Tuesday, May 14, 2013

பூவாகி காயாகி வடகமும் ஆகி - வேப்பம் பூ

கிராமங்களில் வீட்டு முற்றத்து வாயிலில் நிழலுக்காக நாட்டி இருப்பார்கள். பல இடங்களில் தெய்வமரமாகவும் வழிபடப்படுகின்றது. பழைய காலத்தில் தோப்புக்களாகவும் இருந்தன.

இதனின்று வீசும் இதமான காற்று உடலுக்கு நன்மைகள் தரும். இள வேனிற் காலத்தில்; பூக்கும் வேப்பம் பூவின் வாசம் காற்றில் கலந்து வந்து சுகந்த மணத்தை தரும்.

இந்தியா,இலங்கை, பர்மாவில் வளரும் மூலிகை மரம் இது. 15- 20 மீற்றர் உயரம்வரை வளரக் கூடியது. 5 வருடங்களின் பின் பூத்துக் காய்கும்.


தாவரவியல் பெயர் Azadirachta  Indica.  குடும்பம் Meliaceae .  ஹிந்தியில் கடன் வாங்கி ஆங்கிலத்தில் Neem என்கிறார்கள். Indian Lilac என்றும் சொல்வதுண்டு.

4000 ஆண்டுகளுக்கு முன்பு தொட்டே இந்தியாவில் அறிமுகமாகி இருந்தது என்கிறார்கள்.

மருத்துவ குணம் நிறைந்த மரம். சர்வரோக நிவாரணி மருந்தாகவும் இருந்து வருகின்றது. சமஸ்கிருதத்தில் நிம்பா என்றழைத்தார்கள். மரம், இலை, பூ, காய், பட்டை, வேர், எண்ணை, பிசின் என அனைத்துமே மருந்தாகப் பயன் படுத்தப்படுகின்றது.

  • இலை தோல்நோய்களை நீக்கும். 
  • பழம் குடல்கிருமிகளை ஒழிக்கும். 
  • நெருப்புக்காச்சல், டெங்கு தொற்றுநோய்கள் வராமல் இருக்க வேப்பம் குச்சியை அவித்துக் குடிப்பார்கள்.

கை,கால், தொண்டை நோவுக்கு எண்ணை பூசுவார்கள் மருந்தாகவும் குடிப்பார்கள்.

முன்னைய காலம் விரல் சூப்பும் குழந்தைகளுக்கு வேப்பம் எண்ணையை பூசிவிடுவார்கள்.

அம்மை நோய் வந்தவர்களுக்கு இலைகளைப் பரப்பி அதன்மேல் படுக்க விடுவார்கள். இவ் இலைகள் நோயை தணிக்கும் என்பார்கள்.

கரகம் ஆடுபவர்கள் கரகத்தில் வேப்பிலை கட்டி இருக்கும். அறிவியல் வளர்ச்சி நெருங்காத பின்தங்கிய கிராமங்களில் பேயை விரட்ட வேப்பிலையால் அடிக்கும் வழக்கம் இருந்தது.

உடல் உழைவு, நோவுகளுக்கு இலை, பட்டையை அவித்த நீரில் குளிப்பார்கள். பழைய காலத்தில் குழந்தை பெற்ற தாய்மாருக்கு கிருமி தொற்று வராமல் இருக்க பட்டை அவித்த நீரை ஊற்றுவார்கள்.

கிராமங்களில் காய்ந்த வேப்பம் பழங்களைப் பொறுக்கி எடுத்து வைத்து நெருப்பில் இட்டு புகை போட்டு நுளம்பை விரட்டுவார்கள்.

உறுதியான மரத்தளபாடங்கள் செய்ய முற்றிய மரம் பயன் கொடுக்கிறது.

பயிர்களுக்கு பாதுகாப்புத் தரும் கிருமி நாசினியாகவும், பசளையாகவும் பயன்படுத்துகிறார்கள். முன்பெல்லாம்  வீடுகளுக்கு வந்து வேப்பம் குழைகளை வெட்டி மாட்டு வண்டிகளில் கட்டி எடுத்து தோட்டத்துக்கு கொண்டு செல்வதை கண்டிருக்கின்றோம். அன்றைய பொழுது எமக்கும் குழை விளையாட்டில் கழியும்.


ஒரு மரம் சராசரியாக 20- 30 கிலோ பழங்களை கொடுக்கும் இப் பழவிதைகளை கூட்டெரு தயாரிக்கும்போது கலந்து பயன்படுத்தினால் பூச்சித் தாக்கம் குறையும் என்கிறார்கள்.

கோவா பயிரைத்தாக்கும் வெட்டுப் புழக்களையும் கட்டுப் படுத்தலாம். அவரை, பூசணியை தாக்கும் வண்டுகளையும் தடுக்கலாம் என்கிறார்கள். வேப்பம் பிண்ணாக்கு சிறந்த சேதனப் பசளையாகும்.

எங்களது வீட்டிற்கு பக்கத்தில் ஒரு காணி இருந்தது. மின்சாரம் இல்லாத போர்க் காலத்தில் அங்கு வளர்ந்திருந்த பெரிய வேப்ப மரத்தின் தண்மையான காற்று எங்களுக்குஇரவுகளில் நிம்மதியான தூக்கத்தைக் கொடுத்தது.

அந்த மரத்திலிருந்து விழும் பூக்களால் எமது முற்றம் மெத்தையென மென்மையாகக் படர்ந்து கிடக்கும்.

வானில் இருந்து விமானங்கள் குண்டு வீச்சு நடந்த காலத்தில் அதிலிருந்து தப்புவதற்காக இந்த மரத்தின் நிழலில் ஒரு பங்கர் அமைத்திருந்தோம்.

நீம் சோப்பாகவும் கிடைக்கின்றது. கொசுவர்த்தியும் பாவனையில் உண்டு.

குருத்து இலைகளில் சட்னி செய்து உண்பார்கள்.

ஜனவரி -மார்ச் மாத காலத்தில் பூக்கும். மரம் பூக்கள் நிறைந்து காணப்படும். மரத்தின் கீழ் பாயை விரித்து வைத்து பூக்களை எடுப்பார்கள். சிலர் மரத்தில் ஏறி பறித்து வெயிலில் காயவைத்து எடுப்பார்கள்.


பூவை துவையலாகவும், பச்சடிகளாகவும், ரசமாகவும் செய்யலாம்.

உலர்த்திய பூவை நெய்யில் வதக்கி எடுத்து சாப்பிடுவார்கள்.

பூவில் வடகம் செய்து சாப்பிடுவது நம்ம ஊரில் பாரம்பரிய வழக்கம். வயிறு சுத்தமாகவும், ஏப்பத்தை போக்கவும் வேப்பம் பூ உதவுகிறது. இன்று வேப்பம்பூ வடகம் செய்வோம்.




தேவையானவை –

வேப்பம் பூ - 3 கப்
உழுந்து – 1 கப்
சின்ன வெங்காயம் - 1 கப்
செத்தல் மிளகாய் - 10 -15
பெரும் சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி – ½  ரீ ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
உப்பு – தேவையான அளவு.
சுவைக்கு விரும்பினால் எள்ளு – ¼ கப்

செய்முறை -


மறுநாள் நன்கு வெயில் வரவேண்டுமென என சூரியனை வேண்டிக்கொள்ளுங்கள்.

உழுந்தை 3 – 4 மணிநேரம் ஊற வைத்து அதிகாலையில் எடுத்து வடைக்கு அரைப்பதுபோல நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

கல் மண் இருந்தால் பூவை நன்கு நீரில் கழுவி அரித்து வடிய விடுங்கள்.

செத்தல்,வெங்காயம், கறிவேப்பிலை சிறியதாக வெட்டிக்கொள்ளுங்கள்.

அனைத்துப் பொருட்களையும் அரைத்த மாவுடன் நன்கு கலவுங்கள்.

சிறிய உருண்டை அளவில் எடுத்து சிறிய வடைகளாக தட்டி ஓலைபெட்டி அல்லது ஸ்ரெயின் லெஸ் தட்டுகளில் வைத்து நன்கு வெயிலில் காய விடுங்கள்.




இடையே மழை வந்தால் ஓடிப் பிடித்து எடுங்;கள்.

மாலையானதும் எடுத்து உள்ளே வையுங்கள்.

2 -3 நாட்கள் காய்ந்த பின் மறுபுறம் பிரட்டி காயவையுங்கள்.

3 - 5 நாட்கள் நன்கு காய்ந்த பின் எடுத்து டப்பாக்களில் அடைத்து வையுங்கள்.


தேவையானபோது எண்ணையில் அளவான தீயில் பொரித்து பக்கத்து வீட்டுக்காரருக்கு வடக மணத்தில் பசி பிடிக்க நீங்கள் சுவையாக ரசித்து சாப்பிடுங்கள்.

-: மாதேவி :-

45 comments:

  1. பயன் தரும் விளக்கங்கள்... நன்றி...

    வேப்பம்பூ வடக செய்முறைக்கும் நன்றி...

    உடனே செய்து பக்கத்து வீட்டுக்காரருக்கும் கொடுத்து விட்டு ருசிக்கிறோம்... ஹிஹி...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. மருத்துவ குணமுள்ள அருமையான வடகம் .. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  3. அனைவருக்கும் பயன்படும் அருமையான பதிவு
    அறியாதன பல அறிந்தேன்
    பகிர்வுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete

  4. வேப்பம்பூ பச்சடி வழக்கமாக ராம நவமி அன்று எல்லோர் வீடுகளிலும்
    செய்வார்கள்.

    வீடுகளில் வேப்பங்கொட்டையையும் அறைத்து வேப்பெண்னை தயாரிப்பது
    அந்த நாட்களில் எங்கள் கிராமத்தில் வழக்கமாக இருந்தது.

    வேப்பம்பூ வடகம் இப்பொழுது சென்னையில் கிடைக்கிறது. அம்பிகா மார்ட்டில்
    கேட்டுப்பார்க்கவேண்டும்.

    சுப்பு தாத்தா.
    www.vazhvuneri.blogspot.in

    ReplyDelete
  5. வேப்ப மரத்தின் பயன்கள் எண்ணற்றது. சிறப்பான பதிவு. வேப்பிலைக் கொழுந்தைப் பச்சையாக அரைத்து வயிற்றுப் பூச்சிக்கு மாதமொருமுறை கொடுப்பார்கள் அம்மா, எங்களது சின்ன வயதில்.

    வேப்பம்பூ வடக செய்முறைக்கு நன்றி.

    ReplyDelete
  6. கசக்காமல் இனிக்கும் பயனுள்ள பகிர்வு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  7. நேற்று தான் வேப்பம்பூ என் அம்மா சேகரித்து சமைப்பதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். இன்று தங்கள் பகிர்வு மிகவும் மகிழ்ந்தேன். பயனுள்ள தகவல் நன்றிங்க.

    ReplyDelete
  8. வாருங்கள் தனபாலன்.

    பக்கத்து வீட்டுக்காரருக்கு கொடுத்து உண்ணும் உங்கள் நல்ல மனத்துக்கு வாழ்த்துகள்.

    வடாம் அடுத்த வீட்டில் பொரிந்தாலே நமக்கும் சாப்பிட வேண்டும்போல இருக்கும் அதுதான் அப்படி எழுதினேன் :))

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  9. மிக்க நன்றி ராஜராஜேஸ்வரி.

    ReplyDelete
  10. வாருங்கள் ரமணி கருத்துக்கு மிக்க நன்றி .

    ReplyDelete
  11. உங்கள் வருகைக்கு மகிழ்கின்றேன் சுப்பு தாத்தா.

    கருத்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  12. மிக்க நன்றி ராமலஷ்மி.

    ReplyDelete
  13. வாருங்கள் வை. போபாலகிருஷ்ணன்.

    ரசனையான உங்கள் கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி.

    நன்றி.

    ReplyDelete
  14. வேம்புக்கு அம்மனுக்குரிய மரமெனும் தெய்வீக பெருமையை நமது பாரம்பரியம் கொடுத்துச் சிறப்பிக்கிறது. அதிலும் அரச மரத்துடன் சேர்ந்திருக்கும் வேம்புக்கு பார்வதி பரமேஸ்வரனாகவே மதிக்கப்படும்.
    அன்று, நம் நாட்டில் ஆங்கிலேயர்கள் கட்டிய வைத்தியசாலைகளைச் சுற்றி வேம்பு நட்டார்களாம், அதன் மருத்துவத் தன்மைகருதி
    அன்று இந்த வேப்பம் குச்சிதானே பல்லு விளக்கும் தூரிகை, வாய்நாற்றத்தைப் போக்கி, கிருமி உற்பத்தியாகவதைத் தடுக்கும் தன்மையுள்ளது.
    என் இளமையில் வயிற்றுப் பூச்சிக்கு வேப்பெண்ணை தந்தது. ஞாபகம் உண்டு.
    என் ஆச்சி (அம்மாவின் தாயார்) வேப்பெண்ணையில் விளக்கெரித்ததாகக் கூறுவார்.
    சிறுபெண்களுக்கு காது குத்தியதும் வேப்பம் குச்சு சொருகிவிடும் பழக்கம் இருந்தது; காயத்தில் கிருமி தொற்றுவதைத் தடுக்க இந்த வேம்பங்குச்சி.
    வடகம் நீரழிவுக்கும் உகந்தது.

    ReplyDelete
  15. மாதேவி வேப்பம்பூ வடகம் செய்து அக்கம் பக்கத்துக்கும் கொடுத்தும், சொல்லி கொடுத்தும்
    மகிழ்கிறோம்.
    கொழுந்து வேப்பிலை உப்பு வைத்து அரைத்து வாரம் ஒருமுறை எங்கள் அம்மாவும் கொடுப்பார்கள்.
    கால் பித்தவெடிப்புக்கு வேப்ப எண்ணெய் பூசினால் சீக்கிரம் குணமாகி விடும்.

    இலை, பூ, பழம் வேப்பம் மரத்தின் பயன்கள் எல்லாம் அழகாய் சொல்லி தெளிவாய் விளக்கி விட்டீர்கள்.
    வாழ்த்துக்கள் . படம், வீடியோ எல்லாம் அழகு.

    ReplyDelete
  16. வேப்பம்பூ வடகம் செய்முறைப் பகிர்வுக்கு நன்றி மாதேவி. தன் தேகத்தின் ஒவ்வொரு அணுவிலும் மருத்துவகுணம் பதுக்கியிருக்கும் வேம்பினைத் தெய்வமாய்க் கொண்டாடுவதில் வியப்பே இல்லை. வேம்பு பற்றிய பல அறியாத செய்திகளை இன்று அறிந்துகொண்டேன். நன்றி.

    ReplyDelete
  17. ஊரில இருக்கும் எங்க வீட்டு வேப்பமரத்தை ஞாபகப்படுத்திவிட்டீங்க. வடக‌செய்முறைக்கு நன்றி படங்கள்,பகிர்வுகள் அருமை.

    ReplyDelete
  18. மாதேவி, நல்லா விரிவா எழுதி இருக்கீங்கப்பா! வேப்பம்பூ ரசம் எங்க ஆயா/பெரிம்மா நல்லா செய்வாங்க! வேப்பம்பூ வாசனை எனக்கு ரொம்ப பிடிக்கும். படிக்கிற காலத்துல, டேபிள் மேல ஒரு கொத்து வேப்பம்பூ பறிச்சு பூச்சாடியில வைச்சுப்பேன்...பெப்ரவரி/மார்ச் சமயத்துல...
    உங்க போஸ்ட்ல அந்த வாசனையை நுகர முடியுது! :‍)

    ReplyDelete
  19. வாருங்கள் யோகன் பாரிஸ்.

    உங்கள் நீண்ட தகவல்களுக்கு மகிழ்ச்சி.
    பல விடயங்கள் தெரிந்து கொண்டோம் . மிக்கநன்றி.

    ReplyDelete
  20. வாருங்கள் கோமதி அரசு.

    "அக்கம் பக்கத்துக்கு கொடுத்தும் சொல்லிக் கொடுத்தும் மகிழ்கின்றோம்." உங்கள் நல்ல பண்புக்கு பாராட்டுகள். நன்றிகள்.

    ReplyDelete
  21. கருத்துக்கு நன்றி உஷா அன்பரசு.

    ReplyDelete
  22. நன்றி கீத மஞ்சரி.

    ReplyDelete
  23. ஞாபகம் வந்திடுச்சே.... :))

    நன்றி நிலா.

    ReplyDelete
  24. வேப்பம் பூ வாசம் வரவளைத்துவிட்டதே :)) வருகைக்கு மகிழ்ச்சி.

    ஆகா! பூக்கொத்து பறிச்சு வைத்துக்கொண்டீர்களா அருமை.
    எங்கள் அம்மாவுக்கும் பிடிக்கும். அதை நினைத்துக்கொண்டேன்.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  25. .உங்கள் பெயரிலேயே நறு மணம் இருக்கின்றதே சந்தனமுல்லை.

    நன்றி.

    ReplyDelete
  26. நான் இதுவரையில் வேப்பம் பூவைச் சாப்பிட்டது கிடையாது. அது சாப்பிடும் பொருள் என்றும் தெரியாது.
    இன்று உங்களின் பதிவால் அறிந்து கொண்டேன். நன்றி தோழி.
    (அறிந்தும் பயனில்லை என்றே நினைக்கிறேன். என் பிறந்த ஊர் பாண்டிச்சேரியில் ஒரு வேப்ப மரத்தைக் கூட பார்த்ததாக ஞாபகம் இல்லை)

    ReplyDelete
  27. அருமையான பதிவு! வேப்பம்பூவில் மருந்துப்பொடி செய்து சாதத்தில் போட்டு சாப்பிடச் செய்யலாம். வேப்பம்பூ வடகம் புதுசாக இருக்கிறது! வடகம் காய்ந்ததும் பொரித்து சாப்பிட‌ வேண்டியது தானா? வேறு எதுவும் இந்த வடகத்தை உபயோகித்து செய்ய குறிப்பு இருக்கிறதா?

    ReplyDelete
  28. மிக அருமையான பகிர்வு.வேம்பின் பலன்களை சொல்லி தெரிந்தாலும் சிலர் அதனை பயன்படுத்துவதில்லை.எது எளிதாக கிடைத்தாலும் அதன் மதிப்பு எங்கே மக்களுக்கு தெரிகிறது.வேப்பம்பூ வடகம் இப்பொழுது தான் கேள்விபடுகிறேன்..

    ReplyDelete
  29. வேப்பம்பூ வடகம் புது ரெசிபியாக இருக்கு...மிக பயனுள்ள பகிர்வு!!

    ReplyDelete
  30. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_22.html) சென்று பார்க்கவும்... நன்றி..

    ReplyDelete
  31. பாரமரிய சமையல்கலை நடைமுறையில் கொண்டு வந்தால் பறந்து போகும் நோய்கள படிக்கும் போதே ருசிக்க வைக்கும் வடகம் அருமை

    ReplyDelete
  32. வாருங்கள் அருணா செல்வம்.
    உடன் பதில் தரவில்லை தாமதத்துக்கு மன்னியுங்கள்.

    உங்கள் பகுதியில் மரங்கள் இல்லாததில் தெரிந்திருக்கவில்லை.
    சென்னையில் வேப்பம்பூவடகம் கிடைக்கின்றது என ஊட்டத்தில் சொல்லியிருக்கின்றார்கள்.
    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  33. வடகம் காய்ந்தபின் பொரித்து சாப்பிடவேண்டியதுதான்.
    வடகத்தில் எனக்குத்தெரிந்து வேறு குறிப்புகள் இல்லை.

    வருகைக்கு நன்றி மனோ சாமிநாதன்.

    ReplyDelete
  34. வேப்பம்பூவடகம் சற்று கசப்பானதுதான். நாங்கள் சிறுவயதிலிருந்தே சாப்பிட்டு பழகிவிட்டோம் ஆசியா.

    எங்கள் மக்களுக்கு சைவம் சாப்பிடும் நாட்களில் வடகமும் பப்படமும் இருந்தால் சோறு தன்னாலே இறங்கும்.

    நன்றி ஆசியா.

    ReplyDelete
  35. செய்து சாப்பிட்டு பாருங்கள் மேனகா.

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  36. வாருங்கள் தனபாலன் ஒவ்வொருதடவையும் சிரமம் பாராமல் நீங்கள்தான் அறியத்தருகின்றீர்கள். மிக்க நன்றி.

    சென்று பார்த்து வந்தேன்.

    ReplyDelete
  37. வாருங்கள் கோவை மு சரளா.

    நீங்கள் சொன்னது மிகச் சரி.பாரம்பரிய சமையல்களை கைவிட்டு இறக்குமதி உணவுகளுக்கு தாவியதால்தான் வருத்தங்களும் கூடிவிட்டன.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  38. எல்லாமே உடலுக்கும் மனதுக்கும் குளிர்ச்சியைத் தருவது

    ReplyDelete
  39. நல்ல பயனுள்ள பதிவு..., வேப்பம்பூவை பசங்கதான் சாப்பிட மாட்டாங்க. இப்படிலாம் செஞ்சு குடுத்தா சாப்பிடுவாங்க.

    ReplyDelete
  40. கவியாழி கண்ணதாசன்
    மாற்றுப்பார்வை
    அனானி
    திண்டுக்கல்தனபாலன்
    ராஜி

    உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  41. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : நேசன் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : தனிமரம்

    வலைச்சர தள இணைப்பு : தனிமரங்கள் கூட நடப்பது போல !

    ReplyDelete
  42. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : நேசன் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : தனிமரம்

    வலைச்சர தள இணைப்பு : தனிமரங்கள் கூட நடப்பது போல !

    ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்