Saturday, June 1, 2013

இனிக்கவும் காரமாகவும் உழுந்து மா ஆலங்காய் பிட்டு

இது சிறிய வகைத் தாவரம். இதிலிருந்து கிடைக்கும் பருப்பை உழுத்தம் பருப்பு என அழைக்கின்றோம்.

Thanks :- www.indiamart.com
Fabaceae குடும்பத்தைச் சார்ந்த uradbean,bignanungo.  black gram எனவும் அழைக்கப்படுகின்றது. தெற்காசியாவை பூர்வீகமாகக் கொண்ட தாவர இனம். தெற்காசிய மக்கள் விரும்பி உண்ணும் உணவாகவும் இருக்கிறது. இப்பொழுதும் இங்குதான் பெரும்பான்மையாக பயிரிடப்படுகிறது. பயிர் விளைந்து 80 - 90 நாட்களில் அறுவடைக்கு வரும். மழை வெள்ளம் கூடினால் பயிர் செய்கை அழிந்துவிடும்.

இலங்கையில் பரவலாக வரண்ட பிரதேசங்களில் பயிரிடப்படுகிறது. அனுராதபுரம், பொலனறுவ, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கிளிநொச்சி, புத்தளம் போன்ற பல மாவட்டங்களிலும் உழுந்து பயிரிடப்படுகிறது.

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் பல நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்பட்டது.

சிங்களத்தில் முங் அற்ர, மலையாளத்தில் Uzhuna  தெலுங்கில் minumulu கன்னடம் uddinabele நேபாளி uridemass. என்று அழைக்கிறார்கள்.


சங்ககாலத்தில் உழுத்தம் பருப்பு, உழுத்தம் சோறு, பொங்கல் என்பன திருமண விருந்து, மங்கள நிகழ்ச்சிகளில் பரிமாறப்பட்டன என்று அகநானூறு (86-1-2) பாடலில் சொல்லப்பட்டிருக்கின்றது. இலக்கியங்களில் உழுந்து புகழப்பட்டிருக்கின்றது.

தமிழகத்தில் பரவலாகப் பயிரிடப் பட்டதை சங்க இலக்கிய சான்றுகள் கூறுகின்றன 'உழுந்தின் அகல இலை வீசி' என நற்றிணைப் பாடலில் வருகின்றது.


தென்னிந்திய, இலங்கை உணவுகளில் பெரும் பங்கு எடுத்துக் கொள்கிறது.

இட்லி, தோசை, வடை, ஊத்தப்பம்,குழிப்பணியாரம், உழுந்துக் கறி, உழுத்தஞ் சோறு, களி, ஆடிக்கூழ், உழுத்தம் பச்சடி, பப்படம், முறுக்கு, தட்டை, என முக்கிய பங்கு வகிக்கிறது.


பஞ்சாப் சமையலில் மிகவும் பிரசித்தமானது.

ஓரிசாவில் சக்குலிப் பித்தா எனப்படும் அரிசிமா, உழுந்து, நெய், வெல்லம், தேங்காய் கலந்து தயாரிக்கப்படும் பாரம்பரியமான உணவு பிரசித்தமானது.

உழுத்தம் பருப்பின் சக்கை ஆடு, மாடு, குதிரைகளுக்கு நல்ல தீவினமாகவும் இருந்து வருகிறது.

உழுந்துடன் நல்லெண்ணெய் சேர்த்து செய்த களி உணவு பூப்படைந்த பெண்களுக்கும் , கர்ப்பிணிப் பெண்களுக்கும் சிறந்த உணவாகக் கொள்ளப்படுகிறது. இது கர்ப்பப்பை இடுப்பு எலும்புகள் பலமடைய உதவும்.

சத்து மா உருண்டைகளில் உழுந்து மாவும் கலக்கப்படுகிறது. மனித உடலுக்கு சத்துக்கள் தரக் கூடிய புரதம், மினரல்ஸ், விற்றமின்கள் அதிகம் அடங்கியுள்ளது.

இன்று அரிசிமாவும் உழுந்துமாவும் கலந்து செய்யப்படும் மாலைஉணவு ஆலங்காய் பிட்டு. சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவு.

ஏன் பெரியவர்களுக்கும் கூடத்தான்.        
         

அரிசியில் 

கலோரி 365 புரொட்டின் 8.6, நார்ப்பொருள் 3.5, விற்மின் B1, B2, B6 மற்றும் மினரல்ஸ் அடங்கி இருக்கின்றது.

100 கிறாம் உழுந்தில்......


நீரிழிவு நோயாளர்கள் வெல்லம் தவிர்த்து செய்து எடுத்துக்கொள்ளுங்கள். காரத்தாளிப்பு செய்து அதற்குள் போட்டு மெதுவாக ஒரு பிரட்டுப் பிரட்டி எடுத்துக்கொண்டு சுவைத்திடுங்கள்.

தேவையானவை


  • வறுத்த அரிசிமா – 1 கப்
  • வறுத்த உழுந்துமா- ½ கப்
  • வெல்லம் அல்லது சீனி – ¼ கப்
  • தேங்காய் பால் - ½ கப்
  • உப்பு தேவையான அளவு
விரும்பினால்  
  • தேங்காய் துருவல் - 4 டேபல் ஸ்பூன்
  • வெட்டிய முந்திரி, பிளம்ஸ் - 10 -15
  • ஏலப்பொடி சிறிதளவு.


செய்முறை

தேங்காய் பால் உப்பு கலந்து கொதிக்கவிடுங்கள்.

ஏனைய பொருட்களை கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.

பால் கொதித்துவர மாவில் ஊற்றி கரண்டிக் காம்பால் கிளறுங்கள்  மா உறுண்டு வர வேண்டும்.

பால் போதாமல் இருந்தால் தண்ணீர் தெளித்து உருட்டிப் பிடியுங்கள்.



சிறு சிறு உருண்டைகளாக விரல்களால் உருட்டி வையுங்கள்.

ஸ் ரீமர் பாத்திரத்தில் நீரை கொதிக்க வையுங்கள் நன்கு கொதித்து ஆவி வந்த பின் உருண்டைகளை மெதுவாக பரவலாக கொட்டி 10 -15 நிமிடங்கள் அவியவைத்து எடுங்கள்.

அவியும் பொழுதே வாசம் மூக்கை துளைத்து பசிக்க வைக்கும்.



அவிந்ததும் இறக்கி சிறுகோப்பைகளில் போட்டு சற்று ஆற வைத்து சுவைத்திடுங்கள்.

படிக்க கையில் ஒரு புத்தகமும் இருந்தால் எத்தனை கோப்பையும் உள்ளே போகும்.

0.0.0.0.0
.