Tuesday, December 8, 2009

கலர் கலராகச் சாதங்கள்



மரக்கறி உணவுகள் என்றாலே முகம் சுழிப்பார்கள் குழந்தைகள். அவர்களுக்கு இப்படியான உணவுகள் சாப்பிடுவது என்பது வெறுக்கத்தக்க நேரம்தான்.

இதைத் தவிர்க்க என்ன செய்யலாம்.

கண்ணுக்குக் கவர்ச்சியாக மாற்று முறையில் தயாரித்துப் பரிமாறினால் பலவகை மரக்கறி உணவுகளையும் சாப்பிட வைத்துக் கொள்ள முடியும்.

பீன்ஸ், கோவா, பீட்ரூட், வெண்டைக்காய், முள்ளங்கி, பாவற்காய், வாழைமொத்தி, கோஹில தண்டு, போன்ற பெயர்கள் பல பெரியவர்களுக்குக் கூடப் பிடிப்பதில்லை.

கலர் கலரான சாப்பாடு

பீட்ரூட்டை தனியே சமைத்துக் கொடுப்பதை குழந்தைகள் விரும்பாத போது சாதத்திற்குள் கலந்து செய்து கொடுக்கலாம். கண்கவரும் சிவத்த சாதத்துடன் சுவை சேர்க்க நெய். கஜீ, சேர்த்துக் கொண்டால் விரும்பி உண்பார்கள்.

பீட்ரூட்டை கூடிய நேரம் சமைத்தால் அதிலுள்ள மிக முக்கியமான போசனைப் பொருட்கள் யாவும் அழிந்துவிடும். பச்சையாக உண்பது சமிபாடடையச் சிரமமாக இருக்கும்.

எனவே நீராவியில் அவித்தெடுத்துச் செய்து கொண்டால் சத்துக்கள் அழியாது இருப்பதுடன், விரைவில் சமிபாடும் அடையும்.

போஷாக்கு உள்ளது


நார்ப்பொருள் அதிகமுள்ளது. Vitamin C, Folic acid அதிகமுள்ளது. Vitamin A, Thiamin, Riboflavin, Niacin, Vitamin B6 and Pantothenic Acid ஆகியன ஓரளவு உண்டு

பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து, பொஸ்பரஸ், ஆகியன அதிகம் அடங்கியுள்ளது. ஆனால் கல்சியம், சின்க், செலினியம் ஆகியன ஓரளவே உண்டு.

அதில் குறைந்தளவு கலோரிச் சத்தே உண்டு. 100 கிராம் பீட்டில் 43 கலோரி மட்டுமே உண்டென்பதால் எடை குறைப்புச் செய்ய விரும்புபவர்கள் சலட்டில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

நோயெதிர்ப்பு

இரத்தசோகையை குறைக்கும். இரும்புச் சத்து அதிகமுள்ளது.

பீட் ஜூஸ் அருந்துவது உயர்இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் எனக் கூறுகிறார்கள்.

புற்றுநோயைத் தடுக்கும் பீட்டாஅமினோ அசிட் இதில்
அடங்கியுள்ளது.

ஜூஸ் ஆக அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்


மலச்சிக்கலைத் தடுக்கும்.
நாட்பட்ட மலச்சிக்கலுக்கும் சுகம் தரும்.

உடல் இளைக்க பீட்ரூட்டை அடித்து எடுத்து உப்பு, மிளகு, சிறிது தேசிக்காய் விட்டு அருந்தலாம்.

பீட்ரூட் சாற்றை தனியே குடிக்க முடியாதவர்கள் தோடம்பழச் சாறு, ஆப்பிள் சாறு கலந்து குடிக்கலாம்.

பீட்ரூட் கிழங்கைச் சேமித்து வைத்தல்

ஈரலிப்பான மண் நிலத்தில் வைத்துப் பாதுகாக்கலாம். பிரிட்ஸ்ல வைத்தால் ஓரிரு வாரம் இருக்கக் கூடியது.

வைன், சீனி


Rum, Tuzemak, Vodka போன்ற மதுவகைகளுக்கும், சீனி தயாரிப்பிற்கும் வெவ்வேறு விசேடமான பீட் வகைகள் பயன்படுத்தப்படுகின்றன. உணவுக்குப் பயன்படுவதிலிருந்து இவை வேறுபட்டவையாகும்.


வழமையான ரெட் பீட்டிலிருந்து சிறந்த வைன் தயாரிப்பார்கள். இதைப் பதப்படுத்திச் செய்ய நீண்டகாலம் எடுக்கும்.

பீட்ரூட் சாதம்


சாதம் - 1 கப்
பீட் பெரியது – 1
பம்பாய் வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கருவேற்பிலை – 2 இலைகள்
கஜூ - 10
மிளகாய்ப்பொடி – 1 ரீ ஸ்பூன்
உப்பு தேவைக்கு ஏற்ப

தாளிக்க

கடுகு - ¼ ரீ ஸ்பூன்
உழுத்தம் பருப்பு – 1 ரீ ஸ்பூன்
நெய் அல்லது மாஜரின் - 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை

தோலைச் சீவி பீற்றூட்டைத் துருவி வையுங்கள்.

மெல்லிய நீள் துண்டுகளாக வெங்காயத்தை வெட்டி வையுங்கள்.

மிளகாயை நாலு பாகமாக வெட்டிவிடுங்கள்.

கஜூவை உடைத்து வையுங்கள்.

சிறிது மாஜரினில் கஜூவைப் பொரித்து எடுத்து வையுங்கள்.

ஒரு டேபிள் மாஜூரினில் உப்பு, மிளகாய்த்தூள் பிரட்டி எடுத்த வெங்காயத்தைப் பொரித்து எடுத்து வையுங்கள்.

மிகுதி மாஜரீனை விட்டு கடுகு, உழுத்தம் பருப்பு தாளித்து பச்சை மிளகாய் கருவேற்பிலை போட்டு துருவிய பீட் போட்டு வதக்கி, உப்பு மிளகாய்ப் பொடி இட்டு சாதம் சேர்த்துக் கிளறி எடுங்கள்.

பரிமாறும் பிளேட்டின் பாதியில் அரைவாசி போட்டு மேலே பொரித்த கஜூ, வெங்காயம் தூவி விடுங்கள்.

தயிர்ச் சாதம்

சாதத்தில் தயிர் உப்பு, பெருங்காயப் பொடி கலந்து சாதா தயிரச்சாதம் செய்வதை விட வெங்காயம், பச்சை மிளகாய், கரட்,வெள்ளரிக்காய். இஞ்சி கருவேற்பிலை,மாதுளைமுத்துக்கள் கலந்து செய்து கொள்ளலாம்.

தயாரிக்க

சாதம் - 1 கப்
தயிர் - ½ கப்
துருவிய கரட் - 1
துருவிய வெள்ளரிக்காய் -1
மாதுளைமுத்துக்கள் - 1/4 கப்
பச்சை மிளகாய் - 1-2
சாம்பார் வெங்காயம் - 10-15
கருவேற்பிலை- 2 இலைகள்
மல்லித்தழை - சிறிதளவு
இஞ்சி – துருவியது 1 ரீ ஸ்பூன்
உப்பு, பெருங்காயம் சிறிதளவு

தாளிக்க

கடுகு – 1 ரீ ஸ்பூன்
கருவேற்பிலை 2 இலைகள்.
ஓயில் 1 ரீ ஸ்பூன்

செய்முறை

வெங்காயம், மிளகாய், கறிவேற்பிலை,மல்லித்தழை சிறியதாக வெட்டி எடுங்கள்.

ஓயிலில் கடுகு கருவேற்பிலை தாளித்து சாதத்தில் கொட்டிக் கலந்து விடுங்கள்.

தயிரை நன்கு கலக்கி எடுத்து உப்பு, பெருங்காயம்,கலந்து சாதத்தில் ஊற்றிகலந்துவிடுங்கள்.

துருவிய கரட்,வெள்ளரி இஞ்சி,வெங்காயம், மிளகாய் கறிவேற்பிலை,மல்லித்தழை,மாதுளை, கலந்து கிளறிவிடுங்கள்.

பீட் சாதம் வைத்திருக்கும் பிளேட்டின்
மறுபகுதியில் வைத்து பாருங்கள்
தெரியும் அழகு.

அழகில் முழுவதையும் நீங்களே சாப்பிட்டு விடாதீர்கள்.

குழந்தைகள் வரும்வரை காத்திருங்கள்.

ஓடோடி வந்து குழந்தைகள் முடிப்பார் பிளேட்டை. பிறகென்ன உங்கள் முகத்தில் ஆயிரம் வோல்ட் பல்ப் மகிழ்ச்சி தெரியும்.

மாதேவி

Thursday, November 19, 2009

சமையலறையில் சுவை சேர்க்கும் கீதங்கள்


ஆதிமனிதன் காட்டில் கிடைத்த காய் கனிகள், கிழங்குவகைகளை ஆரம்பத்தில் உண்டான்.
இவை பச்சையாக உண்ணத்தக்கன.

பின் மிருகவேட்டை இறைச்சி, மீன் பிடி என விரிந்தபோது அவற்றை நெருப்பில் வாட்டியும், வேகவைத்தும் உண்ணும் பழக்கம் ஏற்பட்டது.
அதில் புதிய சுவை தென்பட்டது.
நாவு சுவையுணர்ந்தது.

இவற்றிலும் திருப்தியடையாத போது
மனிதன் அவற்றிற்கு மேலும்
சுவையூட்டி உண்ணும் பழக்கத்தைத் தொடங்கினான்.

நானிலங்களும் அவற்றின் உணவுகளும்


சங்க காலத்தில் உணவுச் சுவையைப் பற்றிய பாடல்கள் வெளிப்பட்டிருக்கின்றன. அறுசுவைக்கு அடிமை ஆகாதோர் முற்றும் துறந்த துறவிகள் மட்டும்தான்.

நானிலங்களும் உணவுகளும் அவ்வவ் நிலங்களில் கிடைக்கும் உணவுகளும் வருமாறு.

  1. குறிஞ்சி, தேன், தினைமா, கிழங்கு, பறவைகள் ஊன்வேட்டை உணவுகள்.
  2. முல்லைக்கு சோளம், கேள்வரகு, நேய், தயிர், வெண்ணேய், மோர், அவரை, துவரை
  3. மருத நிலத்திற்கு பல் வகைச் சோறு, காய்கறிகள்,
  4. நெய்தல் நிலத்திற்கு மீன், நண்டு, இறால், கணவாய், கருவாடு

சங்க இலக்கியத்தில் உணவு

பழம் தமிழ் பாடல்களில் உணவு பற்றி நிறையவே கூறப்பட்டுள்ளது. புறநானூறு பாடல் ஒன்றில்

நீர் இன்றி அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தாரே

உண்டி முதற்றே உணவின் பிண்டம்

என வருகிறது.

நல்வழிப் பாடல் இவ்வாறு சொல்கிறது.

ஒரு நாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இரு நாள் உணவை ஏலென்றால் ஏலாய்

இடும்மை கூர் வயிறே

உன்னோடு வாழ்தல் அரிது


புரட்சிக் கவி பாரதி

தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்
ஜெகத்தினை அழித்திடுவோம்.

என வீர முழக்கம் இட்டான் பாரதி.

தாலாட்டுப் பாடல்கள்

குழந்தைத் தாலாட்டுப் பாடல்கள் பல இருந்தன.

காக்கா காக்கா மைகொண்டா ..............................
பசுவே பசுவே பால்கொண்டா

பச்சைக் கிளியே பழம் கொண்டா


பாலர் பாடலில் விநாயகரைத் துதித்து படைத்து வணங்கி,
வினைகள் தீர்ப்பதாக

அப்பம் முப்பழம்
அமுது செய்தருளிய

தொப்பை அப்பனைத்

தொழ வினை அறுமே.


என வருகிறது.

குழந்தைப் பாடல்
ஒன்றில்

ஈ ஒன்று பாயாசம் சாப்பிட ஆசைப்பட்டது
பானையில் அரிசி இருக்கிறதா என்று சென்று பார்த்தது.. இல்லாத போது நெற்கதிரிடம் சென்று கேட்டதாக தொடங்கும் பாடல் இது.
முன்பு இலங்கை வானொலியில் 'வானொலி மாமா' சிறுவர் நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமாக இடம் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று.

பாயாசம் வைக்க வேண்டும்
பானையிலோ அரிசி இல்லை

முற்றிய நெற்கதிரே

கொஞ்சம் அரிசி தருவீரோ

...............
இறுதியில் உழவனிடம் கேட்பதாக வருகிறது.
உழவன் சரி என்பதும்
நீர் வரப்பிடமும்,
வரப்பு வயலிடமும்,
வயல் கதிரிடமும், சொல்ல
கதிர் ஈக்கு நெல்லைக் கொடுக்கும்.

ஈ அதைக் குத்தி எடுத்து பாயாசம் சமைத்துச் சாப்பிட்டது. என ஈயுடன் நாமும் மிகவும் சிரித்து, ருசித்து, சுவைத்து சாப்பிட்டு மகிழ்ந்த நாட்கள் உங்கள் அனைவருக்கும் ஞாபகத்தில் வருகிறது அல்லவா?

நாட்டார் பாடல்களில்

நாட்டுப்புறங்களில் பாடல்கள் தொன்றுதொட்டு தலைமுறை தலைமுறையாக வாய் மொழிப் பாடல்களாக இருந்து வந்திருக்கின்றன. அவர்கள் வயல்களில் வேலைசெய்யும் போது களைப்புத் தெரியாமல் இருப்பதற்காக பாடல்களைப் பாடியபடியே வேலையில் ஈடுபடுவார்கள்.
இதில் நடனத்துடன் கூடிய கும்மிப்பாடல்களும் வழக்கில் இருந்தன.

உணவால் பிரசித்த ஊர்கள்

சுவையான உணவுக்கு திருநெல்வேலி அல்வாவும், மல்லிப்பூ மதுரை இட்லியும், கேரள மீன் குழம்பும், பண்டுறுட்டிப் பலாப்பழமும் பிரசித்தம். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

கோழிப்பிரியாணி என்றால் கோழிக் காலை எடுத்து கடித்துக் கடித்துத் தின்று, எலும்பைத் துப்பித் சுவைத்து ரசித்துத் தின்றால்தான் அதன் ருசி நாக்கில் தெரியும். பல்லுக்கும் பலம் ஊட்டும்.

சினிமாவில்


மீன் கறியாக இருந்தால், முதல் மரியாதையில் சிவாஜி சாப்பிடும் அழகே தனிதான். ருசித்து சுவையில் கண்ணும் நாக்கும் பிரண்டு எழ மீன் முள்ளு தனியாகக் கழன்று வர பார்த்தாலே எமக்கும் சாப்பிடத் தோன்றும் அன்றோ?

மலைபோலே காப்பித் டம்ளர்களை அடுக்கியபடி, நளினமாக நெளிந்து ஆடி சர்வர் சுந்தரத்தில் நாகேஸ் எடுத்து வரும் அழகே தனிதான்.



அப்பளத்தை நொறுக்கிப் போட்டு உண்ணும் தேங்காய் பருப்பு சாதமும், பால் பாயாசமும் சுவையில் சொல்லி மாளாது. இலையை வழித்து நக்கி நக்கி வாய் சப்புக்கொட்ட உண்டால் அதன் சுவையே தனிதான்.

இவற்றையெல்லாம் சினிமாப் பாடல்களிலும் கேட்கும் போது சுவைதான்.
சமையல் அறையிலும் காதிற்கு இனிய உணவுப் பாடல்களைக் கேட்டபடியே சமைப்பதுவும் உணவுக்கு சுவை ஊட்டுமன்றோ.

பழைய பாடலான

'கல்யாண சமையல் சாதம்
காய்கறிகளும் பிரமாதம்.

அந்த கௌரவப்பிரசாதம்

அதுவே எனக்குப் போதும்

ஹ....ஹஹ்க...ஹஹ்க..ஹஹ்கா...'


ஒரு காலத்தில் இந்தப் பாடல் ஹோட்டல்களில் பாடிக் காதைக் கிளித்தது என்று கூறலாம். திருமண வீடுகளிலும் லவுட்ஸ் ஸ்பீக்கர்களில் அசத்திய பாடலில் இதுவும் ஒன்று.

'புளியோதரையில் சோறு
பொருத்தமாய் சாம்பாரு
பூரிக்கிழங்கு பாரு..
'

என உணவுகள் ஜோடிசேர்ந்து வரும் அழகேதனிதான்.


செம்மீன் மலையாளப்படம் வெளி வந்தபோது இப்பாடல் மைனர்களின் வாய்களில் புகுந்து வந்த பாடல்

'பெண்ணாலே பெண்ணாலே
கறி மீன் கண்ணாளே கண்ணாளே'


தமிழ் பாடலில்

'நித்தம் நித்தம் நெல்லுச் சோறு
நெய் மணக்கும் கத்திக்காய்

நேற்று வைத்த மீன் குழம்பு

என்னை இழுக்குதையா.'

முள்ளும் மலரும் படத்தில் வெளி வந்தது பாடலைக் கேட்கும்போதே பசியும்எடுத்துவிடும்.

மண்வாசனையில்

'அரிசி குத்தும் அக்கா மகளே'

அதைத் தொடர்ந்து


ஆப்பிள் பெண்ணே நீ யாரோ.

ஐஸ்கிறீம் சிலையே நீ யாரோ....';


இளைஞர்களின் மனதைக் கொள்ளை கொண்ட பாடல்.

இதே போன்று

'வெள்ளரிக்கா
பிஞ்சு வெள்ளரிக்கா'


சக்கை போடு போட்ட பாடல்களில் இளவட்டங்களுக்குப் பிடித்தமான பாடலாக இருந்தது.

லேட்டஸ் பாடல்களில் சிறு குழந்தைகளின் வாயிலும் ஒலித்த படியே டான்ஸ் ஆட்டத்துடன் கலக்குவது
'எக்ஸ்கியூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி
காப்பி குடிப்போம் கம் வித் மீ'...


உங்கள் சமையல் அறைப் பாடல் அனுபவங்கள் எப்படி?

மாதேவி

Thursday, November 12, 2009

வாழைக்காய்க் காரப்பிரட்டல்




'கிச்சு கிச்சு தாம்பாளம்
கீயா மாயா தாம்பாளம்...'

மற்றொன்று

'.... தாராம்பட்டி வாழைக்காய்
பூவும் பிஞ்சும் மண்டபத்தில்
பூமாதேவி கையை எடு.'

பாலர்களாக இருந்த காலத்தில் விளையாடிய விளையாட்டுக்களில் இப்படியும் சில இருந்தன.

சிறுவர்கள் வட்டமாகச் சுற்றி இருந்து இரு கைகளையும் நிலத்தில் வைத்திருக்க, ஒருவர் பாடிக்கொண்டே எண்ணி வருவார். பாட்டு எவருடைய கையில் வந்து முடிகிறதோ அவர் அக் கையை எடுக்க வேண்டும். இவ்வாறு தொடரும்.

இறுதியில் எவர் கையில் பாட்டு முடிவுறாது இருக்கிறதோ அவர் வெற்றி பெற்றவராகக் கொள்ளப்படுவார்.

அப்பொழுது பாடலும் விளையாட்டும்தான் நினைவு.

இப்பொழுது நினைவெல்லாம் தாராம்பட்டி மேல்தான். அங்குள்ள வாழைக்காய்கள் நிறையச் சுவை தருமா?

வாழை

தென் கிழக்கு ஆசியாவில்தான் முதன் முதலில் வாழை பயிரப்பட்டிருந்தது. வெப்ப வலயப் பிரதேசங்களில் பெரும்பாலும் பயிரப்படும். எந்த நிலத்திலும் பயிரிடப்படக் கூடியது. நீர்வடி நிலமாக இருப்பின் சிறந்தது.

வாழை மரங்களின் முதல் எதிரி காற்றுத்தான். காற்றுக் காலத்தில் பெருமளவு மரங்கள் குலையுடன் முறிந்து போய்விடுகின்றன.


'வெண் மேகம் கறுத்து
வெளியெல்லாம் குளிர் பரவி
ஊரடங்கிக்
காரிருள் சூழ
கொட்டும்
அடை மழையில்
குலை சாய்ந்து
அழுகிப் போவேனே.

பேய் (காற்று) வீசுவதால்
குலை நடுக்கம் ஆனேனே
அந்தோ!
காலனும் வந்துவிட்டானா'

என என் வீட்டு வாழை பாடியது கேட்கிறதா?

சாம்பல் வாழைக்காய், மொந்தன் வாழைக்காய் என இரு இனங்கள் எமது பகுதிகளில் உண்டு.

போசணை அதிகம் உண்டு

இதில் காபோஹைரேட் பெரும்பாலும் உண்டு.

இத்துடன் இரும்புச் சத்தும் உள்ளது. ஒரு கப் (200 கிறாமில்) நிரம்பிய கொழுப்பு 1சத விகிதம் தான் உண்டு.
விட்டமின் சீ, நார்ப்பொருள், பொட்டாசியம்
ஆகியனவும் உண்டு என்பதால்
பிரஸர், மற்றும் கொலஸ்டரோல் நோயாளிகளுக்கும் ஏற்றது.

நோயாளிகளுக்கும், குழந்தைகளுக்கும் கூட உகந்தது

பிஞ்சு வாழைக்காயை எடுத்து பால் கறியாகவும், சரக்குத் தண்ணியாகவும், சம்பலாகவும் பத்திய உணவாக நோயாளிகளுக்கும், குழந்தைகட்கும் கொடுப்பர்.

வாயுத் தொல்லை தராமல் இருக்க பெருங்காயம், பூண்டு, சீரகம், மிளகு சேர்த்து சமைத்துக் கொள்ளுவர்.

வாழைக்காய்க் காரப்பிரட்டல்


முற்றிய சாம்பல் வாழைக்காய் -2

குழம்பு தயாரிக்க

தக்காளிப் பழம் - 4
வெங்காயம் -2
பச்சை மிளகாய்- 1
பூண்டு – 4 பல்லு
வெந்தயம் - ½ ரீ ஸ்பூன்
கடுகு - ¼ ரீ ஸ்பூன்
மிளகாய்ப் பொடி – 2 ரீ ஸ்பூன்
தனியாப் பொடி – 1 ரீ ஸ்பூன்
மஞ்சள் பொடி - ¼ ரீ ஸ்பூன்
வறுத்து அரைத்த சோம்பு, கறுவாப் பொடி - ¼ ரீ ஸ்பூன்
புளிக் கரைசல்- தேவைக்கு ஏற்ப
உப்பு - தேவைக்கு ஏற்ப
கறிவேற்பிலை, மல்லித்தழை-சிறிதளவு.

பொரிக்க

எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்.

செய்முறை-

வாழைக்காயைத் தோல் சீவி, தண்ணீரில் முழுதாகப் போட்டுவிடுங்கள்.

வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் தனித்தனியே வெட்டி வையுங்கள்.
பூண்டை பேஸ்ட் ஆக்கி வையுங்கள்.

வாழைக்காயை எடுத்து நீளவாக்கில் இரண்டாகக் கீறி எடுங்கள். அரை அங்குல அகல துண்டுகளாக வெட்டி வையுங்கள்.

தாச்சியில் எண்ணெயை விட்டு கொதிக்க, வாழைக்காயைப் போட்டு பென்னிறமாகப் பொரித்து எடுங்கள்.

ஒரு டேபிள் ஸ்பூன் ஓயிலில் கடுகு கறிவேற்பிலை தாளித்து, பூண்டு சேர்த்துக் கிளறிக் கொள்ளுங்கள். வெங்காயம் போட்டு வதக்குங்கள்.

வதங்கிய பின் பச்சை மிளகாய், வெந்தயம் சேர்த்து, தக்காளி போட்டுக் கிளறுங்கள்.

தக்காளி வெந்த பின் மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, தனியாப் பொடி, உப்பு, புளித் தண்ணீர் விட்டு பொரித்த வாழைக்காயைக் கொட்டி கொதிக்க விடுங்கள்.

கொதித்து இறுக்கமாக வர கறுவாப் பொடிதூவி கிளறி,மல்லித் தழை போட்டு இறக்குங்கள்.

சாதம், அப்பம், புட்டு, சப்பாத்தி, பிரட், தோசைக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட சுவை கொடுக்கும்.

(தேங்காய்ப் பால் சேர்க்க விரும்பினால் இறக்குமுன் கட்டிப்பால் சிறிதளவு விட்டு இறக்குங்கள்.)

மாதேவி