பூரி என்றாலே அனைவருக்குமே பிடித்த உணவுதான். சாதாரணமாக கோதுமை மாவில் பூரி செய்வோம். இடையே மாறுதலுக்கு மைதாமாவில் பூரி செய்து கொள்ளலாம்.சுவையும் வித்தியாசமாக இருக்கும். மைதாப்பூரி கோதுமைப் பூரி போன்று மெதுமையாக இருப்பது குறைவு. மெதுமையாக வருவதற்கு மைதாவுடன் தேங்காய்ப்பால் கலந்து குழைத்து வைத்துப் பொரித்து எடுத்தால் சுவையாக இருக்கும். பொரிக்கும்போது பொங்கியும் வரும்.
இத்துடன் வழமையாகச் செய்வதுபோல உருளைக்கிழங்கு குருமா செய்து கொள்ளலாம். அல்லது சற்று வித்தியாசமாக நார்ப்பொருட்கள் சேர்ந்த பீன்ஸ், கரட், முட்டைக்கோஸ் அல்லது லீக்ஸ் கலந்த கறியாக செய்து கொள்வது மைதாவில் உள்ள காபோஹைரேட்டை சமன் செய்வதாக இருக்கும்.
கறி தயாரிக்க
பீன்ஸ் - 100 கிராம்
கரட் - 1
உருளைக் கிழங்கு – 1
முட்டைக்கோஸ் அல்லது லீக்ஸ் - 150கிராம்
தக்காளி – 2
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
பொடி வகை
மிளகாய்ப் பொடி ½ ரீ ஸ்பூன்
தனியாப் பொடி - ½ ரீ ஸ்பூன்
மசாலாப்பொடி – ¼ ரீ ஸ்பூன்
உப்பு தேவைக்கு ஏற்ப
கட்டிப்பால் சிறிதளவு (விரும்பினால்)
தாளிக்க
எண்ணெய் - 1டேபிள் ஸ்பூன்
கடுகு, கறிவேற்பிலை, மல்லித்தழை சிறிதளவு

செய்முறை
பீன்ஸ, கரட், உருளைக் கிழங்கு, முட்டைக்கோஸ் அல்லது லீக்ஸ், தக்காளி, வெங்காயம்,
பச்சை மிளகாய் ஆகியவற்றை சிறிதாக வெட்டி வையுங்கள்.
ஓயிலில் கடுகு, கறிவேற்பிலை வெங்காயம் தாளித்து தக்காளியைப் போட்டு வதங்க விடுங்கள். வதங்கியதும் ஏனைய மரக்கறிகளைப் போட்டு சற்று வதக்கி உப்பு போட்டு மூடிவிடுங்கள்.
ஓரிரு நிமிடத்தில் பிரட்டி மிளகாய்ப்பொடி, தனியா, மசாலாப் பொடி கலந்து இத்துடன் வேக வைக்க சிறிதளவு தண்ணீர் விட்டு மூடிவிடுங்கள்.
இரண்டு மூன்று நிமிடத்தில் திறந்து பிரட்டி தேங்காய்ப்பால் விட்டு, கிளறி மல்லித் தழை போட்டு இறக்குங்கள்.
மைதாப் பூரிக்கு
மைதா மா – 1 கப்
தேங்காய்ப்பால் - 4 டேபிள் ஸ்பூன்
மார்ஜரீன் - ½ ரீ ஸ்பூன்
உப்பு - சிறிதளவு
பொரிப்பதற்கு எண்ணெய்
மைதாவுடன் மார்ஜரீன் உப்பு கலந்து கிளறி தேங்காய்ப்பால் விட்டு குழையுங்கள். இத்துடன் தேவையான அளவு தண்ணீரை விட்டு குழைத்து பூரி மாவைத் தயாரித்து எடுங்கள்.
பொரிப்பதற்கு 6-7 மணித்தியாலம் முன்பு குழைத்து வைப்பது நன்று.
பொரிக்கு முன் சிறுசிறு உருண்டைகளாக மாவை உருட்டி வைத்து, போர்ட்டில் மா தூவி சிறிய வட்டங்களாக மெல்லியதாக உருட்டிக் கொள்ளுங்கள்.
எண்ணெய் நன்கு கொதிக்க, அதில் மெதுவாகப் போடுங்கள் (அவசரப்பட்டுப் போட்டால் சொல்லவே தேவையில்லை. எண்ணெய் தெறித்து நடப்பதே வேறாகிவிடும்). உப்பி வர மறுபுறம் திருப்பிப் போட்டு எடுங்கள்.
எண்ணெயை வடியவிட்டு எடுங்கள்.
ஆகா! மைதாப் பூரி தயார். சுடச்சுட சாப்பிட வாருங்கள்.
----- மாதேவி -------




