Wednesday, March 18, 2009

குடமிளகாய் சலட்

கப்ஸிகம் என அழைக்கப்படும் இது மிளகாய் குடும்பத்தைச் சேர்ந்தது. இதில் விட்டமின் சி அடங்கியுள்ளது. விட்டமின் ஏ யைக் கொடுக்கும் கரோட்டினும் அதிகம் உண்டு.

பொதுவாக மிளகாய் இனத்தில் காரவகை, காரம் குறைந்த ஸ்வீட் பெப்பர் என இவற்றின் சுவை இருக்கும். பெப்பர் கோர்ன், பெல் பெப்பர், பவ்ரிகா பெப்பர், மெக்ஸிகன் பெப்பர், ரெட் பெப்பர், சில்லி பெப்பர், என இன்னும் பல வகையில் கிடைக்கின்றன.

இவை உணவில் காரத்திற்காகவும், வாசனைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் உணவு செமிபாட்டிற்கு உதவக் கூடியது.

குடமிளகாய் பச்சையாகவே உண்ணக் கூடியது. ஏனைய உணவுகளுடன் கலந்தும் சமைத்துக் கொள்ளலாம்.

இன்று நிரப்பல் கொண்டு தயாரிக்கப்பட்ட குடமிளகாய் சலட் செய்து கொள்வோம். இங்கு பச்சைநிற குடமிளகாய் பயன்படுத்தப்பட்டுள்ளது. விருந்துகளின் போது அனைவரின் கண்ணையும் கவர்வதற்கு பல வர்ணங்கiளைக் கொண்ட குடமிளகாய்களைப் பயன்படுத்தலாம்.

குடமிளகாய் நிரப்பலுக்கு

சிவப்பு குடமிளகாய் - 1
பச்சை குடமிளகாய் - 1
மஞ்சள் குடமிளகாய் - 1
விரும்பிய அரைத்த இறைச்சி – ½ கப்
விரும்பிய மீன், இறால் அல்லது நண்டு – ½ கப்
முட்டை – 2
வெங்காயம் - ½
மிளகாய்த் தூள் - ¼ ரீ ஸ்பூன்
சீரகத்தூள்- சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
தேசிச்சாறு – சில துளிகள்
உப்பு- தேவைக்கேற்ப
சீஸ் துருவல் அல்லது பிரஸ் கிறீம் -

செய்து பாருங்கள்

இறைச்சி, உப்பு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சிறிதளவு தண்ணீர் கலந்து அவித்தெடுத்து வையுங்கள். (அல்லது சற்று ஓயிலில் வெங்காயம், பூண்டு தாளித்து இறைச்சியைச் சேர்த்துப் பிரட்டி உப்பு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் போட்டு, சற்று வேக இறக்கும்போது ஒருரீஸ்பூன் டொமாடோ சோஸ் விட்டு எடுத்து வையுங்கள்.)

மீனை உப்பு, மஞ்சள் தூள், கலந்து சற்று நீர்விட்டு அவித்தெடுத்து முள் நீக்கி உதிர்த்து, வெங்காயம், மிளகு தூள், சீரகத் தூள், தேசிச்சாறு கலந்து எடுத்து வையுங்கள்.

முட்டையை அவித்து எடுத்து சிறிய துண்டுகளாக வெட்டி சீஸ் துருவல், மிளகு தூள், உப்பு, விரும்பினால் கடுகு பேஸ்ட் கலந்து எடுத்து வையுங்கள்.

குடமிளகாயை எடுத்து மேலே காம்புடன் மூடி போன்று வெட்டி எடுத்து வையுங்கள். சலட்களை எடுத்து குடமிளகாயுள் தனித்தனியே நிரப்பி மேலே சீஸ் துருவல் தூவி விடுங்கள். அல்லது பிரஸ் கிரீம் போட்டு வெட்டிய மூடிக் காம்பை மேலே வைத்து விடுங்கள்.

மூவகை சலட்டையும் நீங்கள் விரும்பினால் லேயெஸ் (layers)ஆகவும் ஒரு குடமிளகாயினுள் போட்டு நிரப்பிக் கொள்ளலாம்.

மாமிசம் தவிர்த்து உண்பவர்கள் தக்காளி, கரட், வெங்காயம், வெள்ளரிக்காய், அவித்த கிழங்கு, சோயா பயன்படுத்தி நிரப்பிக் கொள்ளலாம்.

பிளேட்டை எடுத்து வட்டமாக வெட்டிய வெங்காயம், தக்காளியை வைத்து அதன்மேல் நிரப்பிய குடமிளகாய்களை வைத்து கண்ணைக் கவரப் பரிமாறுங்கள்.

மாதேவி

2 comments:

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்