“பச்சை நிறமே…பச்சை நிறமே.. இச்சை கொடுக்கும் பச்சை நிறமே” மனக்கண்ணில் மாதவனும் ஷாலினியும் பறப்பது… தெரிகிறதே.
இலைகள்
நாளாந்தம் உண்ணும் அரிசி, கோதுமை மாப்பொருள் உணவுடன் எமது உடலுக்குத் தேவையான விட்டமின்களையும், கனிப்பொருள்களையும் பெறுவதற்கு இலை வகைகள், காய்கறிகள், பழவகைகள் ஆகியவற்றை அதிகம் சேர்த்து உண்ண வேணடும்.
இரும்பு கல்சியம், பொட்டாசியம், மக்னீசியம், அயடின் போன்ற கனியங்கள் முக்கியமானவை. இலைவகைகளில் உடல் வளர்ச்சிக்கும் தேவையான விற்றமின் ஏ, பீ சுண்ணாம்பு இரும்புச் சத்துக்கள் இருக்கின்றன என்பது அறிந்ததுதான்.
அரிசி உணவோடு கீரை
அரிசி உணவில் விற்றமின் ஏ குறைவாக இருப்பதால் நாங்கள் நாளாந்தம் உண்ணும் உணவில் 50கிராம் ஆவது கீரை வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இலகுவாக மலிவாகக் கிடைக்கும் கீரைகளை வாங்கிச் சமைத்துக் கொள்ளலாம்.
மணத்தக்காளி கீரை

கீரை வகையில் மணத்தக்காளி கீரையும் சிறந்தது. இதன் பொட்டானிக்கல் பெயர் Solnum nigrum ஆகும்.
மணத்தக்காளி என்பது இங்கு மருவி மணித்தக்காளி ஆயிற்று.
மணிமணி போல் பழங்கள் இருப்பதால் அவ்வாறு வந்ததோ?
இதன் இலை, காய், பழம் என மூன்றையுமே சமையலில் பயன்படுத்தலாம்.
சிறிய வெள்ளைப் பூக்களுடன் மலரும்.
இதன் காய் மிகவும் சிறிதாக கொத்துக் கொத்தாகக் காய்த்துத் தொங்கும். காய் முற்றிவர கத்தரிப்பூ நிறமாக மாற்றமடையும்.

இன்னொரு இன வகையின் பழம் இளம் சிகப்பு நிறமாக இருக்கும். இப் பழங்கள் இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையுடன் இருக்கும். நேரடியாகவே உண்ணலாம்.
சிறிய வயதில் விரும்பி உண்டதில்லையா?
சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தமான பழம் இது.

மணத்தக்காளி இலையில் சட்னி, பச்சடி, கூட்டு, பொரியல், ரசம், சொதி செய்யலாம். காய், பழத்தில் புளிக் குழம்பு செய்து கொள்ளலாம்.
வெப்ப காலத்தில் உடல் வெப்பத்தைத் தணிக்க பெரும்பாலும் சமையல் செய்து உண்பார்கள்.
கோடைச் சூட்டிற்கு நாவில் தோன்றும் கொப்பளங்களைப் போக்க இதன் இலையை சிறிது தண்ணீர் விட்டு அவித்துக் குடிப்பது மிகுந்த பலனைத் தரும். சம்பல் செய்து சாப்பிடுவதும் சிறந்தது.
வீட்டு வைத்தியத்தில்
கிராமங்களில் இதன் நன்மையை அறிந்து அதிகம் பயன்படுத்துவர்.
குடல் புண்ணுக்கும் சுகம் தரும். மூல நோய்க்கும் சிறந்தது என்பர்.
கண் பார்வைக்கும் பல் உறுதிக்கும் வேண்டிய விற்றமின் ஏ, பீ, இரும்பு, சுண்ணாம்புச் சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன.
மணத்தக்காளி சட்னி
இன்று சட்னி செய்து கொள்வோமா?
இரண்டு முறையில் செய்யலாம்.
தேவையான பொருட்கள்-
மணத்தக்காளிக் கீரை – 1 பிடி
செத்தல் மிளகாய் - 1
பூண்டு – 2-4
சின்ன வெங்காயம் - 6
தேங்காய்த் துருவல் - 1 கப்
பழப்புளி – தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ½ ரீ ஸ்பூன்
தேவையான பொருட்கள்-
மணத்தக்காளிக் கீரை – 1 பிடி
மிளகு - ¼ ரீ ஸ்பூன்
சின்னச் சீரகம் - ¼ ரீ ஸ்பூன்
பச்சை மிளகாய் -1(விரும்பினால்)
சின்ன வெங்காயம் - 6
தேங்காய்த் துருவல் - 1 கப்
உப்பு - தேவையான அளவு.
தேசிச் சாறு - 1 ரீ ஸ்ப+ன்
செய்முறை - 1
கீரையை துப்பரவு செய்து ஒவ்வொரு இலையாக ஆய்ந்து எடுங்கள்.சிறிதளவு தண்ணீர் விட்டு நிறம்மாறாது அவித்து எடுங்கள்.
ஓயிலில் செத்தல் மிளகாய், பூண்டு வதக்கி எடுத்து வையுங்கள்.
மீதி எல்லாப் பொருட்களையும் மிக்சி ஜாரில் கொட்டி, கிர்…கிர் எனத் தட்டி எடுத்திட வேண்டியதுதான்.
செய்முறை – 2
கீரையை துப்பரவு செய்து ஒவ்வொரு இலையாக ஆய்ந்து எடுங்கள்.சிறிதளவு தண்ணீர் விட்டு நிறம்மாறாது அவித்து எடுங்கள்.
தேசிச்சாறு தவிர்த்து மீதி எல்லாப் பொருட்களையும் மிக்சி ஜாரில் கொட்டி,அரைத்து எடுங்கள்.
பரிமாறும் கோப்பையில் எடுத்து வைத்து விடுங்கள்.
தேசிச்சாறு விட்டுக் கலந்துவிடுங்கள்.
குறிப்பு
(தேங்காய்த் துருவலை லேசாக வறுத்து அரைத்துக்கொண்டால் சட்னி கெடாமல் இருக்கும். சுவையிலும் வித்தியாசத்தைத் தரும்.)
மாதேவி.