Saturday, January 2, 2010

முட்டையில்லாத ரிச் கேக்



மேலை நாட்டிலிருந்து இறக்கி எமது வாழ்வின் அங்கமாகிவிட்ட பாண், பண், பிஸ்கட், கேக் இடையேயான வித்தியாசம் என்ன?

சோறு, அரிசிமா கூளுக்கும், களிக்கும், அரியதரத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் போலத்தான் என மேம்போக்காகச் சொல்லிவிடலாம்.

அங்கு அடிப்படை கோதுமைமா, எங்களுக்கு அரிசிமா.
Kaka என்பதே பின்னர் ஆங்கிலத்தில் Cake ஆக மாறியதாம்.

ஐரோப்பாவில் Gateau, Torte எனப்படுவனவும், ஆங்கில கேக்கும் அடிப்படையில் ஒன்றாயினும் அவற்றில் முட்டை, பட்டர், சோக்கிலட் போன்றவை கூடிய அளவில் இருக்கும். அவை கூடியளவில் pastry போலிருக்கும்.

ஜப்பானியரின் Kasutera ஆங்கில கேக்கின் மற்றொரு வடிவம்தான்.

ஆனால் அரிசியில் செய்யப்படும் பிலிப்பைன்ஸசின் Mooncakes மற்றும் Rice cakes அவர்களின் பாரம்பரிய சமையல் முறையில் பிறந்தது.

அதேபோல சமையல் முறையிலும் வேறுபாடுகள் உண்டு.

நாங்கள் நீரில் அவிப்பது, ஆவியில் அவிப்பது, எண்ணெயில் வேகவைப்பது என ஒரு திசையில் பயணப்பட்டோம்.

அவர்கள் சமையல் முறையில் போறணை முக்கிய பங்காக இருந்தது.

குளிரான பிரதேசத்தில் விறகை எரிப்பதால் பிறக்கும் வெப்பம் வீணாகாமல் போவதற்காக போறணை போல மூடி வைத்து அதற்குள் தயாரிக்க வேண்டியிருந்து. உணவை வைத்து வேகவைத்தார்கள்.

அதுதான் பேகிங்.

அதில் சமைப்பதின் ஆரம்பம் பாண்.
கூர்படைந்த வடிவம் கேக் எனலாம்.


தேவையான பொருட்கள்

ரவை – 500 கிராம்
மார்ஜரின் - 500 கிராம்
சீனி - 350 கிராம்
டே;டஸ் - 500 கிராம்
ரின் பால் - 1 ரின்
தண்ணீர் - 1 ரின் அளவு
தேயிலைச்சாயம் -1 கப்


பிரிசேவ்ஸ்

பம்கின் - 200 கிராம்
கன்டிட் பீல் - 200 கிராம்
சௌசௌ - 200 கிராம்
ஜின்ஜர் - 200 கிராம்
சேர்ரி - 200 கிராம்
ரெஸ்சின் - 200 கிராம்
கஜூ - 200 கிராம்

எசென்ஸ் வகைகள்

வனிலா – 4 ரீ ஸ்பூன்
ரோஸ் - 2 ரீ ஸ்பூன்
ஆமென்ட் - 2 ரீ ஸ்பூன்
கோல்டன் சிரப் - 2டேபிள் ஸ்பூன்

பவுடர் வகைகள்

பேகிங் பவுடர் - 4 ரீ ஸ்பூன்
சோடியம் பைகார்பனேட்- 2 ரீ ஸ்பூன்
ஸ்பைசெஸ் - 2 ரீ ஸ்பூன்

செய்முறை-

தயாரிப்பதற்கு 12 மணித்தியாலம் முன்பு டேட்சை சிறியதாக வெட்டி அல்லது அரைத்து எடுத்து வையுங்கள்.

ரீ சாயத்தில் சோடியம் பைகார்பனேடை கரைத்து எடுத்து டேட்ஸ் மேல் ஊற்றி பிரட்டி வைத்துவிடுங்கள். ரவையை லேசாக வறுத்து எடுத்து வையுங்கள்.

12 மணித்தியாலயத்தின் பின்பு மார்ஜரின், சீனி இரண்டையும் மெதுவாகும் வரை கலக்கி ரின் பால் சிறிது சிறிதாக விட்டுக் கலக்குங்கள்.

நன்கு கலங்கிய பின் தண்ணீர் ஒரு கப் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து கலக்கிவிடுங்கள்.

ரவையில் பேகிங்கை போட்டு நன்னு சேர்த்துவிடுங்கள்.

அடித்த கலவையுடன் சிறிது சிறிதாக ரவையைப் போட்டு சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஊற வைத்த டேட்ஸ்சைப் போட்டு கலந்து விடுங்கள்.

பிரிசேவ் வகைகள் யாவற்றையும் சேர்த்து, கோல்டன் சிரப், ஸ்பைஸ் பவுடர், எசன்ஸ் வகைகள் யாவற்றையும் விட்டு நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பேகிங் ரேயின் அடியில் ஒயில் பேப்பர் வைத்து, மார்ஜரின் பூசி, கேக் கலவையை ஊற்றி 180 டிகிரியில் 45 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுத்துக் கொள்ளுங்கள்.


சாப்பிடுவதற்கு 2 வாரங்களுக்கு முன் செய்து கொள்ள வேண்டும்.
செய்து ஒரு வாரத்தின் பின் கட் பண்ணி எடுத்துக் கொள்ளுங்கள்.

ஓயில் பேப்பரில் சுற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு வாரம் கேக்கின் மணத்தில் வாயையும் கையையும் கட்டி வைத்திருப்பது உங்களில்தான் தங்கியுள்ளது.

மிகவும் சுவையான முட்டையில்லாத சைவ ரிச் கேக் தயார்.

நாட்கள் செல்லச்செல்ல சுவையும் அதிகரிக்கும்.

1 ½ மாதம் அளவில் கெடாமல் இருக்கும். நீங்கள் சாப்பிட்டு முடிக்காவிட்டால்.

மாதேவி







Friday, January 1, 2010

புத்தாண்டிற்கு மெழுகுதிரி சலட்


அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்.

சலட் வகைகளின் போஷாக்கு முக்கியத்துவம் பற்றி தற்பொழுது அனைவரும் நன்கு அறிந்துள்ளார்கள். சலட் இல்லாத விருந்தும் இல்லை.

இது கிறிஸ்மஸ்ட் புதுவருட பண்டிகைக் காலமாகையால் இச் சலட்டைத் தயாரித்துள்ளேன்.

பிரிஜ்சில் இருந்த பொருட்களை வைத்து அவசரமாகத் தயாரித்ததில் பூரணமாகப் பூர்த்திசெய்ய முடியவில்லை.

நீங்கள் உங்களுடைய திறமைகளைப் பயன்படுத்தி இன்னும் அழகாக்கிக் கொள்ளுங்களேன்.

பச்சையாக உண்ணக்கூடிய மரக்கறிகள், அவித்தெடுத்த மரக்கறிகள், பழவகைகளில் செய்துகொள்ளலாம். சாப்பிடுவதற்கு சற்று முன்பாக செய்துகொள்ளுங்கள்.
உங்களுக்கு விரும்பிய மரக்கறி அல்லது மாமிச ஸ்ரப் (Stuff) இரண்டு தயாரித்து வையுங்கள்.

லெட்யூஸ் சலட் இலைகளை தயாரிக்கும் பிளேட்டில் அலங்காரமாக அடுக்கி வையுங்கள்.

வெள்ளரிக்காயின் தோலைச் சீவிவிட்டு விரும்பிய உயரத்தில் வெட்டி எடுங்கள்.
உள்ளிருக்கும் சதைப்பகுதியை கூரிய கத்தியால் வெளியே எடுத்து விட்டு தயாரித்த ஒரு ஸ்ரப்பை நிரப்பி வையுங்கள்.

மேலேஅவித்தெடுத்த கரட்டின் நுனிப்பகுதியை ருத் பிக்கில் குத்தி திரி போல் தோற்றமளிக்கும்படி வெள்ளரி மேல் குத்திவிடுங்கள்.

நன்கு நேராக நிமிர்த்தி வைக்கக் கூடிய கரட்டை அவித்து எடுத்துக் கொள்ளுங்கள்.



கரட்டின் பக்கப் பாட்டில் மெழுகு உருகி வழிந்திருப்பது போன்று மெல்லியதாக நீளமாக வெட்டிய கோவாவை தொங்க விட்டுக் கொள்ளுங்கள்.

இதற்கு நீங்கள் விரும்பினால் அவித்த நூடில்ஸ், முளைக்க வைத்த பாசிப்பயறு அல்லது சீஸ் துருவல் (கொழுப்பு) பயன் படுத்திக் கொள்ளலாம். அடித்தெடுத்த கிழங்குக் கிறீம், பிரெஸ்கிறீம், மயோனிஸ், யோக்கட், தயிர் என்பனவும் பயன்படுத்தலாம்.


தக்காளியைப் பாதியாக கிண்ணம் போல் வெட்டிவிட்டு, உள்ளிருக்கும் சதைப்பகுதியை கூரிய கத்தியால் வெளியே எடுத்து விடுங்கள். தயாரித்த இரண்டாவது ஸ்ரப்பை (Stuff) நிரப்பி வையுங்கள். மேலே பழுத்த சிவப்பு அல்லது பச்சை மிளகாய் குத்திவிடுங்கள். விரும்பினால் அடியில் மெழுகு வடிந்தது போல் வைக்கலாம்.

சலட்டின் சென்ரர் பகுதியில் வெங்காயத்தைப் பூ போன்று வெட்டி வைத்து மேலே செறி வைக்கலாம்.

உங்கள் கலை நயத்திற் கேற்ப அழகாகத் தயாரித்துக் கொள்ளுங்களேன்.

ஸ்ரிம் வெண்டக்காய், அவித்த சோளமொத்தி, அவித்த முட்டை, கப்சிகம் மூன்று வர்ணங்களில், கரும்பு, பேபிகோன், பேபிகரட், முள்ளங்கி, தேங்காயின் உள்ளிருக்கும் முளைத்த பூ என இன்னும்...... இன்னும் ..


பழங்களில் ஸ்ரோபெரி, பியஸ், அப்பிள், ஆரெஞ், தர்பூசனி, அன்னாசி, பப்பாளி, ஜம்பு, ஏன்.....

எங்கள் ஊர் வாழைப்பழம் கூட.... கறுக்குமா ?

தோலுடன் அடியையும் நுனியையும் வெட்டிவிட்டு தயிர் அல்லது எலுமிச்சம் சாறு தடவி விட்டால் சரி என்கிறீர்களா?

உங்கள் கைவண்ணங்களில் ரெடியாகிவிடும் மெழுகுதிரி சலட்டுக்களாக.
வாண்டுகளும் கூடி உதவிசெய்வார்கள். ஐடியாக்களும் கொடுப்பார்கள். விரும்பி எடுத்தும் உண்பார்கள்.

புத்தாண்டில் அனைவரும் நலமுடன் வாழ வாழ்த்தும்

மாதேவி.