலையில் மனித மனங்களைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். 15 பதிவுகள் எழுதி உள்ளேன். படித்து விட்டு கருத்து சொல்லவும். கடைசியாக எழுதிய பதிவு கீழே:

    "மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."

    ReplyDelete
  26. கடந்தும் இழந்தும்
    மறைந்தும் போகும்
    இனிய நம் வாழ்வின்
    தடங்களை மீட்டுத் தரும்
    உங்களுக்கு
    நன்றி

    ReplyDelete
  27. நன்றி சி.பி.செந்தில்குமார்.

    ReplyDelete
  28. வருகைக்கு நன்றி ஹேமா.

    பதநீர் குடித்திருக்கின்றேன்.

    ReplyDelete
  29. வாருங்கள் துளசிகோபால்.

    ஆகா பாட்டுடன் பணியாரம் மணத்துவிட்டதா :))

    முதல் பணியாரம் உங்களுக்கே :)

    ReplyDelete
  30. வாருங்கள் யோகன்பரிஸ்.
    வல்லிபுரக் கோயிலுக்கு அண்மையில் ஆனைவிழுந்தான் சந்தியில் கிளைப் பனை எங்கள் சிறுவயது காலத்திலிருந்தது.எனது அம்மா தனது சிறுவயதுகாலத்தில் பார்த்ததாகக் கூறியிருக்கின்றார். அப்போது அதன் காலத்தைப் பாருங்கள்.

    இதுவும் வல்லிபுர கோயிலுக்கு முன்பாக பிள்ளையார் கோவில் பக்கமாக இருக்கிறது. அண்மையில் (2010) எடுத்த படம்.

    பனையும் பாம் இனத்தை சேர்ந்தது தானே.

    உங்கள் கருத்துக்கும் தகவல்களுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  31. வருகைக்கு நன்றி லஷ்மி.

    ReplyDelete
  32. உங்கள் முதல்வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.

    உங்கள் பக்கம் நேரம் கிடைக்கும்போது படிக்கின்றேன்.

    ReplyDelete
  33. வருகைக்கு நன்றி Muruganandan M.K.

    காலமாற்றத்தால் பல மறைந்து விடுவதால்சிலவற்றை பதிந்து தான் வைக்கவேண்டும்.

    வரும்கால சந்ததியினர் போட்டோக்களில் தான் பலவற்றையும் பார்க்க முடியும்.

    ReplyDelete
  34. பனையைப்பற்றி லட்டு லட்டாக தகவல்.பகிர்வுக்கு நன்றி மாதேவி.

    ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்