“பழைய காலத்தில் வாழ்ந்த எமது மூதாதையர்கள் வாழ்ந்த வாழ்க்கை மிகவும் சிரமமானது.” என்பதாகும்.
நவீன விஞ்ஞான யுகத்தில் எமக்கு வீட்டிற்குள்ளேயே சமையல் அறை குளியல் அறை, குளிருக்கு குளிக்க ஹொட் வாட்டர், வெப்பத்திற்கு ஏசி என வாழ்க்கை சகல வசதிகளுடன் கூடி சுகபோகமானது.
பழைய காலத்தில் வீடுகள் ஓலைகளால் வேயப்பட்டு சிறியனவாக இருந்தன.
சமையல் அறையோ வீட்டின் கூரையிலிருந்து இறக்கப்பட்ட பதிவான பத்தியாலான சிறிய ஒரு இடமாகவே இருந்து வந்தது.
![]() |
| நமது குடிசைகள் அல்ல, பிலிப்பைன்ஸ் |
குளிப்பதற்காகவும், உடைகள் அலசுவதற்காகவும், அவற்றை நாடியே செல்ல வேண்டியிருந்தது. மழைகாலத்தில் சொல்லவே வேண்டியதில்லை. மிகவும் சிரமங்கள் இருந்தன. வீடுகள் மண் குடிசைகளாக இருந்ததால் நிலம் களி மண்ணால் ஆனது. அதனால் சாணத்தால் மெழுகியிருப்பர்.
மழைகாலத்தில் நிலங்களில் கசிவு இருப்பதால் தாழ் நிலமாக இருப்பின் நிலம் இளகி சொதசொதப்பாகி, கால் வைக்கும்போது கால் புதையத் தொடங்கிவிடும். மிகவும் சிரமத்தின் மத்தியிலேயே வாழ்ந்திருக்கிறார்கள். நிலத்தின் குளிர் உடலில் ஏறி காச்சல், குளிர் நடுக்கம் ஏற்படுவதுண்டு. கை மருந்துகள்தான் பலன் கொடுக்கும்.
குளிரிலிருந்து விடுபட வீட்டின் ஒரு மூலையில் நான்கு மூலைகளிலும் கற்களை அடுக்கி அதன்மேல் பனங் குற்றிகளைப் பரப்பி பரண் அமைத்து அதன் மேல் சாக்குகள், பாய்கள் போட்டு வைத்திருப்பர். அதன் மேல் படுப்பார்கள்.
பகலில் தொடர்ந்து அடை மழை பெய்யும்போது குளிருக்கு ஏறியும் இருப்பார்கள். முக்கிய பொருட்களை வைத்து எடுப்பதற்கும் கயிற்றினால் கட்டி பலகை வைத்த சிறிய பரண்களைத் தொங்க வைத்திருப்பார்கள்.
![]() |
| நவீன பரண்? |
அடுக்களையிலும் சமையல் பொருட்கள் வைக்க சிறிய பரண் இருக்கும்.
உறியில் சமைத்த உணவை வைப்பர். விறகு அடுப்பு மட்டுமே பாவனையில் இருந்ததால் மழை காலத்திற்கு வேணடிய விறகுகளை குடிசைக்கு வெளியே பின்புறத் தாழ்வாரங்களில் கயிற்றுப் பரண்களில் சேகரித்து வைத்திருப்பர்.
மழைக்காலத்தில் கூரையியிலிருந்து வடியும் மழை நீரை எடுத்து பாத்திரங்கள் கழுவதற்கும் குளிப்பதற்கும் உடைகள் அலசுவதற்கும் உபயோகித்து வந்திருக்கிறார்கள்.
| பச்சை அரிசியும் பாசிப்பயறும் |
இவ்வகையில் தேங்காய்ப் பால் கஞ்சி, ரொட்டி, பிட்டு வகைகள் இருந்தன.
இடை உணவுகளாகச் சாப்பிடுவதற்கு கோடையில் செய்து சேர்த்து வைத்திருந்த பினாட்டு, புழுக்கொடியல், பனங்கட்டி உதவின. இம் முறையில் ஊறுகாய், வற்றல் மிளகாய், வடகம், கருவாடு என்பனவும் கை கொடுத்தன.
சாதத்துடன் சம்பல் செய்தும் உண்டனர். கஞ்சியுடன் கடிப்பதற்கு பச்சை மிளகாய், வெண்காயம், சுட்ட கருவாடு என்பன துணை போயின. இல்லாதபோது பினாட்டை தொட்டுக் கொண்டே குடித்தனர்.
இவ்வாறு தொடங்கிய எமது பாரம்பரிய உணவுகளை எங்கள் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்வதோடு சமைப்பதற்கும் பழகிக் கொள்ளுவோம்.
சிவப்பு பச்சை அரிசியுடன் பாசிப் பருப்பும் சேர்வதால் சத்தும் மிக்கது.
தேவையான பொருட்கள்.
- தீட்டல் சிவப்பு பச்சை அரிசி – 1 கப்
- வறுத்து உடைத்த பாசிப் பருப்பு – ¼ கப்
- தேங்காய்ப் பால் - 1 கப்
- பச்சை மிளகாய் - 2
- சின்ன வெங்காயம் - 10
- தேசிப் புளி – ¼ பழம்
- உப்பு தேவையான அளவு.
![]() |
| காரச் சட்னி |
செய்முறை
அரிசி பருப்பைக் கழுவி 4 கப் நீர் விட்டு அவித்து எடுத்துக் கொள்ளுங்கள். குக்கரில் 5-6 விசில் வைத்து எடுக்கலாம்.
![]() |
| தேங்காயப் பால் கஞ்சி |
பின் உப்பு தேங்காப் பால் விட்டு ஒரு கொதி விட்டு இறக்குங்கள்.
கஞ்சியை இரண்டு பாகமாகப் பிரித்து ஒரு பாகத்தில் சிறிதாக வெட்டிய மிளகாய், வெங்காயம், தேசிப்புளி கலந்து விடுங்கள்.
மற்றைய பகுதியை காரச் சட்னியுடன் பரிமாறுங்கள்.
இரு வேறு சுவைகளில் சுடச் சுட பால் கஞ்சி அசத்தும்.
சிறுவர்களுக்கு இனிப்பு விரும்பினால் சரக்கரை சேர்த்து இனிப்புக் கஞ்சி தயாரிக்கலாம்.
மாதேவி
:-:-:-:-:-:-:-:-:-











