
கனிகளின் அரசியாம், முக்கனிகளில் ஒன்று, தித்திக்கும் தேன் சுவை ஊட்டும். பழங்களில் பெரிய பழம், தோலோடு உண்ண முடியாதது அது என்ன?
ஆகா! உங்களுக்குப் புரிந்திருக்கும்! கனி பலாப்பழம். பழமாக இனிக்க இனிக்க உண்ணலாம்.

பிஞ்சாக சமைக்கலாம் (பொலஸ் கறி),
முற்றிய ஆனால் கனியாத சுளைகளும் சுவையான கறியாகும்.
இலங்கையின் தென் பகுதி மக்களின் விருப்புக்குரிய உணவுதான் இந்த வரக்கா கறி.
முல்லைத்தீவுப் பலாப்பழம்
வட பகுதி மக்கள் பெரும்பாலும் கனிந்த பழத்தை மிகவும் விரும்பி உண்பார்கள். முல்லைத்தீவுப் பலாப்பழம் மிகவும் பிரசித்தமானது. முற்றிய காய்ப் பதமாக எடுத்து அங்கு சமையல் செய்வது குறைவு. இங்கு விளைந்து வரும் கனிகள் சுவையிலும் தரத்திலும் சிறந்ததாக இருக்கும். காரணம் இது வரண்ட பூமிப் பழமாகும். நீர்ப்பற்றுக் குறைவு. அதனால் இனிப்பு அதிகம்.

அதில் இருவகைப் பழங்கள் உண்டு. மஞ்சள் நிறமுடையது ஒன்று, மற்றையது இளம் சிவப்பு ஓரென்ஜ் நிறத்தில் செண்பகவரியன் என்ற பெயருடன் மிகவும் இனிப்பானது.
குஞ்சு குருமனாய் மரத்தின் அடியிலிருந்தே உச்சிவரை சென்று காய்த்துத் தொங்கும். வீட்டுத் தோட்டங்களில் பெரும்பாலும் நாட்டியிருப்பர்.

மரம்
இலங்கையில் பரவலாக எங்கும் வளரும் பலா மரம் சுமார் 25 அடி வரை உயர்ந்து வளரக் கூடியது. 3 வயதாகும் பொழுது காய்க்கத் தொடங்கும். பெரிய பலாக்காயின் நிறை 40 கிலோ வரை இருக்கும் என்கிறார்கள்.
மலை நாட்டில் கொக்கோ, கோப்பி, மிளகுச் செடிகள் இடையே பலா பயிரிடப்பட்டு இருக்கும்.
பழத்திற்காகவும் நிழலுக்காகவும் பயன்படுவதுடன் இதன் பலகை மரத் தளபாடங்கள் செய்யவும் பயன்படும்.
இலங்கை, இந்தியா, மலேசியா, மியன்மார், சீனா, பிலிப்பைன்சில் பெரும்பாலும் காணப்படும்.
இளம் காய்.
சமைப்பதற்கு மட்டுமின்றி, ஊறுகாயாகப் பதப்படுத்தி வைக்கவும் முடியும்.
முற்றிய காய்
முற்றிய காய்ப் பதத்தில் வெட்டி சுளைகளாக உரித்தெடுத்து, விதை நீக்கி வெட்டியெடுத்து குழம்பாகவும்,
பால் கறியாகவும்,
விதையுடன் கொத்தியெடுத்து பொரியலாகவும்,
அவித்தெடுத்து சிற்றுண்டியாகவும் சமைத்துக் கொள்ளுவர்.
பருப்பு மசியல்,கூட்டு,சுண்டல்,புட்டு, கூழ், செய்து கொள்ளலாம்.
விதை
பலாக் கொட்டையை உப்பிட்டு அவித்தெடுத்தும் உண்பர். பொரியல், கட்லற், வடை, அவியல், குருமா, பால் கறியாகவும், காரப் பிரட்டலாகவும் செய்து கொள்ளலாம்.
பலாக்கொட்டை சிப்ஸ் என்றால் பிள்ளைகள் பல்லு நொறு நொறுக்கக் காலியாக்குவர்.
பழம்

பழத்தில் தோசை, அடை, சிற்றுண்டி, சாதம், பொங்கல், பாயாசம், டெஸட், புருட் சலட் செய்து கொள்ளலாம்.
போஷாக்கு
இதில் விட்டமின் சீ, மாச்சத்து, சுண்ணாம்புச் சத்து அதிகம் உண்டு.
பொட்டாசியம் சத்து அதிகமுள்ளதால் பிரஸரைக் குறைக்கும் என்கிறார்கள்.
நிரம்பிய கொழுப்பு குறைவாக உள்ளதால் கொரஸ்டரோலை அதிகரிக்காது.
தாய்ப் பாலை அதிகம் சுரக்க வைக்கும் என்ற நம்பிக்கையால் பாலூட்டும் தாய்மார் அதிகம் உட்கொள்வதுண்டு.
இலை
இலைகள் ஆடு, மாடு போன்ற மிருங்களுக்கு நல்ல உணவாகும். அதன் காய்ந்த இலைகளை பசளையாகவும் பயன்படுத்துவர்.
தேவையான பொருட்கள்.

முற்றிய பலாக்காய் சுளைகள் - 10-15
வெங்காயம் - 1
பச்சைமிளகாய் -1
மிளகாய் பொடி – ½ ரீஸ்பூன்
தனியாப்பொடி -1 ரீ ஸ்பூன்
மஞ்சள் பொடி – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
பூண்டு - 4 பல்லு
மிளகு – ¼ ரீ ஸ்பூன்
கட்டித் தேங்காய்பால் - 2 மேசைக் கரண்டி
தண்ணித் தேங்காய்பால் - ¼ கப்
தேசிச் சாறு - ½ ரீ ஸ்பூன்
தாளிக்கத் தேவையானவை.
எண்ணைய் -2 ரீஸ்பூன்
கடுகு - 1/4 ரீஸ்பூன்
வெங்காயம் - ½
காய்ந்த மிளகாய் -1
கறிவேற்பிலை -2 இலைகள்
ரம்பை -2 துண்டு
செய்முறை
பலாக்காய் சுளைகளை நீளவாட்டில் பாதியாகக் கீறி விதையை எடுத்துவிட்டு நாலு நீள் துண்டுகளாக வெட்டி வையுங்கள். விதைகளின் தோலை நீக்கிவிட்டு குறுக்கே பாதியாக வெட்டுங்கள். இவற்றைத் தண்ணீர் விட்டு அலசி எடுங்கள்.
வெங்காயம் மிளகாயை நீளவாட்டில் ஓர் அங்குலத் துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
பாத்திரத்தில் அனைத்தையும் போட்டு தண்ணீர்ப் பால் ¼ கப் விட்டு உப்பு, மிளகாய்ப் பொடி, தனியாப் பொடி, மஞ்சள் பொடி போட்டுக் கலக்கி மூடி போட்டு 2 நிமிடம் அவித்து எடுங்கள்.
திறந்து பிரட்டுங்கள்.
கெட்டிப் பால் விட்டு இறுகி வர, தட்டிய பூண்டு, மிளகு சேர்த்துப் பிரட்டி ஒரு நிமிடம் விட்டு இறக்குங்கள்.
தேசிச் சாறு கலந்து பிரட்டி விடுங்கள்.
தாளித்து கலந்துவிடுங்கள்.
மிளகு பூண்டு தாளித்த வாசம் மூக்கைக் கிளறி பசி எடுக்கும். உடனேயே சாப்பிட தட்டுத் தயாராக எடுத்துவிடுவீர்கள்.
மாதேவி
