
பின்பு இறைச்சி வகைகளை தீயில் வாட்டி, சுவை சேர்க்க உப்பிட்டு தேனிட்டு, பிற்காலத்தில் காரம் சேர்த்து, அதன் பின் வாசனை ஊட்டி என உணவு தயாரிக்கும் முறைகளில் காலம் தோறும் மாற்றங்கள் பல ஆண்டுகளாக ஏற்பட்டு வந்திருக்கிறது என்பதை நாங்கள் எல்லோரும் வரலாறுகள் மூலம் அறிந்திருக்கிறோம்.
இவ்வழிமுறைகளில் கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள், குளிர்காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள் என வெட்ப தட்ப நிலைக்கு ஏற்ப பிரித்து உண்பதால் உடல் ஆரோக்கியமும் கிடைக்கும். நோய்களின்றும் காப்பாற்றிக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளார்கள்.
இவற்றில் வெட்ப காலங்களில் பழங்கள், தயிர், பால்,மோர், இளநீர் கூழ், கஞ்சி கீரைவகைகள், வெண்டி, தக்காளி, வெங்காயம் நீர்த்தன்மையுடைய காய்வகைகளான வெள்ளரி, சவ்சவ், பீர்க்கு, நீத்துக்காய், சுரைக்காய், புடலங்காய், முள்ளங்கி போன்றன குளிர்ச்சியைத் தரும், வெப்பத்தைத் தணிக்கும் உணவுகளாக இருந்து வருகின்றன.
வெயில் வெப்பதால் உடலிலிருந்து வியர்வை வெளியேறுவதால் தண்ணீர்த் தாகம் அதிகரிக்கும். அதற்கு ஈடுகொடுக்க நீர்த்தன்மையுள்ள உணவுகளை உண்பது தாகத்தைத் தணிக்கும். அத்துடன் குளிர்ச்சியை வெப்ப காலத்தில் எமது நா விரும்புவதாலேயே கோடையில் மண்பானைத் தண்ணீர், ஜில்ஜில் ஜீஸ், ஐஸ்கிறீம் என ஓடுகிறோம்.
இவ்வகையில் கோடைக்கு ஏற்ற ஜில்லென்று ஒரு சலட்தான் தர்ப்பூசணி.
குழந்தைகளைக் கவரும் விதமாகவும் விரும்பி உண்ணும் விதமாகவும். வெட்டி அலங்கரித்துக் கொள்வோம் வருகிறீர்களா? செய்வோம்.

தேவையானவை
தர்ப்பூசணி – 1 பழம்
பச்சை அப்பிள் - 1
சலட் இலைகள் - 5
சர்க்கரை – ½ ரீ ஸ்பூன்
லெமன் ஜீஸ் - 1 ரீ ஸ்பூன்
கறுவாப்பொடி சிறிதளவு
மிளகுதூள், உப்பு தேவையான அளவு
தயாரிப்போம்
தர்ப்பூசணியை குறுக்கு வாட்டில் வெட்டி வெளிக்கோப்பை சிதையாதவாறு உள்ளிருக்கும் பழச்சதையை வெட்டி எடுங்கள்.
விதையை நீக்கி சிறுசிறு துண்டுகளாக வெட்டி வையுங்கள்.

அப்பிளை தோலுடன் சிறு துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள்.
தர்ப்பூசணி தோலுடன் மூடிய கோப்பையை உப்பு நீரில் அலசி எடுங்கள்.
சேர்விங் பிளேட்டில் கழுவிய சலட் இலைகளை அடுக்கி அதன்மேல் தர்ப்பூசணி கோப்பையை வையுங்கள்.
வெட்டிய தர்ப்பூசணி துண்டுகளுடன் அப்பிளை கலந்து மிளகு தூள் கறுவாப்பொடி தூவி எடுத்து தர்ப்பூசணி கோப்பையில் வையுங்கள். (விரும்பினால் பிரிட்ஸில் வைத்து எடுக்கலாம்.)
பரிமாறும் பொழுது உப்பு, சர்க்கரை, லெமன் ஜீஸ் கலந்து விடுங்கள்.
கண்ணைக் கவரும் சிவப்பு நிறத்துடன் இனிப்பு, நீர்த்தன்மை சுவை சேர்ந்த சலட் தயாராகிவிட்டது.
ஹெல்த்துக்கும் ஏற்றதுதானே.
குறிப்பு
உப்பு, சர்க்கரை. லெமன் முதலே கலந்து வைத்தால் நீர்த்தன்மை கூடிவிடும் என்பதால் உடனே சேர்ப்பதுதான் நன்று.
மாதேவி