Friday, October 12, 2012

தேங்காய்ப் பால் பட்டர் பீன்ஸ்

கொடியினத் தாவரம் நீண்டு வளரும். சுற்றுக் கொடி பந்தலாகவும், கொடியாகவும் படர்ந்து வளரும். வெளிர் நீல நிறம் அல்லது வெள்ளை நிறப்பூக்கள் பூத்திருக்கும்.Fabaceae குடும்பத்தைச் சார்ந்தது. விஞ்ஞானப் பெயர்   Phaseolus lunatus  ஆகும். 

பீன்ஸ் இனத்தில் பலவகைகள் இருக்கினறன.பச்சை, மஞ்சள், ஊதாசிவப்பு  நிறங்களில் காய்கள் கிடைக்கின்றன. இலங்கையில்  போஞ்சிக்காய் எனச் சொல்வார்கள்.


Green Beans,  ;Lima beans, 


சீமைஅவரை (french beans ), பனி அவரை,


பால் அவரை, சிறகு அவரை ( winged beans)


கராம்பு அவரை,


கொத்தவரை,  பயித்தங்காய் (Long beans) சோயா அவரை, மொச்சை, கெளபி,பட்டாணி போன்றனவும் இவ் இனத்தைச் சார்ந்தன.

fresh , frozen எனவும் விதைகள் பதப்படுத்தப்பட்டு டின்களில் அடைக்கப்பட்டும், உலரவைக்கப்பட்டும் கிடைக்கின்றன. 

இதில் மிகுந்த சத்துக்கள் உள்ளன. புரதம் கூடியளவு உள்ளது 25 வீதம் புரதம், நார்ப் பொருள்களும் நிறைய இருக்கினறன. கொழுப்பு அற்றது.

போலிக் அமிலம், molybdenum கணிசமாகக் கொண்டுள்ளது. இரும்புச் சத்து,பொஸ்பரஸ், மக்னீசியம், D6, மங்கனீஸ் சத்துக்களையும் அளிக்கிறது.

அன்ரி ஒக்ஸ்சிடனட் இருதய நோய்களுக்கு சிறந்தது. நீரிழிவு இருதய நோயாளர்களுக்கு சிறந்த உணவு. இரத்தக் கொதிப்பையும் தடுக்கும் என்கிறார்கள்

மலிவான விலையில் நிறைந்த ஊட்டச் சத்துக்களைத் தருகிறது.பீன்ஸ் காய்களை பிஞ்சாக பறித்துச் சமைப்பது உகந்தது.

மணியாரம்பட்டி அவரை சுவைக்குப் பெயர் பெற்றதாமே ?

நுவரெலியா பட்டர் பீன்ஸ்க்கு   இலங்கையில் நல்ல கிராக்கி இருக்கின்றது.

பலவிதமாக சமைத்துக் கொள்ளலாம்.

பீன்ஸ் முட்டை வறுவல், பீன்ஸ் இறால் வறை, பீன்ஸ் சிக்கன் மசாலா, ஸ்பைசி பீன்ஸ், சூப், சலட், பீன்ஸ் வித் அல்மன்ட், பேக்ட் பீன்ஸ், கசரோல்,  சொப்சி, எனப் பற்பல....... இத்துடன் கூட்டு, குருமா, பொரியல், வறை,அவியல்,சாம்பாரும் அடங்கும்.


பீன்ஸ் கிடைக்கும் காலத்தில் Blanchசெய்து Ice waterல் குளிரவிட்டு எடுத்து freezer bagல் இட்டு பாதுகாத்து உபயோகிக்கலாம்.

100 கிராமில் கிடைக்கும் போசாக்கு

புரதம் 2.1 கிராம்
கொழுப்பு 0.9 கிராம்
கல்சியம் 63 மி.கிராம்
இரும்பு 1.5 மி.கிராம்
கரோட்டின் 362 மைக்ரோ கிராம்.
B1 0.70 மி.கிராம்
B 2 0.12 மி.கிராம்
நியாசின் 0.4மி.கி
விட்டமின் C 20மி.கி.

பீன்ஸ் சாப்பிட மாட்டேன் என அடம் பிடிப்போரை வரவழைக்க ஒரு வழி
தேங்காய்ப் பால் பட்டர் பீன்ஸ் கறிதான்.

தேங்காய்ப் பால் மணத்தில் பீன்ஸ்வாடை மறைய முகம் சுளிக்காமல் சாப்பிட வருவார்கள். நீங்களும் தப்பித்தீர்கள்.


தேங்காய்ப் பால் பட்டர் பீன்ஸ் செய்முறை

தேவையானவை

பட்டர் பீன்ஸ் - ¼ கிலோ
சின்ன வெங்காயம் - 7-8
உருளைக் கிழங்கு சிறியது - 1
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 4 பல்லு ( நசுக்கியது)
கடுகு - ¼ ரீ ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
பெருஞ் சீரகத் தூள் - ¼ ரீ ஸ்பூன்
தேங்காய்ப் பால் -1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - வேகவைக்க.
ஓயில் - 1 டேபிள் ஸ்பூன்
கறிவேற்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தேசிப்புளி - ½ ரீ ஸ்பூன்

செய்முறை -


பீன்சை நார் நீக்கி 2-3 அங்குல நீள் துண்டுகளாக வெட்டுங்கள்.

உருளைக் கிழங்கை சிறயதாக வெட்டுங்கள்.

சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் விருப்பம்போல வெட்டிக் கொள்ளுங்கள்.
ஓயிலில் கடுகு, பூண்டு வதக்கி சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் வதக்குங்கள்.

நன்கு வதங்கிய பின் கிழங்கைக் கொட்டிக் கிளறி சற்று உப்பு தூவி விடுங்கள்.
ஒரு பிரட்டு பிரட்டிய பின் பீன்சைக் கொட்டிக் கிளறுங்கள்.

ஒரு தட்டால் மூடி சிம்மில் இரண்டு நிமிடம் விடுங்கள்.

திறந்து தண்ணீர் ஊற்றி மஞ்சள் உப்பு போட்டு அவிய விடுங்கள்.

அவிந்த பின் பெருஞ் சீரகத் தூள் சேர்த்துப் பிரட்டுங்கள்.அடுப்பை  நிறுத்திய பின் தேங்காய்ப் பால் ஊற்றி கறிவேற்பிலை சேர்த்து  இறக்குங்கள்.

தேசிப் புளிவிட்டுக் கலந்து எடுத்து வையுங்கள். தேங்காய்ப் பால் கமகமக்க
பீன்ஸ் சாப்பிடத் தயாராகிவிட்டது.


மாதேவி.
0.0.0.0.0