
மாங்காய், நெல்லி, ஆப்பிள், அன்னாசி, இவற்றின் சுவையுடன் சேர்ந்த இனிய புளிப்புச் சுவையுடைய காய் இது. மாம்பழமும் அன்னாசியும் கலந்தது போன்ற வித்தியாசமான சுவையுடையது.
வீட்டுத் தாவரமாகவும்
40 அடி உயரம் வரை வளரக் கூடியது. நல்ல மழை வீழ்ச்சியும் குளிர்மையும் உள்ள சூழலில் நன்கு வளரும்.
ஆயினும் வீட்டுத் தாவரமாக வளரக் கூடிய குள்ள இனங்கள் உண்டு. மாடிவீட்டு பல்கனிகளில் பெரிய பீப்பா தகரங்கள் அல்லது பெரிய பிளாஸ்டிக் பாத்திரங்களில் வளர்க்கலாம்.

சிறிய தாவரமாக இருக்கும்போதே காய்க்கத் தொடங்கும். 2-4 வருடத்தில் அதிக காய்களைத் தரக் கூடியது. பச்சை நிறக் காயாக இருக்கும் இது பழுக்கும் போது மெல்லிய மஞ்சள் நிறமாக மாற்றமடையும்.

தென்னாசிய நாட்டுக்கான தாவர இனமாகக் கொள்ளப்படுகிறது. ஆசியாவிற்கு வெளியிலும் சில இடங்களில் அபூர்வமாகக் காணும் இனம் இது.
இதன் தாவரப் பெயர் Spondias dulcis ஆகும். ஆயினும் ஆங்கிலத்தில் Golden Apple, Wi-Tree, Otaheite Apple என்றெல்லாம் அழைப்பார்கள்.
பச்சையாகவும்
பச்சையாகவே உண்ணக் கூடியது. ஆயினும் பச்சை நிறக் காய் புளிக்கும். கடிக்கும் போது நொறு நொறுக்கும்.
பதப்படுத்தியும்
இக் காயில் ஊறுகாய், அச்சாறு, சட்னி செய்து கொள்ளலாம். பதப்படுத்தப்பட்டு போத்தல்களில் அடைக்கப்பட்டு சட்னிகள் பாவனையில் உள்ளன.
பானமாகவும்
தோல் நீக்கி துண்டங்களாக வெட்டி எடுத்து தண்ணீர் விட்டு அடித்தெடுத்து வடித்து உப்பு அல்லது சீனி சேர்த்து பானமாக பருகிக் கொள்ளலாம்.
போசாக்கு
விட்டமின் சீ, உடையது, அயன் கூடியளவு உண்டு. முக்கியமாக நார்ப்பொருள் அதிகமாக உள்ளது. எனவே மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு நல்லது.
அம்பிரலா மசாலாக் குழம்பு
தேவையான பொருட்கள்

அம்பிரலா காய் - 5
பெரிய வெங்காயம் - 1
செத்தல் மிளகாய் - 2
கடுகு – ¼ ரீ ஸ்பூன்
கருவேற்பிலை, ரம்பை சிறிதளவு
மிளகாய்ப் பொடி – 1 ரீ ஸ்பூன்
தனியாப் பொடி - 2 ரீ ஸ்பூன்
சீரகப் பொடி -1 ரீ ஸ்பூன்
மஞ்சள் பொடி – ¼ ரீ ஸ்பூன்
மசாலாப் பொடி சிறிதளவு
கெட்டித் தேங்காய்ப் பால் - 2 டேபிள் ஸ்பூன்
வெல்லம் - 1 கட்டி
ஒயில் - 2 ரீ ஸ்பூன்
செய்முறை
அம்பிரலாவைக் கழுவி தோலுடன் நாற்புறமும் துண்டங்களாக வெட்டியெடுங்கள்.
விரும்பினால் விதையுடன் கூடிய உட்பகுதியையும் சேர்த்துச் சமைத்துக் கொள்ளலாம்.
வெல்லத்தை காய்ச்சி வடித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
வெங்காயம் செத்தலை சிறு துண்டுகளாக வெட்டி எடுங்கள்.
ஓயிலில் கடுகு தாளித்து வெங்காயம் செத்தல் வதக்குங்கள். கருவேற்பிலை ரம்பை சேர்த்து கிளறுங்கள்.
அரைக் கப் தண்ணீர் விட்டு உப்புப் போட்டு காயைக் கொட்டி 2 நிமிடம் அவித்து எடுங்கள்.
மிளகாய்ப் பொடி, தனியாப் பொடி, மஞ்சள் பொடி, மசாலப் பொடி, சேர்த்துக் கிளறுங்கள்.
கட்டித் தேங்காய்ப் பால் விட்டு, வடித்து எடுத்து வைத்த வெல்லத்தையும் சேர்த்துக் கிளறி இறக்கி வையுங்கள்.
மிகவும் இலகுவாக 5 நிமிடத்தில் புளிப்பு சுவையான அம்பிரலா மசாலாக் குழம்பு தயாராகிவிடும்.

உண்ண உண்ண
பிரியாணி, சாதம், புட்டுக்கு இனிப்புப் புளிப்பு சுவையுடன் சுவை சேர்க்கும்.
விதையுடன் இருக்கும் சதைப் பகுதி கடித்துச் சாப்பிடுவதற்குச் சுவை கொடுக்கும்.
அவசரத்தில் தும்புடன் கடித்து பல்லிடுக்கில் சிக்க விடாதீர்கள். மீன் சாப்பிட்ட பழக்கம் கைகொடுக்கும் அல்லவா? தும்புகள் வாயில் குத்தவும் வாய்ப்பிருக்கிறது.
மாதேவி