Thursday, December 24, 2009

உழுந்துமா பிடிக்கொழுக்கட்டை



கொழுக்கட்டைகள் பலவிதம். இது சிறுவர்கள் தாங்களும் கூடவே வந்து பிடித்துத் தயாரிப்பதில் பங்களித்து மகிழக் கூடியது.

இடியப்ப மற்றும் புட்டு மா மிஞ்சினால் அவற்றை வீணாக்காது கொழுக்கட்டையாகப் பிடிப்பதுண்டு.

பலரும் அரிசி மாவில் செய்வர். உள்ளே பருப்பு வைத்துச் செய்வது மற்றொரு வகை.

இது அரிசி மாவுடன் உழுந்து மா கலந்து செய்தது.

போசணையுடையது


சிவப்பு அரிசியில் மிகுந்த (365) கலோரி, மினரல்ஸ், விற்றமின்கள், அடங்கியுள்ளன. புரோட்டின் 8.6 சதவிகிதம், நார்ப்பொருள் 3.5 சதவிகிதம், விற்ற மின் B1, B2, B6, அடங்கியுள்ளன.


சத்துச் செறிவான உழுந்துமாவுடன், பாசிப்பயறும் சேர்த்து செய்து கொண்டால் புரொட்டின் அளவு மேலும் அதிகரிக்கும். ஏனெனில் பாசிப்பயறு, உழுந்து ஆகியவற்றில் 24 சதவிகிதம் புரதம் இருக்கிறது.

உழுந்தில்
Vitamin A, B1 and B3, ஆகிய விற்றமின்களும், Potassium, Phosphorus and Calcium ஆகிய மினரல்ஸ் உண்டு. ஓரளவு Sodium இருக்கிறது. இரும்புச் சத்து சிறிதளவு மட்டுமே உண்டு. 100 gm உழுந்திலிருந்து 347 கலோரி கிடைக்கும்.

பாசிப் பயறில் அதே அளவு கலோரி (347) கிடைக்கும். கல்சியம், மக்னீசியம், பொட்டசியம், பொஸ்பரஸ் ஆகிய மினரல்ஜ் உண்டு. நார்ப் பொருள் 16.3 சதவிகிதம் கிடைக்கிறது.

சிற்றுண்டியாக

சினக்சுக்குப் பதில் ஈவினிங் உணவாக இவற்றைத் தயாரித்து குழந்தைகளும் பெரியவர்களும் உண்ணலாம்.

சுவைக்கு தேங்காய்த் துருவல், வெல்லம், வெண்ணெய் கலந்தால் தித்திக்கும்.

நீரிழிவு நோயாளர் வெல்லம் தவிர்த்து உப்பு சேர்த்து செய்தால் இரத்த குளுக்கோஸ் கூடாது இருக்கும்.

தேவையான பொருட்கள்


வறுத்த அரிசிமா – 1 கப்
வறுத்த உழுந்துமா – ½ கப்
வறுத்த பாசிப்பருப்பு – 4 டேபிள் ஸ்பூன்
வெல்லம் - ¼ கப்
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய்த் துருவல் - ¼ கப்
உப்பு சிறிதளவு

செய்முறை

பாசிப் பருப்பை 20 நிமிடங்கள் நீரில் ஊறவிடுங்கள்.


மா வகைகளுடன், வெல்லம், தேங்காய்த் துருவல், ஊறிய பருப்பு, வெண்ணெய் கலந்து கிளறுங்கள்.

சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து, கையால் கிளறி, சேர்த்து பிடிக்கும் பதத்தில் மாவைத் தயார்படுத்துங்கள்.

மாவைக் கையால் அமத்தி நீள்வடிவத்தில் பிடித்து ஓரத்தில் சங்கு போல விரல்களால் அமத்தி விடுங்கள். இவ்வாறே எல்லாவற்றையும் பிடித்து வைத்துக் கௌ்ளுங்கள்.

ஸ்டீமர் அல்லது இட்லிப் பாத்திரத்தில் நீர் விட்டு கொதிக்க வைத்து ஆவி வந்ததும் கொழுக்கட்டைகளை வைத்து 15-20 நிமிடங்கள் அவித்து எடுங்கள்.

வறுத்த உழுந்து மா வாசத்துடன் பருப்பு, தேங்காய்த் துருவல் வெல்லமும் சேர்ந்து மணங் கமழும்.

சத்துச் செறிவான உழுந்துமா பிடிக் கொழுக்கட்டை வயிற்றைக் கிளறும்.

கையும் நகர்ந்து எடுத்து வாயில் தள்ளும். இனிப்பில் சொக்கி அடுக்கடுக்காக வயிற்றுக்குள் தள்ளுவீர்கள்.

மாதேவி

Tuesday, December 8, 2009

கலர் கலராகச் சாதங்கள்



மரக்கறி உணவுகள் என்றாலே முகம் சுழிப்பார்கள் குழந்தைகள். அவர்களுக்கு இப்படியான உணவுகள் சாப்பிடுவது என்பது வெறுக்கத்தக்க நேரம்தான்.

இதைத் தவிர்க்க என்ன செய்யலாம்.

கண்ணுக்குக் கவர்ச்சியாக மாற்று முறையில் தயாரித்துப் பரிமாறினால் பலவகை மரக்கறி உணவுகளையும் சாப்பிட வைத்துக் கொள்ள முடியும்.

பீன்ஸ், கோவா, பீட்ரூட், வெண்டைக்காய், முள்ளங்கி, பாவற்காய், வாழைமொத்தி, கோஹில தண்டு, போன்ற பெயர்கள் பல பெரியவர்களுக்குக் கூடப் பிடிப்பதில்லை.

கலர் கலரான சாப்பாடு

பீட்ரூட்டை தனியே சமைத்துக் கொடுப்பதை குழந்தைகள் விரும்பாத போது சாதத்திற்குள் கலந்து செய்து கொடுக்கலாம். கண்கவரும் சிவத்த சாதத்துடன் சுவை சேர்க்க நெய். கஜீ, சேர்த்துக் கொண்டால் விரும்பி உண்பார்கள்.

பீட்ரூட்டை கூடிய நேரம் சமைத்தால் அதிலுள்ள மிக முக்கியமான போசனைப் பொருட்கள் யாவும் அழிந்துவிடும். பச்சையாக உண்பது சமிபாடடையச் சிரமமாக இருக்கும்.

எனவே நீராவியில் அவித்தெடுத்துச் செய்து கொண்டால் சத்துக்கள் அழியாது இருப்பதுடன், விரைவில் சமிபாடும் அடையும்.

போஷாக்கு உள்ளது


நார்ப்பொருள் அதிகமுள்ளது. Vitamin C, Folic acid அதிகமுள்ளது. Vitamin A, Thiamin, Riboflavin, Niacin, Vitamin B6 and Pantothenic Acid ஆகியன ஓரளவு உண்டு

பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து, பொஸ்பரஸ், ஆகியன அதிகம் அடங்கியுள்ளது. ஆனால் கல்சியம், சின்க், செலினியம் ஆகியன ஓரளவே உண்டு.

அதில் குறைந்தளவு கலோரிச் சத்தே உண்டு. 100 கிராம் பீட்டில் 43 கலோரி மட்டுமே உண்டென்பதால் எடை குறைப்புச் செய்ய விரும்புபவர்கள் சலட்டில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

நோயெதிர்ப்பு

இரத்தசோகையை குறைக்கும். இரும்புச் சத்து அதிகமுள்ளது.

பீட் ஜூஸ் அருந்துவது உயர்இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் எனக் கூறுகிறார்கள்.

புற்றுநோயைத் தடுக்கும் பீட்டாஅமினோ அசிட் இதில்
அடங்கியுள்ளது.

ஜூஸ் ஆக அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்


மலச்சிக்கலைத் தடுக்கும்.
நாட்பட்ட மலச்சிக்கலுக்கும் சுகம் தரும்.

உடல் இளைக்க பீட்ரூட்டை அடித்து எடுத்து உப்பு, மிளகு, சிறிது தேசிக்காய் விட்டு அருந்தலாம்.

பீட்ரூட் சாற்றை தனியே குடிக்க முடியாதவர்கள் தோடம்பழச் சாறு, ஆப்பிள் சாறு கலந்து குடிக்கலாம்.

பீட்ரூட் கிழங்கைச் சேமித்து வைத்தல்

ஈரலிப்பான மண் நிலத்தில் வைத்துப் பாதுகாக்கலாம். பிரிட்ஸ்ல வைத்தால் ஓரிரு வாரம் இருக்கக் கூடியது.

வைன், சீனி


Rum, Tuzemak, Vodka போன்ற மதுவகைகளுக்கும், சீனி தயாரிப்பிற்கும் வெவ்வேறு விசேடமான பீட் வகைகள் பயன்படுத்தப்படுகின்றன. உணவுக்குப் பயன்படுவதிலிருந்து இவை வேறுபட்டவையாகும்.


வழமையான ரெட் பீட்டிலிருந்து சிறந்த வைன் தயாரிப்பார்கள். இதைப் பதப்படுத்திச் செய்ய நீண்டகாலம் எடுக்கும்.

பீட்ரூட் சாதம்


சாதம் - 1 கப்
பீட் பெரியது – 1
பம்பாய் வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கருவேற்பிலை – 2 இலைகள்
கஜூ - 10
மிளகாய்ப்பொடி – 1 ரீ ஸ்பூன்
உப்பு தேவைக்கு ஏற்ப

தாளிக்க

கடுகு - ¼ ரீ ஸ்பூன்
உழுத்தம் பருப்பு – 1 ரீ ஸ்பூன்
நெய் அல்லது மாஜரின் - 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை

தோலைச் சீவி பீற்றூட்டைத் துருவி வையுங்கள்.

மெல்லிய நீள் துண்டுகளாக வெங்காயத்தை வெட்டி வையுங்கள்.

மிளகாயை நாலு பாகமாக வெட்டிவிடுங்கள்.

கஜூவை உடைத்து வையுங்கள்.

சிறிது மாஜரினில் கஜூவைப் பொரித்து எடுத்து வையுங்கள்.

ஒரு டேபிள் மாஜூரினில் உப்பு, மிளகாய்த்தூள் பிரட்டி எடுத்த வெங்காயத்தைப் பொரித்து எடுத்து வையுங்கள்.

மிகுதி மாஜரீனை விட்டு கடுகு, உழுத்தம் பருப்பு தாளித்து பச்சை மிளகாய் கருவேற்பிலை போட்டு துருவிய பீட் போட்டு வதக்கி, உப்பு மிளகாய்ப் பொடி இட்டு சாதம் சேர்த்துக் கிளறி எடுங்கள்.

பரிமாறும் பிளேட்டின் பாதியில் அரைவாசி போட்டு மேலே பொரித்த கஜூ, வெங்காயம் தூவி விடுங்கள்.

தயிர்ச் சாதம்

சாதத்தில் தயிர் உப்பு, பெருங்காயப் பொடி கலந்து சாதா தயிரச்சாதம் செய்வதை விட வெங்காயம், பச்சை மிளகாய், கரட்,வெள்ளரிக்காய். இஞ்சி கருவேற்பிலை,மாதுளைமுத்துக்கள் கலந்து செய்து கொள்ளலாம்.

தயாரிக்க

சாதம் - 1 கப்
தயிர் - ½ கப்
துருவிய கரட் - 1
துருவிய வெள்ளரிக்காய் -1
மாதுளைமுத்துக்கள் - 1/4 கப்
பச்சை மிளகாய் - 1-2
சாம்பார் வெங்காயம் - 10-15
கருவேற்பிலை- 2 இலைகள்
மல்லித்தழை - சிறிதளவு
இஞ்சி – துருவியது 1 ரீ ஸ்பூன்
உப்பு, பெருங்காயம் சிறிதளவு

தாளிக்க

கடுகு – 1 ரீ ஸ்பூன்
கருவேற்பிலை 2 இலைகள்.
ஓயில் 1 ரீ ஸ்பூன்

செய்முறை

வெங்காயம், மிளகாய், கறிவேற்பிலை,மல்லித்தழை சிறியதாக வெட்டி எடுங்கள்.

ஓயிலில் கடுகு கருவேற்பிலை தாளித்து சாதத்தில் கொட்டிக் கலந்து விடுங்கள்.

தயிரை நன்கு கலக்கி எடுத்து உப்பு, பெருங்காயம்,கலந்து சாதத்தில் ஊற்றிகலந்துவிடுங்கள்.

துருவிய கரட்,வெள்ளரி இஞ்சி,வெங்காயம், மிளகாய் கறிவேற்பிலை,மல்லித்தழை,மாதுளை, கலந்து கிளறிவிடுங்கள்.

பீட் சாதம் வைத்திருக்கும் பிளேட்டின்
மறுபகுதியில் வைத்து பாருங்கள்
தெரியும் அழகு.

அழகில் முழுவதையும் நீங்களே சாப்பிட்டு விடாதீர்கள்.

குழந்தைகள் வரும்வரை காத்திருங்கள்.

ஓடோடி வந்து குழந்தைகள் முடிப்பார் பிளேட்டை. பிறகென்ன உங்கள் முகத்தில் ஆயிரம் வோல்ட் பல்ப் மகிழ்ச்சி தெரியும்.

மாதேவி